பறக்கும் யானைகள்

அதற்காகவே காத்திருந்தது போல், அந்த வண்ணபலூன் குழந்தையின் கையிலிருந்து நழுவியதும் கூரையில் போய் ஒட்டிக் கொண்டது. அழுமோ என நினைத்த அதன் அப்பா, உன்னிக் கொண்டு அந்த பலூனை பிடிக்க முயற்சித்தார். உயரம் உதவவில்லை. பலூனைப் பொருட்படுத்தாமல் பக்கத்து அறைக்கு நகர்ந்தது குழந்தை. அது என் ’நூலகம்’.சுவரோர ஷெல்ஃபில் புத்தகங்கள் உட்கார்ந்திருந்தன.

”இவ்வளவும் உன் புக்ஸா?” கண்ணகல கையை நீட்டிக் கேட்கிறது வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினரின் குழந்தை. மூன்று நான்கு வயதிருக்கும். உப்பிய கன்னங்களும் உருண்டைக் கண்களுமாக ஓர் பொம்மையைப் போலிருக்கும் அதை ’ராட்சசி’ எனக் கடிந்து கொள்கிறார் அதன் தாய்.

காரணம் ஒரு நொடி சும்மாயிராமல் எதையாவது எடுத்துப் பார்க்கிறது. திருகவோ திறக்கவோ முயற்சிக்கிறது. பதற்றத்தோடு பாய்ந்தோடி வந்து பறித்துக் கொண்டால் அழுவதில்லை. ஆர்ப்பரிப்பதில்லை. அடம் பிடிப்பதில்லை.  ஆனால் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது.  ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. எதைப் பார்த்தாலும் கேள்வி. யாரைப் பார்த்தாலும் கேள்வி.

அந்தக் குழந்தை கண்ணில் அகப்பட்டுவிட்டன என் புத்தகங்கள்.

”இவ்வளவும் உன் புக்ஸா?” என்கிறது மறுபடியும்.

“ம்” என்று தலை அசைக்கிறேன்

“நீ எந்த ஸ்கூல்?” என்கிறது

புன்னகைக்கிறேன் .உள்ளத்தில் ஒரு கேள்வி எனக்கும் ஊற்றெடுக்கிறது. புத்தகங்களை பள்ளிக்கூடங்களோடு சேர்த்துப் பதியம் போட்டது யார்?, அவை வாழ்விக்க வந்த வரங்கள் அல்லவா?

”இது ஸ்கூல் புக் இல்லடீ!. கதைப் புஸ்தகம்” என்கிறார் குழந்தையின் அம்மா.

அப்படியா? என என்னைப் பார்க்கிறது குழந்தை. ஆம் என்ற தலையாட்டலை அடுத்து வந்த கேள்வி என்னைத் திகைக்க வைத்தது.

”எனக்கு ஒரு கதை சொல்லு” என்றது குழந்தை. அயன் ராண்டையும், ஐசக் அசிமாவோவ்வையும், ஆதவனையும், அ.முத்துலிங்கத்தையும் எப்படிக் குழந்தைக்குச் சொல்ல?

”எனக்கு கதை எழுதத்தான் தெரியும் சொல்லத் தெரியாது” என்றேன். குழந்தை கேலியாகச் சிரித்தது. எங்கிருந்தோ ஒரு செய்தித்தாளையும் சின்னப் பென்சிலையும் எடுத்து வந்தது. என் கையில் திணித்து எழுது என்றது

திகைப்புப் போய்விட்டது எனக்குச் சிரிப்பு வந்தது.எப்படி நினைத்த மாத்திரத்தில் கதை எழுத முடியும்? அதிலும் அருகில் நின்று ஒருவர் –அது குழந்தையேயானாலும்- உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எழுத எப்படி முடியும்?

அந்தக் குழந்தையை வாரி மாடியில் அமர்த்திக் கொண்டேன். “நீ எழுது!” என்று சொல்லி அதன் பிஞ்சு விரல்களிடையே பேனாவைச் செருகி, என் கையால் பிடித்துக் கொண்டு ’அ’ என்று எழுதினேன், அ அதற்கு கஷ்டமாக இருந்திருக்க வேண்டும். எத்தனை வளைவு. எத்தனை சுழிப்பு என்பதைப் போல் அது நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தது. ‘ப’ என நான் எழுத்தை எளிமைப்படுத்தினேன். இரண்டு நிமிடம் மடியில் இருந்தது. பின் இறங்கி நடந்தது. ஒரு கையில் பேனாவும் இன்னொன்றில் காகிதமுமாக அம்மாவை நோக்கி நடந்தது.

