மகிழ்ச்சி

காலத்தை அளக்கிற கடிகாரப் பெண்டுலம் மாதிரி என் ஜன்னலுக்கு வெளியே ஆடி ஆடிப் போய்க் கொண்டிருக்கிறான் அந்த இளைஞன், தள்ளாட்டம் அதிகமாகவே இருந்தது. மதுக்கடையிலிருந்து செல்பவனாக இருக்க வேண்டும்.

ஈரத்தில் விழுந்த துணி கனமேறுவதைப் போல இதயத்தில் ஒரு கனம் வந்தமர்ந்தது.ஜன்னலை மூடிவிட்டு மடிக் கணினியைத் திறந்தேன். முகநூலில் விவகாரம் ஒன்று விரிந்து கிடந்தது. மதுவிலக்கைப் பற்றி மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

”என் சந்தோஷத்தில் தலையிட என் அப்பாவிற்கே உரிமை இல்லை, அரசாங்கத்திற்கேது அந்த உரிமை?” எனக் கவிஞர் ஒருவர் காட்டமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இளமை எழுப்புகிற இந்தக் குரல் என் நண்பனை நினைவுக்குக் கொண்டு வந்தது.கல்லூரி காலத்து சிநேகிதன். (பெயர் வேண்டாமே, அவனை ‘அவன்’ என்றே அழைப்போம்).  அவனும் அன்று ஏறத்தாழ இதே வார்த்தைகளைத்தான் இறைத்தான்.

எல்லா மத்தியதர வர்க்கத்து மாணவனைப் போலவும் அவன் மகிழ்ச்சியோடும் சற்றே பெருமிதத்தோடும்தான் கல்லூரிக்குள் கால் எடுத்து வைத்தான். எனக்குத் தெரிந்தவரை அவன் சந்தோஷத்திற்கு அதுவரையில் ஏதும் ஊறு நேர்ந்ததாகச் சரித்திரம் இல்லை.

அப்பா கண்டிப்பனவர் என்பது உண்மைதான். ஆனால் அன்பானவரும் கூட என்பதை மறுப்பதற்கில்லை. அம்மா பக்தியில் முற்றியவர். வாரத்தில் பாதிநாள் விரதம் என்ற பெயரில் வயிற்றைக் காயப் போட்டு வந்தார். இருவருடைய கனவும் பிரார்த்தனையும் அவன் மார்க்குகள் நிறைய வாங்கி பேர் பெற்ற கல்லூரிக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதாகவே இருந்தது. அவர்களுடைய கண்டிப்பும், பிரார்த்தனையும் அதன் பொருட்டே. ஆசிரியர்களும் கூட அவன் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதனால் அவர்களும் அவ்வப்போது அவனது கடமையை நினைவூட்டுவதுண்டு.

அவர்களை அவன் அதிகம் ஏமாற்றிவிடவில்லை.முதல் மாணவனாகத் தேறவில்லை என்றாலும் மதிப்பெண்கள் மோசமில்லை.நல்ல கல்லூரியே கிடைத்தது.முதல் மூன்று மாதங்கள் முக்கியமாய் ஏதும் நடந்துவிடவில்லை. அறிமுகங்களும் கை குலுக்கல்களும், அவ்வப்போது அவனது அவன் கிராமத்து வாழ்க்கை பற்றிய ஏளனங்களுமாக நாட்கள் நகர்ந்தன. அப்புறம் ஏதோ ஒரு பார்ட்டி. அங்கேதான் அந்த பூதத்தோடு அவன் கை குலுக்கினான்.

முதலில் ஒரு தயக்கம் இருந்தது. பீர் எடுத்துக் கொள், அது அப்புராணி, ஆளை ஒண்ணும் பண்ணாது, வாசனை கூட வராது  என்று அனுபவஸ்தர்கள் ஆலோசனை சொன்னார்கள். ஆர்வமும் தயக்கமும் அவனைப் பந்தாடிக் கொண்டிருந்த போது, பட்டிக்காட்டுப் பையன் என்ற ஏளனம் சூழ்ந்தது. நானும் நவீனமானவன் எனக் காட்டிக்கொள்ளும் ஆசை உந்தியது. அந்தத் தங்க நிறத் திரவத்தில் அவன் தடுக்கி விழுந்தான்.

