சந்தன மரம்

“ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியா இவ்வளவு குளிரும் என்று நான் நினைத்திருக்கவில்லை”

சிட்னியில் வந்திறங்கிய கலையரசன் சொன்ன முதல் வாக்கியம் இதுதான். ஆங்காங்கு வெளிறிய ஜீன்ஸும் கரு நிற டீஷர்ட்டும் அணிந்திருந்தாலும் அவர் ஐம்பதைத் தாண்டியவர் என்பதை அவர் முகம் அறிவித்தது. பாஸ்போர்ட் சொன்னதை விடப் பத்து வயதைக் கூட்டி அவர் தோற்றம் சொன்னது.

விமான நிலையத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கி அவரும் செல்வாவும் நடந்து கொண்டிருந்தார்கள். சில்லென்ற காற்று அவர்களைக் கடந்து நடந்தது.

“இதில் என்ன ஆச்சரியம்? ஜூன் ஜூலை எங்களது பனிக்காலம்.” என்ற செல்வா தான் அணிந்திருந்த கனத்த மேலாடையைக் கழற்றி நீட்டி “இதை வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள்” என்றான்.

“டிசம்பரில்தான் குளிர் காலம் என்று நினைத்திருந்தேன்.இப்போது கோடை என்ற ஞாபகத்தில் உள்ளே பனியன் கூட அணியவில்லை”

செல்வாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. புவியின் தென் கோளத்தின் பருவ நிலை இந்தியாவிலிருந்து மாறுபட்டது, இந்தியாவில் குளிரும் போது ஆஸ்திரேலியாவில் வெயில் கொளுத்தும் என்பதை உலக இலக்கியத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் கலையரசன் அறிந்திருக்க மாட்டாரா? கலையரசன் உலக இலக்கியம் பற்றி எழுதுகிற எழுத்தாளர். நிறைய வாசித்திருப்பார் என்ற எண்ணம் அவர் எழுத்தைப் படித்த எவருக்கும் எழும்.

செல்வாவும் அவரை நிறையவே படித்திருந்தான். படித்துவிட்டு உடனுக்குடன் மின்னஞ்சல் அனுப்புகிற தீவிர வாசகன். கலையரசன் மீதான பிரமிப்பும் ஈர்ப்பும்தான் அவரை ஆஸ்திரேலியாவிற்கு அழைக்கும்படி செல்வாவை உந்தியது. அவரைச் சந்திக்க வேண்டும், அவரோடு நாள் கணக்கில் இலக்கியம் பேச வேண்டும். அவர் உரையாடலில் வந்து விழும் ரசனையின் கூறுகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். கவிதை நூல் வெளியீடு என்பது ஒரு சாக்கு. கெளரவமான முகாந்திரம்.

“ரொம்பக் குளிருகிறதா? சூடாக ஏதாவது குடிக்கிறீர்களா? வழியில் நல்ல காபிக் கடைகள் இருக்கின்றன”

“நான் சென்னைக் குளிருக்கே காபி குடிப்பதில்லை. நான் குடிப்பதெல்லாம் வேறு”.

புரிந்து கொண்ட செல்வா புன்னகைத்தான்.

“வழியில் கிடைக்குமா?”

என்ன என்பது போல் பார்த்தான் செல்வா.

“ரெமி மார்ட்டின்”

அன்று மாலை வேலையிலிருந்து திரும்பும் போது டான் மர்பியிலிருந்து ரெமி மார்ட்டின் வாங்கி வந்தான் செல்வா. அவன் கிரெடிட் கார்ட் கணக்கில் 90 டாலர் ஏறியிருந்தது.

*

 ன்பு மகன் செல்வாவிற்கு.

அம்மா எழுதுவது. மகனே சுகமாக இருக்கியா? ரெண்டு நாளா மழையும் காத்துமா வீசுது. முன்பக்க வேலி சரிஞ்சு கிடக்கு. சுவரெல்லாம் ஈரம் படிஞ்சு கிடக்கு.கெதியா பராமரிப்பு பண்ணவேணும். இல்லையெண்டால் வீடும் விழுந்திரும்.

