குடிசையிலிருந்து கோடீஸ்வரனாக…

தில்லிக்குப் பறந்து கொண்டிருந்தோம். என்னுடன் பணிபுரிபவர்களும், அவர்களில் ஓரிருவர் பெண்கள், உடன் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆரம்பித்தது ஒரு சர்ச்சை

விமானத்தில் பயணம் செய்பவர்களுக்குத் தெரியும். விமானம் கிளம்பி சற்று உயரே போனதும், கிட்டத்தட்டப் பாதிப் பயணம் முடிந்திருக்கும் நிலையில், பைலட்கள் அமர்ந்திருக்கும் அறையிலிருந்து அறிவிப்புகள் வரும் ஒலிபெருக்கி வழியே  விமானி பேசுவார். வரவற்பாக ஒரு வார்த்தை, வானிலை, விமானம் பயணித்துக் கொண்டிருக்கும் உயரம், சேருமிடத்தை உத்தேசமாக அடையும் நேரம் இப்படிச் சிலவற்றைச் சொல்லுவார். அப்படி ஒரு அறிவிப்பு வந்தது. பேசியவர் பெண். அதாவது விமானம் ஓட்டிக் கொண்டிருந்தது ஒரு பெண்மணி.

என் நண்பர் பதறிப் போனார். “அடடா! இது முதலிலேயே தெரியாமல் போச்சே, விமானம் ஓட்டிக் கொண்டிருப்பது ஒரு பெண்ணா!” என்று மிரண்டார்.

“ என்ன விஷயம்?” என்றேன் நான்

“இல்லை பத்திரமாக போய்ச் சேருவோமா? இன்னும் ஒரு மணி நேரப் பயணம் இருக்கிறதே!”

“ ஏன் இந்தக் கவலை?””

“பெண் ஒருவர் விமானம் ஓட்டுகிறாரே, சரியாக ஓட்டுவரா என்று எனக்கு பயமாக இருக்கிறது”

என் அருகில் இருந்த பெண் சகா பிலு பிலுவென்று பிடித்துக் கொண்டார். “எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்? பெண்கள் இப்போது விண்வெளிக்கே சென்று வருகிறார்கள்.”

“அது வேறம்மா” என்றார் நண்பர்

“என்ன வேற? பெண்கள் கார் ஓட்டுகிறார்கள், விவசாயம் செய்கிறார்கள், தொழிற்சாலைகள் நடத்துகிறார்கள், கிரிக்கெட் ஆடுகிறார்கள், பிரதம மந்திரியாக, ஜனாதிபதியாக, முதலமைச்சராக இருக்கிறார்கள். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஆண்கள் செய்யக் கூடிய எந்த வேலையையும் பெண்களால் செய்ய முடியும்”

நண்பர் ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

நான் குறுக்கிட்டுச் சொன்னேன். “ஆண்கள் செய்யக் கூடிய எந்த வேலையையும் பெண்கள் செய்ய முடியும். அதுமட்டுமல்ல, ஆண்களால் செய்ய முடியாத ஒன்றையும் கூடுதலாகப் பெண்களால் செய்ய முடியும்” என்றேன்

நண்பர் என் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். “ ஒரு மனித உயிரைத் தங்கள் உடலுக்குள் வைத்து உருவாக்கி உலகிற்குக் கொடுக்க முடியும். ஆண்களால் அது ஒரு போதும் முடியாது!”

நண்பர் மெளனமாகிவிட்டார்.  ஆம் ஆண்களால் ஒரு போதும் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியாது. அம்மா என்கிற அந்த உன்னத இடத்தை இயற்கை பெண்களுக்கு மட்டுமே வரமளித்திருக்கிறது

உடலுக்குள் வைத்து மட்டுமல்ல, உள்ளத்திற்கு உரம் ஊட்டியும் வளர்ப்பவர்கள் அவர்கள். உலகில் பல சாதனையாளர்களை உருவாக்கியதில் அவர்களின் அன்னையருக்குப் பெரும் பங்குண்டு

ஓர் உதாரணம் எஸ்.எஸ். வாசன்.

ஆனந்த விகடன் பத்திரிகையின் உரிமையாளராகவும் ஜெமினி ஸ்டுடியோவின் நிறுவனராகவும், வசூலில் சாதனை படைத்த படங்கள் பலவற்ற்றின் தயாரிப்பாளராகவும் விளங்கிய ஸ்ரீநிவாசன் என்ற எஸ்.எஸ்.வாசன், ஏழ்மையில் பிறந்தவர். நான்கு வயதிருக்கும் போதே தந்தையை இழந்தவர். முழுக்க முழுக்க தாயினால் வளர்க்கப்பட்ட சாதனையாளர்.

