தமிழுக்கும் யானை என்று பேர்

என் ஜன்னலுக்கு வெளியே மணியோசை கேட்டது.டாங் டாங் என்று கணீரென ஒலிக்கும் கோயில் மணி அல்ல.சிணுங்கிச் சிணுங்கி அடிக்கும் சைக்கிள் மணியும் அல்ல.இனிமையும் எடுத்து வைக்கும் அடிக்கேற்ப லயமும் கொண்டு ஒலிக்கும் யானையின் மீது அணிவிக்கப்பட்ட மணி.

ஏனென்று தெரியாது. ஆனால் எனக்கு இளம் வயதிலிருந்தே யானை மீதொரு ஈர்ப்பு, அம்மா ஆலயம் செல்லும் போதெல்லாம் அவரோடு ஒட்டிக் கொண்டு செல்வேன். ஆண்டவனை வேண்ட அல்ல. யானையை சீண்ட.

சீண்ட என்றால்  சினமூட்ட அல்ல. வேடிக்கையாய் விளையாடிப் பார்க்க. ஆரம்பத்தில் அத்தனை பெரிய உருவத்தைப் பார்த்து அச்சமாகத்தான் இருந்தது. நடுங்கிக் கொண்டே நான் வாழைப்பழத்தை நீட்டிய போது துதிக்கையை நீட்டி ஏந்திக் கொண்டது. அப்படி இரண்டொருநாள் அதற்குத் தின்னக் கொடுத்ததும் அது என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டது. அல்லது அப்படி நான் நம்பினேன். என் நம்பிக்கைக்குக் காரணம் அதன் தும்பிக்கை. என்னைப் பார்த்ததும் அது தன் தும்பிக்கையை உயர்த்தி ஒரு ஹலோ சொல்லும். அப்படி எனக்கு ஒரு பிரமை

அது பிரமை அல்ல பிரியம் என்று பாகன் சொன்னார். யானைக்கு ஞாபக சக்தி அதிகம் அது ஆட்களை இடத்தை தாவரங்களைச் சூழலை அடையாளம் கண்டு கொள்ளும் ஆற்றல் உடையது என்று சொன்னார். என்னால் உடனே அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னைக் குளிர்விக்க ஏதோ சொல்கிறார் என்றுதான் நினைத்தேன்.

பின்னர் புத்தகங்களைப் புரட்டிய போது உண்மை என்று உணர்ந்தேன். புத்தகம் யானையைப் பற்றிச் சுவையான தகவல்களைச் சொல்லியது. நிலத்தில் வாழும் உயிரினங்களிலேயே யானையின் மூளைதான் பெரியதாம் ஐந்து கிலோ (மனித மூளை 1.5 கிலோ) அது அமைப்பிலும் நுட்பத்திலும் சிறந்ததாம்

புத்தகம் சொன்ன விவரம் ஒன்று என்னை வெட்கமுறச் செய்தது. நன்கு வளர்ந்த யானை நாளொன்றுக்கு 140கிலோ  முதல் 270 கிலோ வரை உணவு உண்ணுமாம். அதனிடம் விரலளவு சிறு பழத்தை நீட்டிவிட்டு அந்தப் பேருயிரின் பசி போக்கியதாய் பெருமை கொள்கிறோம்

இந்த உணவைத் தேடித்தான் காடெல்லாம் அலைகிறது யானைக் கூட்டம். பசியாற ஒரு நாளைக்குப் பதினாறு மணி நேரம் உணவு தேடி உலவுகிறது, ஓடுகிறது, அங்குமிங்கும்  அலைகிறது அது. ஏனெனில் ஒட்டு மொத்தமாக அத்தனை உணவும் அதற்கு ஒரு இடத்தில் கிடைப்பதில்லை யானை மாமிசம் தின்னாது. மரங்களைத் தின்னும். இன்னொரு விலங்கை வீழ்த்தித் தின்னும் வழக்கம் அதற்கில்லை. அதனால் வேட்டையாடாது. வாழையும் கரும்பும் அதற்கு விருப்பம் என்றாலும் புல்லும் புதரும் கூட விலக்கல்ல

பானை வயிற்றையும் பசியையும்  படைத்த இறைவன் இன்னொரு வஞ்சகமும் செய்து வைத்தான் யானைக்குச் செரிமான சக்தி குறைவு. தின்றதில் நாற்பது விழுக்காட்டை அது கழிந்து விடும்.பசியைக் கொடுத்த பாவி ஜீரண சக்தியையும் சேர்த்தே அல்லவா கொடுத்திருக்க வேண்டும்?