அதுவரை அதிர்ந்து பேசியிராத அவனிடம் உரத்துப் பேசுகிற உற்சாகம் கிளம்பிற்று. மெலிதான மிதப்பாக இருந்தது. அவன் இதுவரை எதிர் கொண்டிராத உணர்வுகள் அவனைச் சூழ்ந்து கொண்டன. அவை அவனுக்குப் பிடித்தன. அதை சந்தோஷம் என அவன் அர்த்தப்படுத்திக் கொண்டான்.

அடுத்த விடுமுறை நாளில் அவன் அதை நாடிப் போனான். அப்புறம் அவ்வப்போது என அது மாறிற்று. அவ்வப்போது அடிக்கடி என மாறிய போது அறைக்கே சரக்கை வாங்கி வந்து வைத்துக் கொள்ள ஆரம்பித்தான். போட்டது போதவில்லை எனத் தோன்றிய போது அளவு கூடிற்று.

ஆளே மாறிப்போனான்.தேக்குப் போத்து போல கல்லூரிக்கு வந்தவன் ஆங்காங்கே சதை போட்டு அசிங்கமான பீப்பாய் போலானான். அப்பாவிற்குப் பயந்து கொண்டு ஊருக்குப் போவதைத் தவிர்த்தான். அதற்காகப் பல நூறு பொய்கள் சொன்னான்.அடிக்கடி பணப் பிரச்சினை ஏற்பட்டு கடன் வாங்க ஆரம்பித்தான். அவன் நெருங்கி வந்தாலே கடன் கேட்க வருகிறான் என எண்ணிய நண்பர்கள் விலகிப் போக ஆரம்பித்தார்கள். அல்லது அலட்சியப்படுத்தினார்கள். கடன் கிடைக்காது போன போது திருடவும் முயற்சித்தான். பிடிபட்டான்.அடிபட்டான். அப்போது அவனுக்கு ஆதரவாகப் பேச யாருமில்லை. அனுதாபத்தோடு பேசக் கூட ஆளில்லை. படிப்பில் மனதைச் செலுத்த முடியவில்லை. பரிட்சை கூடத்தில் போய் அமர்ந்தால் படித்தது நினைவுக்கு வரவில்லை மூளை மரத்து விட்டதா, இல்லை மழுங்கி விட்டாதா எனக் குழம்பினான்.

சந்தோஷம் என நம்பி அவன் தொட்ட சாராயம் அவன் அழகைச் சாப்பிட்டது. அவனைப் பொய்யனாக்கியது. திருடத் தூண்டியது . உறவிலிருந்து ஒதுங்கச் செய்தது. படிப்பை பலி கேட்டது.’அவன் கிடக்கான் குடிகாரன்’ என்ற அவப்பெயரை சூட்டியிருந்தது

ஓவ்வொரு முறை அவமானப்படும் போதும் இன்றோடு இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என மனதில் ஓர் வைராக்கியம் வந்து மறையும். ஆனால் அது காற்றில் எழுதிய கல்வெட்டு. ஓடுகிற நீரில் எழுதிய உறுதி மொழி. அடுத்த நாளே உடம்பு அடம் பிடிக்கும். உறுதி மொழி கரைந்து போகும். கடையை நோக்கிக் கால்கள் நடக்கும்.

அவனைத் தின்று கொண்டிருப்பது தீராத மதுப்பழக்கம் அல்ல. ஆல்ஹாலிசம் என்ற குடிநோய் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.வித்தியாசம் என்ன? குடிநோய்க்கு ஆளானவர்கள் அளவிற்கு அதிகமாகக் குடிப்பார்கள். அடிக்கடி குடிப்பார்கள், அவமானங்களைச் சந்தித்த பிறகும் அதைக் கைவிட மறுப்பார்கள். ஆனால் அடி மனதில் அதில் இருந்து மீள நினைப்பார்கள்.

அவனை மதுவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் அந்தப் பள்ளத்தில் தாங்கள் விழுந்து விடாமல் கவனமாகத் தாண்டிப் போனார்கள். பலருக்குப் பிளேஸ்மெண்டிலேயே வேலை கிடைத்தது. ஐந்தாறு பேர் அமெரிக்காவிற்குப் படிக்கப் போனார்கள். அரியர்ஸ் வைத்துப் பாஸ் செய்ததால் அவனுக்கு உடனடியாக வேலை கிடைக்கவில்லை. சிறிது காலத்திற்குப் பின் ஒரு சேல்ஸ்மேன் வேலை கிடைத்தது. போலியான புன்னகை. பொய்யான வாக்குறுதிகள். நெருக்கும் இலக்குகள். சவுக்கையும் இனிப்பையும் காட்டிச் சொடுக்குகிற அதிகாரிகள். அவனுக்கு வாழ்க்கையே அபத்தமாகத் தோன்றியது  தனிமை அவனைத் தின்ன ஆரம்பித்த போது மறுபடியும் மதுவைத் திறந்தான்.  

புனேயில் ஒரு பொருட்காட்சி. இவனைப் போகச் சொன்னார் மானேஜர். மனமில்லை. ஆனால் மறுப்புச் சொல்ல முடியாது. போனான். பெங்களூரிலிருந்து இன்னொரு சகாவும் வந்திருந்தான்.சின்னப் பையன். சேர்ந்து சில மாதங்களே ஆகியிருந்தது  கண்காட்சியின் கடைசி நாள். வாரம் முழுதும் யார் யாரோ வந்தார்கள். விசாரித்தார்கள். விசாரணைகள் வியாபாரத்தில் முடியவில்லை. மனம் சோர்ந்து முகம் கூம்பி உட்கார்ந்திருந்த சகாவைப் பார்த்தான். இதற்கா இடிந்து போனாய், சேல்ஸ்மேன் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என் ஆறுதல் சொல்லத்தான் அருகில் போனான்.

பேசப் பேச அவன் தன்னுடைய இன்னொரு பதிப்பு எனப் புரிந்தது. ஆல்கஹாலிசத்தில் அகப்பட்டுக் கொண்டு மீண்டு வந்தவன்.எப்படி மீண்டாய்?, எப்படி? எப்படி? என இவன் கேட்டபோது இவனை அந்தக் கூட்டத்திற்க்கு அழைத்துப் போனான் அரை நம்பிக்கையோடுதான் இவன் போனான்

ஆல்ஹாலிக் அனானிமஸ் என்று அறையில் ஒரு பேனர் இருந்தது அந்த அறையில் இருபது முப்பது பேர் இருந்தார்கள். எல்லோரும் இவனைப் போல குடிநோய்க்குப் பலியாகி மீண்டவர்கள். ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். எதையும் அவர்கள் உபதேசிக்கவில்லை. யாரையும் குற்றம் சொல்லவில்லை, எவர் மீதும் வசைபாடவில்லை. எந்தத் தவற்றையும் நியாயப்படுத்தவில்லை 

இவனையும் பேச அழைத்தார்கள். அந்தரங்கம் எல்லாவற்றையும் அவிழ்த்து விடக்கூடாது என்ற கவனத்துடன் இவன் பேச ஆரம்பித்தான். ஆனால் பேசப் பேச உள்ளே பூட்டிவைத்தது உடைத்துக் கொண்டு வெளியே வந்தது. அவர்கள் இவனை ஏளனமாகப் பார்க்கவில்லை. அலட்சியமாகப் பேசவில்லை. அவர்கள்ன் பார்வை இவனைப் புரிந்து கொண்டது போலிருந்தது.

அன்று நேர்ந்தது அந்தத் திருப்பம். இவன் மெல்ல மெல்ல மீண்டான். அண்மையில் அவனைப் பார்த்தேன். அவனுக்கு சந்தோஷமாக இருக்கும் என நினைத்து ஏதாவது சாப்பிட விரும்புகிறாயா எனக் கேட்டேன். “நிறுத்திப் பத்து வருடமாகிவிட்டது” என்றான். ”நிஜமாகவா” என்றேன், ம் என்றான் புன்னகை மாறாமல். வீட்டிற்குக் கூட்டிப் போனான். இரண்டு பெண் குழந்தைகள், மனைவி. எல்லோர் முகத்திலும் நிம்மதி நிழலிட்டிருந்தது. பூச்சரம் போல் ஒரு புன்னகை உதட்டில் ஒளிந்திருந்தது.

விடை கொடுக்க வெளியே வந்த போது சொன்னான். ”எது சந்தோஷம் என எனக்குப் புரிந்து விட்டது”

புதிய தலைமுறை மார்ச் 21 2013

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *