எளிமையின் அடையாளம்

என் ஜன்னலுக்கு வெளியே எதிர்ச்சாரியில் எழுந்து கொண்டிருக்கிறது ஒரு விளம்பரப் பதாகை. வேட்டிக்கான விளம்பரம் அது. வேட்டிக்குக் கூட விளம்பரம் செய்யவேண்டி வந்துவிட்டதே என எனக்கு வியப்பாக இல்லை.விற்கப்படும் பொருள் எதுவாயினும் அதற்கு விளம்பரம் தேவை என்பது தற்காலத்தின் தவிர்க்க முடியாத நியதி.பூக்கடை, மீன்கடை உதாரணங்கள் எல்லாம் போனகாலத்துச் செய்தி. ஆனால் வேட்டிகளின் விலையைக் கேட்கும் போதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.

வேட்டி தினம் என்ற ஒன்றை விளம்பரப்படுத்தும் அந்தப் பதாகை வேட்டி அணிந்து தமிழர் பாரம்பரியத்தைக் பாதுகாக்க வருமாறு அறைகூவல் விடுக்கிறது.ஒரு காலத்தில் வேட்டி அணிந்தே தமிழர்கள் ஊரெங்கும் உலா வந்தனர் என்பது உண்மைதான். பாண்ட் அணிந்த பாரதியாரைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.(அவர் கோட் அணிந்திருந்தார் என்ற போதும்) ஆனால் வேஷ்டி தமிழ்ச் சொல்லா? அந்தச் சொல்லின் இடையில் இருக்கும் ஷ் என்ற கிரந்த எழுத்து அந்த சந்தேகத்தை எழுப்புகிறது. அதைத் தற்பவமாக்கித் தமிழ் வேட்டி என அணிந்து கொண்டது.

கலிங்கம், துகில், கச்சை, ஆடை, அறுவை, உடுக்கை, சீலை எனப் பலப் பழந்தமிழ் சொற்கள் அன்றைய தமிழர் அம்மணமாகத் திரியவில்லை என்பதை அறுதியிட்டுச் சொல்கின்றன.இன்னும் சொல்லப் போனால் தறி நெய்வதிலே தமிழர்கள் தனித் திறமையோடு திகழந்தார்கள். ‘ஆவியன்ன அவி நூற் கலிங்கம்’ என்பது ஒரு சங்கப் பாடல் வரி. அதாவது நீராவி போன்ற துணி. பின்னால் நவீனச் சிறுகதை எழுத்தாளர் மெளனி இதையே இரவல் வாங்கி  ‘நீராவி போன்று வேட்டி அணிந்திருந்தான்’ என்றெழுதுகிறார்.’புகை விரிதன்ன’, ‘பூப்பால் வெண் துகில்’  என்றெல்லாம் இலக்கியங்கள் அந்த நாளைய ஆடைகளை விவரிக்கின்றன. இன்று நாம் முகம் துடைக்கும் ‘டிஷ்யூ’ போல மெல்லிய வெள்ளைக் ‘காகிதம்’ மூங்கிலின் உள்ளே இருக்குமே, பார்த்திருக்கிறீர்களா? அதைப் போன்று ஆடை செய்தவர்கள் தமிழர்கள் என்கிறது புறநானுறு.

பண்டைத் தமிழகத்தின் பலவகைத் துணிகள் பற்றிய பட்டியலொன்றைத் தருகிறார் பனிரெண்டாம் நூற்றாண்டு உரை ஆசிரியர் அடியாருக்கு நல்லார். அவர் பட்டியலில் 36 சொற்கள் உள்ளன.  என்றாலும் அதில் வேட்டி இல்லை..இலக்கியத்தில் இத்தனை சாட்சியங்கள் இருந்தாலும் வேட்டி என்ற சொல் இல்லை.

நீளமாக நெய்து அதிலிருந்து  வெட்டி எடுத்துக் கொள்ளப்பட்டதே வேட்டி எனச் சிலர் விளக்குகிறார்கள்/ வெட்டுதல் என்பதிலிருந்து வந்தது வேட்டி என்பது அவர்களது வாதம். வெட்டுதல் என்பதிலிருந்து வெட்டி வந்திருக்கலாம். வேட்டி வருமா?  இந்த வெட்டிகூட பட்டியலிலோ, இலக்கியத்திலோ இல்லையே ஏன்?

சரி, அப்படியானால் வேட்டி எங்கிருந்து வந்தது? வேஷ்டணம் என்றால் சமஸ்கிருதத்தில் சுற்றிக் கட்டல். அதிலிருந்து வேஷ்டி வந்திருக்க வேண்டும்.நஷ்டம் நட்டமானது போல், வருஷம் வருடம் ஆனாது போல் வேஷ்டி தமிழுக்கே உரிய வகையில் வேட்டியாக ஆகியிருக்க வேண்டும்.

வேட்டி தமிழர்களின் ஆடை மட்டுமல்ல. விழாக்களுக்கும் விருந்துகளுக்கும் செல்லும் போது தமிழர்கள் வேட்டி அணிவதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் முண்டா வரை உருட்டிய முழுக்கை சட்டையும், இடையில் சுற்றிய வேட்டியுமாகவே மலையாளிகள் திசையெங்கும் திரிகிறார்கள். பரிசளிப்பு விழாவோ, பாராட்டுக் கூட்டமோ, அரசியல் மாநாடோ, இலக்கிய நிகழ்ச்சியோ எதுவானாலும் அவர்களுக்கு வேட்டிதான்.

என்னுடைய இலக்கிய நண்பர்களிலே ஒருவர் எம்.டி. வாசுதேவன் நாயர். மலையாள இலக்கியத்தில் மாபெரும் சாதனைகள் செய்தவர். மாத்ருபூமியின் ஆசிரியர். அவரை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட கால் சாராய் அணிந்தவராகக் கண்டதில்லை.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கோழிக்கோட்டிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள திரூர் என்ற இடத்தில் ஏற்பாடாகியிருந்த இலக்கியக் கூட்டமொன்றிற்குப் போயிருந்தேன். மலையாள இலக்கியத்தின் தந்தை துஞ்சன் ’எழுத்தச்சன்’ தோன்றிய தலம் திரூர். தில்லியிருந்து அந்த நிகழ்வுக்குப் போகும் வழியில் இன்னொரு மலையாள எழுத்தாளர்  என்னைச் சென்னையில் சந்தித்தார். அன்று அவர் சாயம் போன ஜீன்ஸும், சிவப்புக் கட்டம் போட்ட சட்டையும் அணிந்து வந்திருந்தார். மறுநாள் மலையாள மண்ணில் பார்க்கும் போது அவர் வேட்டிக்கும் வெள்ளைச் சட்டைக்கும் மாறி இருந்தார். அவர் பெயரைச் சொல்லி அழைத்து, என்ன வேஷத்தை மாற்றி விட்டீர்கள் என்றேன். ‘உஷ்… ரோமில் ரோமானியனாக இரு!” என்று காதருகில் கிசுகிசுத்தார். அந்தக் கூட்டத்தில் பாண்ட் போட்டிருந்த பச்சைத் தமிழன் நான் ஒருவன் மட்டும்தான்!

மலையாளிகள் மட்டுமல்ல, தெலுங்கர்களும் கன்னடர்களும் கூட வேட்டி அணிபவர்கள்தான். இன்று வேட்டி விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ராஜன் ஒருவர், வேட்டி பற்றிய பேட்டி ஒன்றில் விஷயம் ஒன்றைச் சொல்லியிருந்தார். தமிழர்கள் கால்சாராய் கலாசாரத்திற்கு மாறியிருந்த நேரம். அந்தத் தருணத்தில்தான் அவர் தனது வியாபாரத்தை ஆரம்பித்திருந்தார். என்ன நம்பிக்கையில் இதைத் துவக்கினீர்கள் என்பது அவர் முன் வைக்கப்பட்ட வினா. அவர் சொன்னார்: “தமிழ்நாட்டில்தான் வேட்டி அணியும் வழக்கம் குறைந்திருக்கிறது. ஆனால் ஆந்திராவில் அப்படி இல்லை. அது பெரிய மார்க்கெட்!”

வங்காளியர்கள், மராட்டியர்கள்,அசாமியர்கள், குஜராத்திகள், ஒடியர்கள், வடநாட்டினர் எனப் பலரும் உடுத்தும் ஆடை வேட்டி அவர்களில் பலர் நம்மைப் போலத் தட்டு வேட்டியாக சுற்றிக் கட்டுவது இல்லை.அதாவது வேஷ்டணம் இல்லை.பெரும்பாலும் கச்சம் வைத்துக் கட்டுகிறார்கள். (அஞ்சு கச்சம் வைத்துக் கட்டுவதால் பஞ்சகச்சம்) சமஸ்கிருத ‘தவுத்தா’ ஒடியாவில் தோத்தி, வங்காளியில் துட்டி, மராத்தியிலும் கன்னடத்திலும் தோத்தர், குஜராத்தியில் தோத்தியு, என வேட்டி எல்லாத் திசையிலும் விரிந்து கிடக்கிறது.

காமராஜரும், அண்ணாவும், கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் மட்டுமல்ல,குஜராத்தியான காந்தியும், தெலுங்கரான நரசிம்மராவும், வங்காளியான ஜோதிபாசுவும், கன்னடரான தேவ கெளடாவும்,ஒடியரான நவீன் பட்னாயக்கும் உத்திரப்பிரதேசத்தின் முலாயம் சிங்கும் கூட வேட்டி கட்டுகிறவர்கள்தான்.

சுருக்கமாகச் சொன்னால் வேட்டி இந்தியர்களின் ஆடை.பேசும் மொழி பலவாயினும் இந்தியக் கலாசாரம் ஒன்றே என உலகுக்கு உணர்த்தும் இன்னொரு சான்று வேட்டி. அன்றாட வாழ்வின் எந்த அம்சத்தை எடுத்துப் பார்த்தாலும், எளிமை என்பதுதான் இந்தியக் கலாசாரத்தின் சாரமாக இருந்திருக்கிறது.அதன் இன்னொரு அடையாளம்தான் வேட்டி. அதைத் தயாரிப்பதிலோ, பராமரிப்பதிலோ, அணிவதிலோ சிக்கல் ஏதும் இல்லை. அணிகிற விதத்தில் அணிந்தால் அது அழகாகவும், கம்பீரமாகவும் கூட இருக்கிறது.

விசித்திரம் என்னவென்றால் வெள்ளைக்காரர்கள் ஆள வந்த வெகு நாள்களுக்குப் பின்னரும் வேட்டிதான் இந்தியர்களுடைய உடையாக இருந்தது. அரசு அலுவலர்களும் வழக்கறிஞர்களும் வேட்டியோடுதான், ‘கச்சேரி’க்குப் போனார்கள். அரையில் வேட்டியும், அதற்கு மேல் சட்டையும் ஒப்புக்கு ஒரு கோட்டும் அணிவதுதான் அன்றைய நாகரீகமாக இருந்தது.தனவணிகர்களும் கனவான்களும் தலைக்கு மேல் டர்பன் ஒன்றையும் அணிந்தார்கள். கால்சாராய் அணியும் வழக்கம் இங்கே அதிகாரத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றே அறிகிறேன்.

காலமாற்றத்தோடு நேர்ந்த கலாசார மாற்றம் காரணமாக, எளிமையான வேட்டிக்கு விடை கொடுத்துவிட்டு, ஆங்கிலேயர்களின் ஆடைக்கு அவசரமாகத் தாவியிருக்கிறோம். சென்றது இனி மீளாது என்பதால் புலம்பிப் புண்ணியமில்லை

அந்த ஞானம்தான் வேட்டி தினமாக இப்போது விழாக் காண்கிறது.மரபை நினைவூட்டும் இந்த நிகழ்வு இன்றைக்குத் தேவைதான்.என்றாலும் இதைத் தமிழர் விழா எனச் சுருக்கிவிடாமல், இந்தியக் கலாசாரத்தின் ஒற்றுமையை நினைவுகூரும் நாளாக விரிக்க வேண்டும்.

குமுதம் 22.1.2020

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these