வாசனின் தந்தை மறைந்த போது, தந்தையின் மூத்த தாரத்தினர், சொத்தில் பெரும் பகுதியை தங்கள் வசம் வைத்துக் கொண்டு, இளைய தாரமான வாசனின் தாயாருக்கும், வாசனுக்கும் ஒரு மிகச் சிறிய பங்கை கொடுக்க முன் வந்தார்கள். அந்த அநிதீயை ஏற்க மறுத்த வாசனின் தாய் வாலாம்பாள்  அதையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு மகனையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார். ஊருக்கு வெளியில் குடிசை போட்டுக் கொண்டு இட்லி வியாபாரம் தொடங்கினார். அந்தக் காலத்தில் ஒரு பிராமணப் பெண் இட்லிக்கடை போடுவது என்பதெல்லாம் அதிசயத்திலும் அதிசயம்.

“திருத்துறைப்பூண்டி போர்டு ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். என் தாயார் இட்லி வியாபாரம் செய்து வந்தார்.ஒருநாள்  இட்லி வார்த்து முடித்து, எனக்கு நாலு இட்லி கொடுத்துவிட்டு, அவர் குளிக்கச் சென்றிருந்தார். இது எனக்குப் பல நேரங்களில் போதாது. அன்ரு ரொம்பப் பசித்ததால், அம்மா இல்லாத அந்த நேரம் பார்த்து, விற்பதற்காக அவர் வைத்திருந்ததில் இரண்டு இட்லி எடுத்துச் சாப்பிட்டுவிட்டேன்.

இதை என் பெரியம்மா (அம்மாவின் தமக்கை) பார்த்து விட்டார்.குளித்து விட்டு வந்த என் தாயாரிடம் .” பார்த்தியா, சீனுவின் திருட்டுத்தனத்தை” என்று விஷ்யத்தைச் சொன்னார். என் அம்மா கொஞ்சம் கூடக் கோபப்படாமல், “அப்பிடியா! குழந்தை எனக்குத் தெரியாம எடுத்துச் சாப்பிட்டானா? சீனுவுக்காகத்தானே இந்த வியாபாரமே. இதுல வர்ற காசு அவனுக்காகத்தானே. அவன் சாப்பிட்டா என்ன தப்பு?” என்றார். அன்று முதல் எனக்கு ஆறு இட்லியாகக் கொடுக்க ஆரம்பித்தார்”

இதை வாசனே, தன் மகனான ஆனந்தவிகடன் முன்னாள் ஆசிரியர்  எஸ்.பாலசுப்ரமணியனிடம் சொன்னதாக பாலசுப்ரமணியம் எழுதியிருக்கிறார். “இந்த நிகழ்சியை விவரிக்கும் போது அவர் கண் கலங்கிப் போனார்” என்று எழுதுகிறார் பாலசுப்ரமணியம்.

“பாஸ் (பாலசுப்ரமணியன் தன் தந்தை வாசனை அப்படித்தான் அழைத்து வந்தார்) தன் தாயாரை மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தார். காரணம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் தன் மகனுக்காக அந்தத் தாய் வாழ்ந்தார். அவர்” என்கிறார் அவர்.

இது மிகையான வார்த்தை அல்ல. ஆரம்ப காலத்தில் (1927) ஆங்கிலப் புத்தகங்களைத் தழுவித் தமிழில் எழுதி அவற்றை அவரே வெளியிட்டும் வந்தார். அந்தப் புத்தகங்கள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டும் வந்தார்.அந்தப் பத்திரிகைகளில் ஒன்று ஆனந்த விகடன். அப்போது அது அவரது பத்திரிகை அல்ல. பூதூர் வைத்தியநாதய்யர் என்பவர் அதன் உரிமையாளராக இருந்தார். இரண்டு மாதங்கள் விளம்பரங்கள் வந்தன. மூன்றாவது மாதம் வரவில்லை. ஏன் வரவில்லை என்று விசாரிக்கப் பத்திரிகை அலுவலகத்திற்குப் போனார். பத்திரிகை பொருளாதார நெருக்கடியில் திணறிக் கொண்டிருந்தது. அதை எப்படிச் சிறப்பாக நடத்தலாம் என்று வாசன் யோசனைகள் சொன்னார். ஆனால் உரிமையாளருக்கு நம்பிக்கை இல்லை. “நீங்களே எடுத்து நடத்தத் தயாரா?” என்று கேட்டார் உரிமையாளர். “என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்றார் வாசன்.  ஆ-ன-ந்-த-வி-க-ட- ன்  என்று வைத்தியநாதய்யர் விரல் விட்டு எண்ணினார். எட்டு எழுத்துக்கள். எழுத்துக்கு 25 ரூபாய். 200 ரூபாய் கொடுங்கள்” என்றார் அவர்.

