அசலும் நகலும்

ழுபத்தேழாயிரத்து முன்னூற்றி முப்பத்தி ஐந்து.

அரசி அந்த பிளாஸ்டிக் டப்பாவை அழுத்தி, திருகி மூடினாள் .மார்போடு இறுகி அணைத்துக் கொண்டாள். இன்னும் ஒரு முப்பதாயிரம்  இருந்தால் வாங்கி விடலாம். அவள் கனவுக்கும் நிஜத்திற்குமான இடைவெளி முப்பதாயிரம். ஆனால் அது எட்டமுடியாத தொகை இல்லை  ஆறு மாதத்தில் சேர்த்து விடலாம். ஆனால் அது வரைக்கும் கிழவி  இருக்க வேண்டும், கடவுளே!

கடவுளோடு பேச அவளுக்கு அவகாசம் அளிக்கவில்லை அழைப்பு மணி . கிர்ர்ர்ர்ர்ரென்று வீரிட்டது. பிளாஸ்டிக் டப்பாவை அவசர அவசரமாக பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டு அரசி கிழவியின் அறைக்கு ஓடினாள்.

செளந்திரவல்லி இப்போது கிழவிதான். ஆனால் ஏழெட்டு வருஷம் முன்னால் வரை எல்லோரையும் போல நடமாடிக் கொண்டுதானிருந்தார். 62 வயதில் ஒரு பின்மாலைப் பொழுதில் வேர்த்துக் கொட்டுகிறது இரண்டு சொம்பு ஊற்றிக் கொண்டு வந்து விடுகிறேன் என்று குளியலறைக்குப் போனவர் அங்கேயே நெஞ்சடைத்து கீழே விழுந்தார். ஆம்புலன்ஸை அழைத்து ஆஸ்பத்திரிக்கு ஒடி, உயிரைக் காப்பாற்றி விட்டார்கள். ஆனால் வலப்பக்கம் விளங்காமல் போய்விட்டது.

இரண்டாவது மகன் வீட்டில் அவளுக்கு ஒரு அறையை ஒதுக்கி வீட்டோடு இருந்து கவனித்துக் கொள்ள அரசியை நியமித்து விட்டார்கள். அன்றிலிருந்து செள்ந்திரவல்லிக்கு சகலமும் அரசிதான். பல்துலக்கி விடுவதிலிருந்து இரவு கொசு வர்த்திக் கொளுத்தி வைப்பது வரை அவ்வளவும் அவள் பாடு. பாடு பெரும்பாடுதான். ஆனால் அதற்குத் தக்க வரவும். சாப்பாடு போட்டு மாதம் முப்பதாயிரம். இருபத்தி ஐந்தைக் கணவன் கையில் கொடுத்து விட்டு ஐந்தை இருத்திக் கொள்வாள் அரசி, அவள் கனவிற்காக.

வாரக் கடைசியில் மூத்த பிள்ளை பார்க்க வருவார். புறப்பட்டுப் போகும் போது, “ அவ எனக்கு அம்மா. என் பொக்கிஷம். பத்திரமா பார்த்துக்கோ” எனச் சொல்லி ஆயிரம் இரண்டாயிரம் டிப்ஸ் கொடுத்து விட்டுப் போவார். அந்த பொக்கிஷத்தை அவர் என் தன் பக்கத்திலேயே வைத்துப் பாதுகாத்துக் கொள்ளக் கூடாது என்று அரசிக்குக் கேள்வி உதடு வரை வந்து விடும்.

அப்போது வாயைக் கட்டிவிடும் ஒரு சங்கிலி. தங்கச் சங்கிலி.. அந்தச் சங்கிலி அவள் அவள் கனவு. நெஞ்சுக்குள் இருக்கும் நெருப்பு. வாய் விட்டுச் சொல்லாத சபதம்.

சங்கிலி ஒரு காலத்தில் குடும்பத்தின் அவமானச் சின்னம். அம்மாவின் உயிரைக் குடித்த சுருக்குக் கயிறு.அம்மா வேலை செய்த வீட்டில் சங்கிலி களவு போன போது அந்தப் பழி அம்மா மீது விழுந்தது. வீட்டுக்குப் போலீஸ்காரர்கள் வந்து விசாரித்துப் போனார்கள். ஊரின் பார்வை தாங்க முடியாமல் அம்மா தூக்கிட்டுக் கொண்டாள். அந்தச் சங்கலி பின்னாளில் ஓர் அலமாரியின் பின்னால் அகப்பட்டது. ஆனால் அதற்குள் அம்மா சாம்பலாகியிருந்தாள்

அந்த ஊர், உறவு முன்னால் தகதகவென்று ஒரு தங்கச் சங்கிலி வாங்கி மாட்டிக் கொண்டு பாரு பாரு என்று மாரை நிமிர்த்தி நடை போட்டு விட்டு வரவேண்டும். பலசரக்கு பொட்டலத்தைச் சுற்றி வருகிற நூல் மாதிரி சன்னமாக கிழவியின் பேத்திகள் போட்டுக் கொண்டிருக்கிறதே அந்த மாதிரி இல்லை. இரட்டை வடமாகச் செய்யச் சொல்லிப் போட்டுக் கொள்ள வேண்டும். அதற்கெல்லாம் இரண்டு பவுன் போதாதென்றால் முறுக்கு வடம் முடியுமா எனப் பார்க்க வேண்டும். அல்லது கோதுமை மணி கோர்த்த சரடு மாதிரி செய்ய வேண்டும்.  எதுவானாலும் கழுத்தில் மாட்டிக் கொண்டால் மார்பு மேட்டில் வந்து அமர்கிற நீளம் வேண்டும். அதை ஜாக்கெட்டிற்குள் இழுத்து அடக்கி விடக் கூடாது. மாராப்பு மடிப்பு மேல் அது ஜம்மென்று வந்து அமர வேண்டும்.

சில வருஷங்களுக்கு முன்னால் செம்பகம் அக்கா சொன்னாள் என்று கலைவாணியிடம் சீட்டுப் போட்டாள். பத்து மாதத்திற்குப் பிறகு கலைவாணி காணாமல் போன போது அரசியைவிடச் செண்பகம் அதிகம் கலங்கிப் போனாள். அவள்தான் இங்கே கொண்டு வந்து வேலைக்குச் சேர்த்து விட்டாள்.

.சம்பளத்தில் புருஷனுக்கு அனுப்பியது போக மிச்சம் பிடித்தது, பெரிய பிள்ளை கொடுத்த டிப்ஸ் எனச் சிறுகச் சிறுகச் சேர்த்து பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்திருக்கிறாள். பாங்கிலே போட்டு வையேண்டி என்று கிழவி சொல்லிப் பார்த்தாள். அங்கே போவதும் வருவதும் காத்திருப்பதும் அவளுக்கு செளகரியப்படவில்லை. ‘இருக்கட்டுமா, கரையானா தின்னுறப் போது?” என்று திருகு போட்ட பிளாஸ்டிக் பெட்டியைத் தேர்ந்து, அதை கஜானாவாக்கிக் கொண்டு விட்டாள். வாரம் ஒரு தரம் திறந்து எண்ணிப் பார்த்துக் கொள்வாள். அதை எண்ணி முடிப்பதற்குள் கிழவி அழைப்பு மணியை அழுத்தி விட்டாள்.

“அரசி, டயப்பர் மாற்றி விடறியா? கசகசவென்று இருக்கிறது”

கழிந்திருந்த கிழவியை குப்புறக் கவிழ்த்தி வெது வெதுவென்ற வெந்நீரில் துணியை முக்கித் துடைத்துக் கொண்டே அரசி கேட்டாள். “பெரிய அண்ணா இந்த வாரம் வருவாராமா?”

“யாரு கிருஷ்ணனா? வரணும். ஏன்?”

“சும்மாத்தான் கேட்டேன்”

அவர் வந்தால் அவளுக்குக் காசு கிடைக்கும் என்பது கிழவிக்கும் தெரியும் அதனால் அவள் கிண்டிக் கிளறிக் கேட்கவில்லை.

*

று மாதம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை, இரண்டு வாரம் கழித்து கிருஷ்ணன் வந்தார். எப்போதும் சனிக்கிழமை வருபவர் ஒரு புதன் கிழமை வந்தார்.

“அம்மா, எப்படியிருக்க?”

“எனக்கென்னடா, என்னைப் பார்த்துக்க ஒரு வேலைக்காரியையா வைச்சிருக்கேள். அரசியனா அமர்த்திருக்கிறேள்”

கிருஷ்ணன் அம்மாவின் சிரிப்பைப் பார்த்தார்.பின் நிமிர்ந்து அரசியைப் பார்த்தார். அரசி புன்சிரிப்பாகச் சிரித்துக் கொண்டு பூமியைப் பார்த்தாள்

“நன்னா பார்த்துக்கிறாளோனோ?”

“சொன்னா கோவிச்சுக்காதே. பெத்த பெண் கூட இப்படிப் பார்த்துக்க மாட்டா. ஆய் போனா அலம்பி விடறதிலிருந்து அத்தனையும் அசூயை படாம ஆர் செய்வா? மூச்சு விடறதும் மூணுவேளை சாப்பிடறதும் மட்டும்தான் நான் பண்றேன். மத்ததெல்லாம் அவதான்”

கிருஷ்ணன் அரசியைக் கையெடுத்துக் கும்பிட்டார். கிழவியிடம் பேச ஆரம்பித்தார். “அம்மா, நான் ஆபீஸ் வேலையாக சனிக்கிழமை அமெரிக்கா போறேன். வர்றதுக்கு மூணு நாலு மாசமாகலாம்.”

மூணு நாலு மாசமா? ஐயோ என்றிருந்தது அரசிக்கு

 “உடம்பைப் பார்த்துக்கோ.. உனக்கு ஒண்ணும் இல்லை. நூறு வயசு இருந்து அனு கல்யாணத்தைப் பார்த்துட்டுத்தான் போவ” என்றார் அம்மாவிடம்.

“இருப்பேண்டா இருப்பேன். அரசி கூட இருந்தா இந்த உடம்பானாலும் இருநூறு வயசு வரைக்கும் இருக்க நான் தயார்”

கிளம்பும் முன் கிருஷ்ணன் அரசியை தனியே அழைத்தார்.பையைத் திறந்து கையில் வந்த பணத்தை எடுத்துக் கொடுத்தார். “வைச்சுக்கோ. பக்கத்திலிருந்து அம்மாவைப் பார்த்துக்கிற பாக்கியம் எங்களுக்கு இல்லை.நாங்க பார்த்திருண்டிருந்தாலும் அவ இவ்வளவு சந்தோஷமா இருந்திருக்க மாட்டா. நான் வர நாலு மாசமாகும். அதுவரை அம்மா உன் பொறுப்பு”

கார் வரை சென்று வழியனுப்பிய போது மறுபடியும் கையெடுத்துக் கும்பிட்டார் கிருஷ்ணன்.

*    

ணத்தை எடுத்துப் எண்ணிப் பார்த்தாள் பத்தாயிரத்து இருநூறு இருந்தது. அதைப் பிளாஸ்டிக் பெட்டியில் வைத்துத் திருகி மூடிவிட்டு பரபரவென்று வந்து கூடத்தில் கிடந்த பேப்பரை எடுத்துப் பார்த்தாள். ‘தங்கம் விலை  நிலவரம் சென்னை ஒரு பவுன் ரூ 35840’ என்றது நாளிதழ். அதன் வெள்ளை மூலையைக் கிழித்துக் கணக்குப் போட்டுப் பார்த்தாள். 15 ஆயிரம் வேண்டும். இன்னும் மூன்று மாதம். கைக் கெட்டும் தூரத்தில் வந்து விட்டது கனவு அரசி. சிரிக்க முயன்றாள். ஆனால் கண்ணில் நீர் வந்தது.

*

ணவன் முருகேசனை கைபேசியில் அழைத்தாள் ”’நாளைக்கு உனக்கு டியூட்டி நைட்டா? பகலா?”

முருகேசன் நகர்ப்புறத்தில் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வாட்ச்மேன்.

“ராத்திரி”

“பகல்ல இங்க வரியா?”

“என்ன விஷயம்? ஏதேனும் பிரசினையா?”

“இல்லை இல்லை”

“கிழவி புட்டுக்கிச்சா”

“உன் வாயை வைச்சுக்கிட்டு சும்மா இரேன். வா, சொல்றேன்”

காலையில் கிழவியைக் குளிப்பாட்டி ஆடை மாற்றி இரண்டு தலையணையை அண்டைக் கொடுத்து அவரை சாய்த்தாற் போல் அமர்த்தி வைத்து விட்டு ஆரம்பித்தாள் அரசி.

“அம்மா, அரை நாள் லீவு வேணும்!”

“என்னடி, குண்டைத் தூக்கிப் போடற!. நீ இல்லாட்டா நான் என்ன செய்வேன். நகரக் கூட முடியாதே என்னால. நான் மனுஷி இல்லடி. சுரக்காய். குண்டு பூசணி. வெறும் வெஜிடபிள்டி. வெஜிட்டபிள்”

அரசி தன் கனவை விரித்தாள். தங்கச் சங்கிலி ஒன்றுக்குத் தவமாய்த் தவமிருந்ததை விவரித்தாள். அதற்கான வேளை வந்து விட்டதைச் சொன்னாள். கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு  அம்மா பட்ட அவமானத்தையும் சொன்னாள். அப்படியும் குரல் உடைந்த்து விட்டது.

கதை கேட்பது போல் கண்ணை மூடிக் கொண்டு கேட்டாள் கிழவி.

“இவ்வளவு சொன்னதுக்கப்புறம் நான் என்னத்தை சொல்றது. போயிட்டு வா”

“உங்களுக்கு உதவி இல்லாம விட்டுட்டுப் போகமாட்டேன்மா. என் புருஷனை வரச் சொல்லியிருக்கேன். நான் இல்லாத போது அவர் உங்களைப் பிள்ளை போலப் பாத்துப்பார்மா”

“ஆயிரம் சொன்னாலும் அவன் ஆம்பிளைடி!”

“இல்லம்மா…..”

“ஒண்ணு செய்… நான் மத்தியானம் தூங்கறச்சே போயிட்டு வந்துடு. ஒரு மணிக்குப் போனா ஐந்து மணிக்குள்ள வந்துடுவேல்லியோ? காபியை மட்டும் கலந்து இடது பக்கமா வைச்சிட்டுப் போ”

“அவர் இருப்பார்மா. மணியடிச்சா மறு நிமிஷம் வந்திருவாரு”

“ வேணாண்டி. முதல் முதல்ல நகை வாங்கப் போறேங்கிற.அவனையும் அழைச்சுண்டு போ. நல்ல காரியம்னு போகும் போது நந்தி மாதிரி நான் மறிச்சா எனக்குத்தாண்டி பாவம் தம்பதியா போய்ட்டு வாங்கோ!”

*

ஜ்வலிக்கிறதேடி!” கிழவியின் குரலில் ஆனந்தம் கூச்சலிட்டது. “இது என்ன டிசைன்? முத்துச் சரமா?…தக்கையாட்டம் இருக்கு இதுக்கு லட்ச ரூவா வாங்கிட்டானே. ஹூம். அவனும்தான் என்ன செய்வான். இப்போ தங்கம் இறக்கை கட்டிண்டுனா பறக்கிறது”

“போட்டுவிடுங்கம்மா!”

“நேக்குத்தான் கை எழாதே. வைதேகி வந்துட்டாளா?”

“சின்னம்மா இன்னும் ஆபீசிலிருந்து வரலை”

“சரி குட்டியைக் கூப்பிடு. இந்தா அதுக்கு முன்னால பூஜை ரூமுக்குப் போய் பெருமாள் படத்துக்கு முன்னாடி வைச்சு பிரார்த்தனை பண்ணி சேவிச்சுட்டு வா1”

“அம்மா! நான் எப்படி அங்க….”

“எல்லாம் போலாம் போ. என் அப்பாவே ஆலயப் பிரவேசத்துக்கு அழைச்சுண்டு போனவர்தான்”

ஆனாலும் அரசி அனுவையும் அழைத்துக் கொண்டுதான் பூஜை அறைக்குப் போனாள்.

அனுவின் கையில் சங்கிலியைக் கொடுத்து அரசிக்குப் போடச் சொன்னாள் கிழவி

“போடுனா, அப்பிடியே ஆணியில மாட்ட்றாப்ல போட்டு விடறதா? ஒண்ணு பத்தாணும் பத்து நூறாணும்னு சொல்லிப் போடணும்டி குட்டி!”

ஆனால் அனு கங்கிராஜுலேஷன்ஸ் என்று மட்டும் சொன்னாள்.

*

கிழவி போனதற்குப் பிறகு வேலையை விட்டாள் அரசி. பெருமாளை வணங்கிப் போட்டுக் கொண்டதுதான் என்றாலும் நாகத்தம்மனைப் போய்க் கும்பிட்டு நன்றி சொல்ல வேண்டும் போலிருந்தது. வெறுமனே சங்கிலி வாங்கவா இத்தனை பாடு. அதை நாலு பேருக்குக் காட்ட வேண்டும். அன்னிக்கு சந்தேகத்தோடு அம்மாவைப் பார்த்த அத்தனை பேரும் இப்போது ஆச்சரியத்தில் வாயடைத்துப் போக வேண்டும் , அதுவல்லவா கனவு, லட்சியம், பிரார்த்தனை

கொடைக்கு கிராமத்திற்குப் புறப்பட்ட போது கவனமாய் சங்கிலியைக் கழுத்தில் மாட்டிக் கொண்டாள். புடவைக்கு மேல் தெரிகிறார்போல் போட்டுக் கொண்டாள்.

செம்பகம்தான் முதலில் பார்த்தாள். “புதுசாடி அரசி!” என்று வியப்பில் கண்கள் விரிந்தன.

“தங்கமா?” என்று சேலைக்கு மேலே, சங்கிலிக்குக் கீழே, கையைக் கொடுத்துத் உள்ளங்கையில் வைத்துப் பார்த்தாள் கிருஷ்ணவேணி

“ஆமாம். இரண்டு பவுன். லட்ச ரூபா ஆச்சு!” என்றாள் அரசி பெருமிதத்துடன்,

“அம்புட்டுப் பணம் ஏது அவளுக்கு?. கவரிங்கா இருக்கும். சும்மா நம்பகிட்ட பிலிம் காட்டறா!” என்றாள் பூங்கோதை

“அசலோ நகலோ அழகா இருக்கு” என்றாள் தமயந்தி

“உனக்கேண்டி பொறாமை. அது அசல்தான்.” என்றாள் சத்தியவதி.

“அசல்தான் பாத்துக்கோ, என்று சங்கிலியைத் திருப்பி ஹால்மார்ககைக் காட்டினாள் அரசி

“க்கும் இதெல்லாம் நாம நம்பிருவமாக்கும்” என்றாள் பூங்கோதை

சற்று தூரத்தில் சாமி கும்பிட வந்த சாமிநாத பத்தர், நாட்டாமை சட்டநாதனுடன் அந்த வருஷ வெள்ளாமை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

“பத்தரே இங்கே வாரும்.” என்று கூவி அழைத்தாள் தமயந்தி. “உரசிப் பார்க்காம உம்மால நகை அசலா, நகலானு சொல்ல முடியுமா?” என்றாள்

“ ஏன் முடியாது? கண்ணால பார்த்தா எத்தனை சவரன், எத்தனை குந்துமணினு கூடக் கணக்குச் சொல்வேன். நாப்பது வருஷமா நகை செய்யறேன். அப்பாரு காலத்திலிருந்து இதானே எங்களுக்குச் சோறு” என்றவர் நகையை வாங்கிப் பார்த்தார். “அதுதான் ஹால் மார்க்னு போட்டிருக்கே.அரசாங்கமே சொல்லியிருச்சு. அப்புறம் நான் என்ன அண்ணாவி?”

“இருக்கட்டும். நீர் சொல்லும்”

கையிலிருந்த நகையை மீண்டும் ஒரு முறை பார்த்தார். சிறிது நேரம் கூர்ந்து பார்த்தார். குழந்தையைப் போலத் தடவிப் பார்த்தார். கையைக் குழித்துக் கொண்டு எடை போடுவது போல குலுக்கிப் பார்த்தார். சிகிச்சைக்கு வந்தவனை பார்க்கிற டாக்டர்  பார்வையாகப் பார்த்தார். அப்புறம் உறுதியான குரலில் சொன்னார்: “ஆமாம்!. இது அசல்தான். அதற்கப்புறமும் சந்தேகம்னா கடைக்கு வாங்க உரசியே பார்த்துடுவோம்”

*

ரசிப் பார்க்கவும் ஒரு சந்தர்ப்பம் வந்தது. ஒரு சாயங்காலம் சைக்கிளில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த முருகேசனை பின்னால் வந்த தண்ணீர் லாரித் தட்டிவிட்டுப் பறந்தது. தலைகுப்புற விழுந்தான் முருகேசன்.

சாலையோரம் சகதியில் கிடந்தவனை ஆட்டோவில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினாள் அரசி. அங்கே ஆயிரம் கேள்வி கேட்டார்கள். ஆக்சிடெண்ட் கேஸ் என்றால் போலீசுக்குச் சொல்லியாச்சா என்றார்கள். தண்ணி வண்டி நம்பர் தெரியுமா என்றார்கள். முருகேன் சைக்கிளிலிருந்து எப்படி விழுந்தான், இடப்பக்கமாகவா வலப்புறமா என்று விசாரித்தார்கள்.. “அதெல்லாம் எனக்குத் தெரியாது அவர் உசிரைக் காப்பாற்றுங்கள்!” என்று அரசி அழுதாள். ‘கவலைப்படாதீங்கம்மா காப்பாற்றிடலாம்’ என்றார் பெரிய டாக்டர்.

காப்பாற்றியும் விட்டார்கள். பின்னந்தலையில் சின்னதாய் காயம் இருந்ததால் தலைக்குள்ளே ரத்தக் கசிவு இருக்கிறதா என்று ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும் என்றார்கள். ‘ஆப்செர்வேஷன்’ என்று ஆஸ்பத்திரி படுக்கையில் இரண்டு நாள் வெறுமனே படுக்க வைத்திருந்தார்கள்.

ஆஸ்பத்திரி பில் வந்த போது அரசிக்கு அழுகை வரவில்லை. ஆனால் அடிவயிறு கலங்கியது. அத்தனை பணத்திற்கு எங்கு போவது எனத் தெரியாமல் திகைத்தாள். தயங்கித் தயங்கி கிழவியின் மகன் கிருஷ்ணனின் எண்ணை அழைத்தாள். அவர் இந்தியாவிலேயே இல்லை எனச் சொன்னார்கள். அந்த நெருப்பு நிமிஷத்தில் அவள் ஒரு முடிவெடுத்தாள்- சங்கிலியை விற்பதென்று.

*

ங்கிலியை வித்துட்டியே பிள்ளை” என்றான் முருகேசன். கண்ணீர் உதிர்ந்து சிந்திவிடவில்லை என்றாலும் கண்கள் கலங்கி நீர் திரண்டிருந்தது. “அதற்கு எத்தனை பாடு! அந்தக் கிழவியை அலம்பி,கழுவி குளிப்பாட்டி…. அந்தச் சங்கலி உன் கனவும்பியே அதை வித்துட்டியே..”

“அம்மாவுக்காக வாங்கினேன். உனக்காக வித்தேன். உன்னை விடவா அது பெரிசு? என்றாள் அரசி அடுப்பைத் துடைத்துக் கொண்டே.

அவளைப் பின்னாலிருந்து அப்படியே கட்டிக் கொண்டான் முருகேன். அவன் கண்ணீர் அவள் தோளில் உதிர்ந்தது

*

ந்த வருடம் நாகத்தம்மன் கொடைக்குப் போவதா வேண்டாமா என்று அரசிக்குக் குழப்பமாக இருந்தது. ஆஸ்பத்திரி செலவு ஆளைப் பாதி தின்றிருந்தது. ஆனாலும் அவன் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்தாளே ஆத்தா அவளைப் போய்ப் பார்த்து பொங்கல் வைக்கவில்லை என்றாலும் கையை உயர்ந்த்திக் கும்பிடாவது போட்டு வரவேண்டாமா?

ஆனால் அதை விட இன்னொரு கேள்வி அவளைக் குடைந்து கொண்டிருந்தது. அன்றைக்கு அந்தச் சங்கிலியைப் பற்றி அவ்வளவு பீற்றிக் கொண்டாகி விட்டது. சந்தேகப்பட்டவர்கள் வாயைச் சவால் விட்டு அடைத்தாயிற்று. இன்றைக்கு மொட்டைக் கழுத்தும் ரப்பர் வளையலுமாகப் போய் நின்றால் அத்தனை கண்ணும் கழுத்தைப் பார்க்கும். ஆயிரம் பேச்சு எழும். அந்த அவமானத்திற்குப் போகாமலே இருந்து விடலாம்.

முருகேசனிடம் யோசனை கேட்டாள். ‘இரு, பார்ப்போம்’ என்று இரண்டு வார்த்தை மட்டும் சொன்னான் அவன்.

சாயங்காலம் அவன் வந்த போது அவன் கையில் பிளாஸ்டிக் பொட்டலம் ஒன்றிருந்தது. அதைப் பிரித்த அரசி அதிர்ந்து விட்டாள். உள்ளே இருந்தது  தங்க நிறத்தில் ஒரு சங்கிலி!

“அசலா?” என்றாள்

“அசல் போல ஒரு நகல்”

“அப்டீனா?”

“கவரிங்தான் பிள்ளை. தங்கம் வாங்கக் காசு ஏது எனக்கு?”

“எதுக்கு இது இப்போ?”           

 “கொடைக்குப் போகத் தாவலை?

*

கொடைக்குப் போனார்கள். அப்போது போல இப்போதும் தலைப்புக்கு மேலே தவழ்கிறார்ப் போலத்தான் சங்கிலியை அணிந்திருந்தாள் அரசி. எதிரே வந்த முத்துப் பேச்சி, “புதுசா அக்கா?” என்றாள்

“ம்”       

“அசலா?”

“ஆமாம் தங்கம்தான். நாந்தான் அன்னிக்கே சொன்னேனே!” என்றார் அந்தப் பக்கமாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்த சாமிநாத பத்தர்.

அரசி மெல்லச் சிரித்தாள்.

கலைமகள் 90ஆம் ஆண்டு சிறப்பிதழ்

*** 

.             

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these