பழையன புகுதலும்

கடகடவென்று சகடை உருளும் சப்தத்தையும் மீறிக் கேணிவரை கேட்டது குரல். பதற்றமா, மிரட்டலா எனப் பகுத்தறிய முடியாத அவசரம் அந்தக் குரலில் இருந்தது.

“சம்பகம்!”

மாசிலாமணியின் குரல்தான். விறுவிறுவென இழுத்து வாளியை வெளியே எடுத்துப் போட்டாள் செண்பகக் குழல்வாய் மொழி. அந்த அழகிய பெயர்தான் செம்பகமாகச் சுருங்கியிருந்தது. நல்ல வேளை குழலு எனச் சுருங்கவில்லை.

வியர்வையில் முன்நெற்றியில் ஒட்டியிருந்த குழல் கற்றையை விரல்களால் ஒதுக்கிக் கொண்டு முந்தானையில் முகம் துடைத்தபடி வாசலுக்கு ஓடினாள். இரண்டு கட்டு வீடு. இடையே ஒரு நடை. இந்த நீளத்திற்கு ஓடத் தொடங்கினால் தேர் தெற்கு வீதி முக்குத் திரும்பத் திணறுவது போல அவளுக்கு இரைக்கும். நிமிட நேரம் நின்று பின் காலை வீசிப் போட்டு வேகமாக விரைந்தாள்

“இங்கிட்டுக் கிடந்து இரையறேனே, கேக்கலையா?” என்று சின்னதாகச் சீறினார் மாசிலாமணி.

“கேட்டுத்தானே ஓடியாறேன்!” என்றாள் செண்பகம் மூச்சு வாங்கிக் கொண்டே.

“செம்பு எங்கே?”

“தண்ணிக்குள்ளாறதானே கெடந்துச்சி” ஜோடத்தவலைக்குள் எட்டிப் பார்த்தாள். செம்பு இல்லை.

வீட்டுக்குள் நுழையும் முன் மாசிலாமணிக்குக் காலை அலம்பிக் கொண்டாக வேண்டும். தண்ணீரைக் கோரிக் கோரி ஊற்றிக் கொண்டு ஒரு காலை இன்னொன்றின் மீது வைத்து அரக்கி அரக்கித் தேய்த்துக் கழுவிக் கொண்டுதான் அவர் வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பார். காலை மட்டுமல்ல, செருப்பையும் தண்ணீர் ஊற்றிக் கழுவி திண்ணையில் ஓரமாய்க் காயப் போட்ட பிறகே அவரது கால்கள் நகரும். அதற்காகத் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு இடுப்புயர ஜோடத்தவலை அல்லது வாய் அகன்று அடி குறுகிய அருக்கஞ்சட்டி எப்போதும் வாசலில் நிற்கும். அதில் ஒரு பித்தளைச் சொம்பும் மூழ்கிக் கிடக்கும்.

இன்று செம்பைக் காணோம்

“சித்த மின்னதான் செம்பைக் கொண்டாந்து போட்டு வைச்சேன். அதுக்குள்ள எவனோ களவாணி ஆட்டையைப் போட்டான் போல. ஊர் முன்னமாதிரி சுத்தமா இல்லீங்க. திருட்டு சாஸ்தியாயிருச்சு” புலம்பிக் கொண்டே இன்னொரு சொம்பு எடுத்துவர உள்ளே ஓடினாள் செண்பகம்.

காலில் அழுக்கு என்று பெரிதாய் ஏதும் இல்லை. உள்ளங்காலில் ஒரு துரும்பு கூட ஒட்டியிருக்க வாய்ப்பில்லை. பாதத்தை நன்கு மூடிப் போர்த்திய செருப்பு. குதிகாலில் சாணியோ சக்தியோ பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் காலுக்கு வெளியே சற்று நீட்டிக் கொண்டிருப்பது போலத்தான் செருப்பு வாங்குவார் மாசிலாமணி

மாசிலாமணிக்குக் கடைவீதியில் மறுபெயர் சுத்தம். வியாபாரத்திலும் அப்படித்தான். வாய்ச் சொல் தவறமாட்டார். கலப்படச் சரக்கென்று தெரிந்தால் கோடி ரூபாய் கொடுத்தாலும் கொள்முதல் செய்ய மாட்டார். அதனால் நஷ்டப்பட்டதுண்டு. “நாமா தயாரிக்கிறோம்? எவனோ கொடுக்கிறான், எவனோ வாங்கறான், நாம இப்படி வாங்கி அப்படிக் கொடுக்கிறோம். இதில என்னப்பா இருக்கு?” என்று அவரது மகன் கூடச் சொல்லிப் பார்த்தான். அதற்கு எதிர் வாதிட அவர் மெனக்கெடவில்லை. “அதல்லாம் வேணாம்பா!” என்று ஒரு வார்த்தையில் மறுத்துவிட்டார்.. அவன் வற்புறுத்தவில்லை. “அவராச்சு, அவர் கடையாச்சு என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டான்.

ஆனால் கடைத்தெருவில் அரசல் புரசலாகக் குசும்பர்கள் கேலி பேசுவதுண்டு. கூட்டிப் பெருக்கினாலும் கடைத்தெருவில் கூளம் கிடக்கும்தானே? அவர் வயதுப் பெரியவர்கள் இதழ்க் கடையில் புன்னகையை அதக்கிக் கொண்டு, வேண்டுமென்றே “என்ன மாசு!” என்று சீண்டுவார்கள், கண்ணில் கேலி மிளிர. மாசிலாமணியை மாசுவாகச் சுருக்கிவிட்ட அற்ப சந்தோஷம் அவர்களுக்கு. இளம் குறும்பர்கள் செய்த சேட்டைகள் வேறு மாதிரி

இரண்டு மூன்று இளைஞர்களாக ஒருநாள் படியேறி கடைக்குள் வந்தார்கள். குனிந்து பணிந்து வணக்கம் என்று கும்பிட்டார்கள்..

“வணக்கம்” எனக் கை குவித்த மாசிலாமணி, “ நீங்க….?” என்றார்

“பரிசுத்த நாடார் கடை இதுதானுங்களே?” என்றார்கள் வந்தவர்கள்

“இல்லையே.!”

“பஜார்ல விஜாரிச்சோம். இங்கதான் கையைக் காமிச்சாங்க”.

கணக்குப் பேரேட்டில் கண்ணை ஓட்டிக் கொண்டிருந்த கந்தப்பனுக்கு அரையும் குறையுமாகப் புரிந்த மாதிரி இருந்தது

“ நம்ப கடைத்தெருவிலே அப்படி ஏதும் கடையேதும் இருக்கிறதா தெரியலையே? கந்தா, அப்படி ஏதும் தொறந்திருக்காங்களாய்யா?”

கந்தப்பன் வாயையைத் திறக்கும் முன் வந்தவர்களின் ஒருவன் போலியாய்ப் பணிந்து, “ஐயா, நீங்கதானே பரிசுத்த நாடார்?” என்றான். பக்கத்தில் இருந்தவன் அந்த பவ்யத்தைப் பார்த்துக் களுக் என்று சிரித்துவிட்டான். கந்தப்பனுக்கும் கட்டுப்படுத்த முடியாமல் சிரிப்பு வந்தது. முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். வந்தவர்களைக் கடிந்த மாதிரியைக் கடிந்த மாதிரியும் இருக்கும் சிரிப்பை அடக்கியும் ஆக வேண்டும் என்று “ ஆக்கங் கெட்ட கூகைகளா, என்னடா அங்க அரட்டை!” என்று உட்பக்கமாகக் கூவிக் கொண்டே எழுந்து போனான்.

மாசிலாமணிக்கும் கேலி புரிந்தது. “என் பெயர் மாசிலாமணி!” என்றார் விறைப்பாக.

“மன்னிக்கணும். பரிசுத்த நாடர்னு சொன்னாங்கய்ய” என்று இன்னொரு போலிக் கும்பிடு போட்டுவிட்டு படியிறங்கினார்கள் குறும்பர்கள். பரிசுத்த நாடார் என்ற பெயர் பத்திரிகைகளில் அடிபட்டுக் கொண்டிருந்த காலம் அது. ஒரு பெரிய தலைவரை எதிர்த்து அவர் களம் இறக்கப்பட்டிருந்தார். அதைப் பயன்படுத்திப் பசங்கள் பகடி செய்து பார்த்து விட்டார்கள்.