அந்தக் கணமே அதை வாங்க வாசன் தீர்மானித்து விட்டார். ஆனால் உடனே பதில் சொல்லவில்லை.  “யோசிக்க அவகாசம் கொடுங்கள்” என்று சொல்லி விட்டு அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு ஓடினார். தனது தாயிடம்  நடந்ததைச் சொல்லி பத்திரிகையை வாங்க நினைக்கிறேன். உங்கள் யோசனை என்ன?” என்று கேட்டார்.

“பேஷா வாங்கி நடத்து, இதில் நீ சோபிதம் அடைவா!ய்!” என்று அவர் ஆசிர்வதித்தார். அந்த அன்னையின் ஆசிர்வாதம் பொய்க்கவில்லை. 90  ஆண்டுகளாக, இன்றளவும் தமிழ்ப் பத்திரிகை உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்று தழைத்து வளர்ந்து நிற்கிறது ஆனந்த விகடன்.

வாசனின் தாயார் தனது மகன் மேற்கொள்ளும் துணிச்சலான செயல்களுக்கு குறுக்க நின்றவர் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவரிடம் கனவுகளை விதைத்தவர் என்றும் சொல்ல வேண்டும். அவருக்கு சினிமாப் பார்ப்பதில் ஆர்வம் உண்டு. சென்னைக்குக் குடியேறிய புதிதில் பக்கத்து வீட்டுப் பெண்மணியோடு சினிமா பார்க்கப் போவார். ஒரு நாள் அந்தப் பெண்மணி, ஒருமுறை கிண்டலாக , “உங்களுக்கு சினிமாவில் இவ்வளவு ஆசை இருக்கிறதே, உங்கள் மகனை ஒரு படம் எடுக்கச் சொல்லுங்களேன்!” என்றார். “ எடுப்பான், நிச்சயம் எடுப்பான்!” என்றார் வாசனின் தாய்.

அன்று அதைக் கேட்டவர்கள் கேலியாக உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருக்கக் கூடும்  ஏனெனில் அன்று அவர்கள் மிக எளிய நிலையில் வாழந்து கொண்டிருந்தார்கள். எட்டுக் குடித்தனங்கள் கொண்ட ஒரு வீட்டில் இரண்டு அறைகள் கொண்ட போர்ஷனில் மாதம் நாலரை ரூபாய் வாடகைக்குக் குடியிருந்தார்கள்!

வாசன் பெரிய திரைப்படத் தயாரிப்பாளராகவும் ஸ்டுடியோ உரிமையாளராகவும் வளர்ந்த பிறகு அவர் ஒரு மிகப் பெரிய ரிஸ்க் எடுத்தார். அது அவரது கனவுப் படமான சந்திரலேகா.

“சந்திரலேகா படம் முடிகிற நேரம் கையிலிருந்த எல்லாப் பணத்தையும் அதற்கென செலவு செய்துவிட்டார். சொத்துக்களும் அடமானத்தில் வைத்தாயிற்று. தெரிந்தவர்களிடமிருந்தெல்லாம் பணம் வாங்கிவிட்டார். இனிக் கேட்க ஒரு இடம் இல்லை.

ஒருநாள் கவலையுடன் வீட்டில் உட்கார்ந்திருந்தார். அப்போது அவர் அம்மா அருகில் வந்து, “என்ன சீனு, முகமெல்லாம் வாடிப் போயிருக்கே?” என்றார்.

“ஒண்ணுமில்லேமா! எல்லா வழியிலும் பணம்  வாங்கியாச்சு. இன்னும் எழுபத்தைந்தாயிரம் இருந்தால்தான் படத்தை முடிக்க முடியும்  பணத்திற்கு எங்கே போறதுதான் யோசனை என்றார்

“அதானா விஷயம். கொஞ்சம் இரு” என்று உள்ளே போனவர் ஒரு தட்டு நிறைய வீட்டிலிருந்த நகையெல்லாம் அடுக்கிக்கொண்டு வந்து , “ இதை விற்பியோ, அடமானம் வைப்பியோ … படத்தை நல்லபடியா முடிக்கப்பாரு” என்று சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகு நகைகளை  விற்று சந்திரலேகா படத்தை முடித்தார். படம் வெற்றி பெற்ற பிறகு வாங்கிய தங்கத்திற்கு இரட்டிபாகத் தன் தாயிடம் கொடுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.” என்று எழுதும் வாசனின் மகன் எஸ்.பாலசுப்ரமணியம், “இதை உணர்ச்சிகரமாக என்னிடம் விவரித்த அவர்,” தொழிலில் கஷ்டம் வரும்போது  குடும்பத்தைக் காப்பாற்றுவதற்க்கென்றே பெண்மணிகள் தங்கம் சேர்ப்பதுண்டு. தொழிலில் கஷ்டம் வந்த நேரத்தில் சேகரித்து வைத்த தங்கதைக் கொடுக்க எந்தப் பெண்மணிக்கும் மனசு வராது. என் அம்மாவுக்கு மட்டுமே அந்த மனசு வந்தது என் மீது அவ்வளவு நம்பிக்கை என்றார் கண் கலங்க” என்கிறார்

வாசன் தன் முக்கிய முடிவுகள் எல்லாவற்றையும் தாய்டன் கலந்தாலோசித்துவிட்டுத்தான் எடுத்தார். கல்கியின் ஏட்டிக்குப் போட்டி கட்டுரையை தாயிடம் காட்டி அவர் சிறப்பாக வந்திருக்கிறது என்று சொன்னதற்குப் பிறகே கல்கி ஆனந்தவிகடனுக்குத் தேர்வு செய்யப்பட்டார். நந்தனார் படத்தைப் பார்த்த அவரது தாய் என்ன அழகான பக்திப் படம் என்று பாராட்டியதால் அதன் இயக்குநர் முருகதாசாவிற்கு “இன்று முதல் உனக்கு 300 ரூபாய் சம்பளம் அதிகம்” என்று சம்பளத்தை உயர்த்தினார்

இந்த முருகதாசா சந்திரலேகா பற்றி ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார்:

“ சந்திரலேகா படம் எடுத்துக் கொண்டிருந்த போது  ஒரு நாள், “ முத்துசாமி (அதுதான் முருகதாசாவின் இயற்பெயர்) நான் சம்பாதித்த பணம் அத்தனையும் சந்திரலேகாவில் போட்டிருக்கிறேன் தெரியுமா?” என்றார். நான் திடுக்கிட்டேன்.”திட்டமிட்டுத்தான் தைரியமாகப் போட்டிருக்கிறேன். சந்திரலேகா மூலம் ஒரு கோடி ரூபாய்  வரும்  என்பது என் கருத்து என்றார், என்னால் நம்ப முடியவில்லை.

சந்திரலேகா பெரும் வெற்றி பெற்றது. ஆனால் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தாரா? இதற்கு எனக்கு ஒரு நாள் விடைகிடைத்தது. சினிமாத் தொழில் நுட்ப சங்கத்தின் முதலாவது ஆண்டுவிழா நடந்தது. அதில் வாசன்தான் பிரதான பேச்சாளர். விழா முடிந்ததும் வாசன் என்னை  ஜெமினி ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார். தன் அறைக்குச் சென்றபின் காபி கொண்டுவர உத்தரவிட்டார்.

“ஒரு விஷயத்தைக் கூறவே உன்னை அழைத்து வந்தேன். ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பேன்  என்றால் அன்று சந்தேகித்தாய் அல்லவா? இப்போது சந்திரலேகா வருமானம் இந்தியையும் சேர்த்து  ஒரு கோடியைத் தாண்டிவிட்டது என்றார்”

சந்திரலேகா வெளியான வருடம் 1948! அன்று ஒரு கோடி என்பது பெரும் தொகை!

ஊருக்கு வெளியே ஒரு குடிசையில் வாழ்வைத் தொடங்கிய ஒருவர் கோடீஸ்வரனாக ஆனதிற்குப் பின் இருந்தவர்-

இட்லி விற்று அவரை வளர்த்த ஒரு தாய்!  .

 

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these