மகன்,எனக்கு ஒரு கிழமையா சுகமில்ல.விழுந்திட்டன். காயம் ஏதுமில்ல. ஆனா இடுப்புக்குக் கிட்ட நோகுது. குணா டொக்டரிட்டக் காட்டி மருந்து வாங்கிட்டன். இடுப்பு நோ சரியாகாட்டா ஒப்பிரேசன் பண்ணவேணுமெண்டு சொன்னார்.

மகன்,கொஞ்சம் காசனுப்பி வை ராசா. உன்ர கஸ்டம் தெரியும். ஆனாலும் எனக்கு உதவ வேற என்ன உறவு இருக்கு?

சனிக்கிழமை கோல் எடு மகனே.

உன்னில் உயிரான அன்பான அம்மா.

*

னிக்கிழமை அம்மாவை அழைக்க முடியவில்லை. அன்றுதான் செல்வாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா. வெள்ளிக்கிழமை முழுதும் குறுஞ்செய்தி அனுப்பியும், சனிக்கிழமை பகலில் போன் அழைப்புக்கள் விடுத்தும் கூட்டம் அவ்வளவு இல்லை. பஞ்சாபி டாபாவிலிருந்து வாங்கி வந்திருந்த சமோசாக்களில் பாதிக்கு மேல் மீந்திருந்தன. செல்வாவிற்கு ஏமாற்றம்தான். ஆட்கள் வராததைப் பற்றி அல்ல. கலையரசனின் உரை பெரும் ஏமாற்றம்.

கலையரசன் ஒரு மணி நேரம் பேசினார் என்பது உண்மைதான். ஆனால் அதில் அவர் செல்வாவைப் பற்றிப் பேசியது கடைசி ஐந்து நிமிடம்தான். அதுவும் ஆளைப் பற்றின பேச்சு. எழுத்தைப் பற்றி அதிகம் இல்லை. அவர் பேச்சின் பெரும்பகுதி கலகக்காரன் என்ற தன் பிம்பத்தை நிலைநிறுத்திக் கொள்வதாக இருந்தது. கவிதை என்றால் என்ன என்ற கேள்வியோடு ஆரம்பித்த பேச்சு திருக்குறள் அறநூல், அறநூல்கள் இலக்கியமாகாது என்று நிராகரித்தது.பாரதியில் உணர்ச்சி மிகை, பாரதிதாசன் சொற்காமம், மகாகவியின் குறும்பாவைத் தவிர மற்றவை நிராகரிக்கப்பட வேண்டியவை, கண்ணதாசனில் கூறியது கூறல் அதிகம், வைரமுத்துவின் வரிகளில் வாழ்க்கை அனுபவம் இல்லை, எனச் சகலரையும் சாடினார். புதுக்கவிஞர்களில் எவரையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் தன்னுடைய எழுத்துக்கள் எப்படி உலக இலக்கியத்திற்கு நிகரானவை என்பதை விவரித்தார்.

கூட்ட இறுதியில் அவர் தனது புத்தகங்களை விற்க முயன்றார். அவர் சென்னையிலிருந்து கட்டிக் கொண்டு வந்த பிரதிகளில் கால் பங்கு கூட விலை போகவில்லை. எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்தார்.

அன்றிரவு அவருக்கு இன்னொரு ரெமி மார்ட்டின் வேண்டியிருந்தது.

*    

தவைத் திறந்து பார்த்த கலையரசனுக்கு திக்கென்று இருந்தது. காரைக் காணோம்!

“ஐயோ காரைக் காணோமே?”

செல்வா பதறவில்லை. புன்னகைத்தான். “கார் என்னுடையதில்லை. இந்த வீட்டில் என்னோடு தங்கியிருக்கும் நண்பருடையது. நேற்றிரவு ஊரிலிருந்து வந்தார். இன்று விடிகாலை எழும்பி காரை எடுத்துக் கொண்டு வேலைக்குப் போய்விட்டார். அவர் வேலை செய்யும் தொழிற்சாலை ஊருக்கு வெளியில் இருக்கிறது!”

கலையரசன் அதிர்ந்தார். ஆனால் காருக்காக இல்லை.

“இந்த வீட்டில் இன்னொருவர் இருக்கிறாரா?” என்றார் திகைப்புடன்

“நாங்கள் நால்வர்! இப்போது உங்களோடு ஐவரானோம்!” என்றான் செல்வா

கலையரசன் கம்பனை ரசிக்கவில்லை. “மற்றவர்கள் எங்கே?”

“ஒருவர் மெல்பேர்னில் சினேகிதியைப் பார்க்கப் போயிருக்கிறார். மற்றவர் இலங்கை போயிருக்கிறார்.இங்கே குளிரில் கிடந்து உருளுவானேன்?”

“இங்கேயும் கூடவா திருவல்லிக்கேணி சேவல் பண்ணைகள்?”

“ஸ்டுடியோ என்ற தனி அறை கிடைக்கும் சிரமம் இல்லை. ஆனால் வார வாடகை 150 டாலர். அதிக இடம் இருக்காது. ஆள் துணை இராது. இங்கே, ஆஸ்திரேலியாவில் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் ஒன்று இருக்கிறது. அது வெள்ளைத் தோலுக்குக் கீழ் ஒளிந்து கொண்டிருக்கும். எதிர்பாராத நேரத்தில் எப்போதாவது வெளிப்படும். அதன் பெயர் நிறவெறி. அதனால் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இந்த வீட்டிற்கு வாரத்திற்கு 600 டாலர் கொடுக்கிறோம். தலைக்கு 150. தனியறையாக இருந்தாலும் அவ்வளவு ஆகும்.”

அறைத் தோழர்கள் அப்படி ஒன்றும் அன்னிய பாவத்தோடு இல்லை. எளிதாக ஒட்டிக் கொண்டார்கள். ஏராளமாகப் பேசினார்கள். தமிழக அரசியல், சினிமா கிசுகிசுகளை விசாரித்து உறுதி செய்து கொண்டார்கள். எழுத்தாளர்களைப் பற்றிய பகடிகளுக்கு விழுந்து விழுந்து சிரித்தார்கள். சமைத்துக் கொடுத்தார்கள். சேர்ந்து குடித்தார்கள்.  குடித்ததற்குப் பிறகு இன்னும் அதிகமாகப் பேசினார்கள்.

காரை இரவல் கொடுத்திருந்த அருணன் கலகலப்பானவாரக இருந்தார். அவருக்கு வார விடுப்பு வந்த நாளில் ஃபிட்ஸ்பாட்ரிக் பூங்காவிற்கு போகலாம் என்று அழைத்தார்.

“பூங்காவிற்கா?” சுணங்கினார் கலையரசன்.

“பூங்கா என்றால் பூச்செடிகளும், புதர்களும் நிறைந்த இடமல்ல. விரிந்த புல்வெளியும் நெடுமரங்களும் ஓடும் ஓர் ஆறும் கொண்ட சிறு வனம். வந்துதான் பாருங்களேன்.”

அவர்கள் பூங்காவில் நுழைந்த போது முகத்திற்கு நேரே ஒரு பிளாஸ்டிக் தட்டு பறந்து வந்தது. லாகவமாகப் பிடித்து அதை வீசிய குழந்தைகளிடமே திருப்பி வீசினார் அருணன். குழந்தைகளும் பெரியவர்களுமாக ஒரு குடும்பம் அங்கு ஃபிரிஸ்பீ ஆடிக் கொண்டிருந்தார்கள். “ நீங்களும் எங்களோடு சேர்ந்து கொள்ளுங்களேன்” என்றார் அவர்களில் ஓர் இளம் கிழவர். “நன்றி என்று புன்னகையோடு கடந்தார் அருணன். ஆடு மேய்ப்பவர்கள் தோளில் தொரட்டியைச் சாய்த்துக் கொண்டு போவது போல தூண்டிலைத் தோளில் சாய்த்துக் கொண்டு சிலர் போய்க் கொண்டிருந்தார்கள். “குளிர்காலம். அதனால் மீன்கள் அதிகம் கிடைக்கும்” என்றான் செல்வா

நடந்து கொண்டிருந்த அருணன் ஒரு மரத்தின் முன் நின்றார். வானைக் நோக்கிக் கிளைகள் உயர, தலை புதர் போல அடர்ந்த மரம். “இது என்ன மரம் தெரிகிறதா?” என்றார். பதிலை எதிர்பார்க்காமல் அவரே அதையும் சொன்னார்:

“சந்தன மரம்”

கலையரசன் அருகே சென்று முகர்ந்து பார்த்தார்.

“சந்தனத்திற்கு மணம் எங்கிருந்து வருகிறது தெரியுமா? சந்தனமரம் ஓர் ஓட்டுண்ணி அதாவது புல்லுருவி. இதன் வேர்கள் அதன் அக்கம் பக்கத்தில் உள்ள தாவரங்களின் சத்துக்களை உறிஞ்சி வளரும்”

“நீங்கள் பட்ட வகுப்பில் பாடனி படித்தீர்களா?”

“ம். என் முதல் பட்டமே அதுதான். பின் இங்கு வந்து கணிப்பொறிக்குள் சிக்கிக் கொண்டேன்” என்றார் அருணன்

“நான் தாவர இயலுக்குப் பயந்து தமிழ் இலக்கியத்தில் குதித்து விட்டேன்”

ஹா ஹா என்று சிரித்தார் அருணன். ஆனால் இறுகிய முகத்தோடு செல்வா சொன்னான் “இலக்கியத்திலும் புல்லுருவிகள் உண்டு”

கலையரசன் முகம் கறுத்தது. “என்ன!” என்றார் உஷ்ணமாக

“நற்றிணையில் நல்வெள்ளியார்…” என்று ஆரம்பித்த செல்வாவைக் கையுயர்த்தி நிறுத்தினார் கலையரசன். “போகலாம்” என்றார்

*    

போகிற வழியில் Rum Rebellion என்ற மதுக் கூடத்தில்  வண்டியை நிறுத்தினார் அருணன்.

“ரம் ரெபலியன் இப்படி ஒரு பேரா?” என்றார் கலையரசன்

“ஒரு காலத்தில் இங்குள்ள படைகளுக்கு சம்பளத்தில் ஒரு பகுதி சாரயமாகக் கொடுக்கப்பட்டது. அதன் விளைவு என்னாயிற்றுத் தெரியுமோ? ஒருநாள் அந்தப் படைகள் கிளர்ச்சி செய்து அரசாங்கத்தையே கைப்பற்றிவிட்டார்கள்!”

“அடடா!”

“அதற்கு வரலாற்றில் ரம் ரெபலியன் என்று பெயர். அந்தப் பெயர் கவர்ச்சியாக இருக்கவே கடைக்கும் வைத்து விட்டார்கள்.”

கிளர்ச்சியூட்டக் கூடிய விஷயங்கள் கடைக்குள் இருந்தன.கலையரசனும் அருணனும் கோப்பைகளைக் காலி செய்த வேகம் செல்வாவிற்கு கவலை தந்தது. செல்வா குடிக்கவில்லை. அவன் சாதாரணமாகவே குடிப்பதில்லை. அம்மாவிற்குப் பணம் அனுப்ப முடியவில்லை என்ற பாரம் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. கிளர்ச்சிக்கு அருணன்தான் கட்டணம் செலுத்தினார்.