“கிருதக்கம் பிடிச்ச கோட்டிங்க. ஐயா பேரை மட்டுமல்ல, சடக்க்னு சாதியையே மாத்திட்டானுங்களே!” என்று அங்கலாய்த்தார் கடைக்கு ஓசியில் பேப்பர் படிக்க வந்த உலகநாதன் “சாதியாவது மூதியாவது” என்று அந்த அங்கலாய்ப்பை அலட்சியமாக ஒதுக்கித் தள்ளினார். அவருக்கு அதிலெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு தணிந்த குரலில் வைதார்: “அழுக்குப் பிடிச்ச பயல்கள்!”. அந்த வசை தனக்கும் சேர்த்துதான் என்று உலகநாதனுக்கும் தெரியும். ஒன்றும் பேசாமல் பேப்பரில் தலை குனிந்து கொண்டார்.

சாப்பிட்டுப் படுத்தால் சற்று சங்கடம் குறையும் என வீட்டுக்கு வந்தால் கால் அலம்பச் செம்பைக் காணோம். செண்பகம் கொடுத்த போணியை வாங்கி காலைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். ஊஞ்சலில் உட்கார்ந்து உன்னி லேசாக ஆடினார். எதிரே ஈசானிய மூலை ஜன்னலை மூடிய திரையில் கறைபோல் ஏதோ கண்ணுக்குப்பட்டது. எழுந்து போய்ப் பார்த்தார். திரையில் கைபட்டதும் கறுப்பு வண்ணப் பட்டாம் பூச்சி இறக்கைகளை அடித்துக் கொண்டு எழுந்து பறந்தது. அதை அடிக்க வாரியலை எடுத்து வந்து நுனிக்காலில் நின்று வீசினாள் வேலைக்காரி பொன்னம்மா. பட்டாம் பூச்சி பறந்துவிட வாரியல் மாசிலாமணியை நோக்கிச் சரிந்தது. சட்டென்று நகர்ந்து கொண்டார். “ எனக்கு விளக்குமாத்து பூசை செய்யணும்னு வேண்டுதலா பிள்ளை?” என்று சிரித்துக் கொண்டே அவர் கேட்டதும்தான் போன உயிர் திரும்பியது பொன்னம்மாவிற்கு.

சிரித்ததோடு நிற்கவில்லை மாசிலாமணி. சடக்கென்று சட்டையைக் கழற்றி வீசினார். “துவச்சிரு” என்றார். சட்டையில் விளக்குமாறு படவில்லை என்று பொன்னம்மாவிற்குத் தெரியும். அவருக்கும் தெரியும். ஆனாலும் அது அவருக்கு அழுக்குச் சட்டைதான்.

சாப்பிட்டுச் சற்று நேரம் படுக்கப் போனவர் படுக்கையிலிருந்து செம்பகம் என்று அழைத்தார். “ஐயோ இது எதுக்கு?” என்று பதறிக் கொண்டு போனவள், அவரை முந்திக் கொண்டு சொன்னாள்: “இன்னிக்குத்தான் விரிப்பு மாற்றினேன்”. இரண்டு நாளைக்கொருதரும் அவருக்கு படுக்கை விரிப்பை மாற்றியாக வேண்டும். விரிப்பைப் பற்றி அவர் ஏதும் சொல்லவில்லை. விழிப்பைப் பற்றிப் பேசினார். “தூங்கிட்டா ஒரு மணி கழித்து எழுப்பிரு. கடைக்கு வாத்தியாரை வரச் சொல்லியிருக்கேன்”

வாத்தியரை வைத்துக் கொண்டு விசா படிவத்தை நிரப்பினார். மாசிலாமணிக்கு ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியும். என்றாலும் அமெரிக்காவிருந்த மகன் முத்துக் குமரனுக்கு அதில் நம்பிக்கையில்லை. வாத்தியாரை வைத்துக் கொண்டு நிரப்பு ஏதும் சொதப்பிவிடாதே என்று இரண்டு பாரவிற்கு ஒரு முறை எழுதியிருந்தான். அவன் ஐந்து வருஷமாகக் கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறான். ஆகட்டும், அடுத்த வருஷம் பார்க்கலாம், கடையைப் போட்டுவிட்டு கிளம்ப முடியாது என்று ஏதேதோ சொல்லித் தட்டிக் கொண்டிருந்தார். ‘புதுசா வீடு வாங்கியிருக்கிறேன், வந்து பாரு. நீ வரவில்லையென்றால் நான் இனி அங்கே வரவே மாட்டேன் என்று அச்சுறுத்தியதற்குப் பிறகு அரைமனதாய் போகலாம் என முடிவெடுத்தார்.

கை கொடுத்து இழுத்துக் கொண்டு ஆதரவாய் அணைத்துக் காக்க யாருமில்லாமல், இரண்டு சூட்கேஸ்களோடு 22 வயது இளைஞனாய்ப் போய் இறங்கின பையன் இன்று அங்கு படித்து பட்டத்துக்கு மேல் பட்டம் வாங்கி, வேலையும் தேடிக் கொண்டு வீடும் வாங்கி வேர் விட்டுவிட்டதை எண்ணும் போது அவருக்குள் ஒரு வியப்பும்  பெருமிதமும் இருந்தது. மாயம் செய்த அந்த ஊரை ஒரு முறை பார்த்து வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளே இருந்ததும் ஒரு காரணம்

முத்துக்குமரன் பயமுறுத்தியது போல விசா கிடைப்பதில் ஒன்றும் சிக்கலில்லை. எப்போதும் கடைக்குப் போவது போல வேட்டியும் வெள்ளைச் சட்டையுமாகத்தான் விசா இண்டர்வியூக்குப் போனார். மொழி பெயர்ப்பாளரை வைத்துக் கொண்டுதான் விடையிறுத்தார். ஆங்கிலம் ‘தெரியாத’ பட்டப்படிப்பு படிக்காத, கிராமத்தில் கடை வைத்து வியாபாரம் செய்கிற, சொத்தும் ரொக்கமும் உள்ள, 70 வயது கிழவர் அங்கேயே தங்கிவிடமாட்டர், அவரால் அமெரிக்காவிற்கு ஆபத்து ஏதும் இல்லை என்று எண்ணிய அமெரிக்க அதிகாரி பத்து நிமிடத்தில் ஓகே சொல்லிவிட்டான்

ஆனால் பயணம்தான் நரகமாக இருந்தது. விமானம் ஏறும் நாள் விடிகாலை சென்னை வந்திறங்கினார். நடுநிசியில்தான் பயணம். இடைத்தங்கலுக்கு மருமகள் தன் அண்ணன் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தாள். அங்கே அருவருத்துக் கூசினார் மாசிலாமணி. அந்த வீட்டில் எல்லோரும் வீட்டிற்குள்ளேயே செருப்புப் போட்டுக் கொண்டு நடந்தார்கள். பல் துலக்காமல் காபி குடித்தார்கள். கை கழுவாமல் சாப்பிட்டார்கள். துவைத்து யுகங்கள் ஆகியிருக்கும் எனத் தோன்றும் முரட்டுத் துணியில் ஆடை அணிந்திருந்தார்கள். அதிலும் ஆங்காங்கு கிழிசல்.

“பனிரெண்டு மணிக்குத்தான் ஃபிளைட். மத்தியானம் கொஞ்சம் படுத்துத் தூங்குங்களேன்” என்று படுக்கை தயார் செய்து கொடுத்தான் மருமகளின் அண்ணன். சரி என்று தலைசாய்க்கப் போனவர் தலையணையைப் பார்த்துத் தன்னை வெடுக் என்று உதறிக் கொண்டார். அழுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் அதில் ஓரமாய் ஒரு இழை தலைமுடி கிடந்தது. சினத்தோடு செண்பகத்தைப் பார்த்தார். “கத்திடாதீங்க. சம்பந்தி வீட்டில் சண்டை வேண்டாம்.” என்று அவள் கையெடுத்துக் கும்பிட்டாள். அவர் தலையணையை எடுத்துத் வீசிவிட்டு  வேட்டியை விரித்துக் கையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு ஒருக்களித்துப் படுத்தார்.

