ஒரே வானம்

யானை வந்தது முதலில்; அப்புறம் கலைந்து போனது; குதிரை முகத்தில் ஒருவன் கொஞ்ச தூரம் போனான். பானை வெடித்து மரமாச்சு. பாட்டன் புரண்டு மல்லாந்தான்.மணலாய் இறைந்தது கொஞ்சம். கடலாய் அலைந்தது கொஞ்சம். கணத்தினில் மாறிடும் மேகம். உனக்குள் எத்தனை ரூபம்?

என் ஜன்னலுக்கு வெளியே கலைந்தும் கூடியும் அலைந்த மேகங்கள் என் மனதில் கவிதைச் சித்திரங்களை எழுதிப் பழகின.இன்னும் இரண்டு மணி நேரமாவது நான் இந்த மேகங்களின் சிநேகத்தோடுதான் சேர்ந்து பயணித்தாக வேண்டும். விமானம் சென்னை சேர இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது.

மேகங்கள் எத்தனை வடிவங்களை வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் வானம் ஒன்றுதான். மரம் ஒன்று கிளைகள் பல. மண் ஒன்று திசைகள் பல. காற்றொன்று இசைகள் பல. ஊற்றொன்று உருவாகும் நதிகள் பல. ஆகாசம் ஒன்று அதில் முகில்கள் பல

குடும்பத்தைப் போல

எத்தனையோ உறவுகள். ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர். ஓர் இயல்பு. ஒர் உரிமை. ஒரு சில கடமைகள். அவை அனைத்திற்கும் ஆதாரமாய் குடும்பம். தன் எழுத்துக்களில் பெண்ணாகவே பிறப்பெடுக்கும் பேறு பெற்ற லா.ச.ரா.வின் வரிகள் மனதில் ஓடின: “குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம்உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள்.ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும்அதிலேயே தான்……

இலக்கியம் என்ற இனிப்பும் துவர்ப்பும் கலந்த மதுவும் இந்தக் குடும்பம் என்ற பாற்கடலில் இருந்து எழுந்ததுதான் என மனம் சொல்லிற்று. குடும்பம் என்ற அமைப்பைப் பற்றி எழுதப்பட்ட வரிகள், எந்த மொழியில் என்றாலும் எப்படியும் பல லட்சங்கள்  இருக்கும். வியந்தும். விமர்சித்தும், கசிந்தும் சினந்தும் சிரித்தும் சிலிர்த்தும் குடும்பம் குறித்து அந்த வரிகள் ஆயிரம் எண்ணங்களை உதிர்த்திருக்கும். முகில்கள் பல, வானம் ஒன்று.

நாடென்றும் மொழியென்றும் நாம் பிரிந்து கிடந்தாலும் வானம் என்ற ஒரே கூரையின் கீழ் கூடி வாழப் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கும் தேசம் சிங்கப்பூர். அதனால்தான் அவர்கள் வாசிப்போம் சிங்கப்பூர் என்று வருடந்தோறும் நடத்தும் நிகழ்ச்சிக்கு இந்தாண்டின் கருப்பொருளாக உறவுகள் என்பதை எடுத்துக் கொண்டு அதற்கு பொதுத் தலைப்பாக ‘ஒரே வானம்” என்பதைச் சூட்டியிருந்தார்கள்.

நான்கு மொழிகள் பேசும் நாடு சிங்கப்பூர். ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என்ற அந்த நான்கு மொழிகளில் இருந்து கதைகளைத் தேர்வு செய்து அதை மற்ற மூன்று மொழிகளுக்கும் மாற்றி விவாதமும் விருந்தும் படைத்தார்கள். என்னுடைய கதை ஒன்றும் ஆங்கிலம் சீனம் மலாய் என மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகத் தொகுக்கப்பட்டிருந்தது.

கதையாடல்கள் குறித்த உரையாடல்கள் சுவையாகவே இருந்தன. ஆனால் அந்தக் கதைகள் அதைவிடச் சிறப்பாக இருந்தன, ஹஜ் பயணம் புறப்பட இருந்த நேரத்தில் காலமாகிவிடும் கணவர், அவரைக் குறித்த நினைவுகள், பயணத்தைப் பதிவு செய்ய அவர் வாங்கி வைத்திருந்த வீடியோ கேமரா என விரிகிற ஆங்கிலக் கதை மலாய் மொழி பேசும் இஸ்லாமியார்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. வீடியோ கேமிரா போன்ற நவீனத் தொழில் நுட்பக் கருவிகளில் நாட்டமில்லாத மைமோன் ’இனி எதற்கு எனக்கு இந்தக் கேமரா’ எனக் குழந்தை இல்லாத மகள் ஜமீலாவிற்கு அதைக் கொடுத்துவிட எண்ணுகிறார். மகளுக்கோ அந்தக் கருவி மீது ஆசை. அப்போது ஓர் எதிர்பாராத திருப்பம். பதிந்து விட்ட நினைவுகளை மீட்டெடுக்கிற பாத்திரமாக ஆகிவிடுகிறது அந்தக் கேமிரா. நுட்பமும் விரிவும் ஒரு சேரக் கொண்ட அல்ஃபியான் சாத் என்பவரின் ஆங்கிலக் கதை மூலத்தின் நுட்பம் முனை மழுங்கிவிடாமல் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. வீடியோ என்ற கதையில்

என்னைத் தொட்ட இன்னொரு கதை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளரான சூர்ய ரத்னாவின் இறைவனின் குழந்தை. உறவுகளின் எதிர்ப்புகளை மீறிக் கலப்பு மணம் செய்து கொள்ளும் ஒரு பெண்ணின் பார்வையில் கோட்டோவியத்தைப் போலத் தீட்டப்படும் அந்தக் கதை உண்மையில் ஒரு மன வளர்ச்சி குன்றிய குழந்தையைப் பற்றியது,பிறந்த போது ஆண் வாரிசு என இரு குடும்பத்தாலும் கொண்டாடப்பட்ட அந்தக் குழந்தை மனவளர்ச்சி குன்றியவன் என்றதும் எல்லோராலும் புறக்கணிக்கப்படுகிறான். கணவனும் கூடக் கைவிட்டுப் போகிறான். குடும்பம் புறக்கணித்த ஒரு சிறுவனை சமூகம் தூக்கி நிறுத்துகிறது ஒரு சம்பவமாகத் துவங்கிக் குறியீடாக விரியும் ஒரு விளையாட்டின் மூலம் இது உணர்த்தப்படுகிறது. உள்ளத்தைத் தொடும் வார்த்தைகள் வழியே, (கூர் தீட்டப்பட்ட விமர்சனங்களோடும் கூட) கதையை  எடுத்துச் செல்கிறார் சூர்யா.

இன்று எழுதத் தலைப்படுகிற இளைஞர்களின் வார்த்தைகளில் சிறைப்படக் காத்திருக்கிறது ஒரு வானம். அதை வசப்படுத்த அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் வாசிப்பது என்பதை வெறும் வழக்கமாகக் கொள்ளாமல் சுவாசிப்பது என்பதைப் போன்ற இடையறாத இயக்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தன் மொழி, தன் கலாசாரம் தன் தேசம் என்பதைத் தாண்டி அயல் மொழிகளில் என்ன நடக்கிறது என்பதை ஆர்வத்தோடு தேடி வாசிக்க ஆசை கொள்ளுங்கள். எல்லா மொழிகளும் பேசுவது வாழ்க்கை என்ற விசித்திரத்தைத்தான். உலகமயமான பொருளாதாரமும் உங்கள் விரல் நுனிக்கு வந்து விட்ட தொழில்நுட்பமும் எல்லோருக்கும் பொதுவான ஒரு வாழ்க்கையை உருவாக்கி வைத்திருக்கிறது. ஐரோப்பியக் குளிரில் விரல் விறைத்துச் செத்துப் போகிறவனையும், கட்டிடம் கட்ட என அழைத்துச் செல்லப்பட்டு அரேபியாவில் ஆடு மேய்க்க நிர்பந்திக்கப்பட்டவனையும், சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோடில் புகை பிடித்தபடி வாழ்க்கையை எரித்துக் கொண்டிருக்கும் பிலிப்பைன் தேசத்துப் பணிப் பெண்ணையும், கள்ளத் தோணி ஏறி கடலில் திசை மாறி கைதியாகப் பிடிபடுகிற இலங்கைத் தமிழனையும்  ஒரு பொதுவான துக்கம், பொதுவான பசி, பொதுவான வலி, பொதுவான சுரண்டல், பொதுவான கயமை. சூழ்ந்திருக்கிறது. வானம் பொது. அதில் வந்து போகும் மேகங்களின் வடிவங்கள் வேறு வேறு, முகம் மாறும் முகில்கள் போல உங்கள் மனம் கொண்டு அந்த வாழ்வை எழுதுங்கள். உங்கள் வீட்டுக் கதைகளுக்கு ஒரு சில காலம் ஓய்வு கொடுங்கள்.

இன்றையத் தேவை மொழி கடந்த மானுடம் அதுவே ஒளி கொடுக்கும் இனி வரும் தமிழ் இலக்கியத்திற்கு     

புதிய தலைமுறை 25.7.2013  

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *