திசைகள்- வான் வழியே ஒரு வாசகசாலை :: வருகை தருக www.thisaigal.in
பெரியோர் எனில் வியத்தலும் இலமே. சிறியோர் எனில் இகழ்தல் அதனிலும் இலமே

பரிட்சைக்கு நேரமாச்சு

“அப்பா பார்த்தீங்களா, பரிட்சை வருதாம்!” என்றாள் மித்ரா பேப்பரை மடக்கிப் போட்டபடி
“ஆமாம், தேர்தலாம் தேர்தல், தூத்தேறி!” என்று சீறினார் ராமநாதன்
“ஓட்டுப் போடுகிறவர்களைத் தமிழ் நாட்டில்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம்”
‘அதெல்லாம் சும்மா, நம்பாதே” என்றான் ரிஷி.
“இல்லை டியர், பேப்பரிலே போட்டிருக்கான்.”
“கொஞ்சம் லாஜிக்கலா யோசித்துப்பாரு. இன்னிக்குத் தேதியில இந்தியாவின் ஜனத்தொகை நூறு கோடி. இந்த நூறு கோடியிலே ஒர்த்தன். அவன் யாரு, எந்த ஊரு, என்ன பேரு, கறுப்பா, சிகப்பா, வடக்கா, தெற் கான்னு தலைவருக்குக் கூடத் தெரியாது. தெரிஞ்சா பாலிட்டிஷியன்ஸ், பத்திரிகைக்காரன் அத்தனை பேரும் அவனே மொச்சிட மாட்டாங்களா? அவனுக்கு ஏகப்பட்ட சலுகைகளே அரசாங்கம் அறிவிச்சுடாதா? பணம், பிரசாரம், அதிகாரம், அத்தனைக்கும் அப்பாற்பட்டு, நம்ம தேர்தல்கள் நடக்கணும். ஜனநாயகம் பிழைக்கணும்னுதானே இந்த ஏற்பாடு. இத்தனை ரகசியம். இந்த செலக் ஷன்ல மனுஷ வாசனையே கூடாதுன்னுதானே அதைக் கம்ப்யூட்டர் கைல விட்டிருக்கு அதுவும் எப்படியாப்பட்ட கம்ப்யூட்டர் இந்தியாவின் உயர்ந்த மூளைகள் சேர்ந்து உருவாக்கிய ‘நசி கேதன்”
“அது உங்களை செலக்ட் பண்ணினா நீங்க யாருக்கு ஒட்டுப் போடுவீங்க?” கேட்டாள் ப்ரீதம்.
‘இதெல்லாம் என்னம்மா தேர்தல், ஐ மீன் பரீட்சை, நானெல்லாம் நிஜமான தேர்தலில் நிஜமான வோட்டுப் போட்டவன்”
“நிஜமான ஒட்டா?”
“ஆமாம். அது அந்தக் காலம். ஜனங்கள் எல்லோரும் ஒட்டுச் சாவடிக்குப் போய் வரிசையில் நின்று, சிட்டு வாங்கி, முத்திரை குத்தி, பெட்டியில் போட்டு வருவோம்.”
“எல்லோருமா?”
“ஆமாம். ஒவ்வொரு ஊரிலும் தேர்தல் – அதாவது பரீட்சை. அதில் ஒருவரைத் தேர்ந்தெடுப்போம். அவர்கள் கூடித் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.”
“எல்லோரும் ஒட்டுப் போட்டால் யார் ஜெயித்தவர் என்று எப்படித் தெரியும்?”
“எல்லாச் சீட்டையும் கொட்டி எண்ணுவார்கள். யாருக்கு அதிக சீட்டோ அவர்தான் ஜெயித்தவர்’
“சரி, யாருக்கு ஒட்டுப் போடணும்னு உங்களுக்கு எப்படித் தாத்தா தெரியும்?”
“அவனவனுக்குப் புத்தி இல்லே?”
“அந்த லட்சணத்தைத்தான் சரித்திரத்தில் குறிச்சி வைச்சிருக்காங்களே! எத்தனை நிலையில்லாத அரசாங்கங்கள்! அதனால் ஐந்து வருஷங்களுக்குள் எத்தனை தேர்தல்கள்! அதற்கு எவ்வளவு செலவு! செலவு மட்டுமா? எத்தனை நேரம் வெட்டியாய்ப் போயிற்று? பிரசாரத்தில், வோட்டுப் போடுகிற க்யூவில், அதை எண்ணுகிற இடத்தில், அதற்குப் பின் முடிவு சொல்கிற ஆபீசில்! காட்! ஹெள் மெனிமேன் அவர்ஸ்! அதையெல்லாம் உருப்படியாய்ப் பயன்படுத்தியிருந்தால் நாம் இன்னும் பத்து வருஷத்துக்கு முன்குடியே இந்த வல்லரசு ஸ்தானத்தை அடைந்திருப்போம்”
“இப்போது இருக்கிற சிஸ்டத்துக்கு அது ஒன்றும் குறைந்து போய்விடவில் லை”
“ஏன் இப்போது இருப்பதில் என்ன தப்பு?”
‘நூறு கோடி பேருக்கும் ஒர்த்தன் போய் ஒட்டுப் போடுகிறானாம், அதுவும் மிஷின் மூலம். பேஷ்!’
“அந்த ஒருவனை எத்தனை கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் அதை நினைத்துப் பாருங்கள். இந்தத் தேசத்து பிரஜை அத்தனை பேர் ஜாதகமும் அதன் கையில் இருக்கிறது. எந்த ஊரில், எந்த வீட்டில் யார் இருக்கிறார்கள். எத்தனை சம்பளம், என்ன படிப்பு, எதில் ஈடுபாடு, எப்படி உடல்நிலை, மன ஆரோக்கியம் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. அதைக் கம்ப்யூட்டர் கையில் கொடுக்கிறார்கள். அது கவனமாய் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. ரெப்ரசென்டேட்டிவ் சாம்ப்ளிங், அவன் ஒட்டு சரியாகத் இருக்கும். இத்தனை நாள் இருந்து வந்திருக்கிறது” அத்தனை சாமர்த்தியமான மிஷின் நேர ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துவிடலாமே? எதற்காக ஒரு பிரஜையைத் தேர்ந்தெடுத்து அவன் மூலம் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?”
“செய்துவிடலாம். வெகு சுலபம். ஆனால் நம் கொள்கை? நாம் ஜனநாயகத்தைத் தீவிரமாக நம்புகிறவர்கள். இந்தத் தேசத்துக்குக் கடுமையான சோதனைகள் ஏற்பட்ட காலத்தில்கூட நாம் ஜனநாயகத்தைக் கைவிட்டு விடவில்லை, குடிமக்களுடைய கருத்திற்கு, உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுக்காமல், முழுக்க முழுக்க மிஷின் மூலம் ஒரு தேர்தல் எப்படி ஜனநாயகத்தில் சாத்தியம்?”

பரீட்சைக்கமிஷனர் வந்திருக்கிறேன்.”

குழைவான குரல் கேட்டு நிமிர்ந்தார் தலைவர். எதிரே பணிவாய் நின்றுகொண் டிருந்த மனிதரைப் பார்த்தார். முகம் இறுகிற்று.

எந்தக் காரணம் கொண்டும் என்னை அலுவலகத்தில் சந்திக்கக் கூடாது என்று சொல்லியிருந்தேனே?”

“என்னிடம் யாரும் அப்படிச் சொல்ல வில்லை, தலைவர் அவசரமாகப் பார்க்க விரும்புவதாக மட்டும் செய்தி வந்தது.”
“இதை யெல்லாம் விரிவாகச் சொல்லிக் கொண்டிருப்பார்களா? தேர்தல் – சட்! -பரீட்சை வரப்போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் என்னேந் தனியாகச்சந்திப்பது தெரிந்தால் எதிர்க் கட்சிகள் கதை கட்டிவிடாதா? “சுத்தமான ஜனநாயகவாதி’ என்ற என் இமேஜ் என்ன ஆகும்?”‘இத்தனை சிறிய விஷயத்தில் கூட புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள முடி யாத நீங்கள். இத்தனை முக்கியமான பரீட் சையை எப்படி நடத்தப் போகிறீர்கள்?”
“தலைவர் அது பற்றிக் கவலைப்பட வேண்டாம். எல்லாம் கவனமாக ஏற்பாடு செய்திருக் கிறேன்.”
“எங்கே?”
“தமிழ் நாட்டில். அங்கு தலைவரைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் நிலவுவது போன மாதக் கணக்கெடுப்பின் மூலம் தெரிகிறது”

“தமிழ்நாடு? குட்! தலைநகருக்கு வெகு தொலைவில். பிரச்னைகள் குறைந்த மாநிலம். வீடு, உணவு, கல்வி, மின்சாரம், போக்கு வரத்து வசதிகள் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது பரவாயில்&ல. விலவாசி தான் பிரச்னை, சமாளித்து விடலாம்.

“எதற்கும் பரீட்சையின்போது விலைவாசி குறித்த கேள்விகளைத் தவிர்த்து விடுங்கள்.”

“யார்?”
“படித்தவர். நடுத்தர வர்க்கம். நகரத்து இளைஞர்.”
“படித்தவரா?”
“இந்த முறை அது அவசியமாகிறது. போனதரம் ஹரியானாவின் விவசாயி. அதற்கு முன்னுல் பீகாரின் ஆதிவாசி. அப்படியே தொடர்ந்து கொண்டு இருந்தால் படித்தவர்களுக்கு இந்த சிஸ்டத்தில் நம் பிக்கை போய்விடும்.” “அதுவும் சரிதான். ஆனால் ஜாக்கிரதை யாக இருங்கள்.”
“கவலைப்பட ஒன்றுமில்லை. ஒன்றுக்கு இரண்டு முறை செக் செய்து கொண்டு விட்டேன். இன்று படித்தவர்களுக்கு என்று சொந்தக் கருத்துக்கள் இல்லை. அவர்களின் அபிப்பிராயங்களே மாஸ் மீடியாக்கள் உரு வாக்குகின்றன. இது தமிழ் நாட்டில் மிக அதிகம். இந்தியாவில் மிக அதிகம் விற்பனை யாகும் தினசரி, வாரப் பத்திரிகை எல்லாம் தமிழில் இருக்கின்றன. அவை தலைவரை ஆதரிக்கின்றன. இந்த இளைஞர் உங்கள் மீது அபிமானம் கொண்டவர்.”
“எதற்கும் ‘நசிகேதன்” கேட்க வேண்டிய கேள்விகள் தயாரானதும் என்னிடம் காண் பித்து விடுங்கள். நான் இன்னும் ஐந்து வருடமாவது தேசத்துக்குப் பணி புரிய விரும் புகிறேன்”
” “உங்கள் விருப்பப்படியே ஆகட்டும்.”
“ஆனால் என்ன அலுவலகத்தில் சந்திக்க வேண்டாம்.”பரீட்சைக்கு இரண்டு நாள் இருக்கும். வாயில் மணி கூப்பிட்டது. ரிஷிபோய்க் கதவைத் திறந்தான். கோதுமைப் பொன் நிறம், குறிப்பிடும்படியான உயரம் முகத்த்தில் சின்ன முறுவல்.

அது எந்த நேரமும் உறுமலாக மாறலாம் என்பது போலத் தோற்றம்.
“இது அஸ்ட்ரா காலனி?”
“யெஸ்”
“503வது கட்டிடம் : 27வது ப்ளாட்?”
“ஆமாம். யார் வேண்டும் உங்களூக்கு?”
“மிஸ்டர் ரிஷி”
“நான்தான்.”
“வாழ்த்துக்கள்.” வந்தவர் கை பிடித்துக் குலுக்கிஞர்.
“நான் கெளடல்யா. பரீட்சைக் கமிஷன் அதிகாரி. நூறு கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக, இந்தியாவின் ஏழாவது பொதுப் பரீட்சையில் தலைவரைத் தேர்ந் தெடுக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்
திருக்கிறது.”
“காட்! எனக்கா”
ரிஷி திகைத்துப்போனான் “வாவ்” என்று கூறினுள் மித்ரா,
“உட்காருங்கள்.”
“மித்ரா, எனக்குத் தண்ணி கொண்டு வா. மார்பு படபடவென்று அடைக்கிறது.”
“ரிலாக்ஸ் மிஸ்டர் ரிஷி.” என்று அவனைசோபாவில் அமர்த்தினார் அதிகாரி.
சட் டைப் பித்தான்களைத் தளர்த்தினார். மித்ரா, இரண்டு பேருக்கும்.ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வந்தாள். இவன் காதருகே குனிந்து, “மயக்கம் கியக்கம் போட்டுடாநீங்க, உடல் நிலை சரியில்லாத ஆள்னு வேற யாரை யாவது செலக்ட் பண்ணிடப் போருங்க” என்று பல்லைக் கடித்தாள்.
“மிஸ்டர் ரிஷி, நீங்க கொஞ்சம் எங்க கூட ஒத்துழைக்க்னும், இரண்டு நாளைக்குஎங்கேயும் வெளியே போகக் கூடாது!”.
“மேடம், நீங்க போன் பண்ணி பீசுக்கு நியூஸ் சொல்லிடுங்க. நியூஸ் பேப்பர், பத்திரிகை யெல்லாம் இரண்டு நாளேக்குப் போட வேண்டாம்னு சொல்லி யிருக்கேன். இப்போ டெலிவிஷனை சீல் பண்ணிடப் போறேன். டெலிபோனைக் கட் பண்ணிடுவாங்க. மேடம், நீங்க கூட வெளியே போக அவசியக் காரணம் என்றால் மட்டும் போங்க. அவ சியம் இருந்தால் மட்டும் பேசுங்க, நீங்க வெளியே போகும்போது உங்களை எங்க ஆளுங்க பின்தொடர்வாங்க. பயப்பட வேண்டாம். சின்ன (Bug) கொடுக்கிறோம் உங்க. கம்மல்லயோ, மோதிரத்திலேயோ வைச்சுக்குங்க. இந்த இரண்டு நாளும் நான் உங்க வீட்டிலேயே தங்கப் போறேன். எனக்காகும் செலவைப்
பத்திக் கவலைப்படாசிங்க, அரசாங்கம் கொடுத்திடும். அப்புறம் உங்க குழந்தை எங்கே 7″”
“தூங்கறா.”
”எழுந்து என்னை யாருன்னு கேட்டா, மாமா, பெரியப்பா இப்படி ஏதாவது சொல்லிச் சமாளிங்க.”
“சார், இந்தக் கெடுபிடி யெல்லாம் அவ சியம்தானா?”
“கெடுபிடி இல்லை மிஸ்டர் ரிஷி, ஒரு முன்னெச்சரிக்கை, உங்களுடையது எத்தனை பெரிய பொறுப்பு!”
“எனக்கு அந்தப்பொறுப்பு வேண்டாம்! ”
“அது உங்கள் விருப்பம் இல்ல ரிஷி. ஒரு ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடி மகனுக்கும் சில பொறுப்புக்கள் உண்டு. ‘உங்களைப் போன்ற படித்தவ்ர்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்&ல.”
‘நசிகேதன் தப்பே பண்ணுதா?”
பொறுமை இழந்த மித்ரா நடுவில் குறுக்கிட்டாள். ‘அவர் சொல்றதைக் காதில் போட்டுக் காநீங்க சார். அவர் நர்வஸ் ஆகியிருக்கிறார். மற்றபடி விவரம் தெரிந்தவர்தான் புஸ்தகம் எல்லாம் படிக்கிறவர்தான்.” ‘
“தெரியும் மேடம்’ அதிகாரி புன்னகைத் தார்.
“எனக்கென்னவோ பயமா இருக்கு மித்ரா.”
“என்ன பயம்?”
” “ஏதாவது தவறு நேர்ந்து விட்டால்? என் தேர்வு மூலம் யாரையாவது பொறுபபில்லாத தலைவர் பரீட்சையில் ஜெயித்து விட்டால்? தேசமே குட்டிச்சுவராகப் போகாதா? அப்போது எல்லோரும் இவனால்
தான் என்று திட்ட மாட்டார்களா?
” “நாளைக்குத் தேசம் முழுக்க நீங்கள் பேசப்படுவீர்கள். படம் ப்ேப்பரில் வரும். பத்திரிகைக்காரர்கள் பேட்டி எடுப்பான் வீடியோ படம் தயாரிக்கப்படும். உங்களைக் கூட்டங்களில் பேசக் கூப்பிடுவார்கன், ஒரு ராத்ரியில் திடீர் புகழ்.”
“அதற்கு என்ன?”
“அதை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திட்டமிடுங்கள். இந்தப் புகழை நீங்கள் ஏதாவது காசு பண்ண முடியுமா”? ஆபீஸில் புரோமோஷன் கிடைக்குமா? கவர்ன்மெண்டில் நமக்கு ஒரு ஃப்ளாட் இல வசமாகத் தருவார்களா? இவற்றையெல் லாம் எப்படிச் சாதிக்கலாம் என்று யோசியுங்கள். இதையெல்லாம் இந்த இரண்டு வருஷத்துக்குள் செய்து கொண்டால் உண்டு. அப்புறம் அடுத்த பரிட்சை வந்து விடும்”
“யோசிப்பதற்கு இதை விடப் பெரிய விஷயங்கள் இருக்கின்றன மித்ரா”
“‘என்ன??’ ” “”மனசாட்சி!, ”
” “எக்கேடும் கெட்டுப் போங்கள். நான் சொல்வதைச் சொல்லி விட்டேன். நமக்கு பெண் குழந்தை இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும்!”

“எழுந்திருங்க.பரீட்சைக்கு நேரமாச்சு மித்ரா உலுக்கினுள். பரீட்சைக் கமிஷன் அதிகாரி-காலை வணக்கம் சொன்னான் கார் கதவைத் திறந்து விட்டார்கள். கார் விரைந்தது. எதிரே பொட்டு டிராபிக் இல்லை.
“என்ன ஆச்சு?”
“என்ன?”
ரிஷி வெறிச்சிட்ட தெருவைச் சுட்டிக் காண்பித்தான்.
“இதுவா? இது முன் நீர்மானிக்கப்பட்ட பாதை உங்கள் பத்திரம் கருதி வேறு டிராபிக் அனுமதிக்கப்படவில்லை.”
“பாதசாரிகள் கூட?”
“ஆமாம். தவிரவும் இது புல்லட் புரூப் கார். உங்கள் மீது ஒரு குண்டுவி பட முடியாது.”
கார் நின்ற இடத்தில் இரண்டு வெள்ளை உடுப்புக்காரர்கள் வரவேற்றர்கள். ஒரு ஏர்கண்டிஷன் மண்டபத்துக்குள் கூட்டிப் போஞர்கள். ஆஸ்பத்திரி மாதிரி இருந்தது. “எங்களுடைய நல்வாழ்த்துக்கள்” என்று சிரித்துக் கொண்டே உடலில் சில் எலக்ட்ரோட்களைப் பொருத்திஞர்கள்.
“என்னது இது?” “பொய் சொன்னால் கண்டு பிடிக்க லை டிடக்டர்.”
* “காட்!”.**
“பதற்றப்பட வேண்டாம். இதோ உங் களுக்கு எதிரில் தெரியும் திரையில் நசி கேதனின் கேள்விகள் எழுத்து வடிவில் தோன் றும். ஒலி வடிவமாகவும் உங்களுக்குக் கேட்கும் ”
“ஓகோ!
“ஆனால் பயப்பட வேண்டாம். கேள்விகள் சுலபமாக இருக்கும். உதாரணமாக “உங்கள் தெருவில் ஒழுங்காகக் குப்பை வாருகிறார்களா’”
“அப்படியா?”
‘பரீட்சைக்கு நேரமாச்சு. ஆரம்பிக்கலாமா?”
“ஓ! அதற்கு முன்ஞல் எனக்கு ஒரு தம்ளர் ஆரஞ்சு ஜூஸ் கிடைக்குமா?”
“தாரளமாக”
பச்சை வண்ணத்தில் முதல் கேள்வி திரை யில் தோன்றியது. “இந்தியாவின் பெருமை (அ) அதன் மக்கள்? (ஆ) தலைவர்? (இ) ஜனநாயகம்?
ரிஷி திரையை ஒரு தரம் கூர்ந்து பார்த் தான். பின் விருட்டென்று கையில் இருந்த தம்ளரை அதன் மீது வீசி எறிந்தான். ணிங்” என்ற சங்கீதத்துடன் கண்ணுடிகள் சிதறின. பரீட்சை நின்றது.
பரபரவென்று கதவு திறந்தது.
“‘என்ன?’
” இந்தியாவின் பெருமை-மனச்சாட்சி.”
“ஸாரி. அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது’ என்றார் டாக்டர்.

(கல்கி)

கற்பனைக்கு உந்துதல்: அசிமோவ்

 

 

கனவு ராஜ்யம்

பீரங்கிச் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டுப் போனேன். இந்தியானாவே அதிர்ந்து குலுங்குவது போல் முழங்கியது பீரங்கி. ஆனிக் காற்று ஆடையை உருவிக் கொண்டு போய்விடாமல்   வேட்டியை வழித்துக் காலிடுக்கில் கவ்விக்  கொண்டு இந்தியானா கப்பலிலிருந்து எதிரே தெரிந்த தீவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்  கண்ணுக்கெட்டியவரை கடும் பச்சை.. நாற்றுப் பச்சை இல்லை. காட்டுப் பச்சை. வயல் போல் இல்லை, வனம் போல் தெரிந்தது.இந்தக் காட்டில் என்ன வியாபாரம் செய்யப் போகிறேன்? கவலையில் உள்ளங்கைகளை உரசிக் கொண்டேன். அது என் பழக்கம். எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை. கவலையோ சிந்தனையோ என்னை அரிக்கும் போது  உள்ளங்கைகள் ஒன்றையொன்று பற்றிக் கொண்டு உராய்ந்து கொள்ளும்.

“நாராயணா, நகரு!” என்று என்னை இடித்து ஒதுக்கிக் கொண்டு வடத்தை இழுத்துக் கொண்டு ஒடினார்கள். நங்கூரம் பாய்ச்சப் போகிறார்கள். துரையோடு சேர்ந்து நாமும் கரையிறங்கினால்தான் பிழைத்தோம். இல்லையென்றால் கப்பலோடு சேர்ந்து அல்லாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். நாளை மதியம் சரக்கு இறக்க வரும் போது நம்மையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போவார்கள்.

துரையைப் பார்க்க படியிறங்கிய போது, எதிரே துரையே ஏறி வந்து கொண்டிருந்தார். கறுப்புக் கால் சாரய், கறுப்புக் கோட்டு, கழுத்து வரை வெள்ளைச் சட்டை, பட்டாம் பூச்சி இறக்கை விரித்தார் போல் கழுத்தை இறுக்கின ‘போ’ என கச்சேரிக்குப் போகிற உத்தியோகஸ்த உடுப்புக்கு மாறியிருந்தார்.  ஏணியில் ஏறித் திரும்பின போது தங்கப் பொத்தான்களில் மாலைக் கதிர் பட்டுக் கண்ணைச் சீண்டின.  ராபிள்ஸ் துரையே பொன்னிறம்தான். கண்கள்தான் வெளிறிப் போன பாசிப்பச்சை. நீரோட்டம் ததும்பும்  அந்தக் கண்களும் ஜொலிப்பது போல் தோன்றியது எனக்கு. துரை உற்சாகமாக இருக்கும் போது அந்தக் கண்கள் ஜொலிக்கும். பார்த்திருக்கிறேன் பலமுறை.

“பிள்ளை! இங்கு என்ன செய்கிறாய்?” என்று வாஞ்சையோடு அழைத்து தோளில் கை வைத்து இந்தியானா முகப்பிற்கு அழைத்துச் சென்றார் துரை. என்னவோ தெரியவில்லை, வந்த சில நாள்களிலேயே துரைக்கு என்னைப் பிடித்துவிட்டது. ஆனால் அந்த வாஞ்சைதான் அடுத்தவர்களது வயிற்றெரிச்சலுக்கு   வார்த்த நெய். பொறாமையின் அனல் பொறுக்கமாட்டாமல்தான் பினாங்கிலிருந்து புறப்பட்டு விட்டேன்.

“பார்த்தாயா?” என்று கையை உயர்த்திச் சுட்டினார் துரை. அவர் காட்டிய திசையில் வெள்ளையில் சிவப்பு வரிகளோடிய கும்பெனி கொடி காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. ” பார்த்தாயா, சிங்கப்பூர்! கோடீஸ்வரனாக நீ கொழிக்கப் போகும் பூமி!”

‘இந்தக் காட்டிலா? என்று எனக்குள் பொங்கிய கேள்வியை விழுங்கிப் புன்னகைத்தேன்.

பூரித்துப் பொங்கிய மகிழ்ச்சியில் பேசிக் கொண்டு போனார் துரை. “காற்றில் எழுதியதைக் கூட என்னால் படிக்க முடியும் பிள்ளை.எதிரில் தெரியும் அலைக்கரையில் என்ன எழுதியிருக்கிறது தெரியுமா? விரிந்து கிடக்கும் வனத்தின் ரகசியத்தை வாசித்துக் காட்டுகிறேன் கேள். இந்தத் தீவில்தான் எதிர்காலம் எழுதப்பட்டிருக்கிறது. உன்னுடையது மட்டுமல்ல, என்னுடையதும்தான், இருவரும் சேர்ந்து உருவாக்கலாம் ஒரு கனவு ராஜ்யம்!”

 

கனவின் விசையில் ஒளிர்ந்த கண்களை  ஒன்றும் பேசாமல் பார்த்துக் கொண்டு நின்றேன்.

மெளனத்தைப் பிளந்து கொண்டு மறுபடியும் முழங்கியது பீரங்கி. இந்த முறை கரையிலிருந்து. ஒருமுறை அல்ல. பதினேழு முறை. என்னையும் அழைத்துக் கொண்டு கரையிறங்கினார் ராபிள்ஸ் துரை. கீழே நின்றிருந்த வில்லியம் துரை விறைப்பாக ஒரு சலாம் வைத்தார். ரத்தச் சிவப்பும் வெள்ளை உடுப்பும் அணிந்த சோல்ஜர்கள், நீலம் தரித்த அதிகாரிகள், பொன்னிற ஆடை பூண்ட மேலதிகாரிகள் என அணிவகுத்து நின்றவர்களும் சல்யூட் வைத்தார்கள்.

கறுப்பாய், குள்ளமாய், உருண்டை முகமும், உதட்டில் சிரிப்புமாய் வேட்டி யில் வீசி நடந்து வரும் இந்தத் தமிழனைப் பார்க்க அவர்களுக்கு வேடிக்கையாத்தான் இருக்கும். எல்லோர் கண்ணிலும் ஒரு கேலி தொக்கி நின்றது. வில்லியம் துரை கூட என்னைத் திரும்பிப் பார்த்து பெரிய துரையிடம் ஏதோ பேசினார். யார் எனக் கேட்டிருப்பார் போல.

துரை என்னை அருகில் அழைத்தார். வில்லியம் துரைக்கு அறிமுகப்படுத்தினார். “இவர் பிள்ளை. நாராயண பிள்ளை. நேர்மையான வியாபாரி. கம்பெனிக்கு  மிகவும் தேவைப்படுவார். கவனித்துக் கொள்ளுங்கள்”

கடைசி இரண்டு வாக்கியத்தை அவர் வேண்டுமென்றே உரக்கச் சொன்னதாக எனக்குத் தோன்றியது.  அப்படியெல்லாம் இருக்காது. அதிரப் பேசுகிறவர் இல்லை துரை. ஆனால் அழுத்தமாகப் பேசுகிறவர்.துரைமார்களின் நாசூக்கு, நறுவிசு இதெல்லாம் நமக்கு வராது.

துரை கேம்புக்குள் போனதும் நான் தீவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். சுற்றிப் பார்க்க ஒன்றுமில்லை. நான்கைந்து அத்தாப்புக் கொட்டகைகள் இருந்தன. கும்பனிக்காரர்கள் தரையில் ஆப்பு அடித்து கித்தானில் போட்ட கொட்ட்கைகளும் இருந்தன. புழங்குகிற இடத்தில் மட்டும் புல்லையும் புதரையும் செதுக்கி சமதளப்படுத்தியிருந்தார்கள்.

“கருக்கிருட்டில சுத்திக்கிட்டு திரியாதேயும். காட்டுக்குள்ள புலியெல்லாம் இருக்கு” என்றான் ஒரு சிப்பாய் மலாய் மொழியில்.

“நிசமாவா?”

“சும்மா பயங்காட்டுதான். நரி ஓடும். அங்கிட்டு இங்கிட்டு  புதைசேறு  நிறைய இருக்கு. பார்த்துக்கிடும். நேத்திக்குக் கூட ஒத்தனை கயிறு போட்டு மீட்டோம்” என்றான் இன்னொருவன்.

இவன் பயங்காட்டறானா? தெம்பூட்டறானா? புதைசேறுக்கு புலிக்கதையே தேவலாம்.

அத்தாப்புக் கொட்டாயின் ஓரமா கித்தானை விரித்துப் படுத்தேன். தூக்கம் வரவில்லை. இருட்டில் ஏதோ ஒளிர்ந்து உருள்வதைப் போலிருந்தது. புலியின் கண்ணோ? உறுமல் கேட்கிறதா எனக் கூர்ந்தேன். சீச்சீ மின்மினிப் பூச்சி. ‘தாயே மாரியம்மா, இதென்ன சோதனை!. துரையை நம்பியா வந்தேன்? உன்னை நம்பித்தானே வந்தேன், இப்படி  நடுக்  காட்ல கொண்டாந்து இறக்கி விட்டியே!’

விடிஞ்சும் விடியாததுமாய், சங்கரன் செட்டி, ஹசன் காக்கா, அவுக ஆளுங்க, நம்ப ஆளுங்கனு ஏழெட்டுப் பேர் சட்டியும் பொட்டியுமா வந்து சேர்ந்த பிறகு கொஞ்சம் தெம்பு வந்தது. ஆனால் வந்தவர்கள் வாயைத் தொறந்து மனசைக் கொட்டின போது மறுபடியும் கவலை வந்து கையைப் பிறாண்டியது.

“பிள்ளைவாள் பூராவும் காடாயிருக்கே! பாத்தீங்களா?” என கோயிந்தசாமிதான் முதல்ல பேச்சை ஆரம்பித்தார்.

“ம்,ம்”

“இங்கே என்னத்தை வியாபாரம் பண்றது ?” என்று தொடர்ந்தார் கிருஷ்ணன் செட்டி.

“காரணம் இல்லாமியா கம்பெனிக்காரன் கொட்டகை போட்டிருக்கான்?”

“அவன் கதை வேற.கப்பல் கப்பலா வியாபாரம் பண்றவனுக்கு ஈடு சோடா நம்மை நினைச்சிக்கிற முடியுமா?”

“ம்ம் அதுவும் சரிதான்!”

” சரிதான் சரிதானு தலையை ஆட்டிக்கிட்டு இருந்தா எப்படி? என்ன செய்ய இங்கே?”

நான்   உள்ளங்கைகளை உரசிக் கொண்டுமெளனம் காத்தேன். எனக்கும்தான் விடை தெரியவில்லை.

“இருநூறு சோல்ஜர் இருப்பான இங்கே?” என்றார் ஹசன் பாய்.

“அவ்வளவு இருக்காது. முன்னப் பின்ன போனா நூறு இருக்கலாம்”

“எதுக்கு இந்தக் கேள்வி? அவங்களுக்கு ஆக்கிப் போடலாம்னு நினைக்கிறீரோ?” கிருஷ்ணன் செட்டியின் கேள்வியில் இருந்த கேலி ஹசன் காக்காவைச் சுட்டிருக்க வேண்டும். காக்கா கும்பெனிக்கு இறைச்சி விற்றுக் கொண்டிருந்தவர்

“நீர் வேணா அவங்ககிட்ட லேவாதேவி நடத்துமே!” என்றார் அவர்  பதிலுக்கு சுள்ளென்று.

“எகத்தாளத்தைப் பாரு!. பட்டாளத்துக்காரன்கிட்ட பணத்தைக் கொடுத்திட்டு  திரும்ப வாங்கவா?”

“ஆனையைக் கொண்டு வந்து நிறுத்தும்,  கரும்பைக் கொடுத்து  மீட்டெடுக்கிறேன் பாரு என்று சவுடால் விடற  ஆளாச்சே நீ!”

பேச்சின்  போக்கு போகும் திசை  எனக்குப் பிடிக்கவில்லை. நான் ஹசன் காக்காவைப் பார்த்தேன். அவர் வாயை மூடிக் கொண்டார். ஆனால் கோவிந்த சாமி அடுத்த அம்பை எய்தார்.

“கம்பெனிகிட்ட வியாபாரம் செய்யலாமுனு கூட்டிட்டு வந்துட்டு இப்படிக் கழுத்தறுட்டியே! குழி வெட்டி இறக்கினா பரவாயில்லை. புதை சேத்துல இறக்கிட்டியே!”

புதை சேறு!

நேற்றுப் பார்த்த உற்சாகத்தோடு இன்றும் இருந்தார் துரை. நான் பேசத் தயங்குவதைப் புரிந்து கொண்டு அவரே கேள்வியைத் தொடுத்தார்.

“என்ன பிள்ளை! எப்ப வியாபாரத்தை ஆரம்பிக்கப் போறே?”

“ஆளே இல்லாத ஊர்ல என்னத்தை வியாபாரம் செய்வேன் நான்?”

ராபிள்ஸ் சிரித்தார். ஹாஸ்யம் கேட்டது போல கடகடவென்று சிரித்தார். “கதை சொல்றேன் கேக்றீரா?”

வழிகேட்டு வந்தால் கதை கேட்கச் சொல்கிறார் துரை.

“ஒரு தீவு. அது முழுக்க பழங்குடி மக்கள்” என் பதிலுக்காக காத்திருக்காமல் கதையை ஆரம்பித்தார் துரை. “ஒருத்தனும் துணி கட்றதில்லை. உன்னை மாதிரி இரண்டு துணி வியாபாரி தீவுக்கு வந்தான். ஊர்ல  எவனும் துணி கட்றதில்ல, இங்கே நான் எப்படி வியாபாரம் செய்வேனு ஒருத்தன்  தலையில கையை வைச்சுக்கிட்டு உட்கார்ந்திட்டான். இன்னொருத்தன், அட, அத்தினி பேரையும் துணி கட்ட வைச்சா எவ்வளவு விற்கலாம்னு கணக்குப் போட ஆரம்பிச்சான். நீ எப்படி?” என்றார் சிரித்துக் கொண்டே. “வெள்ளைக்காரன் வியாபாரம் இதுதான்” என்று தன் தோலைச் சுண்டிக் கொண்டே சொன்னார்.  ”சந்தையில் விக்காதே. சந்தையையே வித்திரு”  

சற்று மெளனித்து புரியுதா? என்றார்.

நான் மலங்க மலங்க விழித்தேன்.

” மாறாதே! மாத்து. போற இடத்தை உனக்குத் தகுந்தாப்ல மாத்து! ஊரை மாத்து, பேச்சை மாத்து, ஆளை மாத்து, அப்புறம் உலகம் உனக்குத்தான்”.

“ஆளில்லாம, எப்படி?……” நான் என் பழைய பல்லவியை ஆரம்பித்தேன்

“ஆளைக் கொண்டுவா! காட்டைப் பார்த்தீல. இன்னிக்குக் காடு. நாளைக்கு எல்லாம் கட்டிடம். உன் துணி மூட்டையைத் தூக்கிப் போடு. கட்டிடம் கட்டு. கொத்தனார், ஆசாரி எல்லாரையும் கூட்டிக்கிட்டு வா!” என்றபடி எழுந்து கொண்டார் துரை.

என்னைத் திட்டிக் கொண்டே எல்லோரும் திரும்பிப் போனார்கள். சங்கரன் செட்டியும் ஹசன் காக்காவும் என்னை நம்பி இருக்கத் தீர்மானித்தார்கள். ஊருக்குத் திரும்பியவர்களிடம்  சித்தப்பாவிற்கு கட்டிட வேலைக்கு ஆள் அனுப்பும்படி கடிதம் கொடுத்து அனுப்பினேன்.

ஆற்றோரம் இருந்த சேறு அப்படி ஒன்றும் புதை சேறாக இல்லை.சட்டி பானை செய்கிறார் போல் வெண்ணைக் களிமண்ணாய் இருந்தது. நான் சட்டி பானை செய்யவில்லை.சூளை  போட்டு செங்கல் அறுத்தேன்.  கனவு ராஜ்யம் கட்டிடம் கட்டிடமாய் முளைத்துக் கொண்டிருந்தது. கல்லுக்கு நல்ல கிராக்கி. கம்பெனி எனக்கு காட்டை அழிக்கும் காண்டிராக்ட்டும் கொடுத்தது. மரம் வெட்டவும், வெட்டின மரத்தை  அறுத்து பலகை, உத்தரம், நாற்காலி பண்ணவும் ஆள் போட்டேன்.

ஊருக்குப் போகும் முன் ராபிள்ஸ் துரை கூப்பிட்டு அனுப்பினார். ” நான் நினைக்கிற வேகத்திற்கு கட்டிடம் வரமாட்டேங்குதே! என்ன செய்யலாம் ” என்றார். நான் என்ன செய்யட்டும்? கல்லுதான் நான் கொடுக்கிறேன், கட்டற வேலையை கம்பெனி சோல்ஜர்ல செய்யறான் என்று நான் சொல்லவில்லை, நினைத்துக் கொண்டேன்.  என்னை நோக்கித் திரும்பி,  சட்டென்று, “நீ கட்டிடம் கட்டுவியா?” என்றார்.

கண நேரம் திகைத்துப் போனேன். நானா? தறியில் துணியறுத்து முழம் போட்டு விற்றவனை கல்லறுத்துக் காசு பார்க்கும்படி கடைக்கண் காட்டியவள் மகமாயி. அவள்தான் இந்தக் கட்டளையையும் அனுப்பியிருக்கிறாள் என்று அடிமனசு சொல்லியது. “ஐயா கட்டளைப்படியே ஆகட்டும்!” என்றேன்.

வேலை எங்கே சுணங்குகிறது என்பது எனக்கு இரண்டு வாரத்தில் விளங்கி விட்டது. கட்டுமானப் பொருட்களை எடுத்துப் போவதில்தான் காலதாமதம் ஆகிறது என்பதைக் கண்டுகொண்டேன். தலைச்சுமையாய் எத்தனை ஆள் எடுத்துப் போனாலும் வேலையோட வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பனி பெய்து  குடம் நிறையுமா?

யோசித்துக் கொண்டே கடற்கரைக்கு வந்தேன். மீனவர்கள் படகைக் கடலுக்குள் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அட! ஆற்றில் படகு விடலாமே என்ற யோசனை அப்போதுதான் உதித்தது.

உசரமும் தாட்டியுமா இருந்த நாலைந்து மரங்களை அறுத்து தெப்பக்கட்டை மாதிரி  ஒன்று செய்தோம். கல்லை ஏற்றினோம். முதல் முறை ஏற்றினதும் முழுகிப் போனது. மீனவ நண்பர்கள் வந்து கனமேற்றினாலும் கட்டையை மிதக்கச் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்தார்கள்.  ஆற்றில் கல்லு வருவதை வேலைக்காரர்கள் அதிசயமா பார்த்தார்கள். வெள்ளைக்கார எஞ்சினீர் பிலிப்  கூப்பிட்டு ஏதோ இரண்டு வார்த்தை சொன்னார். பாராட்டாத்தான் சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன். முகத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றியது.

கட்டிட வேலை கடகடவென்று  நடந்தது. களிமண்ணுக்கும் காசில்லை. காட்டு மரத்திற்கும் காசில்லை. இரண்டிற்கும்  ஆட் கூலிச் செலவுதான். அதனால் கட்டிட வேலையில் கொஞ்சம் காசு கையில் மிஞ்சியது . ஆனால் ஆள் தேவைப்பட்டது. ஹசன் காக்கா ஊருக்குத் திரும்பி, அங்கிருந்து ஆள் பிடித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஆள்  வரத்து அதிகமானதும் அவங்களுக்குத் துணித் தேவை ஏற்பட்டதை கவனித்தேன் பழைய தொழிலையும் ஆரம்பிச்சிரலாமானு கை பரபரத்தது. வில்லியம் துரை முயற்சியில் ஒரு பஜார் உருவாகியிருந்தது. நானும் ஒரு இடம் பிடித்தேன். கம்பெனிக்காரனுக்குக் கல்லுல கட்டிடம் கட்டினவன் கடையையும் கல்லில் கட்டியிருக்கலாம். ஆனால்  நாலுபுறம் பலகை அடைத்து, அத்தாப்புல கூரை போட்டு  கடை ஓன்று ஆரம்பித்தேன்.   ஆத்தா மகமாயி வேற கணக்குப் போட்டிருக்கிறாள் என்பது  அப்போது  எனக்கு விளங்கவில்லை.

காலையில் சூளையில் நிற்பேன்.. பசியாறிக் கட்டிட வேலையைப் பார்க்கப் போவேன். கட்டைத் தொட்டிக்குப் போய்ப் பார்த்து விட்டு, கடையில் போய் உட்காருவேன். இரை தேடற எலி மாதிரி சுற்றிக் கொண்டே  இருந்தேன். கஷ்டப்பட்டது வீண் போகலை. காசு வந்தது.

பினங்கிலிருந்து வந்த காக்கா பிரமிச்சுப் போனார். “புதை சேற்றில இறக்கிட்டியேனு உன்னை ஒருத்தன் வஞ்சிட்டுப் போனான். களிமண்ணை காசாக்கி காண்பிச்சிட்டீரே! பிள்ளை, உனக்கு ஞாபகம் இருக்கா? கம்பனிகாரன் கப்பல் கப்பலா வியாபாரம் செய்யறான்.நமக்கு வக்கு இருக்கானு கேட்டான்ல, கோயிந்தசாமி”

“மறக்கமுடியுமா? புண் ஆறிடுச்சு, தழும்பு இருக்கே!”

“நீ ஏன் கப்பல் வியாபாரம் செய்யக் கூடாது?”

“கம்பனியோட மோதக் கூடாது காக்கா. விதை நெல்ல பொங்க முடியுமா?”

“அப்படிச் சொல்வேனா? உன்னை உப்புத் துரோகம் செய்யச் சொல்லி ஒரு நாளும் சொல்ல மாட்டேன்”

“பின்னே?”

“சின்னக் கப்பலைப் பிடிப்போம். கப்பல்னா கப்பல் இல்லை.வள்ளம். உனக்கு மட்டும் துணியை ஏத்தி கொண்டாந்து விப்போம்”

“வள்ளமளவுக்கு  சரக்கு கொள்முதல் செய்ய நம்மிடம் காசு வேணுமில்ல?”

“செய்யலாம் பிள்ளை. கடனுக்கு சரக்கு கிடைக்கும்”

“கடனா? வேண்டாம் காக்கா!”

“கம்பனிக்காரனே கடனுக்கு வியாபாரம் செய்றான், தெரியுமா?”

“தெரியும் நானே கை மாத்தா கொடுத்து வாங்கியிருக்கேன்”

“பின்ன என்ன?”

“வேணாம்”

காக்காவால் மாற்ற முடியாத என் மனதை கம்பெனிக்காரர்கள் மாற்றினார்கள். சொந்த முதலீட்டைக் கொண்டு மட்டும் வியாபாரம் செய்தால்  சுருங்க்கிப் போய் சூம்பிப் போய் விடுவாய் என பயம் காட்டினார்கள்.  கடன் வாங்கி கடன் வாங்கித்தான் கம்பெனி  உலகம் பூராம் கடை போட்டது  என்று கதை சொன்னார்கள்.  நீ சூரியன் ஆக வேண்டாம்,  சந்திரன் ஆக வேண்டாம் நட்சத்திரமாக ஏன் ஆகக் கூடாது என அவர்கள் ஆசை காட்டிய போது எனக்கும் சபலம் தட்டியது.

அது ஒன்றும் மோசமான முடிவில்லை. அவர்கள் கடனுக்குச் சரக்குக் கொடுத்தார்கள். தவணை தப்பாமல் கடனைக் கட்டுவது அத்தனை கடினமாயில்லை. கடையைப் பெரிசு பண்ணினேன் .மாரியம்மன் கருணையால் காலப் போக்கில் அந்த வள்ளத்தையும் சொந்தமாக வாங்கி விட்டேன்.

வாழ்கையில் வாங்க முடியாதவையும் சில உண்டு என்பதை எனக்குப் புரிய வைத்தவன் மார்கன். அயர்லாந்திலிருந்து வந்து இறங்கினான்.சரக்குகளோடு மட்டுமல்ல, அகந்தையோடும். கடைவீதியில் அவனைக் கண்டால் மிரண்டார்கள். காரணம் அவனது சரக்குகள் அல்ல. காசு.  கடன் கேட்டவருக்கு இல்லை எனச் சொன்னதில்லை. கழுத்தில் துணியைப் போட்டுக் கடனை வசூலிக்காமலும் இருந்ததில்லை. அமில வார்த்தைகளில் பேசுவான். ஆனால் ஆள் பார்த்து பணம் கொடுப்பதில் அவனைப் போல கெட்டிக்காரன் எவனும் இல்லை. மார்கனே   கடன் கொடுக்கிறான் என்றால் வாங்கினவன் வசதியான புள்ளி என்று பஜாரில் பேச்சு.

என் கிரகக் கோளாறு, என் விதியின் கோணல் எழுத்து,  வாங்கிய சரக்குக்கு தவணை தள்ளிப் போடமுடியாத ஒரு தருணத்தில் நானும் அவனிடம் கை நீட்டிவிட்டேன்.” எடுத்துக் கொள்ளுங்கள் பிள்ளை, சுழலுக்கிற பணத்திற்குத்தான் மதிப்பு. உறங்குகிற பணம் ஒரு சவம். என் பணம் உங்கள் வியாபாரத்தில் சுழலட்டும்.  கடைத் தெருவில் நீர் காலடி எடுத்து வைத்தால் கையெடுத்துக் கும்பிடாதவன் யார்? நீர் ஒரு நேர்மையான வியாபாரி எனக் கம்பெனியே சொல்கிறதே, பென்கூலன் கவர்னர் வந்திறங்கிய நாளிலேயே அப்படிச் சொல்லித்தான் அறிமுகப்படுத்தினாராமே, எடுத்துக் கொள்ளுங்கள், என் காசில்லை இது உங்களுடையது” என்று இனிப்பாகப் பேசித்தான் கொடுத்தான். “வட்டியை மட்டும் தவறாமல் கட்டிவிடுங்கள், நானும் பிழைக்க வேண்டுமில்லையா ?” என்று சிரித்தான். அவன் சிரிப்பில் நெருப்பு இருந்தது.

“நெருப்பு! நெருப்பு!” என வேலைக்காரன் என்னை உசுப்பிய போது இரண்டாம் ஜாமம் கடந்திருந்தது. நெகிழந்து கிடந்த வேட்டியை நெருக்கிக் கட்டிக் கொண்டு எழுந்து ஓடினேன். கடை வீதி முனை திரும்பும் போதே , மார்கழிப் பனிக்கு  நடுவிலும் கண்ணில் ஜூவாலை   தெரிந்தது. பனை உயரத்திற்குப் பற்றி எரிந்து கொண்டிருந்தது என் கடை.   கடையை  நெருங்க முடியவில்லை. அனல் வீசியது.”மகமாயி!” எனக் கையைத் தலையில் வைத்துக் கொண்டு குந்தினேன். அப்படி சரிந்தேன்.

என் முகத்தில் ஈரம் பட்டதும் இமைகள் திறந்தன. அதற்குள் எல்லாம் முடிந்திருந்தது. கடையில் பற்றிய தீ காற்றில் பரவ ஆரம்பித்ததாம். பஜார் பற்றி எரிகிறது என்ற செய்தி எட்டியதும் கம்பெனி துரைமார்கள் சோல்ஜர்களைக் கூட்டி வந்து, மனிதச் சங்கிலி அமைத்து, ஆற்றிலிருந்து வாளி வாளியாய் நீர் மொண்டு வீசித் தீயை அணைத்தார்களாம்.

 மெல்லக் கடையை நோக்கி நடந்தேன். கடை அல்ல, கரிக் கட்டை. அத்தாப்புக் கூரை அனல் கூடாய் சரிந்து துணிகள் மீது விழுந்து அங்கிருந்து பலகைச் சுவருக்குப் பாய்ந்து அத்தனையும் பஸ்பமாகிக் கிடந்தது. ஏதாவது மிஞ்சுமா என  என் வியாபாரி மூளை அந்த நேரத்திலும் அடியில் கிடந்த துணிப் பொதியைப் புரட்டிப் பார்த்தது.கரி படிந்து சொத சொதவென்று நனைந்து, சேற்றுக் கறையோடு கிடந்ததைப் பார்த்த போது கண்ணீரில் நான் வெந்தேன்.

எரிந்தது அத்தனையும் கடனுக்கு வாங்கிய சரக்கு. கடன்காரர்களுக்கு என்ன பதில்  சொல்வேன்? எப்படிப் பணம் கொடுப்பேன். கடையில் அவிந்து விட்ட தீ மூளையில் பற்றிக் கொண்டது.  கால்கள் நடந்தன. மனம் கடையில் கிடந்தது. கடனில் கிடந்தது. மனதில் மார்கன் முகம் வந்து போனது.

மார்கன் வந்தான் மறித்துக் கொண்டு நின்றான். “எப்படி கொடுக்கப் போகிற?” என்று தோளில் கை வைத்தான். அது நாள் வரை அவன் என்னைத் தொட்டுப் பேசியதில்லை.

“வட்டியைத் தவறாமல் கொடுத்து விடுகிறேன் துரை!” என்றேன்

“வட்டியில்லை, அசலைத் திருப்பிடு” என்றான். இடிந்து  போனேன் நான்

“அசலையா? இப்போது எப்படிக் கொடுப்பேன்?” ஈன ஸ்வரத்தில் என் குரல் பிசிறியது.

“வள்ளம் வச்சிருகேல, ராத்திரி  நீ ஓடிப் போயிட்டா? நான் ……தா?” என்று ஒரு கெட்ட வார்த்தை சொன்னான்.

எனக்குத் தோணாத யோசனை அது. ஓடிப் போவதென்றால் கோயிந்த சாமியும் கிருஷ்ணன் செட்டியும் ஊருக்குத் திரும்பின அன்றே நானும் ஓடியிருக்கலாம். ஒரு வார்த்தை, துரை சொன்ன ஒரு வார்த்தை -கனவு ராஜ்யம்- அதில் கட்டுண்டு கிடக்கிறேன். அது இவனுக்குத் தெரியுமா? இவனுக்கு கனவுண்டா? கனவில் பங்குண்டா?  வெள்ளைக்காரனின் கனவு ராஜ்யத்தைக்  கல் கல்லாய் கட்டி  எழுப்பியதில் இந்தக்  கறுப்பனுக்கும் பங்குண்டு என்பது இவனுக்குத் தெரியுமா?  

‘இந்தத் தீவில்தான் எதிர்காலம் எழுதப்பட்டிருக்கிறது. உன்னுடையது மட்டுமல்ல, என்னுடையதும்தான்,’

“அப்படியெல்லாம் ஓடிட மாட்டேன் துரை!”

“நம்ப மாட்டேன், வள்ளத்தை எழுதிக் கொடு. ஒரு வருஷம் தவணை, இரண்டாயிரம் பவுன் கொடுத்துட்டு மீட்டுக்கோ”

மார்கன் அளவிற்கு மற்றவர்கள் மூர்க்கமாயில்லை. தவணை கொடுக்கத் தயாராக இருந்தார்கள். வியாபரத்தில் சம்பாதிக்க வேண்டியது காசு மட்டுமல்லை நாணயமும்தான் என்பதை எரிந்து போன கடை எனக்கு உணர்த்தியது.

கடை போனபின் களிமண்ணே கதி என்றிருந்தேன். அதுதான் ஆத்தா எனக்கு அருளியது. அதைப் புரிந்து கொள்ளாமல் நான்தான் எதற்கோ ஆசைப்பட்டுவிட்டேன்.

கடையில் உட்கார்ந்தவன் களிமண  மிதித்துக் கொண்டிருப்பதை ஏளனமாகப் பார்த்துக் கொண்டு போனவர்களைப் பார்த்து நான் மனதிற்குள் சிரித்தேன். மண்ணையா மிதிக்கிறேன். மார்க்கனின் கெட்டவார்த்தையை மிதித்துப் பிசைந்து கொண்டிருக்கிறேன். இரண்டாயிரம் பவுனை அவன் முகத்தில் வீசி எறியாமல் இந்த நேர்மையான வியாபாரி இறந்து விடக் கூடாது என்பதற்காக மண்ணை மிதித்துக் கொண்டிருக்கிறேன். அடிமைகளுக்கு  கனவு ராஜ்யங்கள் இல்லாமல் இருக்கலாம் . ஆனால் கனவுகள் இருக்கக் கூடாதா?

‘அடிமை தெண்டனிட்டு எழுதிக் கொள்வது.. உங்களை நம்பித்தான் இந்தத் தீவுக்கு வந்தேன் உன் எதிர்காலம் இங்கேதான் இருக்கு பிள்ளைனு ஒரு வார்த்தை சொன்னீங்களே அதை நம்பித்தான் இங்கே வந்தேன். என் எதிர்காலம் எரிஞ்சு  போச்சு. உங்க கனவு ராஜ்யம் உருவாகிட்டு இருக்கு. இந்த அடிமை மீது கண் வையுங்க. எனக்குத் தேவை 2000 பவுன். ஒரு மூர்க்கனிடம் கடன் பட்டுட்டேன். காசு கிடைச்சா வீசி எறிஞ்சிட்டு மூச்சை விட்டுருவேன். நேர்மையான வியாபாரி ஏமாத்திட்டுச் செத்தான்  என்று இந்த அடிமை மேல எதிர்காலத்தில பேச்சு வரக்கூடாது. துரை கண் திறக்கணும்.’ கடிதம் மேல கடிதம் போட்டேன். கல்லைக் கிணத்தில போட்ட மாதிரி இருந்தது.

துரை மறந்துட்டார்னு  நினைச்சேன்.ஆனா ஆத்தா மறக்கல. மண்ணை மிதித்துக் கொண்டிருந்தவன் மீது மகமாயி கண் திறந்தாள். எதிர்பாராம ஒரு நாள்  எஞ்சினியர்  பிலிப் துரை கூப்பிட்டு அனுப்பினார்.  ஆற்றின் மீது பாலம் கட்டப் போறேன், கல்லு தருவியானார். ஆள் இருக்கா உனக்கு என்று கேட்டார். நான் இருக்கேன்னு ஒரு வார்த்தைதான் சொன்னேன். சிரிச்சுக்கிட்டே  கல் அனுப்ப உத்தரவு போட்டார்.  அது அவர் போட்ட உத்தரவில்லை. ஆத்தா போட்ட உத்தரவு.

ஆறு மாசத்தில காசு சேர்த்துக் கொண்டு  மார்கனைப் பார்க்கப் போனேன். ‘வள்ளத்தை மீட்க வந்தியானு’ கேட்டான். ‘மானத்தை மீட்க வந்தேன்னு’  ஒரு  வார்த்தை வாய் வரை வந்தது. சொல்லலை. முழுங்கிட்டேன். வியாபாரி -அதுவும் நொடிச்சுப் போன வியாபாரி- அதிகம் பேசக் கூடாது.

கடனைத் திருப்பினதும் மூச்சைப் பிடித்துக்  கொண்டு முதுகில் சுமந்திருந்த பாரத்தை இறக்கி வைச்ச மாதிரி இருந்தது. முதுகில் இல்லை, நெஞ்சில் சுமந்த பாரம்.

ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஆற்றோரமா வந்து கொண்டிருந்தேன். பிள்ளை,பிள்ளைனு குரல் கேட்டது.  முன்ஷிதான். அவர்தான் துரைக்கு மலாய் சொல்லிக் கொடுத்தவர். பெரிய படிப்பாளி. 13 வயசிலேயே குர்ரான் முழுசும் ஓதுவார்னு காக்கா சொல்லியிருக்கிறார். அரபி, மலாய், இந்துஸ்தானி, தமிழ்னு அநேக பாஷை தெரிஞ்ச்ச அவரை ராபிள்ஸ் துரை தனக்கு உதவியாளா வைச்சிருந்தார்.

“எங்க போய்ட்ட? தேடிக்கிட்டே இருக்கேன், ஆப்பிடலையே!”

“ஐயாக்கு என்ன செய்யணும் சொல்லுங்க!”

“துரை கடுதாசி அனுப்பி இருக்கார். உனக்கு 2000 பவுன் கொடுக்கச் சொல்லி. வந்து வாங்கிட்டுப் போ”

கண்ணில் தண்ணி முட்டிக் கொண்டு வந்தது. தலையைக் குனிந்தேன். காலில் காய்ந்து கிடந்த சேறு கண்ணில் பட்டது.

சிரங்கூன் டைம்ஸ்   ஏப்ரல் .2017

புலி வேட்டை

உடலை நெளித்துச் சிலுப்பி உறுமிப் பார்த்துக் கொண்டது புலி. உறுமல் இல்லை. சின்னச் செருமல்தான். கூண்டுக்குள் அடைபட்டிருந்த காலத்தில் குரல் அடைத்துப் போய்விட்டிருக்குமோ என அதற்குச் சந்தேகம் இருந்திருக்க வேண்டும். கூண்டுக்குள் இருந்த காலத்தில் குரலெடுத்து உறுமி இரையைப் பயமுறுத்தவும், பாய்ந்து தாவி தாக்கவும் அதற்கு அவசியமோ அவகாசமோ இருந்திருக்கவில்லை. தோலுரித்த ஆடோ, முயலோ, அடிக்கடி இல்லை என்றாலும் அவ்வப்போது மாட்டிறைச்சியோ கூண்டிற்குள் வீசப்பட்டுவிடும். சவுக்கைச் சொடுக்கியதும்  வளையத்திற்குள் பாய்ந்து இறங்கி அரை வட்டமடித்து முக்காலியில் முன் கால் வைத்து ஏறுவதைத் தவிர வேறு ஏதும் வேலை இல்லை. ஒரு பூனை செய்யும் இந்த வித்தையை.

ஆனால் பூனைக்குப் பயப்படுகிறவர்கள் யார்? மனிதர்களுக்குப் பயம் காட்ட புலி வேண்டும். பலம் காட்டவும்தான். என் மீது தாவி ஏறிவிடுமோ என்ற அச்சம் வட்டத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு ஏற்பட வேண்டும். எத்தனை பெரிய புலியாக இருந்தால் என்ன, எனக்கு முன் அது மண்டியிடும் என்ற  ஆனந்த அகந்தை சவுக்கைச் சொடுக்குகிறவர்களுக்கு வேண்டும். மனிதர் உலகின் நியாயங்கள் விசித்திரமானவை. அவர்கள் பசிக்காக மட்டுமே இரை தேடுவதில்லை.

கூடாரத்தை இழுத்து நிறுத்தியிருந்த வெளிக் கயிற்றை உரசிக் கொண்டு நடந்தது புலி.இப்போது கூட பலத்தைக் காட்டிவிடலாம். வாலைச் சுழற்றிக் கயிற்றை இழுத்து விட்டால், அல்லது காலைக் கொண்டு கயிற்றைக் கட்டியிருக்கும் முளையைப் பறித்தெடுத்தால் கூடாரம் சரிந்து விழும். ஆனால் அதில் என்ன பயன்?  மீண்டும் சிறைப்பட நேரலாம். பசித்த வயிற்றுக்கு இறைச்சி கிடைக்கும். ஆனால் மறுபடியும் அந்த பூனை வாழ்க்கைக்கா?

சுதந்திரத்தின் விலை பசி

*

“பசிக்கிறது, உடனே என்ன கொடுப்பாய்?” கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டே ஆறுமுகத்தைக் கேட்டார் அரசநாயகம்.

“இரண்டு  நிமிடத்தில் முட்டையைப் பொரித்துக் கொண்டு வருகிறேன்” தட்டை, தட்டா அது, தாம்பாளம், மார்போடு  அணைத்துக் கொண்டு பணிவாய்க் குனிந்து சொன்னார் ஆறுமுகம். அவருக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பணக்காரர்களுக்கும் பசிக்குமா என்பதல்ல அவரது ஆச்சரியம். அவர்களுக்குப் பசிப்பதால்தான், தான் சோறு உண்ண முடிகிறது என்பதை அவர் அனுபவத்தால் அறிவார். பசியில்லாத வீட்டில் சமையல்காரர்களுக்கு இடமில்லை. மதுவருந்தாமல் அரசநாயகம் உணவருந்துவதில்லை. தனியாகச் சாப்பிட நேரும் தினங்களில் கூட சிவப்பு ஒயினோ வோட்காவோ அருந்துவார். நண்பர்கள் வந்திருந்தால் கச்சேரி 18 ஆண்டு பழைய ஷிவாஸ் ரீகலில் தொடங்கும்.

இன்றைக்கு நண்பர்கள் வந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீரை பனிப் பாளங்களாக ஐஸ்பெட்டியில் உறைய வைத்து ஆறுமுகமும் காத்திருக்கிறார் விஸ்கி உள்ளே போனதும் வெளியே வரும் கதைகள் சுவாரஸ்யமானவை.

“நீ வருவேனு கச்சேரியை ஆரம்பிக்கக் காத்திட்டிருக்கோம், வாதபி கணபதிம்ல ஆரம்பிப்பனு பார்த்தா  மங்களம் பாடுறர?”

“ம்.இனிமேல் யானையைக் கும்பிடுவதற்கு பதில்  புலியைக் கும்பிடப் பழகிக் கொள்ளுங்கள்”

“வேறங்காவது தண்ணி சாப்பிட்டியா அரசு!, தத்துவம் எல்லாம் பேசற”

“தத்துவம் இல்லை, வியாபாரம்”

புரியவில்லை என்பதைப் போல்  நண்பர்கள் அரசநாயகத்தை கூர்ந்து பார்த்தார்கள்

“இப்போதுதான் ஒரு புலி வேட்டைக்குப் போய்விட்டு வருகிறேன்”

“வேட்டையா?” நண்பர்கள் தன்னிச்சையாக சுவரைப் பார்த்தார்கள். அங்கு 45 பாகை கோணத்தில் மாட்டப்பட்டிருந்த துப்பாக்கி அப்படியே இருந்தது.

ஆறுமுகம் ஒரு பெரிய கண்ணாடிக் கிண்ணியில் தோல்சீவி துண்டமிடப்பட்ட மாம்பழங்களையும் மூடப்பட்ட வெள்ளித் தட்டுக்களில் பொரிக்கப்பட்ட முட்டைகளையும் எடுத்து வந்து வைத்தார்!.

“கொன்னுட்டியா?” என்று நம்ப முடியாமல்  நண்பர் ஒருவர் அசட்டுத்தனமாகக் கேட்டார்.

” இது கொல்லமுடியாத புலி” என்று தொண்டையைச் செருமிக் கொண்ட அரசநாயகம் “காகிதப் புலி” என்றார்  ”இன்றுதான் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. பன்னாட்டு நிறுவனத்தின் ப்ரான்ச்சைஸ்.. மில்லியன் டாலரில் ஆரம்பிக்கிறோம். என் கம்பளிப் பூச்சிக் கையெழுத்தின் விலை மில்லியன் டாலர்! ஹா ஹா!” என்று அதிரச் சிரித்தார்  அரசநாயகம்.விஸ்கி வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. ” என்னடா கையெழுத்து இது, கோழி கிறுக்கினாற் போல் என்று மணிக்கட்டிலேயே அடித்தார் எங்கள் எஸ்தர் டீச்சர்! இன்று அதன் மதிப்பு மில்லியன் டாலர்! டீச்சர் உங்கள் ஆத்மா சாந்தியடைவதாக!” என்று இன்னொரு மிடறு விழுங்கினார்.

“என்ன விற்கப் போகிற? சாராயமா?”

” புத்தி போகுது பார். புலி பசித்தாலும் புல்லைத் திங்காது”

“பின்னே?”

மாம்பழத் துண்டு ஒன்றை குத்தியால் (போர்க்) கெந்தி எடுத்தார் அரசநாயகம்

“இந்த மாம்பழம் எங்கிருந்து வந்தது என்று நினைக்கிறாய்?”

“இந்தியா?”

“இல்லை.பங்களா தேஷ்! உனக்குத் தெரியுமா பங்களாதேஷின் தேசிய மரம் மாமரம்”

“ஓ!”

“இனி பங்களாதேஷிலிருந்து மாம்பழம், பிலிப்பைன்ஸ் அல்லது ஹவாயிலிருந்து வாழைப்பழம். மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து வெண்டைக்காய். மெக்சிகோவிலிருந்து தக்காளி. எங்கள் சங்கிலிச் சில்லறைக் கடைகள் அவற்றை நாடு முழுவதும் விநியோகிக்கும், உலகக் குடிமகன்களுக்காக”

“உலகக் குடிமகன்களுக்காக?”

“அட, என் முட்டாள் நண்பா!  உள்ளூர் குடிமகன் என்று இன்று எவனும் இல்லை உலகமயமாதல் என்ற புலி முதலில் உண்ணுவது உள்ளூர் மான்களைத்தான். உள்ளூர் உணவு, உடை, மொழி, இசை, இலக்கியம், ஏன் உங்கள் ஜல்லிக்கட்டைக் கூட அர்த்தமில்லாமல் ஆக்குவதில் தொடங்குகிறது உலகமயமாதல். நீ சந்தோஷமாக ஜீன்ஸ் போட்டுக் கொள்ளவில்லை? கெண்டக்கி பொறித்த கோழிக் கடையில்  உன் பிலிப்பைன்ஸ் தோழியிடம் தங்க்லீஷில் கடலை போடவில்லை ? பின் நவீனத்துவக் கதைகள் பேசவில்லை? மெக்சிகோ தக்காளி மட்டும் கசக்கிறதோ?”

“பயமாக இருக்கிறது நண்பா. புலி வாலைப் பிடித்துவிட்டாய். இனி நீ இறங்க முடியாது”

“இறங்குவதோ இறப்பதோ நோக்கமில்லை. நோக்கமெல்லாம் கூடச்  சேர்ந்து வேட்டையாடுவதே! ஞாபகம் இருக்கட்டும். நான் Moneyகண்டன். புலியோடு உலவுகிறவன்”

*

உலாவத் தொடங்கிய புலி  ஆற்றில் இறங்கியது. நீரின் குளுமை அதன் உடலைச் சிலுப்பிய போது குஷியாய் வாலுயர்த்தி நீந்திக் களித்தது. ஆகா! என்னவொரு  ஆனந்தம்! அருகிலேயே இப்படி ஒரு ஆறு சல சலத்து ஓடும் போது அந்த முட்டாள்கள் ஏன் ரப்பர் குழாயைக் கொண்டு குளிப்பாட்டினார்கள். இயற்கை தரும் ஆனந்தத்தை தொழில்நுட்பங்க்களால் ஒரு போதும் தரமுடிவதில்லை. ரோஜாப்பூவின்  மென்மையையும் வாசத்தையும்  இயந்திரங்கள்  உருவாக்கித் தந்துவிடுமா?

எத்தனை இதமாக இருந்தாலும் இப்படியே நீந்திக் கொண்டிருந்து விடமுடியாது. ஆற்றுக்கு இலக்கில்லை. எந்த இடத்தையும் அடைய அல்ல சும்மா நடக்கவே விரும்புகிறது அது. ஆனால் வேட்டையாடவும், வேட்டையாடப்படவும் பிறந்தவை புலிகள். இன்னேரம் கண்டுபிடித்திருப்பார்கள். வேட்டையைத் தொடங்கியிருப்பார்கள்.

நதியில் நீந்திய புலி கரையேறியது. சகதியில் நடந்து, புதர்களைக் கடந்து  மரங்கள் செறிந்த  அந்த மாளிகையின்  வராந்தாவைக் கடந்து ஆற்றைப் பார்த்து அமைக்கப்பட்டிருந்த பில்லியர்ட்ஸ் அறையில்  மேசைக்குக் கீழ் படுத்துக் கொண்டது. சுதந்திரம் கிட்டிய நிம்மதியும் நீரில் அளைந்த சந்தோஷமும் கண்னை  அழுத்த இமைகளை மெல்ல மூடி உறங்க முயன்றது

*

முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஆறுமுகம் தன் திறமைகள் அனைத்தையும் காண்பித்து சமைத்திருந்த உணவை அரசநாயகம் பெரிதும் ரசிக்கவில்லை. போதை தலைக்கேறிக் கிடந்தது.மதுவின் போதை மட்டுமல்ல. புலி வேட்டைக்குப் போன போதை.

*

போதை ஏதும் ஆறுமுகத்திற்கு இல்லை. உள்ளூர் தமிழனோ, உலகக் குடிமகனோ  போதை கொள்ள அவரது கலாச்சரத்திற்கு அப்பால் அதிக வாய்ப்புக்கள் இல்லை.

உணவுத் தட்டுக்களை ஏந்திக் கொண்டுக் கடந்த போது பில்லியர்ட்ஸ் அறையில் மேசையின் கீழ் ஒளிர்ந்த இரு தணல்களைப் பார்த்தார் ஆறுமுகம். அவை தணல்கள் அல்ல.விழிகள் என்று அவர் உணர்ந்த போது உடல் சிலிர்த்தது. அறையின் விளக்கைப்  போட்டார். புரிந்து விட்டது. அங்கே உறங்குவது புலி.

இடது காலில் முகத்தைச் சாய்த்து  பூனை போல் உறங்கிக் கொண்டிருந்த புலி இமை  திறந்து ஆறுமுகத்தைப் பார்த்தது. பசியில்லை என்பதால் அசுவாரஸ்யமாக இமைகளை மூடி உறங்க முயன்றது

ஆறுமுகம் மிரண்டு ஒடினார். “ஐயா புலி!”  என்று பதறினார்.

“பேசுவதையெல்லாம் ஒட்டுக் கேட்கிறாயா?”  என்று சீறினார் அரசநாயகம்.” காகிதப் புலியா?” என்று பகடி செய்தார். நிஜப் புலி என்று ஆறுமுகம வர்ணித்த போது நீயும தண்ணி அடிச்சிருக்கியா என்று நையாண்டி செய்தார்.

பதில் பேச நேரமில்லை .ஆறுமுகம் 45 பாகை கோணத்தில்ல்  சுவரில் கிடத்தியிருந்த துப்பாக்கியை எடுத்துக்  கொண்டார். ரவைகளை சோதித்தார்.வெற்றிட முனைகளையும்  அழுந்தத் திணிக்கப்பட்ட வெடிமருந்துகளும் கொண்ட ரவைகள் நிரப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு நடந்தார்

பில்லியர்டஸ் அறையின் விளக்கைப் போடவில்லை. விளக்கைப் போட்டால் புலி விழித்துக் கொள்ளும் என்று தோன்றியது.  ஆனால் புலி விழித்துக் கொண்டுதான் இருந்தது. தணல்கள் போன்று  அதன் விழிகள் ஒளிர்ந்தது. மாளிகைகள் அதன் வசிப்பிடமல்ல என்பது அதற்கும் புரிந்துதான் இருந்தது.

ஆறுமுகம் இரு விழிகளுக்கு இடையிலிருந்த நெற்றிப் பொட்டைக் குறி வைத்தார் பயத்தில் அவர் கைகள் நடுங்கின. விரைந்து வரும் ரவையைக் கண்ட  புலி தலையை அசக்கியது, ரவை காதருகே துளைத்துக் கொண்டு வெளியேறியது. நவீனத் தொழில்நுட்பம் கைவிட்டுவிடவில்லை. வெற்றிட முனைகள் கொண்ட ரவைகள் புலியின் கபாலத்தை ஆழமாகவே சிதைத்திருந்தன. இனிப் புலியால் நடமாட முடியாது.

புலி தலையைத் தூக்கிப் பார்த்தது.வெறி கொண்டவன் போல ஆறுமுகம்  விசையை இன்னொரு முறை அழுத்தினார். சீறிக் கொண்டு பாய்ந்த ரவைகள் அதன் கண்களைத் துளைத்தன. புலியின் வால் 90 பாகை எழும்பி உயிரற்று வீழ்ந்தது. ஆறுமுகம் விளக்கைப் போட்டான்.

வெடிச்சத்தம் கேட்டு அரசநாயகம் எழுந்து வந்தார். பின்னால்  நண்பர்கள்.

“என்னடா பண்ணறே?” என்றார்

“புலியைச் சுட்டுட்டேன் முதலாளி” என்றான் ஆறுமுகம்

“என்னுடைய புலியைச் சுட முடியாது, அது காகிதப் புலி”  என்று அதிரச் சிரித்தார் அரசநாயகம்.

செத்துக் கிடந்த புலியை வாலைப் பற்றி இழுத்துக் கொண்டு போனான் ஆறுமுகம். அதைப் புதைப்பதற்கான குழியையும் அவன்தான் தோண்ட வேண்டும். அது நாளைக்கு.

குமுதம் லைப் 15.3.2017

லா ச ரா மனவெளிக் கலைஞன் ஒலிப்பதிவு

சாகித்ய அகாதெமி ஏற்பாடு செய்திருந்த லா ச ரா நூற்றாண்டு விழாவில் நான் ஆற்றிய முதன்மை உரை- ஒலிப்பதிவு

https://soundcloud.com/maalan-2/sets/k2fxi8urudyp

சீன மொழியில் என் கவிதை

நான்


作者:玛兰(Maalan) 印度

கணந்தோறும் பிறக்கிறேன்
生,或死
கணந்தோறும் பிரிக்கிறேன்
不过一瞬间
காற்றுக்குள் வடிவாகிறேன்
像风,无影无踪

மணந்தோறும் மணக்கிறேன்
我予世间芬芳
மலர்தோறும் சிரிக்கிறேன்
如花笑靥
மாற்றின்றி நிகராகிறேன்
始终未变

குணம் தேடிச் சிணுங்காமல்
不求富贵
கூப்பிக் கை வணங்காமல்
不拜神明
கூட்டத்தில் தனியாகிறேன்
不随波逐流

தினம்தோறும் மனந்தேற
我更胜从前
தொடுவானுக்கு அருகாகத்
如今
தொலைதூரம் நான் போகிறேன்
心向天边

மொழிபெயர்ப்பு: கலைமகள்

மனம் எனும் வனம்

Maalan மாலன்

m_writing

 Maalan V. Narayanan

 Maalan V. Narayanan is a writer by choice and a journalist by profession .Born in India in 1950, he graduated from Madurai University and later pursued his higher studies in journalism at  University of Florida, Gainesville, US. He has 17 titles to his credit, some of which have won awards and many of them are being discussed in university class rooms of contemporary writing. He was guest of honor in some literary festivals such as Writers’ Week celebrations of Singapore.

His poems have found a place in the anthology of protest poetry, Voices of Emergency, compiled by Prof. John Oliver Perry of Tufts University, USA and in the Anthology of Tamil poetry by Sahitya Academy of India.

Some of his stories in translation in English and in other Indian languages and have appeared in the leading English and Indian Language magazines and the Anthology of Modern Tamil Stories published by Writers’ Workshop, Calcutta. Some his stories are translated into Chinese and Malay too. India’s national television channel Doordarshan has produced a documentary on him

He has served of leading Tamil magazines and newspapers and is a pioneer in Tamil television journalism

மாலன்

எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும் கவிதை மூலம் எழுத்துலகிற்கும் தனது 16ம் வயதில் அறிமுகம் ஆன மாலன்,  இன்று புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியர். முன்னர் இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் ஆகிய முன்னணி இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
1970-80ம் ஆண்டுகளில் தமிழகத்தில் வெளியான இலக்கியச் சிற்றேடுகள் அனைத்திலும் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியவர். கணையாழி ஆசிரியர் குழுவிலும் சிறிது காலம் பங்களித்தார்.இவரது கவிதைகள் சாகித்திய அகதாமி தொகுத்து வெளியிட்ட தொகுப்பிலும், எமெர்ஜென்சியை விமர்சித்து எழுதிய கவிதை, அமெரிக்கப் பேராசிரியர் ஆலிவர் பெரி தொகுத்த கவிதைத் தொகுப்பிலும், கதைகள் கல்கத்தாவில் உள்ள writers workshop தொகுதியிலும் வெளியாகியுள்ளன. இவரது சிறுகதை தப்புக் கணக்கு திரு. பாலு மகேந்திராவால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது

சாகித்திய அகதாமியால் அதன்  தமிழ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்

சிறுகதைகளின் வடிவ நேர்த்திக்காக தி.ஜானகிராமன், சிட்டி போன்ற முன் தலைமுறைப் படைப்பாளிகளாலும், பிரபஞ்சன், பொன்னீலன்,பா.செயப்பிரகாசம் போன்ற சமகாலப் படைப்பாளிகளாலும், எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்.வெங்கடேஷ் போன்ற அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளாலும் பல்வேறு விமர்சகர்களாலும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களாலும் பாராட்டப் பெற்றவர்.  நெல்லை தூய சேவியர் கல்லூரி இவரது படைப்புகள் குறித்து ஆராய 2006ம் ஆண்டு ஒரு முழுநாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

1981ல் முழுக்க முழுக்க இளைஞர்களின் படைப்புக்களை மட்டும் தாங்கித் தமிழின் முதல் இளைஞர் இதழாக மலர்ந்த ‘திசைகள்’ இதழின் ஆசிரியராக  பொறுப்பேற்றவர் மாலன். தமிழின் முதல் முழுநேர செய்தித் தொலைக்காட்சியான சன்நியூஸ் தொலைகாட்சியின் ஆசிரியராகப் பணியாற்றியவர். யூனிகோட் குறியீட்டில் அமைந்த முதல் இணைய இதழான ‘திசைகள்’ இதழின் ஆசிரியர்.
தன்னுடைய இதழியல் பணிகள் அனைத்தும் தமிழ் இதழியலின் எல்லைகளை விரிவாக்குவனவாகவே அமைந்தன என்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறும் மாலன் அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.

கணினியில் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட மாலன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் மென்பொருள் தமிழாக்கம் செய்யப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர்.

பிரதமர்கள்  நரசிம்மராவ், வாஜ்பாய், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் ஆகியோருடன் அவர்களது ஊடகக் குழு உறுப்பினராக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொணடவர்.

சென்னைப் பல்கலைக்கழத்தின் முதுகலை (தமிழ் இலக்கியம்) பாடத்திட்டக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முன்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக மேதகு ஆளுநர் டாக்டர். சென்னாரெட்டியாலும், பின்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக மேதகு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவாலும் நியமிக்கப்பட்டவர்.

Commonwealth Journalist Association, South Asian Literary Association ஆகியவற்றின் உறுப்பினர்.