கனல் போல் சினம் எனக்குள் கனன்றது. ஓர் உரையாடலில் இந்த வெப்பம் வெளிப்பட்டபோது நண்பர் சொன்னார் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது நண்பா. கல்லுக்குள் தேரைக்கும் உணவை வைப்பவன், யானைக்கா தீனி தர மறுப்பான்? இடம் விட்டு இடம் பெயர்கையில் வழியெல்லாம் கழிவதால் வனம் பெருகுகிற்து என்றார் அவர். வனமா? வளமா? என்றேன். வனம் வனம் என்றார் அவர். புரியவில்லை என்றேன். வழிநெடுக யானையின் கழிவில் இருந்து விழும் விதைகள் அதையே உரமாகக் கொண்டு மரங்களாகத் தழைக்கின்றன. புவியில் உள்ள காடுகளில் பாதிக்கு மேல் யானைகளால் உருவானவை என்றார். அதற்குள் ஒரு சூட்சமம் இருக்கிறது அது யானைகள் இன்றி வனங்கள் இல்லை. வனங்கள் இன்றி யானைகள் இல்லை. காடுகள் அழியுமானால் இந்த கஜங்களும் அழியும் அதன் ஆரம்பம் அருகில் வந்துவிட்டது.

வேளாண்மை, விடுதிகள் என்று காடுகளை அழித்து வருகிறோம். வேறு வழியில்லாமல் யானைகள் உணவு தேடி ஊருக்குள் வருகின்றன.காட்டில் வாழும் எந்த விலங்கும் யானையை அழிப்பதில்லை மனிதனைத் தவிர என்றார் அவர்

சினேகிதரின் சொல் சிந்தனையைக் கிளர்த்தியது.மனம் என்னும் வனத்திற்குள் யானைகள் உலவத் தொடங்கின. எத்தனை பெரிய உடல்! தூணைப் போன்ற கால்களில் எத்தனை வலிமை! தூக்கி வைத்தால் மனிதன் தூளாக நொறுங்கிப் போவான். யாருக்குண்டு அதன் துதிக்கை! விருட்சங்களை வேரோடு கெல்லி வீசும் வலிமையும். புல்லைக் கூடப் பூப்போல கொய்யும் நளினமும்.தும்பிக்கைக்கு உண்டு. மனிதனை விட மூன்று மடங்கு பெரிய மூளை! எல்லாம் இருந்தும் யானையை மனிதன் அடிமைப்படுத்திவிட்டானே!  அடிமைப்பட்டதற்குக் காரணம் தன் வலிமையைத் தானே உணராத அறியாமையா? அல்லது அணையாப் பசியா? பசிவந்தால் பத்தும் பறந்துவிடும். யானையுமா?

கேள்விகளால் கிறங்கிப் போனவன் கொஞ்சம் கொஞ்சமாய் உறங்கிப் போனேன். நிசியில் விழிப்புக் கொண்டேன். நெஞ்சுக்குள் இன்னொரு யானை என்னை எழுப்பி உட்கார்த்தியது

அந்த யானையின் பெயர் தமிழ். யானையைப் படைத்த அடுத்தநாள்  ஆண்டவன் தமிழைப் படைத்திருக்க வேண்டும்.அல்லது யானைப் பார்த்த மனிதன்தான் அதைப் போலத் தமிழை உருவாக்கியிருக்க வேண்டும் அதனால் தமிழ்தான் சின்னத் தம்பி.

ஊகத்தில் உரைக்கவில்லை இதனை. யானையைக் குறிக்கத் தமிழில் 170 சொற்கள் இருக்கின்றன. இணைந்தும் நெருங்கியும் வாழ்ந்திருந்தால்தான் இது சாத்தியம். பள்ளிக்கு ஒரு பெயரும், பாட்டன்/பாட்டி நினைவில் ஒரு பெயரும், ஃபாஷனாக ஒரு பெயரும், கூப்பிட ஒரு பெயரும், கொஞ்ச ஒரு பெயருமாக எத்தனை சொற்களில் நம் வீட்டுக் குழந்தைகளை அழைக்கிறோம்

யானையைப் போலத் தமிழும் அழகு. அதைப் போல கம்பீரம். அளவைப் பார்த்தால் ஓர் அச்சம். ஆனால் பழகிவிட்டால் விளையாடிப் பார்க்க விளையும் ஆவல்.  கவிதை காவியம் இலக்கியம் என வனப்பு மிக்க வனத்தை உருவாக்கும் வரம்.  இன்னும் இன்னும் என்று  எப்போதும் ஒரு பசி. அந்தப் பசியிலும் எவரையும் வேட்டையாடி வீழ்த்தாத தனிப் பெரும் கருணை. கூட்டத்தில் வாழ்வதில் நாட்டம். யானைக்கு வயது 70. தமிழுக்கும் ஆயுசு கெட்டி. என்றாலும் அழிந்து விடுமோ என இடையறாது ஓர் அச்சம். அத்தனை வலிமை இருந்தும் அடிமைப்பட்டுவிட்ட துயரம்.

யானைகளின் வாழ்விடங்கள் சுருங்கி வருகின்றன. தமிழுக்கோ வாழ்வில் இடம் சுருங்கிக் கொண்டு வருகின்றது.

காப்போமா?

பிப்ரவரி 18, 2019 புதிய தலைமுறைக் கல்வி இதழ்

 

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these