*

செண்பகம்தான் முதலில் கண்டுப்பிடித்தார். மகனும் மருமகளும் கண்ணாடிச் சுவருக்கு அப்பால் இருந்து கையசைத்தார்கள். வெளியேறும் வழியில் நெருக்கியடித்துக் கொண்டு நின்ற மக்கள் நுனிக்காலில் உன்னி உள்ளே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் வந்ததும் ஆரத் தழுவிக் கொண்டார்கள். மாலதியும் மாமியாரைக் கட்டித் தழுவித்தான் வரவேற்றாள். செண்பகம் கூச்சத்தில் நெளிந்தாள். “இங்கு வாஞ்சையை வெளிப்படுத்தும் வழக்கம் இதுதான்” என்று மனைவிக்கு விளக்கினார் மாசிலாமணி

விமானநிலையத்திற்கு மகன் வண்டி கொண்டு வந்திருந்தான். பெரிய வண்டிதான். பொய்கையாழ்வார் பாணியில் சொல்வதானால் அறுவர் அமரலாம். நால்வர் நன்கு சாய்ந்து தூங்கலாம். இருவர் கிடக்கலாம்.

“உன் வண்டியா?” என்றார் மாசிலாமணி. வாகனத்தை ஏற இறங்கப் பார்த்து

“ஆமாம் போன மாசம்தான் எடுத்தேன்”

“அதற்கப்புறம் துடைக்கவே இல்லையா?” என்றார் கார்க் கதவில் கால் சென்டிமீட்டருக்குப் புழுதி படிந்திருந்தது.  செண்பகம் முழங்கையில் மெல்ல இடித்து மருமகளைக் கண்ணைக் காட்டினாள். அவள் முன்னால் அவனை ஏதும் சொல்லாதீங்க என்ற வேண்டுகோள் அவள் விழியில் இருந்தது

“வாட்டர் வாஷுக்கு அனுப்பணும்பா. நேரமே இல்லை” என்றான். “இந்தியா மாதிரி இல்ல. இங்கே எல்லாம் நாமே செய்துக்கணும்” என்றாள் மருமகள்.

வழி நெடுக கழுத்தைத் திருப்பி இரு புறமும் பார்த்துக் கொண்டே வந்தார் மாசிலாமணி. அப்போதுதான் அலம்பித் துடைத்ததைப் போல சாலைகள் அழுக்கின்றி இருந்தன. பாதையோரமாகப் பிளாஸ்டிக் குப்பைகளைக் காண முடியவில்லை பார்க்கும் இடத்தில் எல்லாம் பச்சை பரவிக் கிடந்தது. ஒரு பக்கமாக சிறு ஓடை ஒன்று சிறிது தூரம் ஓடி வந்தது. அதில் சலசலவென்று சரிகை போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. காரிலிருந்து காணும் போதே அதன் அடிப்படுகை தெளிவாகத் தெரிந்தது. இரு புறத்திலும் ஏராளமான மரங்கள்.

மாசிலாமணிக்கு ஊர் பிடித்துவிட்டது. இப்படி ஒரு சுத்தமா!

செயற்கையாகச் செய்த சிறு மேட்டில் மகனின் வீடு அமைந்திருந்தது.  பொட்டுத் தண்ணீர் தங்காது. வீட்டிற்குள் நுழையும் முன் வெளியில் நிமிட நேரம் நின்றார். சிலு சிலுவென்று வீசிய காற்றில் நனைந்தார். ஆற்றில் அளைந்து கொண்டு நீந்துவது போல் ஆனந்தமாக இருந்தது. அவரது ஆனந்தம் புரியாமல்,

“என்னாச்சுப்பா?” என்றான் முத்துக்குமரன்

“காற்று!” என்றார் சிலும்பியத் தலையைக் கோதிக் கொண்டு.

முத்து சிரித்தான். “ஜாக்கெட் ஏதும் வேணுமா?” என்று கோட் போல் தான் அணிந்த மேலாடையைத் தொட்டுக் காட்டினான். வேண்டாம் வேண்டாம் என்று கையசைத்தார், வழக்கம் போல் செருப்பை வாசலில் கழற்றினார்.

“நோ!”  என்று ஆட்சேபித்தது ப்ரீதி. செருப்பை அணிந்து கொள்ள வற்புறுத்தியது.கையைப் பிடித்து  வீட்டுக்குள் அழைத்துப் போய் ‘திஸ் இஸ் ஷூ ராக்” என்றது. வாஞ்சை மேலிட பேத்தியின் கன்னத்தை நிமிண்டினார் மாசிலாமணி

வெறுங்காலுடன் நடக்க வீடு சுகமாக இருந்தது. மெத்து மெத்து என்று வீடு நெடுக கம்பளம் விரித்திருந்தார்கள். கால் வைத்து நடக்கும் போது காற்றில் நடப்பது போலிருந்தது. ஆனால் மடக்கவோ, சுருட்டவோ முடியாதபடி அந்தக் கம்பளத்தைத் தரையோடு ஒட்டியிருந்தார்கள்.