அவரிடமிருந்த கார்ச் சாவியை வாங்கிக் கொண்டு செல்வா வண்டியைச் செலுத்த ஆரம்பித்தான். வார நாள் என்பதால் சாலை காலியாக இருந்தது. அருணனின் கிளர்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. உடலெங்கும் தளர்ச்சி பரவ, ஐந்து நிமிடத்தில் கண்கள் செருக, அவர் தூங்கிப் போனார் 

 “நான் ஓட்டுகிறேன்  என்றார் கலையரசன்.

“நீங்கள் ஓட்ட முடியாது!” என்றான் செல்வா. “குடித்தவர்கள் இங்கு வண்டி ஓட்ட முடியாது”

“நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். என்னை நீங்கள் தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் குடிப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை. நான் குடிக்கிறவன்தான். ஆனால் குடிகாரான் இல்லை” என்று உரத்த குரலில் இரைந்தார்

நான் அவமதிக்கிறேனா? செல்வாவின் மனக் கண்ணில் அவனது கடன் அட்டை ஸ்டேட்மெண்ட் வந்து போயிற்று.

சென்னை -சிட்னி விமானக் கட்டணம் – 1800 ஆஸ்தி டாலர்

ரெமி மார்ட்டின் 2                       180 ஆஸ்தி டாலர்

விழாச் செலவு                        600 ஆஸ்தி டாலர்

வெளியில் சாப்பிட்ட வகையில்          70 ஆஸ்தி டாலர்

ஷாப்பிங்                               120 ஆஸ்தி டாலர்

2770 ஆஸ்திரேலிய டாலரை இலங்கைப் பணத்திற்கு மனக் கணக்காய் மாற்றிப் பார்த்தான் மூச்சடைத்தது. ஆறரை லட்சம் ரூபா செலவழித்து அவமானப்படுத்த நான் கோடீஸ்வரன் அல்ல ஐயா. உயிருக்குத் தப்பி வந்த அகதி. வாய் நுனி வரை வார்த்தை வந்து விட்டது. அதிதியிடம் வார்த்தையாடுவது அத்தனை நாகரீகமானதல்ல என்று உள்ளிருக்கும் குரல் தடுத்தது.

“நானா உங்களை அவமானப்படுத்துகிறேன்?” என்றான் மெல்லிய குரலில். ஆனால் அது அவன் காதுக்கே கேட்கவில்லை.

“நிறுத்து. வண்டியை நிறுத்து!” என்று இரைந்தார் கலையரசன். “நான் ஓட்டுகிறேன் அல்லது இறங்கிக் கொள்கிறேன்!”

விருந்தினராக வந்தவரை எப்படி நடுவீதியில் இறக்கி விடுவது?செல்வா பின் சீட்டில் இருந்த அருணனைப் பார்த்தான். அவர் உறக்கத்தில் இருந்தார்.

வெறி பிடித்த மாதிரி பறந்தது கார். வெறி பிடித்தது காருக்கல்ல. கலையரசனுக்குள் கிளர்ச்சி தொடங்கியிருந்தது.

*

குடித்திருக்கிறீர்களா?” காவல் அதிகாரி கண்ணியமான தொனியில்தான் கேட்டார்..

“இவர்கள் குடித்திருக்கிறார்கள். நானில்லை” என்றான் செல்வா.பொய்தான் ஆனால் ஓட்டியவர் குடித்திருந்தார் எனத் தெரிந்தால் சிறைதான். விருந்தாளியாக வந்தவரை சிறைக்கு அனுப்ப மனமில்லை

“ஓட்டியது யார்?”

“நான்தான்”

அதிகாரி செல்வாவை நிமிர்ந்து பார்த்தார். பின் சிரித்துக் கொண்டே சொன்னார்:” உங்கள் சுவாசம் உண்மை சொல்கிறது; ஆனால் கண்கள் பொய் சொல்கின்றன”

“அவர் குடிக்கவில்லை. அவருக்கு அந்தப் பழக்கம் இல்லை. நாங்கள்தான் குடித்தோம்.பேச்சுவாக்கில் சற்று அதிகமாகத்தான் போய்விட்டது. ஆனால் குடிப்பது குற்றமில்லையே” என்றார் அருணன். தெளிந்திருந்தார்.

