என்ன சொல்லட்டும், வாழ்த்தா? அனுதாபமா?

ஜன்னலுக்கு வெளியே இருந்து வந்த வண்ணத்துப்பூச்சி ஒன்று வாசல் கதவில் வந்தமர்ந்தது. பின் சுவருக்குச் சென்று அங்கு மாட்டப்பட்டிருந்த விருதுப் பத்திரத்தை வாசித்தது. பின் என் தோளில் வந்தமர்ந்தது. குறுகுறுவென்றிருந்தது.ஆனாலும் அதைத் துரத்த நான் அவசரப்படவில்லை. காரணம் ஒரு கதை

காட்டு வழியே தனியே சென்று கொண்டிருந்த ஒருவன் தன் தனிமையை எண்ணி அச்சமடைந்தான். அச்சமடைகிற போதெல்லாம் நமக்கு அடைக்கலம் ஆண்டவன்தானே? ”கடவுளே என்னோடு பேசு!” என்றான். குயிலொன்று கூவிக் கொண்டு தலைக்கு மேலே பறந்தது.அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவன் நடந்து கொண்டிருந்தான். “கடவுளே, ஏன் இந்த மெளனம்? என் குரல் உனக்குக் கேட்டிருக்குமானால் என்னைத் தொடு” என்றான். அழகிய வண்ணத்துப் பூச்சி ஒன்று அவன் தோளில் வந்தமர்ந்தது. அதை அவன் அவசரமாகத் தட்டிவிட்டான். ஆனால் அவன் அவநம்பிக்கையும் அச்சமும் அகன்று விடவில்லை. “கடவுளே நான் கதறுவது கேட்கவில்லையா? நீ இருப்பது உண்மையானால் ஏதாவது அதிசயம் நிகழ்த்திக் காட்டு! என்றான். புதிதாய்ப் பிறந்த குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டது.

ஒரு குழந்தை பிறப்பைப் போலோரு அதிசயம் -மிரகிள்- இன்னொன்று உண்டோ? ஓர் உயிருக்குள் இன்னொரு உயிர் கருவாகி, பின் உருவம் பெற்று வளர்ந்து இன்னொரு மனிதப் பிறவியாக வெளிவருவதைப் போல இன்னொரு அதிசயம் வேறெதுவும் இல்லை. அதை ஆண்டவன் ஒவ்வொரு நொடியும் இடைவிடாமல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த கருவி அன்னையர். அது ஆண்களுக்கு அருளப்படாத வாய்ப்பு. பெண்ணுடல் அதற்கெனப் பிரத்தேயகமாகப் படைக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் பெண் என்பவள் அவள் உடல் மட்டும்தானா? வித்தை வாங்கி பயிராக விளைவித்துத் தரும் வயல் மட்டும்தானா அவள்?மூலப் பொருள் ஒன்றை முழுங்கி முழுமையாய் ஒன்றை உருவாக்கித் தரும் இயந்திரமா அவள்?

அப்படித்தான் சிலர் நினைக்கிறார்கள். காசைக் கொடுத்துக் கருப்பையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் எனக் கருதுகிறார்கள்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற தொலைக்காட்சி சானல் 4. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆவணப்படத்தை ஒளிபரப்பியது.(இதை யூடியூபில் காண https://youtu.be/qYVR0vXEdn8 ) குஜராத்தில் ஆனந்த் என்ற ஊருக்கு அருகில் ஓரு மருத்துவ மனை. அதை பில்லியன் டாலர் தொழிற்சாலை என்று அது வர்ணித்தது.அந்தத் “தொழிற்சாலையில்” கர்ப்பிணிகளாக சுமார் நூறு பெண்கள்.அவர்கள் சுமப்பது அவர்கள் கணவர் தந்த குழந்தைகள் அல்ல. அவை உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்த தம்பதிகள்  தந்த குழந்தைகள். அந்தக் கர்ப்பிணிகள் அங்கே ஒன்பது மாதங்கள் தங்கி இருப்பார்கள்.அங்கு அவர்கள் ஊட்டச் சத்து, அமைதி தரும் சூழல் என்று நன்றாக கவனித்துக் கொள்ளப்படுவார்கள்  அவர்களுக்குஊதியம் 15000 யூரோ (சுமார் 12 லட்சம்)

வார இறுதி நாள்களில் அவர்கள் பெற்ற சொந்தக் குழந்தைகளும், கணவனும் அவர்களைக் காண வருவார்கள். அந்த நிமிடங்கள் அவர்களின் ஆனந்தத் தருணம்.அதைக் காணக் கண்ணிரண்டு போதாது.  

அயல்நாட்டவர்கள் இந்தியாவைத் தேடி வருவதற்கு அந்த ஆனந்தத் தருணங்கள்தான் காரணம்.இந்தியாவில் குடும்பம் என்பது ஒரு சுகமான சுமை.அது பெண்கள் தாய்மை அடையும் போது அவர்களிடம் ஓர் ஆனந்தமாக மிளிர்கிறது. அந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கருப்பையில் வளர்கிற குழந்தைக்கும் கடத்தப்படுகிறது, கடத்தப்பட வேண்டும் என்று அந்நிய தம்பதிகள் கருதுகிறார்கள். அவர்கள் நாட்டில் அது கிடைக்காதா? கிடைக்கலாம். ஆனால் அங்கே கிடைக்கும் வாடகைத் தாய்கள் மது அடிமைகளாகவோ, குடிகாரிகளாகவோ இருக்கும் வாய்ப்பு அதிகம் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.இந்தியத் தாய்மார்கள் குடிப்பதில்லை என்பது அவர்கள் நம்பிக்கை.

தங்கள் கருப்பையை வாடகைக்கு விட்ட தாய்மார்கள் கிடைத்த காசில் சொந்தமாக வீடு வாங்கினார்கள், குழந்தைகளைப் படிக்க வைத்தார்கள், என்று அந்த ஆவணப் படம் சொல்லியது.அதாவது அங்கே வறுமை விலை போயிற்று. நம் இந்தியப் பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரமாக ஆக்கப்பட்டார்கள்.

ஒரு கோணத்தில் பார்த்தால் வாடகைத்தாய் என்பது இந்தியாவிற்குப் புதிதல்ல.மகாபாரதம் இனப்பெருக்கத்தின் பல்வேறு நிலைகள், வகைகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பாத்திரத்தை படைத்திருக்கிறது. உடலுறவின் போது இறந்து போதலுக்கு (Fatal Coitus) எடுத்துக்காட்டு பாண்டு. நீண்ட கால கர்ப்பத்திற்கு (Prolonged Gestation) எடுத்துக்காட்டு காந்தாரி. செயற்கை முறை கருத்தரித்தலுக்கு (In vitro Fertilization) எடுத்துக் காட்டு கெளரவர் பிறப்பு, உடலுறவற்ற இனப் பெருக்கத்திற்கு (Parthenogenesis) உதாரணம் குந்தி. கருமுட்டை உற்பத்தியைத் தூண்டல் (Induction of Ovulation) உதாரணம் ஜராசந்தன் பிறப்பு, வாடகைத் தந்தை (Epigenetics) வியாசர் மூலம் பிறக்கும் திருதிராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோர் இதற்கு எடுத்துக்காட்டு. பிறப்பின் போதே மனித உடலில் ஏற்படும் அதீத வளர்ச்சிக்கு (Precocious Growth) உதாரணம் கவச குண்டலங்களுடன் பிறக்கும் கர்ணன். இந்த இனப்பெருக்க வகைகள் மகாபாரதத்தில் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிவியல் நோக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று மருத்துவர்கள் Indian Journal of Endocrinology and Metabolism (May-June 2016) என்ற மருத்துவ இதழில் விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

பாகவதம் கம்சன் கொன்றுவிடக் கூடும் என்று அஞ்சிய தேவகி தனது ஏழாவது மகனான, பலராமனை (கிருஷ்ணனின் அண்ணன்) ரோகிணியின் கர்ப்பப்பைக்கு மாற்றினார் என்கிறது.

சங்க இலக்கியமான பரிபாடல் கந்த வேள் எனப்படும் முருகனின் பிறப்பைப் பற்றி விரிவாகப் பேசுகிறது திரிபுரத்தை எரித்த பின் சிவன் உமை உறவில் உருவான கருவை இந்திரன் அழிக்க முற்பட்டதாகவும் அதை அறிந்த முனிவர்கள் அதை கார்த்திகை மகளிர் அறுவரிடம் மாற்றினர். அந்த ஆறு பேரும் சரவணப் பொய்கையில் தாமரைப் பூவாகிய பாயில் குழந்தையை ஈன்றனர் என்கிறது பரிபாடல்.