“எப்படிக் கூட்டுவ?” என்றாள் செண்பகம், மருமகளைப் பார்த்து.

அவளை முந்திக் கொண்டு “குனிந்து நிமிர்ந்து கூட்றதெல்லாம் கிடையாது. ‘வாக்கூம்’ பண்ணிருவோம்மா” என்றான் முத்து

“மிசினா?”

“ஆமாம்! இரண்டு வாரத்திற்கொருமுறை போடுவோம்!”

“இரண்டு வாரமா?” என்றார் மாசிலாமணி. அவர் நெற்றியில் கோடுகள் நெளிந்தன.

இந்தியாவிலிருந்து கிளம்பி 22 மணி நேரமாகிவிட்டதால் மேலெல்லாம் கசகசவென்று இருந்தது. ஒரு குளியல் போட்டால் தேவலாம் என்று தோன்றியது. முத்து குளியலறையைத் திறந்து விட்டான். அது ஒரு சிறிய கூடம் போல் அகன்று நீண்டது. ஆறடி நீளத்திற்கு சுவரில் முகம் பார்க்கும் கண்ணாடி. அதன் முன் கருங்கல் மேடை. ஓரமாய் ஒரு வெண் பளிங்குத் தொட்டி. ஒரு புறத்தில் கண்ணாடிக் கூண்டு. அதற்குள் தலைக்கு மேல் பொழியும் தூறல் குமிழ். வாளியோ குவளையோ இல்லை. அதற்கு அடுத்த தடுப்பில் கழிப்பிடம் இருந்தது. அங்கும் குழாய் இல்லை.

“கழுவிக்க என்ன செய்யறது?”

மூலையில் மாட்டியிருந்த காகிதச் சுருளைக் காண்பித்தான். முதல் முறையாக மாசிலாமணி முகம் சுளித்தார். “பாத்ரூம் ஈரமா இருந்தா ப்ரீதிக்குப் பிடிக்கறதில்லை. கால வைக்கவே கூசுவா” என்று விளக்க முற்பட்டான் முத்து. என்றாலும் மாசிலாமணியின் மனச் சுளிப்பை அது சீராக்கவில்லை.

மறுநாள் மருமகள் கூடை ஒன்றைக் கொண்டு வந்து வைத்தாள். ‘மாமா, துணி துவைக்கணும்னா இதில போட்டிருங்க. வாரம் ஒரு நாள் வாஷிங் மிஷின் போடுவோம். அப்போ எடுத்துக்கறேன்”

அழுக்குத் துணியை அப்படியே ஒரு வாரம் போட்டு வைப்பதா? இரண்டாம் முறையாகச் சங்கடப்பட்டார் மாசிலாமணி. .

.இரண்டு மாதம் இருக்கலாம் என்று வந்தவருக்கு அடுத்த வாரமே கிளம்பி விடலாமா என்று தோன்றியது. பேத்தி மட்டும் இல்லை என்றால் புறப்பட்டுமிருப்பார். பூர்வ ஜன்ம பந்தம் போல அது ஒட்டிக்க ஒட்டிக்க இழைந்தது. அதற்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அது பேசியது. தனக்குத் தெரிந்த தமிழில் தாத்தா பேசினார். ஆனாலும் இருவருக்கும் பேசுவது என்னவென்று நன்றாகவே புரிந்தது.கதை சொல்லித் தூங்கச் செய்தார் தாத்தா. கதையோடு கதையாக கை குவிக்கக் கற்றுக் கொடுத்தார். வணக்கம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னார். அவரது கதையில் யானை குளிக்கும். குரங்கு குளிக்கும். குதிரை குளிக்கும் காகம் கூட அலகை அலசிக் கொள்ளும். குளிப்ப்பது பற்றிக் கூறும் போது கூடவே சாப்பிடும் முன் கை கழுவது பற்றிச் சொன்னார். அவருக்கு வீடியோ கேம் விளையாடக் கற்றுக் கொடுத்தது ப்ரீதி. வீதியில் நடக்கும் போது வலப்பக்கமாக நடக்கச் சொன்னது.

