வைணவத் தமிழில் கடவுள்

எல்லாத் தொல்குடிகளிடமும் தோன்றியதைப் போல ஆதி தமிழரிடையே கடவுள் என்ற கருத்தாக்கம் தன்னைச் சூழ்ந்திருந்த இயற்கையின் மீதேற்பட்ட பயத்தால்தான் தோன்றியது. இயற்கையின் மீது ஏற்பட்ட பயத்திற்குக் காரணம் மூன்று. ஒன்று, இயற்கை நம்மை அழிக்கும் ஆற்றல் கொண்டது, ஆனால் நம்மால் இயற்கையை அழிக்க முடியாது. அதன் ஆற்றலை வேறொன்றாக மாற்றலாமே தவிர அழிக்க முடியாது. இரண்டாவது காரணம் இயற்கை நமக்குக் கொடுக்கும், நம்மைப் புரக்கும், ஆனால் நம்மால் இயற்கைக்கு நம்மால் கொடுக்க முடிந்தது அதிகம் இல்லை. இயற்கை என்பது தானாக உருவானது. அதன் இயல்பை மாற்ற முடியாது. நாம் உருவாக்கியவற்றை மாத்திரமே நாம் கட்டுப்படுத்த முடியும்.

இந்த மூன்றும், அழிக்க முடியாத ஆற்றல், கொடுத்துப் புரக்கும் கருணை, அதிகாரம் செலுத்த முடியாத இயல்பு  இவை மூன்றையும் கொண்ட ஒன்றைத்தான் இன்றுவரை கடவுள் என நாம் கருதி வருகிறோம். இதனிடம் மக்கள் காலங்காலமாக வேண்டிக் கொள்பவை பெரும்பாலும் மூன்றுதான்: 1)என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்று. 2) எனக்கு செல்வம் கொடு 3) என் வாரிசுகள் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும்.

தமிழரின் ஆதி நூலாகிய தொல்காப்பியம் ““வழிபடு தெய்வம் நின்புறம் காப்பப்/பழிதீர் செல்வமொடு வழிவழிசிறந்து/பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே” என்று தமிழரின் வழிபாட்டுக்கான காரணங்களைப் பட்டியலிடுகிறது. (சுவாரஸ்யம் என்னவென்றால் இது சொல்லப்படும் இடம், செய்யுள் எழுதுவதற்கான இலக்கணத்தைக் குறிக்கும் செய்யுளியல். கலிப்பாவிலும் வஞ்சிப்பாவிலும் இந்த வாழ்த்து வராது. வெண்பாவிலும், ஆசிரியப்பாவிலும்தான் வரும் என்பதைச் சொல்லும் பாடல் இது!)

இயற்கை என்பது என்ன என ஆரயப் புகுந்தவர்கள் சில முடிவுகளுக்கு வந்தார்கள். விலங்குகள் கடவுள்கள் அல்ல. அவை நம்மைப் போல் உருவாக்கப்பட்ட உயிர்கள். அவற்றிற்கு மரணம் உண்டு. சில விலங்குகள் நம்மை விட வலிமையானவை. அவற்றால் நம்மைக் கொல்ல முடியும்தான். ஆனால் அவற்றை மனிதன் பழக்க முடியும் அல்லது அழிக்க முடியும்.யானையையும் குதிரையையும் பழக்க முடியும். புலியையும் பாம்பையும் கொல்ல முடியும். தாவரங்கள் கடவுள்கள் அல்ல.

அப்படியானால் எது கடவுள்? எது தானாகத் தோன்றியதோ எது எங்கும் உள்ளதோ அது  வணங்கத்தக்கது. அதாவது நிலம், நீர், காற்று, நெருப்பு, (சூரியன்) வெளி என்ற ஐந்து பெரும் வளங்களைக் கடவுள்கள் என்று கருதினார்கள். இன்னும் சிலர் அதன் பண்புகளை ஆராய்ந்து அவற்றைக் கடவுள் தனமை என்று சொன்னார்கள்.

“நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள/ நின் தண்மையும் சாயலும் திங்கள் உள/ நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள/நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள/ நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள/நின் தோற்றமும் அகலமும் நீரின் உள/நின் உருவமும் ஒளியும் ஆகாயத்து உள/நின் வருதலும் ஒடுக்கலும் மருத்தின் உள” என்பது சங்க இலக்கியமான பரிபாடல் (தண்மை என்றால் குளிர்ச்சி, வண்மை என்றால் வள்ளல் தன்மை. நோன்மை என்றால் பொறுமை, பெருந்தன்மை, ஒண்மை என்றால் ஒளிரும் தன்மை)

எங்கும் இருப்பது, அளவிட முடியாத ஆற்றல் கொண்டது, என்ற கருத்துக்கள் கடவுள் எப்படி இருப்பார் என்று சிந்தித்தவர்களிடம் பிரம்மாண்டம் என்ற எண்ணத்தை விதைத்தது. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது, அளவிடமுடியாத பெரும் ஒளி என்றார் சேக்கிழார் (ஓதற்கரியவன், அலகில் சோதியன்) உலகம் யாவையும் அவன் படைத்தது, அவற்றில் எதை நிலை பெறச் செய்வது எதை அழிப்பது என்று முடிவில்லாமல் விளையாடுகிறவன் என்றார் கம்பர் (உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலை பெறுத்தலும் நீக்கலும்)

வலிமை,  பிரம்மாண்டம் எனபவை  மனிதரிடையே அச்சத்தையும் வியப்பையும் ஏற்படுத்தும். ஆனால் நெருக்கமோ, நேசமோ ஏற்படுத்தாது. சர்வ வல்லமை கொண்ட மேலதிகாரியிடம் நெருக்கம் ஏற்படாது. அவர் Lonely at top என்று தனிமைப்பட்டிருப்பார். கொள்ளிவாய்ப் பிசாசுகளையும் ரத்தக் காட்டேரிகளையும் நேசிப்பவர் யார்? அப்படியானால் யாரிடம் நெருக்கம் ஏற்படும்? நம்மைப் போன்ற மனிதர்களிடம். நமக்கு சமமாக நாம் நினைக்கும் நண்பரிடம்.

கடவுளை மனிதனுக்கு அருகில் நெருக்கமாகக் கொண்டு வந்தது வைணவம். பிரம்மாண்டம் என்பதிலிருந்து விடுவித்து கடவுளை humanize செய்யும் முனைப்புத்தான் வைணவம். அங்கும் கடவுள் மூன்று அடிகளால் மூன்று உலகையும் அளந்தவர்தான். ஆனால் அவர் உருவில் சிறியவர்.

விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைச் சொல்லும்  சகஸ்ரநாமத்தில்  245ஆவது பெயராக  வருவது நாரயணன் நாரா என்றால் ஆன்மாவிலிருந்து உருவானவை (வெளி, நீர், நிலம், நெருப்பு காற்று) அயனம் என்றால் இருப்பிடம். ஆன்மாவிலிருந்து உருவானவை எல்லாம் இருக்குமிடம் நாரயணன். வாசுதேவனும் அப்படியே எங்கும் இருந்து எல்லோரையும் காப்பவர். விஷ்ணு என்ற பெயருக்கும் எங்கும் நிறைந்திருப்பவர் என்றுதான் பெயர்

பெயர்கள் என்னவாக இருந்தாலும் விஷ்ணுவிற்கு அவதாரங்கள் உண்டு. அதாவது வைணவத்தில் கடவுள் மனிதனாகப் பிறப்பார். மனிதன் படும் துன்பங்களையெல்லாம் படுவார். மனிதன் அனுபவிக்கும் இன்பங்களை அனுபவிப்பார். அவருக்குப் பாசம், காமம், காதல், கல்யாணம், பிரிவு, தாபம், குழந்தைகள், நண்பர்கள், பகைவர்கள்,போர், உறக்கம், விழிப்பு,குயுக்தி, குறும்பு, தந்திரம், மேதமை, ஞானம் எல்லாம் உண்டு. இராமன் என்றாலும், கிருஷ்ணன் என்றாலும் அவர் நிறம் கறுப்பு. மாயோன், கண்ணன், கார்வண்ணன், கடல்வண்ணன், கேசவன் என என்ன பெயர் சொன்னாலும் அவன் உங்களையும் என்னையும் போலக் கறுப்பன். வைணவத்தில் கடவுள் குறும்பு செய்யும் குழந்தை; பெண்களைச் சீண்டும் வளரிளம் பருவத்தவன்; காதல் புரியும்  இளைஞன்; கொடியும் குடையும் கொண்ட அரசன்; அதே நேரம் மாடு மேய்ப்பவன்; எதிரிகளைச் சாய்ப்பவன்; என்றாலும் வாளெடுத்துப் போர் புரியாதவன்; தேரோட்டி, வழிகாட்டி எல்லாமும்தான்.பாரதி சொன்னது போல் தந்தை, நல்லாசிரியன், சேவகன். கண்ணதாசன் சொன்னது போல் அவன் குருவாயூரில் குழந்தை. மதுராவில் கொடியோடு நிற்பவன்.

அவனைக் குழந்தையாகக் கண்டு குதூகலித்தவர் பெரியாழ்வார். கண்ணனைத் தூளியில் போடுகிறார். காலால் உதைத்துத் துணியைக் கிழித்து விடுகிறது குழந்தை. சரி என்று எடுத்து இடுப்பில் வைத்துக்  கொள்கிறார். இடுப்பு ஒடிந்து போகுமளவிற்கு முன்னும் பின்னுமாக ஆடுகிறான். அப்படி ஆடி ஆடி விழுந்து விடப் போகிறானே என வயிற்றோடு இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்.வயிற்றில் காலால் எத்துகிறான். முடியலைமா. எனக்குத் தாங்க சக்தி இல்லைமா என்று செல்லமாக அலுத்துக் கொள்கிறார் பெரியாழ்வார்.

