உலகிற்குத் தமிழகம் தந்த ஒளி

இந்தியாவை உலகம் ஏளனத்தோடு பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டிருந்த காலம் அது. விளக்கின் மீது குடத்தைக் கவிழ்த்ததைப்போல இந்து மதத்தின் மீது மூட நம்பிக்கைகள், சித்து வேலைகள், அர்த்தமிழந்த பழக்க வழக்கங்கள், ஜாதிப் பிரிவுகள், அதிகாரச் சூதாட்டம் எல்லம் கவிந்திருக்க… எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. ஒரு காலத்தில் உலகெங்குமிருந்து வந்து கல்வி பயின்ற ஒரு தேசத்தில் அறியாமை தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. நமது கல்வி களவு போயிருந்தது. அந்த நிலையில்- உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்த ஓர் ஒளி, தமிழ்நாட்டில்தான் உருவானது.

ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைவிற்குப் பின் இந்தியா முழுவதும் சுற்றிவிட்டு, விவேகானந்தர் 1892ம் ஆண்டு கன்னியாகுமரிக்கு வந்தார். அவர் மனதில் கேள்விகள் அலைமோதிக் கொண்டிருந்தன. இந்தியாவின் கடந்தகாலப் பெருமையும், நிகழ்கால வறுமையும் அவர் மனதில் வந்து போயின. எதிர்காலம் என்ன என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்து நின்றது. உட்கார்ந்து யோசித்தால், ஒருவேளை பதில் கிடைக்கலாம். குமரிக் கடலில் குதித்தார். நீந்தினார். இந்தியாவின் இறுதிப் புள்ளியாக இருந்த பாறை மீதேறி அமர்ந்தார். மூன்று பகல், மூன்று இரவுகள். தியானத்தில் ஆழ்ந்தார். குளிர் காற்றும் கொந்தளிக்கும் அலைகளும் அவரை அசைக்க முடியவில்லை.

1892ம் ஆண்டு டிசம்பர் 24 முதல் டிசம்பர்  26 வரை அவர் கன்னியாகுமரியில் மேற்கொண்ட தியானத்தில் தெளிவு பிறந்தது. இந்தியாவிற்குப் புத்துயிர் அளிக்கும் திட்டம் அவர் மனதில் உருவாயிற்று .இந்தியா உலகிற்கு அளிக்கும்  என்று பாரதி உறுதிபட ஓங்கிச் சொன்னாரே, அந்த நன்முறை தென் கோடித் தமிழகத்தில் உதயமாயிற்று. இமயமலையில் அல்ல, குமரி முனையில் உருவானது ஒரு புதிய யுகம்!  

கன்னியாகுமரியிலிருந்து சென்னை வந்தார் விவேகானந்தர்… 1893ம் ஆண்டு புதிதாப் பூத்திருந்தது. ‘எனது நண்பர்கள்’ என அன்போடும் பெருமையோடும் விவேகானந்தர் குறிப்பிடும் சென்னை இளைஞர்கள் அப்போதுதான் அவருக்கு அறிமுகமானார்கள். யார் அவர்கள்?

அடையாறு தியாசபிகல் சோசைட்டியில் தங்கியிருந்த நண்பரை பார்க்கப் போயிருந்தார் அந்த டாக்டர். அங்கு அமெரிக்கர் ஒருவர், ஓர்  அறையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். குப்பை என்று சில காகிதங்கள் எரிப்பதற்காக மூலையில் குவிக்கப்பட்டிருந்தன. அதில் ஒருவரின் படமும் இருந்தது. ‘இவர் ஒரு மகான், இவர் படத்தை   நீங்கள் இப்படித் தூக்கிப் போடக் கூடாது’ என்று அந்த அமெரிக்கரைக் கடிந்து கொண்ட டாக்டர், அந்தப் படத்தை எடுத்து வந்து கண்ணாடி போட்டு தனது வீட்டில் மாட்டி வைத்துக் கொண்டார். விவேகானந்தரை முதல் முறையாக வீட்டிற்கு அழைத்தபோது, டாக்டர், தனது வீட்டில் மாட்டியிருந்த படங்களை அவருக்குக் காண்பித்துக் கொண்டே வந்தார். அடையாறில் கிடைத்த படத்தைப் பார்த்ததும் விவேகானந்தர் அப்படியே நின்றுவிட்டார். அவர் கண்ணில் இருந்து நீர் பெருகுகிறது. கூட இருந்தவர்களுக்கு ஏன் என்று புரியவில்லை. என்ன என்ன என்று அவரைக் கேட்கிறார்கள். ‘இவர்தான் என் குரு. ஸ்ரீராமகிருஷ்ணர்’ என்கிறார், விவேகானந்தர் உணர்ச்சி பொங்க. அதுவரை பலருக்கு அவரின் குரு யார் என்று தெரியாது. அவரிடம் கேட்கும் போதெல்லாம்,  ‘நான் அவரின் சிறந்த சீடன் அல்ல, அவர் பெயரைச் சோல்லும் தகுதி எனக்கில்லை’ என்று மறுத்து விடுவாராம்.

அந்த டாக்டர்தான், டாக்டர். நஞ்சுண்டராவ். ஆனி பெசண்ட் போன்ற பிரபலங்களுக்கும் அதே நேரம் ஏழைகளுக்கும் மருத்துவம் செய்தவர். தனது வீட்டை மாணவர் இல்லத்திற்காகக் கொடுத்தவர். அந்தக் காலத்திலேயே, ‘கவிக்குயில்’ சரோஜினிக்கும் கோவிந்தராஜூ நாயுடுவிற்கும் கலப்புத் திருமணம் செய்து வைத்து, ஜாதி மறுப்புத் திருமணங்களை ஆதரித்தவர். ‘பிரம்ம வாதின்’,‘பிரபுத்த பாரதா’ போன்ற பத்திரிகைகளை வெளியிட்டவர்.

மற்றொருவர், ‘கிடி’ என்று விவேகானந்தரால் செல்லமாக அழைக்கப்பட்ட சிங்காரவேலு முதலியார். கணித மேதை ராமானுஜத்தின் குரு..இன்னொருவர் ரங்காச்சாரி. வேதியியல் பேராசிரியர். அதே சமயம் வடமொழியில் வல்லுநர்.ராமனுஜரின் கீதை உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

இவர்களோடு தமிழின் ஆரம்பகால நாவல்களில் ஒன்றான கமலாம்பாள் சரித்திரத்தை எழுதிய ராஜம் ஐயர், மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிலிகிரி ஐயங்கார், விவேகானந்தரால், ‘ஜிஜி’ என்றழைக்கப்பட்ட   நரசிம்மாச்சாரியர் என்று சிலர், ரஹமத் பாக் என்ற வீட்டில் விவேகானந்தரைச் சந்தித்தனர்,

இவர்களை அழைத்துச் சென்றவர் அளசிங்கப் பெருமாள்.  பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர். ‘வாலிபராகிய எங்களையெல்லாம் நடத்துவதற்குத் தகுந்த தலைமை சென்னையில் இல்லையே?’ என பாரதியார் கேட்டபோது, ‘அழகியசிங்கப் பெருமாளிருக்கிறார்’ என்று நிவேதிதா தேவியால் அடையாளம் காட்டப்பட்டவர். ‘இந்தியா’ பத்திரிகை துவக்கப்படுவதற்கு மூலகாரணமாக இருந்தவர்களிலே ஒருவர். ‘விவேகானந்தர் யாரோ ஒரு சந்நியாசியாக வந்து, தென்னிந்தியாவில் சஞ்சரித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருடைய மகிமையைக் கண்டுபிடித்து நாட்டிற்கெல்லாம் பெருமை தேடி வைத்தவர் ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாளே’ (இந்தியா 15.5.1909)  என்று ஆணி அடித்த மாதிரியாக அழுத்தம் திருத்தமாக எழுதுகிறார் பாரதியார். 

அளசிங்கரும் அவரது நண்பர்களும் விவேகானந்தருடன் மெரினா கடற்கரையில் விவாதித்துக் கொண்டே நடப்பது வழக்கமாயிற்று.

அமெரிக்காவில் நடக்கவிருந்த அனைத்து சமயப் பேரவைக் கூட்டத்திற்கு   (Parliament of World Religions) சரியான ஒருவரை அனுப்பி, இந்து மதத்தின் உண்மையான  பெருமையை உலக அரங்கில் எடுத்துச் சோல்லவேண்டும், அதன் மீது அப்போது பொழியப்பட்டு வந்த அவதூறுகளைத் தூள் தூளாக்க வேண்டும் என்ற ஓர் தவிப்பு, அளசிங்கருக்கு இருந்து வந்தது.

ஒருநாள் உரையாடலின்போது, விவேகானந்தர் அமெரிக்கா சென்று, அனைத்து சமயப் பேரவையில் பங்கேற்க வேண்டுமென்ற தன் விருப்பத்தை வெளியிட்டார் அளசிங்கர். விவேகானந்தர்,’ தேவியின் திருவுள்ளம் அதுவானால் அப்படியே நடக்கட்டும்’ என்றார் விவேகானந்தர் சிரித்துக் கொண்டே..

அளசிங்கர் உற்சாகமாக பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய முனைந்தார். பணத்திற்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. இரண்டு அரசர்கள் உதவி அளிப்பதாகச் சோல்லியிருந்தபோதும் விவேகானந்தர், பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெற வேண்டும் என விரும்பினார். ‘நான் பேரவையில் பங்கேற்க வேண்டும் என்பது தெய்வத்தின் விருப்பம் என்றால், நான் யாருக்காகப் போராடுகிறேனோ அந்த மக்கள் பணம் கொடுப்பார்கள்’ என்று சொன்னார் சுவாமிஜி.

இளைஞர்கள் களம் இறங்கினார்கள். நன்கொடை கமிட்டி அமைத்து, நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால், மக்களில் பலருக்கு இதில் ஆர்வமில்லை. எங்கேயோ இருக்கும் அமெரிக்காவிற்குப் போ ஏன் இந்து மதத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்றார்கள். சிலர் நல்ல காரியம்தான். ஆனால், நான் உதவும் நிலையில் இல்லை என்று கைவிரித்தார்கள். இன்னும் சிலர், துறவிக்கு எதற்குப் பணம் என்றார்கள். சிலர், ஏளனங்கள், ஏமாற்றங்கள், அலட்சியங்கள், ஊக்கமிழக்கச் செயும் வார்த்தைகள் இவைகளுக்கு நடுவே அழகியசிங்கரும், அவரது நண்பர்களும் திரட்டிய தொகை 500 ரூபா. அன்று அது பெரிய தொகைதான். ஆனால், அமெரிக்கா செல்ல அது போதாது.

நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த விவேகானந்தர் மனதில், தெய்வத்தின் விருப்பப்படிதான் இந்தக் காரியத்தைச் செகிறோமா அல்லது எனது சோந்த விருப்பத்திற்காகச் செய்கிறேனா எனக் கேள்வி எழுந்தது. ஒரு கட்டத்தில், ‘இளைஞர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து, இனி நிதி திரட்ட வேண்டாம், திரட்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் அல்லது ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்து விடுங்கள்’ என்றார். அழகியசிங்கருக்கு ஏமாற்றம். மனதுக்குள் கனமான கல்லாக வருத்தம் வந்தமர்ந்தது. ஓர் இரவு. விவேகானந்தர் படுத்திருக்கிறார். கனவில் அவரது குரு ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றி கடலலைகள் மீது நடந்தபடியே, பின்னால் திரும்பி விவேகானந்தரைப் பார்த்து ‘வா, வா’ என்று அழைக்கிறார்.

விவேகானந்தரின் மனம் தெளிவடைந்தது. தான் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது குருவின் அருளாணை என்ற முடிவுக்கு வருகிறார். அழகியசிங்கரிடம் அதைத் தெரிவித்தபோது அவர் அடைந்த   மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால், மறுபடியும் பணம் திரட்டுவது எளிதான காரியமாக இல்லை. வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்த பின் மீண்டும் போக் கேட்டால், எப்படி நம்பிக் கொடுப்பார்கள். உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியமும், இராமநாதபுர அரசரும் தலா 500 ரூபா கொடுக்கிறார்கள். பெரிய மனிதர்கள் கொடுப்பதைப் பார்த்து மற்றவர்களும் கொடுக்க…  4000 ரூபாய் வரை நிதி திரள்கிறது.

அளசிங்கர் வேறு சில முக்கியமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். விவேகானந்தருக்கு ஒரு கடிகாரம் வாங்கிப் பரிசளித்தார். மேலை நாட்டுப் பாணியில் உடைகள் தைக்க, டெய்லரிடம் அழைத்துப் போனார். 100 முகவரிச் சீட்டுக்கள் அச்சடிக்க வேண்டும் என்கிறார். அப்போதுதான் சுவாமி தன் பெயரை, ‘விவேகானந்தர்’ என்று அச்சிடுமாறு கூறுகிறார். அதுவரை அவரது பெயர் சச்சிதானந்தர்.

விவேகானந்தர் 1894ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி பம்பாயில் கப்பலேறுகிறார். அப்போது அவரிடம் அளசிங்கரால், திரட்டிய நிதியில், டிக்கெட் செலவு போக ரூ 2805 கொடுக்க முடிகிறது. அவர் கண்ணீர் பொங்க விவேகானந்தரின் காலில் விழுகிறார். குழந்தைபோல விசும்பி அழுகிறார். விவேகானந்தர் அவரை அணைத்துக்கொண்டு தேற்றுகிறார். உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும் அவரால் அப்போது அதிகம் பேச முடியவில்லை.

பின்னாளில் விவேகானந்தர் அளசிங்கருக்கு எழுதுகிறார்: ‘சுயநலம் ஏதுமின்றி எனக்காக நீ செய்த வீரப் பணிக்காக, உனக்கும் ஜிஜிக்கும், சென்னை அன்பர்களுக்கும் நான் எவ்வளவு கடமைப்பட்டுள்ளேன் என்பதைச் சொல்லித் தீர்க்க முடியாது. நீங்கள் அனைவரும் என்ன சாதிக்க முடியும் என்பதை இப்போது தெரிந்து கொண்டீர்கள்.

ஆம், சென்னை இளைஞர்களே, நீங்கள்தான் உண்மையில் அனைத்தையும் செது முடித்தவர்கள். நான் முன்னணியில் இருந்தேன் அவ்வளவுதான்.’

———-  

இது விவேகானந்தர் இந்தியா திரும்பிய 125ஆம் ஆண்டு

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these