கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டனவா?

தமிழ்நாட்டு நணபர் ஒருவர் தில்லியில் வேலைக்குப் போனார்.அவருக்கு இந்தி தெரியும்.அதாவது அப்படி அவர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆவ், ஜாவ், பானி, சாய், பைட்டியே இப்படி இருவது முப்பது வார்த்தை தெரியும் .அது போதும், அங்கே போய் பேசிப் பழகினால் வந்துவிடும் என்று உற்சாகப்படுத்தி அனுப்பினார்கள். அவரும் அங்கு போய் அவருக்குத் தெரிந்த இந்தியில் பேசிக் கொண்டிருந்தார்.

ஒருநாள் கடைக்குப் போன அவர் அங்கு பணியில் இருந்த இளம் பெண்ணிடம் ‘தில் கிடைக்குமா?” என்று கேட்டார். அந்தப் பெண் என்ன கேட்கிறீர்கள் என்று கேட்டார். இவர் மறுபடியும் “தில், தில்” என்றார். அந்தப் பெண் அவர் கன்னத்தில் பளார் என்று ஒன்று கொடுத்தார்.

‘என்னப்பா இந்த ஊரில் எண்ணெய் கேட்டால், அறை குடுக்கிறார்களே!” என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார் அவர். இந்தியில் எண்ணெய், இதயம் இரண்டுக்கும் தில் என்பதுதான் சொல். ஆனால் உச்சரிப்பு வேறு.

ஒன்றை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் பேசினால் சில நேரம் அறை விழும் அல்லது சிரிப்பிற்கு இடமாகும்

ராஹுல் காந்தி write off என்ற சொல்லை, கடன் தள்ளுபடி என்று புரிந்து கொண்டு விடுத்த அறிக்கைகள் எனக்கு இந்த ஜோக்கைத்தான் நினைவூட்டின, ராஹூல் மட்டுமல்ல, பல தமிழ் ஊடகங்களும் கடன் தள்ளுபடி என்ற சொல்லைத்தான் பயன்படுத்தியிருக்கின்றன. அதனால் சமூக ஊடகங்களில் ஏழை விவசாயிக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதியா? என்று கொந்தளிக்கிறார்கள்.

Loans write off, Loans waiver என்ற இரு ஆங்கிலச் சொற்களையும் தமிழில் ‘கடன் தள்ளுபடி’ என்றே எழுதுகிறார்கள். உண்மையில் இரண்டும் ஒன்றல்ல. ஒரு கடன் Waive செய்யப்படுகிறது என்றால் அதைக் கடன் வாங்கியவர் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் write off செய்தாலும் கடன் வாங்கியவர் மீது  அதை வசூலிக்க நடவடிக்கைகள் தொடரும்.

திருப்பிச் செலுத்த வசதி இருந்தும் வேண்டுமென்றே வங்கிகளுக்குக் கடனைச் செலுத்தாமல் பாக்கி வைத்த் 50 பேரின் ரூ 68607 கோடியை பாஜக அரசு “தள்ளுபடி” செய்து விட்டதாக ராஹூல் அண்மையில் புகார் தெரிவித்திருந்தார்.  இந்த ஐம்பது பேரில் விஜய் மல்லையா, நீரவ் மோதி, மெகுல் சோக்ஸி போன்றவர்களும் உள்ளார்கள் என்றும் அவர்கள் பாஜவின் நண்பர்கள் என்றும் சொல்லியிருந்தார்.

உண்மையில் இந்தக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாத வண்ணம் waive செய்யப்பட்டுவிட்டதா? இல்லை. அவை write off செய்யப்பட்டுள்ளன.

Write off செய்தல் என்றால் என்ன?

அது ஒரு கணக்கியல் நடைமுறை. எல்லா நிறுவனங்களும் பொதுவாக நிதியாண்டின் இறுதியில் பாலன்ஸ் ஷீட் என்ற ஒன்றைத் தயாரிக்கும். அந்த நிறுவனத்தின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ள அது ஓர் தேவையான ஆவணம். பாலன்ஸ் ஷீட்டில் சொத்துக்கள் (assets) கடன்கள் (liabilities) என்று இரு பகுதிகள் இருக்கும். ஒரு நிறுவனத்தின் நிலம், கட்டிடம், இயந்திரங்கள், கையில் இருக்கும் ஸ்டாக், வரவேண்டிய தொகை இவை சொத்துக்கள். வாங்கிய கடன்கள், செலுத்த வேண்டிய தொகை, வரிகள், கட்டணங்கள் இவை கடன்கள் ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் அந்த நிறுவனத்தின் கடன்களை விட கூடுதலாக இருந்தால் நிறுவனம் பாதுகாப்பான நிலையில் இருக்கிறது என்று அர்த்தம்.

வங்கிகளும் இது போல் பாலன்ஸ் ஷீட் தயாரிக்கும். அவைகளும் வணிக நிறுவனங்கள்தானே? வங்கிகளைப் பொறுத்தவை அவை நிறுவனங்களுக்கு கொடுத்த கடன்கள் அவற்றிற்கு சொத்துக்கள், ஏனெனில் அது அவர்களுக்கு வர வேண்டிய தொகைதானே!

உதாரணமாக நீங்கள் எனக்கு ஆயிரம் ரூபாய் கடனாகக் கொடுக்கிறீர்கள் என் கணக்குப் புத்தகத்தில் அது நான் கொடுக்க வேண்டிய தொகையாக ‘கடன்கள்’ பக்கத்தில் இடம் பெற்றிருக்கும். உங்கள் கணக்குப் புத்தகத்தில்? அது வரவேண்டிய தொகையாக ‘சொத்துக்களில்’ இடம் பெற்றிருக்கும்.  

சரி இதன் தொடர்ச்சியாக இன்னொன்றையும் பார்ப்போம். எனக்குக் கொடுத்த கடனையும் சேர்த்து உங்களது  சொத்து ரூ 3000 என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் பிறருக்குக் கொடுக்க வேண்டிய தொகை, செலுத்த வேண்டிய கட்டணங்கள், வரிகள் இவையெல்லாம் சேர்த்து ரூ 2000 என்று வைத்துக் கொள்வோம். உங்கள் நிகர மதிப்பு ரூ 1000 (ரூ 3000-ரூ 2000). நீங்கள் வலுவான நிலையில் இருக்கிறீர்கள்.  ஆனால் நீங்கள் எனக்குக் கொடுத்த கடனை நான் திருப்பிக் கொடுக்காமல் நெடுங்காலமாக இழுத்தடிக்கிறேன். அது உங்களுக்கு திரும்ப வராது எனத் தோன்றுகிறது  அந்த நிலையில் அதைக் கழித்துவிட்டுப் பார்த்தால் உங்கள் நிகர மதிப்பு என்ன? பூஜ்யம் [ரூ 3000-ரூ1000)-2000]

நெடுங்காலமாகத் திரும்பி வராமல் வாராக் கடன்களாக இருக்கும் கடன்கள். வங்கிகளின் கணக்குப் புத்தகத்தில் வங்கியின் சொத்துக்களாக இடம் பெற்றிருக்கும் போது வங்கிகளிடம் சொத்துக்கள் அதிகமாக இருப்பது போலவும், வங்கி பலமாக இருப்பது போலவும் தோன்றும். ஆனால் உண்மையில் அநத வாராக் கடன்களால் வங்கிகள் ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே வங்கிகளின் உண்மையான பலத்தை அறிய வேண்டுமானால் அந்த வாராக் கடன்களை வங்கியின் சொத்துக்களிலிருந்து நீக்கிவிட்டுப் பார்க்க வேண்டும். இப்படி நீக்குவதுதான் write off.

இதன் அர்த்தம் இந்தக் கடன்களை வசூலிக்க நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்பதல்ல.இன்னும் சொல்லப்போனால் அந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இருக்கிறது.

கடன்களை வசூலிக்க 9967 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. 3515 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) போடப்பட்டுள்ளன. நீரவ் மோதி, கெகுல் சோக்சி, விஜய் மல்லையா ஆகியோரிடமிருந்து ரு 18332.7 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன முடக்கப்பட்டுள்ளன

உதாரணமாக நீரவ் மோதிக்கு அயல் நாடுகளில் உள்ள ரூ 961.47 மதிப்புள்ள சொத்து உட்ப்ட ரூ2387 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. நீரவ் மோதி இப்போது அயல்நாட்டில் சிறையில் இருக்கிறார். மெகுல் சோக்சிக்கு அயல்நாட்டில் உள்ள ரூ.67.9 கோடி சொத்துக்கள் உடபட ரூ 1936.95 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அவரை இந்தியாவிற்குக் கொண்டு வரும் வழக்குகள் அயல்நாட்டு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் மல்லையாவின் ரூ 8040 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ரூ 1693 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர் லண்டனில் இருந்து கொண்டு பெரும் சட்டப் போராட்டம் நடத்தினார். அதை இந்திய அரசு எதிர் கொண்டு வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கிறது. என்று தெரிவிக்கிறார் நிதி அமைச்சர், திருமதி நிர்மலா சீதாராமன். இவர்கள் பாஜகவின் நண்பர்கள் என்றால் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் வழக்காட வேண்டும்?

இந்தப் பெரும் பணக்காரர்களுக்கு இந்த ‘வாராக் கடன்கள்’ எப்போது, யார் ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்டன? “ 2008-2008 காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் இந்த வாராக்கடன்கள் கொடுக்கப்பட்டன. கடனைத் திருப்பிச் செலுத்தும் வழக்கமில்லாதவர்கள் என்ற பின்னணி இருப்பது தெரிந்தும் (பெரிய இடத்து) தொடர்பு கொண்டவர்களுக்கு அவை கொடுக்கப்பட்டன. தனியார் வங்கிகள் இவர்களுக்குக் கடன் கொடுக்க முன்வராத போதும் பொதுத்துறை வங்கிகள் கடன் கொடுத்தன” என்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன். (இந்தியா டுடே செப்டம்பர் 11 2018)

இவற்றை மீட்க எப்போது நடவடிக்கைகள் தொடங்கின? 2015ல் (மோதி அரசு அமைந்த பின்)  ரூ50கோடிக்கு மேல் வேண்டுமென்ற பாக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கைக் எடுங்கள் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு ஆணையிட்டது.

உண்மைகள் இவ்வாறிருக்க ராஹூல் காந்தி அரசியல் லாபங்களுக்காக மறுபடி கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். நிர்வாகத்தின் மீது ஏதும் குறைகாண முடியாத நிலையில் திரும்பத் திரும்ப மோதி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சொல்ல முயற்சிக்கிறார். அதற்கு வெளியே சிந்திக்க அவரால் முடியவில்லை என்பது பரிதாபமாக இருக்கிறது. பொய்க் குற்றச்சாட்டுகளைச் சொல்லி ரஃபேல் வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் எழுத்துப் பூர்வமாக ஒற்றை வரியில் மன்னிப்பு கேட்டதை அதற்குள்ளகவா மறந்து விட்டார்?      

13.5.2020        

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these