பிரம்பைக் கீழே போடுங்கள், ப்ளீஸ்!

 

பூக்கள் ஊர்வலம் போவதைப் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்க்கிறேன். அநேகமாக ஒவ்வொரு நாளும் என் ஜன்னலுக்கு வெளியே கண்சிரிக்க, வாய் ஒலிக்க டிசம்பர் கனகாம்பரங்களைப் போல நீலமும் வெள்ளையுமாகப் பத்துப் பனிரெண்டு குழந்தைகள் பள்ளிக்குப் போகும். பணக்காரப் பள்ளி அல்ல என்பதைச் சீருடைகள் சொல்லிவிடும்.

காமராசர் காலத்தில் சீருடை என்ற வழக்கம் பள்ளிகளுக்குள் அடியெடுத்து வைத்தது என்று ஞாபகம். காலம் நிச்சயமாகத் தெரியாவிட்டாலும் காரணம் இன்னும் நினைவில் இருக்கிறது.அரசு முடுக்கிவிட, அதிகாரிகள் முனைப்புக் காட்ட, ஆசிரியர்கள் வரவேற்க, அடித்தள மக்களின் குழந்தைகள் படிப்பதற்குப் பள்ளிக்கு வந்த காலம் அது. பள்ளிக்குள் இருக்கும் போது பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்கும் ஏழை வீட்டுச் செல்வங்களுக்கும் இடையே வித்தியாசம் தெரியக் கூடாது, அப்படி வேறுபாடு தெரிய வந்தால் அந்த இளம் இதயங்களில் தாழ்வு மனப்பான்மை ஏற்படும், கற்பதில் கவனம் சிதறும் என்று சொல்லப்பட்டது. நேர்மையான அந்த நியாயத்தின் காரணமாக எங்கள் உடுப்புக்கள் எல்லாம் , வண்ணத்திலும், வடிவத்திலும், துணியின் தரத்திலும்  ஒரே மாதிரி இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டன. ‘யூனிஃபார்ம்’ என்ற சொல் அதன் உண்மையான அர்த்தத்தை அன்று கண்டது

காகிதத்தைத் தின்னும் கரையான் போலக் காலம் அந்த வாதங்களைத் தின்றுவிட்டதோ? இன்று உடையைக் கொண்டு ஒரு குழந்தை பயில்வது உயர்வகுப்பினர் பயிலும் தனியார் பள்ளியா அல்லது எளியவர்களால் எட்டிப் பிடிக்க முடிந்த அரசுப் பள்ளியா என அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

என் ஜன்னலுக்கு வெளியே ஊர்வலம் செல்லும் குழந்தைகள் எளிய பள்ளியின் குழந்தைகள். ஏழை வீட்டுப் பிள்ளைகள் என்றாலும் வறுமை அவர்களது புன்னைகையைத் தின்றுவிடவில்லை. குன்றாத உற்சாகத்தோடு சீண்டிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் அவர்கள் கடந்து போவார்கள்.

அன்று அவர்கள் என் வீட்டருகே நின்றார்கள். இயற்கை செய்த இலக்கணப் பிழை போல ஒரு வண்ணத்துப் பூச்சி  வழி தப்பி வந்து இரும்புக் கம்பியின் மீதமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தது.அந்தக் குழந்தைகள் அதன் அருகே வந்து பார்த்தன. அந்த வயதில் எதுதான் ஆச்சரியும் இல்லை! அந்தக் குழந்தைகளில் ஒருவன் அந்த ஆச்சரியத்தை அவனுடையதாக்கிக் கொள்ளும் ஆவலில் அதைப் பிடிக்க அருகே வந்தான்.

’ப்ச்’ என்று அவன் உடையில் ஒரு அடி விழுந்தது. எங்கள் குடியிருப்பின் காவலர், குச்சி ஒன்று கையில் கொண்டு, “போடா! என்ன வேடிக்கை?” என்று அவனை விரட்டிக் கொண்டிருந்தார். அவர் கையில் இருந்த ’செங்கோல்’ இன்னொரு அடி இருக்கிறது உனக்கு என மிரட்டிக் கொண்டிருந்தது.

குழந்தைகள் என்றால் எவர் வேண்டுமானாலும் அவர்களை அடிக்கலாம் என்ற வழக்கம் எங்கிருந்து வந்தது? அதிலும் அந்த அடிகள் அவர்களைத் திருத்துவதற்காக என்ற நியாயம் எங்கிருந்து முளைத்தது?

வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்த வழக்கம் என்றார் பீட்டர் நியூவெல். குழந்தைகளுக்கெதிரான  வன்முறைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் அவர் சில ஆண்டுகளுக்கு முன் யூனிசெஃப் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேச தில்லி வந்திருந்தார். உலகெங்கும் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தை காலனிகள் மூலம் நிறுவியிருந்த காலத்தில்தான் அவர்களது கல்வி முறை பல தேசங்களுக்கும் பரவியது.  அவர்களது பள்ளிக் கல்வி அமைப்பில் (School system) தண்டனை என்பது அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர்களின் பொதுச்சட்டத்தில் ’ஒழுங்கின் பொருட்டு நியாயமான தண்டனை’ என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இந்தச் சட்டத்தை இந்தியா உள்பட 70 நாடுகள் ஏற்றுக் கொண்டன. அடிமைச் சமூகத்தில் ’ஒழுங்கை’ காப்பாற்ற கொடுமையான தண்டனைகள் என்பது சகஜமான ஒன்று. இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த போது அறிமுகமான வழக்கம் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாகி விட்டது என்றார் யூவெல்.

அவரது வழக்கம் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. என்றாலும் எனக்குள் கேள்விகள் ஓயவில்லை. ஆங்கிலேயர் வருகைக்கு முந்திய தமிழ்ச் சமூகத்தில் ‘அடி-உதை’ வழக்கம் இல்லாமல் இருந்ததா? ஆம் என்றால் ‘கடிதோச்சி மெல்ல எறிதல்’ போன்ற சொற்றொடர்கள் எங்கிருந்து பிறந்தன? அன்றும் தமிழ்ச் சமூகம் அடிமைச் சமூகம்தான், ஆனால் அன்னியர்களிடம் அல்ல, அரசர்களிடம் என்று உள்ளத்திலிருந்து இன்னொரு குரல் சொன்னாலும், இறுதி விடை இதுதான் என அமைதி கொள்ளவில்லை நெஞ்சம்.

இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் கல்வியாளர்கள் செய்ய வேண்டியது. என்றும் மாணவனாக இருக்க விரும்பும் என்னுடைய கவலையெல்லாம் குழந்தைகள் பற்றியது. ‘திருத்துவதற்கு’ என்று சொல்லி அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் – நாவினாற் சுட்ட வடுக்களும் வன்முறைதான் –  உள்ளத்தில் ஒரு ஊனத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அந்த ஊனம் அவர்களது வாழ்நாள் முழுக்க அவர்களை முடக்கிவிடுகிறது. தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக, அதிகாரத்தைக் கண்டு அஞ்சுபவர்களாக, அநியாயங்களைக் கண்டு சற்றும் சலனமடையாதவர்களாக, நமக்கேன் வம்பு என்று நழுவி விடுபவர்களாக அவர்களை ஆக்கி விடுகிறது. இன்னும் சிலர் வன்முறைதான் வாழ்க்கைக்குப் பயன் தரும் நன்முறை என்று முரடர்களாக முற்றிப் போவதும் உண்டு.

இதைவிடப் பெருங் கொடுமை இந்தக் குழந்தைகள் தங்களை மாய்த்துக் கொள்வது.

மூன்றாண்டுகளுக்கு முன், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் தமிழ்நாட்டில் ஒரு பொது விசாரணையை மேற்கொண்டது. எல்லா இடங்களையும் விட்டுவிட்டுத் தமிழ் நாட்டில் அந்த விசாரணை நடக்கக் காரணம் என்ன? தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக அளவில் புகார்கள் வந்திருந்தன என்று அமைப்பாளர்கள் சொன்னார்கள். 2003-2008க்கு இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் 91 பள்ளிக் குழந்தைகள் தங்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகள் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார்கள். உயிரைக் கொடுத்து அவர்கள் ஒரு உண்மையச் சொல்லிச் சென்றார்கள். ஆனால் ஊமைகளாக ஒடுங்கி அடி வாங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் பல என்றார்கள்.

அண்மைக்காலமாக அடி உதையை நம்பும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று நண்பர்கள் சொல்கிறார்கள். நான் அவர்களை நம்பவே விரும்புகிறேன்.சென்ற ஆண்டு நிறைவேற்றப்பட்ட கலவியைக் கட்டாயமாக்கும் சட்டமும் வகுப்பறையில் வன்முறையைத் தடை செய்கிறது.அதுவும் ஒரு ஆறுதல்தான்.

ஆனால் அடுத்தடுத்து நாளிதழ்களில், வகுப்பறை வன்முறைகள் காரணமாகப் பிஞ்சுக் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளை வாசிக்கும் போது என் நம்பிக்கைகள் நடுக்கமுறுகின்றன

பிரம்பால் பின்னி எடுத்த ஆசிரியர்களைவிட அன்பால் அள்ளிக் கொண்ட ஆசிரியர்களே நினைவில் நீண்ட காலம் தங்கி நிற்கிறார்கள். எனவே ஆசிரியர்களே,

பிரம்பைக் கீழே போடுங்கள், ப்ளீஸ்!

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these