இனியும் வேண்டுமா இடைத்தரகர்கள்?

தேர்க்காலில் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறான் கர்ணன். அவனை அவன் அது நாள் வரை செய்த தர்மங்கள் காத்து வருகின்றன. உடலை விட்டு உயிர் பிரிய மறுக்கிறது. கிருஷ்ணன் அந்தணக் கோலத்தில் வந்து அவன் செய்த தர்மங்களைத் தானமாகக் கேட்கிறார். மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்துவிடுகிறான் கர்ணன். மரணம் அவனைத் தழுவியது

மகாபாரதத்தில் இது ஓர் உருக்கமான காட்சி. கர்ணன் திரைப்படத்தில் இந்தக் காட்சியைப் பார்த்துக் கண்ணீர் விட்டவர்களை நான் அறிவேன்.

ஆனால் இதன் நீட்சியாக இன்னொரு பின் கதை உண்டு. செவி வழிக் கேட்ட கர்ண பரம்பரைக் கதைதான் (இந்தக் ‘கர்ண’ என்பது காது) மகனை இழந்த ஆற்றாமையால் ஈசனிடம் போய் நின்றான் சூரியன். சிவந்த அவன் மேனி சினத்தால் மேலும் சிவந்திருந்தது. “என்ன விஷயம்?” என்றார் கடவுள்

“தர்மம் செய்தால் அது நம்மைக் காக்கும் என்ரு சொல்லிக் கொண்டிருக்கிறோமே அது உண்மைதானா?”

“ஆம். அதில் என்ன சந்தேகம்?”

“என் மகன் கர்ணன், தன் கடைசி மூச்சு வரை தர்மம் செய்தவன். அந்த நேரத்தில் கூட அந்தணனாக வந்து தானம் கேட்ட கிருஷ்ணனுக்குட் தன் தர்மத்தின் பலன் அனைத்தையும் தானமாகக் கொடுத்தான். அப்படி தானம்  செய்தது அவனைக் காத்திருக்க வேண்டும். ஆனால் அவன் கொல்லப்பட்டுவிட்டானே?” என்று குமுறினான் சூர்யன்

“சூர்யா, உன் துயரம் புரிகிறது. ஆனால் நீ சொன்னதை மறுபடியும் மனதில் ஓட்டிப் பார். கடைசியில் அவன் செய்தது என்ன?”

“ மறுபடி மறுபடி என் வாயால் அதைச் சொல்லச் செய்யாதீர்கள். கடைசியில் அவன் தன்னுடையது எல்லாவற்றையும் கிருஷ்ணனுக்கு தானமாகக் கொடுத்தான்.”

“ஆங்! அதுதான். அவன் தானமாகக் கொடுத்தான். தானமும் தர்மமும் ஒன்றல்ல”

“என்ன வித்தியாசம்?”

“கேட்காமலே கொடுப்பது தர்மம். கேட்டுக் கொடுப்பது தானம். ஒருவன் பசியோடு இருக்கிறான் என்று உணர்ந்து அவன் கேட்கும் முன்பே கொடுப்பது தர்மம். பசிக்கிறதே சோறு போடுங்கள் எனக் கேட்டபின்பு கொடுப்பது தானம். கிருஷ்ணன் தானமாகக் கொடு என்று கேட்டான். கேட்ட பின்பு  கர்ணன் தானமாகக் கொடுத்தான்”

“அதனால்?”

“தர்மம் தலை காக்கும். தானம் புகழ் கொடுக்கும். கர்ணனுக்கு என்றும் புகழ் நிலைத்திருக்கும். எதிர்காலத்தில் வரும் புலவர்கள்  கொடையில் கர்ணன் போல என்று எடுத்துக்காட்டாக அவன் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதை எண்ணி அமைதி கொள்” என்றாராம் கடவுள்

எம்.பிக்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி என்று ஒன்று ஒதுக்கப்படுகிறதே அது தான்மும் அல்ல, தர்மமும் அல்ல, அது அக்ரமம். அதாவது க்ரமம் அற்றது. அதாவது முறையற்றது..

இந்த எம்.பி. மேம்பாட்டு நிதி, மன்னிக்கவும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி (MPLADS) என்பது நித்திய கண்டம் பூரணாயுசு என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த போது, எம்பிகளை ‘கவனித்து;க் கொள்ள  நரசிம்மராவ் அரசால் 1993 இறுதியில் கொண்டு வரப்பட்ட திட்டம். ஆரம்பத்தில் ஒவ்வொரு எம்.பிக்கும் ஆண்டொன்றுக்கு ரூ 5 லட்சம் இந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது. இப்போது ஆண்டொன்றுக்கு ரூ 5 கோடி ஒதுக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியைச் செலவிட சில நிபந்தனைகள் உண்டு. அவற்றில் முக்கியமானது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தம் தொகுதிகளில் உள்ளூர் தேவைக்கேற்ப நீடித்து நிற்கும் பொதுச் சொத்துக்களை (durable community assets) உருவாக்கும் திட்டங்களுக்கு மாத்திரம் இந்த நிதியைப் பரிந்துரைக்க வேண்டும். அதாவது ஒரு தொகுதியில் உள்ள ஒரு கிராமப் பள்ளிக்கூடத்திற்குக் கட்டிடம் தேவைப்பட்டால் அதைக் கட்ட இந்த நிதியைச் செலவிடலாம்.

1993லிருந்து 2018 ஜூலை வரை இந்தத் திட்டத்தின் கீழ் ரூ 47 ஆயிரத்து 572.75 கோடி. அப்படியானல் இந்த மதிப்புள்ள ‘நீடித்து நிற்கும் பொதுச் சொத்துக்கள்’ நாடு முழுக்க உருவாகியிருக்க வேண்டும் அல்லவா? உருவாகியிருக்கிறதா?

எம்.பிக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பரிந்துரைதான் செய்யலாம். நேரடியாக நிதியைக் கையாள முடியாது. மாவட்ட ஆட்சியாளர்கள்தான் நிதியை விடுவிக்க முடியும்  என்பது விதி. ஆனால் நடைமுறை என்ன? 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 128 மாவட்டங்களை எடுத்துக் கொண்டு ஆராய்ந்து, 2010ல் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கை (சி,ஏ.ஜி) அறிக்கை, 90% மாவட்ட நிர்வாகம் சொத்துக்களுக்கோ, அல்லது வேலை நடந்ததற்கோ எந்தப் பதிவேட்டையும் பராமரிக்கவில்லை என்றும்,  86 மாவட்டங்களில் பணிகளை பரிசோதிக்காமலே பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு செலவிடப்படாத நிதியை அடுத்த ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியும். இதனால் பலர் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சில ஆண்டுகளில் குறைவாகச் செலவிட்டு பின்னர் தேர்தல் நெருங்கும் போது அள்ளிவிடுகிறார்கள் என்று சில அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. அரசின் பணத்தை எடுத்துக் கொடுப்பவர்கள் அதை என்னவோ தங்கள் சொந்தப் பணத்திலிருந்து கொடுப்பது போல விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது மற்றுமொரு குற்றச்சாட்டு. அண்மையில் கூட கரோனா சிகிசைக்கு கனிமொழி  ஒரு கோடி கொடை, தயாநிதிமாறன் ஒரு கோடி கொடை என்றெல்லாம் பத்திரிகைககள் அவர்கள் தங்கள் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில்ருந்து விடுவித்த தொகைகளுக்குத் தலைப்பிட்டிருந்தன

நிதி, செயல்பாடு தவிர வேறு சில சட்டப் பிரசினைகளும் இருந்தன. நம்முடைய அரசமைப்புச் சட்டம் சட்டமியற்றுவோர் (Legislator), திட்டங்களைச் செயல்படுத்துவோர் (Executive) எனத் தெளிவாக வரையறுத்துள்ளது. ஒரு குறிப்பிட்டத் திட்டத்திற்காக நிதியைச் செலவிடுமாறு சொல்லும் போது சட்டமியற்றுவோர் ஒரு ‘எக்சிக்க்யூட்டிவ்’ ஆகிவிடுகிறார்  எனவே இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று ஒரு ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, எம்.பி. பரிந்துரைதான் செய்கிறார் என்பதால் இது அதிகாரப் பகிர்வு என்ற கருத்தியலுக்கு முரணானது அல்ல என்று தீர்ப்பளித்தது.

ஆனால் இது ஊராட்சி அமைப்புக்களின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் குறுக்கிடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோமநாத் சட்டர்ஜி இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதே கடுமையாக எதிர்த்தார். இரா.செழியன் இதைக் குறித்து விரிவாக ஒரு நூலே எழுதியுள்ளார் (MPLADS – Concept, Confusion and Contradictions)  மக்கள் வரிப்பணத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் செலவழிக்க அதிகாரமில்லை என்று நீதிபதி வெங்கடராமய்யா போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள்

அரசமைப்புச் சட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதை ஆராய அமைக்கப்பட்ட குழு, இரண்டாவது நிர்வாக சீர்த்திருத்த ஆணையம், நிதி விவகாரங்களுக்க்கான நாடாளுமன்ற நிலைக்குழு (1998-99), திட்டக் கமிஷன் போன்ற அமைப்புக்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தது உண்டு

கரோனோ தொற்றின் காரணமாக இரண்டாண்டுகளுக்கு எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைப்பது என்று மோதி அரசு முடிவெடுத்திருக்கிறது. வரவேற்கத் தக்க முடிவு.

ஆனால் இதை  இரண்டாண்டுகளுக்கு மட்டுமல்ல, நிரந்தரமாகவே கைவிட வேண்டும். கிராமங்களில் நிரந்தர பொதுச் சொத்துக்களை உருவாக்கத் தனி நிதியம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சில நிபந்தனைகளின் பேரில் மத்திய அரசு நிதி ஒதுக்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். எம்.பி, எம்.எல்.ஏ என்ற இடைத்தரகர்கள் இனி வேண்டாம்     .               

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these