எனவே இந்திய இதிகாசங்களில், புராணங்களில், இலக்கியங்களில் வாடகைத் தாய்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.தாம் ஒரு கருவியாக பாவிக்கப்படுகிறோம் என்பதை அந்தத் தாய்மார்கள் அறிந்திருந்தார்களா? அந்தப் பெண்களின் மனநிலை பற்றிய படைப்புகள் ஏதும் உண்டா? 

வறுமைக்கு கருப்பையை வாடகைக்கு விடும் தாய்மார்கள் பற்றி சிங்கம் முயலாகிறது என்று சிவசங்கரி எழுதிய நாவல் தாயகும் முன், தாயான பின் என அந்தப் பெண்ணின் இருவித மன உணர்வுகள் பற்றி பேசுகிறது.    

ஆனால் பெண்கள் ஒரு வணிகப் பண்டமாக பரிமாற்றம் செய்து கொள்வதைப் பற்றிய கதை ஒன்று மகாபாரதத்திலேயே உண்டு. அதை நித்ய கன்னி என்ற நாவலாக மணிக்கொடி எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம் எழுதியிருக்கிறார். (அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது அதற்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். தமிழில் முன்னுரை எழுதியவர் தி.ஜானகிராமன்)   

யாயதி என்ற மன்னனின் மகள் மாதவி. அந்த அரச குமாரிக்கு காலவன் என்றொரு காதலன். மூன்று பேரரசர்களுக்குத் தாய் ஆவாள், ஆனால் ஒவ்வொரு குழந்தை பிறப்பிற்கும் பின் அவள் மீண்டும் கன்னிமையைத் திரும்பப் பெறுவாள் என்றொரு விநோத வரம் பெற்றவள் மாதவி. காலவனிடம் அவனது குரு 800 குதிரைகளை குருதட்சிணையாகக் கேட்கிறார். அதுவும் சாதரணக் குதிரைகள் அல்ல. கறுப்புக் காதுகள் கொண்ட 800 வெள்ளைக் குதிரைகள். காலவன் அத்தனை குதிரைகளுக்கு எங்கு போவான்? அயோத்தி, காசி, போஜனகிரி என்ற நாடுகளை ஆண்ட மூன்று அரசர்களை அணுகுகிறான். தங்கள் வம்சத்திற்கு ஒரு வாரிசைப் பெற்றுத் தர வேண்டும் என அரசர்கள் நிபந்தனைகள் விதிக்கிறார்கள். அந்த அரசர்களின் குழந்தைகளை வயிற்றில் சுமக்க இசைகிறாள் மாதவி. 600 குதிரைகளைப் பெற்றுக் கொண்டு மீதி 200 குதிரைகளைத் தள்ளுபடி செய்து கடன் தீர்ந்தது என்கிறார் குரு

மகளுக்குத் திருமணம் நடத்த சுயம்வரம் செய்ய ஏற்பாடு செய்கிறார் யாயதி. அதில் பங்கேற்க வரும் அந்த மூன்று மன்னர்களையும் நிராகரிக்கிறாள் மாதவி. காட்டுக்குத் தவம் செய்யச் செல்லும் காதலனையும் நிராகரிக்கிறாள். திருமணத்தையும் குழந்தைப் பேற்றையும் நிராகரித்து நித்திய கன்னியாக வாழத் தலைப்படுகிறாள் என முடிகிறது கதை.

இன்று அபத்தமாகவும் ஆபாசமாகவும் தோன்றும் இந்தக் கதை அன்று பெண்கள் எப்படி ஒரு பண்டமாகக் கருதப்பட்டார்கள் என்பதற்கான ஓர் ஆவணம். இன்றும் அதேதான் நிலை. என்ன அன்று அரசர்கள் விலை பேசினார்கள். இன்று பணக்காரப் பெண்களே விலை பேசுகிறார்கள்

பை தி வே, இரட்டைக் குழந்தைகளுக்குப் ‘பெற்றோர்’ ஆகியிருக்கும் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிகளுக்கு வாழ்த்துகள். அந்த வாடகைத் தாய்க்கு என்ன சொல்லட்டும்?

வாழ்த்துகளா? அனுதாபங்களா?

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these