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்

எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்

ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்

மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்!

இதைப் படிக்கும் எந்தத் தாய்க்கும் அவரவர் வீட்டுக் குழந்தைகள் நினைவுக்கு வருமா? சங்கும் சக்கரமும் கீரிடமும் தரித்து விண்ணுக்கும் மண்ணுக்கும் நெடிதுயர்ந்து நிற்கும் கடவுளா கண்ணில் தெரியும்?

திருமங்கையாழ்வாருக்கு நண்பன். “ஏனப்பா இப்படிச் சோர்ந்து படுத்திட்ட, ரொம்ப தூரம் நடந்தியே, கால் வலிக்குதா? பெரிய கனத்தைத் –அதான் இந்த உலகத்தை- தூக்கிட்டு நின்னியே, உடம்பு வலிக்குதா? கொஞ்சம் எந்திருச்சுத்தான் பேசேன் என்கிறார்,கடவுளிடம்.

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்

இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால்வரைச்சுரம்

கடந்த கால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்

கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே

இன்னொருவர் –திருமழிசையாழ்வார்- கடவுளிடம் சண்டைக்கே போகிறார். ராஜாக்கும் எனக்கும் சண்டை. இனி நான் இங்க இருக்க முடியாது. ஊரை விட்டே போகிறேன். நானே போறேன், உனக்கென்ன படுக்கை வேண்டியிருக்கு. உன் பாயைச் சுருட்டிட்டு நீயும் எந்திருச்சி வாய்யா! என்கிறார் “துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்” கடவுளை கற்பூரம் காட்டிக் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் சிலையாகப் பார்க்கும் மனதிற்கு இந்தச் சண்டை சாத்தியமா?

இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டவள் ஆண்டாள். பெரியாழ்வாருக்கு கண்ணன் கைக் குழந்தை. ஆண்டாளுக்குத் தான் மணக்க வரித்துக் கொண்ட கம்பீரமான காதலன்.

ஆழ்வார் வளர்த்தாலும் அவள் ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’ நிறைந்த ஆயர்பாடிப் பெண்ணாகத்தான்  தன்னை வரித்துக் கொண்டாள். காத்தியாயினி என்ற பாவைக்கு ‘நெய் உண்ணோம், பாலுண்ணோம், நாட்காலை நீராடி மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்’ என்று தன்னை வருத்திக் கொண்டு  ஒரு மாதம் விரதம் இருந்து தனக்கு நல்ல மணவாளனைத் தா என்று வேண்டுவது ஆயர் குலப் பெண்கள் மேற்கொள்ளும் பாவை நோன்பு. ஆண்டாள் அரங்கனைத் தன் வரனாக வரித்துக் கொண்டு நோன்பிருக்கிறாள். தன் காதலுக்காக ஊரையே எழுப்பிவிடுகிறாள். முதலில் எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியே என்று தன் பத்து சிநேகிதிகளை எழுப்பிச் சேர்த்துக் கொண்டு நந்தகோபன் மாளிகைக்குப் போகிறாள் அங்குதான் நந்தகோபனின் குமரன், யசோதை வளர்த்த இளஞ்சிங்கம் , மெத்தெனற பஞ்ச சயனத்தின் மேல் நப்பின்னை கொங்கை மேல் வாய் வைத்துக் கொண்டு உறங்குகிறான். நந்தகோபன் மாளிகைக் காவலாளியை எழுப்புகிறாள். நந்தகோபனை எழுப்புகிறாள். பின் யசோதையை எழுப்புகிறாள். நந்தகோபன் மருமகள், கண்ணன் மனைவி நப்பின்னையை எழுப்புகிறாள்

தன் தோழிகள் ஒவ்வொருவரையும், அவள் செல்லமாக, பேய்ப் பெண்ணே, நாணமற்றவளே, வாயாடி என்று திட்டுவதும், இளங்கிளியே, அழகிய கண்ணை உடையவளே, எனக் கொஞ்சுவதும், கும்பகர்ணன் உனக்குத் தூக்கம் கொடுத்தானா எனக் கிண்டலடிப்பதும், மாமன் மகளே!, நற்செல்வன் தங்காய்! என உறவு கொண்டு உரிமை பாராட்டுவதும் ஒவ்வொன்றும் ஒரு நாடகம். அதுவே காவலாளியிடம் வரும் போது கெஞ்சல் தொனிக்கிறது. நந்தகோபனிடம், யசோதையிடம் வரும் போது மரியாதையாக மாறுகிறது. நப்பின்னையிடம் வரும்போது வாசமுள்ள கூந்தல், பந்து விளையாடும் விரல், செப்பன்ன  மென்முலை என ஐஸ் வைப்பதாக மாறுகிறது.

இந்த நப்பின்னை முழுக்க முழுக்கத் தமிழ்ப் பெண். இவளைப் பற்றி வடமொழி இலக்கியங்களில், பாகவத்தில்,  குறிப்புகள் கிடையாது. ஆனால் சிலப்பதிகாரம்  சீவக சிந்தாமணி இவை நப்பின்னையைக் குறிப்பிடுகின்றன.

சிலப்பதிகாரத்தில், மதுரை வரும் கோவலனும் கண்ணகியும் ஓர் ஆயர்பாடியில் தங்கியிருக்கின்றனர். மறுநாள் கோவலனுக்கு நடக்க இருப்பதைக் குறிக்கும் விதமாக துர் நிமித்தங்கள் நிகழ்கின்றன. அதனைக் கண்டு கன்றுகளும் கறவைகளும் கண்ணீர் பெருக்குகின்றன. அவற்றின் துயர் நீங்க முன்பு கண்ணன் தன் அண்ணனுடனும் நப்பின்னையோடும் ஆடிய நடனத்தை ஆடுவோம் என்கிறாள் ஆயர் குலப் பெண் மாதரி. ( பசுக்களின் கண்ணீரைக் தங்கள் குழந்தையின் கண்ணீரைப் போல பார்த்தவர்கள் தமிழர்கள்)

இந்த இடத்தில் இளங்கோவின் கற்பனை பிரமிக்க வைக்கிறது. சுஜாதா தான் எழுதிய ஒரு சிறுகதையில் பார்வையற்ற ஒருவருக்கு வண்ணங்களை விளக்க ஏழு வண்ணங்களுக்கும் ஏழு ஸ்வரங்களில் ஒன்றைச் சூட்டி விளக்குவார். அது இளங்கோவிடம் இரவல் வாங்கிய சரக்கு. மாதரியின் ஆயர்பாடியில் பாலைப் பண்ணில் குரவைக் கூத்தாடுகிறார்கள். ஏழு பெண்கள். ஒவ்வொரும் ஒரு ஸ்வரம். ஷட்ஜம் எனச் சொல்லப்படும் ‘ஸ’ என்ற ஸ்வரத்திற்கு தமிழில் குரல் என்று பெயர். கண்ணன்தான் ஸ அதாவது குரல். அடுத்த முக்கிய ஸ்வரம் ப எனப்படும் பஞ்சமம். அதன் தமிழ்ப் பெயர் இளி.அது கண்ணனின் அண்ணன் பலராமன். நப்பின்னை ரி எனப்படும் ரிஷபம். அதற்குத் தமிழ்ப் பெயர் துத்தம். பண்ணில் ஸ்வரங்கள் அமைந்திருப்பது போல் ஒவ்வொரு பெண்ணும் ஒருவரொடு ஒருவர் சேர்ந்தும் பிரிந்தும் மாறியும் ஆடுவர்.  அதாவது இசையைக் கண்ணால் காணலாம்!

இதில் கவனிக்க வேண்டிய அமசம் ரி எப்போதும் ஸ வை ஒட்டியே வரும். அதாவது நப்பின்னை எப்போதும் கண்ணனோடு சேர்ந்தே ஆடுவாள்.

காதலின் தாபமும் தவிப்பும்,  இசையின் நுட்பமும் , வாழ்க்கையின் சுவைகளும்,   தமிழின் இனிமையும் சேர்ந்து உருவானவைதான் வைணவ இலக்கியங்கள். அவை தமிழுக்கு பிள்ளத் தமிழ், பாவைப் பாடல்கள் எனப் பல புதிய வகைகளைத் தந்தன. சுருக்கமாகச் சொன்னால் தமிழால் பக்தி வளர்ந்தது. பக்தியால் தமிழ் வளர்ந்தது.

 ‘இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன். பெருந்தமிழன் நல்லேன் பெரிது’ என்று சொல்லிப் பூரிக்கிறார்  பூதத்தாழ்வார். நானே பெருந்தமிழன். தமிழால் நல்லவன் ஆனேன். அந்தத் தமிழால் மாலை செய்து உன் பாதங்களுக்குச் சூட்டினேன் என்று இதற்குப் பொருள்ஒருவன் பக்தி கொள்வதற்கும் பெருந்தமிழனாக நல்லவனாக இருப்பதற்குப் பாசுரங்கள்  வாசித்தால்  போதாதா?    

அந்திமழை ஜூன் 2023

About the Author

One thought on “வைணவத் தமிழில் கடவுள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these