“இலங்கையா?” என்றார் அதிகாரி.

“நான் இந்தியன். ஆனால் ஆஸ்திரேலியன்” என்று அருணன் அடையாள அட்டையை எடுக்க ‘வாலட்’டை வெளியில் எடுத்தார்

“நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் முப்பது கீ.மி கூடுதலாக ஓட்டியிருக்கிறீர்கள்” என்று காமிரா பதிந்த காட்சிகளைக் காட்டினார். தேதி, நேரம், இடம், பயணித்த திசை, வேகம், காரின் எண் என அது ஜாதகம் முழுமையும் பதிந்திருந்தது

“ஃபைன் கட்டி விடுங்கள். 2200 டாலர்”

அதிதியை ‘அவமதித்த’ கணக்கில் இன்னொரு ஐந்து லட்சத்து இருபதாயிரம். உள்ளுக்குள் நொறுங்கினான் செல்வா.

*

டை அதிகமாக இருக்கிறது. பணம் கட்டிவிடுகிறீர்களா?” விமான நிலைய கவுண்டரில் இருந்த பெண்மணி கலையரசன் முகத்தைப் பார்த்தாள். கலையரசன் செல்வாவைப் பார்த்தார்.

“முடியாது சார். என்னால் முடியாது. ஏற்கனவே நொறுங்கி விட்டேன்” செல்வா அடங்கிய குரலில்தான் சொன்னான். ஆனால் அதனுள் உறை போட்ட சினம் ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது.

என்ன செய்யலாம் என்பது போல் பார்த்தார் கலையரசன்

“பெட்டியில் புத்தகம் மாதிரி ஏதாவது இருந்தால் எடுத்து விடுங்கள். நான் அவற்றைப் பின்னர் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்”

கலையரசன் தயங்கினார். வேறு வழியில்லாமல் போன போது பெட்டியைத் திறந்தார். அதனுள் புத்தகங்களில்லை. ஆனால் அந்த வீட்டில் கடந்த பதினைந்து நாளில் காணமல் போன பல அங்கிருந்தன. அருணனின் காமிரா, அவர் பார்ட்டிக்கு அணிந்து செல்லும் பிளேசர், இன்னொரு அறை நண்பனின் சிடி பிளேயர், செல்வாவின் இஸ்திரி பெட்டி, செல்வா சென்ற மாதம் வாங்கிய டீ ஷர்ட்கள் மூன்று.

*

விமான நிலையத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிய போது தோளிலிருந்து வேதாளம் இறங்கியதைப் போலிருந்தது. அறைக் கதவைத் திறந்தான் ஒரே கூளமாக இருந்தது. ஒழித்து அள்ள, பெருக்கித் தள்ள, அலுப்பாய் இருந்தது. அவற்றை அப்படியே வாரிக் கீழே போட்டுவிட்டு படுக்கையில் விழுந்தான் செல்வா. தூக்கம் கண்ணை அமட்டியது.

விழித்த போது கைபேசியில் பதிலளிக்காத அழைப்புகள் இரண்டு இருந்தன. இரண்டும் சபேசனுடையவை. அழைப்பை எடுக்காததால் அவன் வாட்ஸப்பில் செய்தியும் அனுப்பியிருந்தான்.

“அம்மாவைக் கண்டு காசு கொடுத்திட்டன். அவசரமில்லை.நீ ஆறுதலாகக் கொடு. கலையரசன் இங்கும் வரவிருக்கிறார். கோலில் உன்னைப் பற்றியும் கதைத்தார். பத்து நாள் இங்கு நிற்பார். பின் கோல் எடுக்கிறேன்”

செல்வா உரக்கச் சிரித்தான். திருகோணமலையில் சந்தனமரம் வளருமா? என அருணனிடம் கேட்டான். அவர் விழிப்பதைப் பார்த்து இன்னொருதரம் உரக்கச் சிரித்தான்.

அமுதசுரபி டிசம்பர் 2022

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these