என்றாலும் அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. காலைக் கடனுக்குக் காகிதத்தை உபயோகிக்கும் ஒவ்வொருமுறையும் ஊருக்குக் கிளம்பிட வேண்டும் என்று நினைப்பார்.

மூன்றாவது வாரம் மெல்ல ஆரம்பித்தார். “முத்து. புறப்படலாம்னு இருக்கேன்”

“என்னப்பா, அதுக்குள்ள?”

“இல்லப்பா, போறேன்!” என்றார். திகைத்துப் போய் அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அவர் எந்த வித விளக்கத்திற்கும் விவாதத்திற்கும் தயாரில்லை எனத் தோன்றியது. “சரிப்பா! சனிக்கிழமை, நீங்க வந்ததற்காக நண்பர்களை விருந்துக்குக் கூப்பிட்டிருக்கேன். அதற்கப்புறம் டிக்கெட் பார்க்கிறேன்”

நண்பர்கள் வந்தார்கள். நாலைந்து பேர்கள்தான். காலணியோடு வீட்டிற்குள் வந்தார்கள். கை குலுக்கினார்கள். கட்டித் தழுவிக் கொண்டார்கள். கை கழுவாமல் சாப்பிட்டார்கள். சாப்பிட்ட பீங்கான் தட்டுக்களை கழுவாமல் சமயலறைத் தொட்டியில் போட்டார்கள்.

“உங்களைப் பற்றி முத்து நிறையச் சொல்லியிருக்கிறான். உங்கள் சுத்தம் பற்றிப் பேசியிருக்கிறான். உங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும் நீங்கள் ஏன் ஊரைக் குப்பையாக வைத்திருக்கிறீர்கள்?” எனச் சிரித்துக் கொண்டே கேட்டான் ஒருவன்

“ஊரைச் சுத்தமாக வைத்திருக்கும் நீங்கள் உங்களை ஏன் அழுக்காக வைத்துக் கொள்கிறீர்கள்” என்ற எதிர்க் கேள்வி மாசிலாமணி மனதில் ஓடியது. விருந்தினர்களோடு விவாதம் செய்வது நம் நாகரீகமல்ல எனத் தோன்றியதால் நடுவாந்திரமாகச் சிரித்து வைத்தார்

சிரிப்பும் சீண்டலுமாகப் பேச்சுப் போய்க் கொண்டிருக்கும் போது செய்தி வந்தது. வாட்ஸப்பைப் பார்த்து வாசித்தான் ஒருவன்: ’அயல்நாட்டு விமானசேவைகள் ரத்து செய்யப்பட்டன.’ முத்து, மாசிலாமணி முகத்தைப் பார்த்தான். எழுந்து டிவியைப் போட்டான்.

நோய்த் தொற்றைத் தடுக்கத் தவிர்க்க வேண்டியதையும் செய்ய வேண்டியதையும் செய்திகளில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கை கழுவுங்கள், கட்டிப் பிடிக்காதீர்கள், கரம் குவியுங்கள். வாசலிலேயே காலணிகளைக் கழற்றி வையுங்கள். துணிகளைத் துவையுங்கள். அல்லது நனைத்துப் போடுங்கள். நெடுகப் பேசிக் கொண்டு போனார்கள்

“எங்கள் பாட்டி இதைத்தான் மடி என்று சொல்லுவார்” என்று கடகடவென்று சிரித்தான் ஒருவன்

“ஆமாம்! பேக் டு பேசிக்ஸ்” அதை ஆமோதித்தான் இன்னொருவன்

மாசிலாமணியும் ப்ரீதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அரைக் கணம் இமைக்காமல் பார்த்தார்கள். பின் ப்ரீதி அவரைப் பார்த்துக் கண் அகல, முகம் மலரச் சிரித்தது. மாசிலாமணியின் இதழும் மெல்ல விரிந்தது..

அது அவர்களுக்கு மட்டுமே புரிந்த புன்னகை.       .

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

One thought on “பழையன புகுதலும்

  1. Namaskarams Malan sir! It was wonderful to read this story. And meet you at MRH on Oct 28th discussing a few topics. Enjoyed our chats.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these