வீட்டுக்குவந்தவர் பேசத்துவங்கினார், பேச்சு  அந்த காற்றடைத்த பலூனைப் போலக் கவர்ச்சியாக இருந்தது. சரக்கு கம்மி. அலைதல் அதிகம்.சுவாரஸ்யமற்று உம் கொட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த போது ஓடி வந்தது குழந்தை. அதன் அம்மா துரத்திக் கொண்டு வந்தார்.

“ஸாரி அங்கிள். உங்க புஸ்தகத்தில் கிறுக்கி வைச்சுட்டா” என்றார் பதட்டத்துடன்.

குழந்தை மடியில் கொண்டுவந்து கிடத்திய பக்கங்களைப் பார்த்தேன். கறுப்பு மசியில் வட்டங்கள் வரையும் முயற்சியில் கவிதைப் புத்தகம் முழுக்க சுழித்திருந்தது. ஒரு பக்கத்தில் விரைந்தோடும் விஷ்ணு சக்கரம் போல,  அச்சிட்டிருந்த எழுத்துக்கள் எதையும் படிக்க இயலாமல் கறுப்பாகத் தீற்றி வைத்திருந்தது.

என்னைப் பார்த்து “கத” என்றது.

”அட!” கதையா? என்ன கதை சொல்லு! என்றேன்

”ஆன” என்றது

என் கண்ணுக்குப் பழக்கமான யானையை அங்கே காணவில்லை.

”எங்கே?” என்றேன்

அந்தக் கறுப்புக் குழப்பத்தைக் காட்டியது குழந்தை. அதன் மனதில் மறைந்திருக்கும் யானை எனக்கும் புலப்பட்டது

“ஆனை என்ன செய்யுது?” என்றேன்.

தண்ணீரை உறிஞ்சி தையல்காரர் முகத்தில் பீச்சும். ஆற்று முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்டு ஆதிமூலத்தை அழைக்கும் இப்படி பதில் ஏதாவது வரும் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்

“பறக்குது” என்றது.

எதிர்பாராத பதில், சிறிதாய் திகைத்தேன் சிரித்து மலர்ந்தேன்.

ஆனால் அதன் அம்மா ஆத்திரத்தில் கொதித்தார்.அயலவர் வீட்டில் வந்து அவமானப்படுத்தி விட்டாயே என்ற ஆதங்கம் அவரை தின்று கொண்டிருந்தது. ஸாரி அங்கிள் என்றவர் சற்றும் எதிர்பாராமல் அந்தக் குழந்தையின் கன்னத்தில் கையை இறக்கினார்.குழந்தையை அடிக்காதீங்க என்று நான் குறுக்கே புகுந்தேன். ”இங்கேனு இல்லை எந்தப் புஸ்தகத்தை எடுத்தாலும் கிறுக்கி வைக்கிறா!” என்றார் எரிச்சலுடன்.

அடி விழுந்ததில் அதிர்ந்தது குழந்தை.அப்போதும் அழவில்லை. அப்பாவைத் திரும்பிப் பார்த்தது. அவர் அதனை சமாதானப்படுத்த அந்த பலூனை எட்டிப் பிடித்து இழுத்துப் பறித்தார். ஆறுதலாக முதுகைத் தடவி குழந்தையின் கையில் பலூனைக் கொடுத்தார்.

கூரையிலிருந்து பலூனைப் பறிப்பதைப் பார்த்த குழந்தை ”பலூன் பறக்குமா? என்றது. ஆமாம் என நான் தலையசைத்தேன் “நாம?” என்றது

புன்னகைத்தபடியே அது ‘எழுதிய’ புத்தகத்தை எடுத்து நீட்டினேன். ”வேற ஒண்ணு வாங்கிக் கொடுத்திறேன் சார்” என்றார் விருந்தினர்.

”எனக்கு வேண்டாம். குழந்தைக்கு வாங்கிக் கொடுங்கள். அவளுக்கு அது வேர்களும் சிறகுகள்  கொடுக்கும்” என்றேன்.புரிந்ததைப் போலத் தலையாட்டிவிட்டுப் புறப்பட்டார்கள்.ஜன்னலில் இருந்து பார்வை அறைக்குள் திரும்பியது.

அங்கே பறக்க முயன்ற யானையின் சிறகுகள் உதிர்ந்து கிடந்தன

 (ஏப்ரல் 2 சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்)

புதிய தலைமுறை ஏப்ரல் 4 2013

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *