அதிசயம், ஆனால் உண்மை!

அந்த அரசரின் மனதை சில நாள்களாகவே ஒரு கேள்வி உறுத்திக் கொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், மாறு வேடம் அணிந்து நாட்டு மக்களிடம் கலந்து பழகி அவர்களது வாழ்வின் சிரமங்களை நேரிடையாக அறிந்து கொண்டிருந்தார். அவற்றைத் தணிக்க சில நலத் திட்டங்களையும் அறிவித்திருந்தார். ஆனால் அதன் பலன்கள் அவர் நினைத்த அளவில் அவர்களை சென்று அடையவில்லை. அது ஏன் என்பதுதான் அவரைக் குடைந்து கொண்டிருந்த கேள்வி.

அமைச்சரவையைக் கூட்டித் தன் கேள்வியை முன் வைத்தார். ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னார்கள். அரசர் மனம் சமாதானமடையவில்லை. ஒரு காவலன், “அரசே! நான் பதில் சொல்லலாமா?” என்று பணிந்து கேட்டான். “தெரிந்தவர் எவரும் சொல்லலாம்“ என்றார் அரசர்.

“எனக்கு ஒரு பனிக்கட்டி கொடுக்கச் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டான்.  அரசவைக்குப் பனிக்கட்டி கொண்டு வரப்பட்டது. தர்பாரில் இருபுறமும் அமைச்சர்களும் பிரதானிகளும் வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்களில் கடைசி ஆளாகக் காவலன் போய் நின்று கொண்டான். ஒவ்வொருவரும் பனிக்கட்டியை ஒரு நிமிடம் கையில் வைத்திருந்து அடுத்தவரிடம் கொடுக்க வேண்டும். அப்படி ஒவ்வொரு கையாகத் தாண்டி இறுதியில் தன்னை வந்த அடையுமாறு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

பனிக்கட்டிகள் கை மாறி மாறிக் கடத்தப்பட்டன. முதலில் அமர்ந்திருந்த அமைச்சரின் கையில் இருந்தபோது  ஒரு செங்கலைப் போல உறுதியாகவும் நீண்டும் இருந்த பனிக்கட்டி கடைசியில் இருந்த அந்தக் காவலனை வந்தடைந்த போது சில நீர்த்துளிகளாக ஆகியிருந்தது.

“இதுதான் நடக்கிறது அரசே! நீங்கள் அறிவிக்கும் போது நலத்திட்டங்கள் செங்கலைப் போல உறுதியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அது  பல கைகள் மாறி கடைக்கோடியில் உள்ள எங்களை வந்தடையும் போது ஒரு சிலப் பனித்துளிகளாக ஆகி விடுகின்றன” என்றான் காவலன்

இந்தக் கதையை முதலில் திமுக தலைவர்கள் மேடைகளில் சொல்லக் கேட்டேன். பின் இதையே சில மாற்றங்களுடன் ராஜீவ் காந்தி சொன்னதாகப் படித்திருக்கிறேன்.

ஆனால் அந்தக் கட்சிகளின் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும்தான் மக்கள் பணத்தில் ஊழல் செய்ததாக விசாரணைகளையும், வழக்குகளையும், அவர்களில் சிலர் சிறை தண்டனைகளையும் எதிர் கொண்டது. இதுதான் வரலாற்றின் விசித்திரம்.

ஆனால் வரலாற்ரின் அதிசயம் ஒன்றுண்டு. அதுவும் நம் காலத்திலேயே நம் கண் முன் நடந்திருக்கிறது.  ரூ 31 ஆயிரம் கோடிக்கு மேல், ஆம் ஒன்றல்ல இரண்டல்ல, ரூ 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், அரசுப் பணம், அதாவது மக்கள்  பணம், ஒரு பைசா இடைவழியில் திருடப்படாமல், அரசியல்வாதிகள், இடைத்தரகர்களால் சுரண்டிக் கொள்ளப்படாமல், சிந்தாமல், சிதறாமல் மக்களைச் சென்றடைந்திருக்கிறது. இதற்கு மக்கள் எந்த அரசியல்வாதிக்கும், அதிகாரிக்கும் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்கவில்லை.!

நம் இந்தியாவிலா? ஆம் நம் இந்தியாவில்!

நம்ப முடியவில்லை அல்லவா? இந்த அதிசயத்திற்குக் காரணம் ஜன்தன் கணக்கு  எனப்படும் மக்களின் வங்கிக் கணக்கு. இந்த ஜன்தன் கணக்குக் காரணம் பிரதமர் நரேந்திர மோதி.

 பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற இந்தத் திட்டத்தை மோதி 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். (கவனிக்க, இந்தத் திட்டத்திற்கு மோதி, தன் பெயரைச் சூட்டிக் கொள்ளவில்லை, பிரதம மந்திரியின் திட்டம் என்ற பொதுப் பெயரில்தான் அழைக்கப்படுகிறது)) இந்தத் திட்டத்தை அறிவிக்கும் போது “மேரா கதா, பாக்ய விதாதா” ( எனது கணக்கு எனக்கு நல்வாழ்வைக் கொடுக்கும்) என்ற ஒரு முழக்கத்தை முன் வைத்த மோதி, “நாம் இந்த சுதந்திர நாளைப் பொருளாதார சுதந்திரம் அடைந்த நாளாகக் கொண்டாடுவோம்” என்று பேசினார்.

வழக்கம் போல் நம் அறிவு ஜீவிகள் இந்தத் திட்டம் குறித்த எதிர்மறையான கருத்துக்களை உதிர்த்தார்கள். பொதுத்துறை வங்கிகளில் இருப்பவர்களின் பணிச்சுமை அதிகரித்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் பேசின.’ஜீரோ பாலன்ஸ்’ என்ற சலுகை காரணமாக ஒருவரே பல கணக்குகளைத் தொடங்கி விடுவார்கள் என்று பொருளாதார வல்லுநர்கள் அவநம்பிக்கை தெரிவித்தார்கள். ஏற்கனவே மக்களில் பலருக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது, இது தேவையற்ற திட்டம் என்று சிலர் எழுதினார்கள்.

பலரது அவநம்பிக்கைக்குக் காரணம் இருந்தது. 2011ஆம் ஆண்டு, அப்போதிருந்த ஐமு.கூ அரசு ‘ஸ்வபிமான்’ என்று ஒரு திட்டத்தை அறிவித்தது. கிராமப் புறங்களுக்கு வங்கி சேவையை விரிவுபடுத்துவது என்பது திட்டம். கணக்குகள் தொடங்க இடைத்தரகர்கள் நியமித்து அவர்களுக்குக் கமிஷனும் அறிவித்தது. சரியாக நிர்வகிக்கப்படாததால் ஓராண்டிலேயே அந்தத் திட்டம் படுதோல்வி அடைந்தது. பொருளாதார ரீதியாக எல்லோரையும் உள்ளடக்கும் பணி 2012லிருந்து ஓராண்டிற்குள் தாறுமாறாகப் போனது (“for about one year from 2012, the work towards financial inclusion went haywire) என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை எழுதியது (நவம்பர் 23, 2015)

ஆனால் ஜன்தன் எடுத்த எடுப்பிலேயே பாய்ச்சல் காட்டியது. முதல் ஒரு வாரத்தில் (ஆகஸ்ட் 23-29, 2014) ஒரு கோடியே 80 லட்சம் கணக்குகளுக்கு மேல் தொடங்கப்பட்டன. கின்னஸ் புத்தகம் இந்த சாதனையைப் பதிவு செய்து கொண்டது. மோதி அரசின் திட்டங்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகும் ஹிண்டு குழுமப் பத்திரிகையான பிசினஸ் லைன் “வெற்றி நடை போடுகிறது” (“Going Strong”) என்று எழுதியது. “வியக்கத் தக்க வெற்றி” (admirable success) என்று  லைவ் மிண்ட் என்ற பத்திரிகை எழுதியது. ஜூன் 2018 நிலவரப்படி, 31 கோடியே 80 லட்சம் ஜன் தன் கணக்குகள் இருக்கின்றன. அதில் சேமிக்கப்பட்டுள்ள தொகை ரூ 79200 கோடி.

முன்பு வெற்றி பெறாமல் போன திட்டம் இப்போது எப்படி வெற்றி பெற்றது? நிர்வாகம்தான் காரணம். முன்பிருந்த திட்டம் அடித்தள மக்களை ஒன்றும் அறியாத பாமரர்களாக நினைத்து கணக்குத் தொடங்க ஆள் பிடித்து வரும் அணுகுமுறையைக் கொண்டிருந்தது. இப்போதைய திட்டம் கணக்குத் தொடங்குவதால் கிடைக்கும் பலன்களை அனுபவபூர்வமக அறிந்து கொள்ளச் செய்ததன் மூலம் மக்கள் ஆதரவைப் பெற்றது. அடித்தளத்திலிருந்து உயர்ந்த மனிதரால் அவர்களது எதிர்பார்ப்புகளையும் தயக்கங்களையும் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்தத் திட்டத்தால் மக்களுக்குக் கிடைக்கும் பலன் என்ன? மானியங்கள் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக வங்கிக் கணக்கிற்குச் சென்று விடும். கணக்கு உள்ளவர்கள் ரூபே என்னும் டெபிட்/கிரெடிட் கார்ட்கள் பெற்றுக் கொள்ளலாம். அதனால் கடைகளுக்கு ரொக்கம் எடுத்துச் செல்லாமல் பொருட்கள் வாங்க முடிகிறது. (இது பெண்களுக்கு ஒருவகையான பாதுகாப்பை அளிக்கிறது. குறிப்பாக குடிப்பழக்கம் உள்ள கணவர்களிடமிருந்து) இந்த வங்கிக் கணக்கு அவர்களுக்குப் பலவகையான அடையாளங்களுக்கான நிரூபணமாகவும் ஆகிறது.

சரி நாட்டிற்கு என்ன பயன்?

ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத, இந்தியாவை உருவாக்கமுடியும், அது ஏதோ கற்பனை அல்ல, எட்டாக்கனியல்ல, அடையமுடியாத கனவு அல்ல என்ற நம்பிக்கை பிறக்கிறது. அதை நேரடியாகக் கணக்குகளுக்கு  மாற்றப்பட்ட 31ஆயிரம் கோடி பணப்பரிமாற்றம் நடைமுறையில் மெய்ப்பிக்கிறது

Box

பயனடைந்தோர்பயனடைந்தோர் எண்ணிக்கைமொத்த தொகை (ரூ)
ஜன்தன் கணக்குள்ள பெண்கள்19.96 கோடி (98%)9980 கோடி
விதவைகள், மூத்த குடிமக்கள்2.82 கோடி (100%)1405 கோடி
பிஎம் கிசான் திட்டத்தின் முதல் தவணை8.31 கோடி16621 கோடி
கட்டிடத் தொழிலாளர்2.16 கோடி3066கோடி
மொத்தம்33.25 கோடி31,072 கோடி

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these