என்ன பந்தயம் ?

8

என்ன பந்தயம் ?

      எம்.ஜி.ஆர். சாராயக் கடைகளைத் திறந்த போது ஒலித்த குரல்களை உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒழுக்கம் கெட்டுப் போகும் என்று சமுகத்தின் சார்பில் ஒரு சிலரும், குடிப்பவர்கள் எப்படியும் குடிக்கத்தான் போகிறார்கள், அதற்காக அரசு வருமானத்தை இழக்க வேண்டுமா என்று அரசு தரப்பில் சிலரும் வரிந்து கட்டிக் கொண்டு வாதிட்ட அந்தக் காமன் பண்டிகை தினங்களை நானும் மறந்துதான் போயிருந்தேன் ; இங்கேயும் அதே குரல்களைக் கேட்கும்வரை.

      ஆனால் சின்னச் சின்ன வித்தியாசங்கள்.

      சர்ச்சை சாராயம் பற்றியது அல்ல, சூதாட்டம் குறித்து. வருமானத்தைச் சுட்டிக்காட்டி வாதிடுபவர்கள் அரசியல்வாதிகள் அல்ல, வியாபாரிகள். தயக்கம் காட்டுபவர் முதலமைச்சர்.

      அமெரிக்காவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் ‘தொழில்களில்ஒன்று சூதாட்டம். 1982-ல் அதன்மூலம் கிடைத்த வருமானம் 1200 கோடி டாலர்கள். 1992ல் அதுவே 3000 கோடி டாலர்கள்.

      மிசிசிபி என்றொரு மாநிலம் (பூகோளப் பாடத்தில் மிசிசிபி என்ற ஒரு நதியைப் பற்றிப் படித்திருப்பாயே, அந்த நதி பாயும் மாநிலம் இதுதான்), அங்கே டுனிகா என்றொரு நகராட்சி. அமெரிக்காவிலேயே மிகவும் ஏழ்மையான நகராட்சி அதுதான். ஊரில் கால்வாசிப் பேருக்கு வேலை கிடையாது. பாதைகள் உண்டு, சாலைகள் கிடையாது, தெரு உண்டு, தெரு விளக்கு கிடையாது. நதி உண்டு, பாலம் கிடையாது. காரணம் நகராட்சி உண்டு. ஆனால் அதற்கு வருமானம் கிடையாது.

      இதெல்லாம் இரண்டு வருஷத்திற்கு முந்திய கதை. இப்போது டுனிகா ஜொலிக்கிறது. வேலை கிடைக்காதவர்கள் எண்ணிக்கை 5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. சாலைகள் வந்துவிட்டன. பாலங்கள் வந்துவிட்டன. ஓட்டல்கள் துவக்கப் பட்டிருக்கின்றன. இன்னும் இரண்டு வருஷத்தில் அமெரிக்காவிலேயே பணக்கார நகராட்சி என்று டுனிகா பெயர் வாங்கிவிடும் என்று அதன் மேயர் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறார்.

      என்ன ஆச்சு? ஏதாவது லாட்டரி, கீட்டரி அடித்துவிட்டதா? கிட்டத்தட்ட அப்படித்தான். மிசிசிபி நதியில் படகு வீடுகளை மிதக்க விடுவது, அவற்றில் சூதாட்டம் நடத்த அனுமதிப்பது என்று நகராட்சி மன்றம் முடிவு எடுத்தது. ஒரு வருடத்தில் அதற்கு வரியாகக் கிடைத்த பணம் 50 லட்சம் டாலர்கள் !

      இப்போது மிசிசிபி மாநிலம் முழுக்க 18 மிதக்கும் சூதாட்ட விடுதிகள். அவற்றில் இருந்து வரியாகக் கிடைக்கும் வருமானம் 4,3 கோடி டாலர்கள். இப்போது சூதாட்டத்திற்கு என ஒரு தனி வாரியமே அமைக்கப்பட்டுவிட்டது. “நான்கைந்து பேர் மனுப்போடுவார்கள். 80 லட்சம் டாலர் கிடைக்கும். 10 பேரை வேலைக்கு நியமித்து கண்காணித்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால் இதுவரை 18 விடுதிகள் வந்துவிட்டன. இன்னும் அனுமதிக்காக 68 மனுக்கள் காத்திருக்கின்றன. 51 பேரை வேலைக்கு நியமித்து விட்டோம். ஆனாலும் சமாளிக்க முடியவில்லைஎன்கிறார். மிசிசிபி மாநில வாரியத் தலைவர்.

      மிசிசிபி மாநிலம், சூதாட்ட விடுதிகளுக்குச் சட்டபூர்வமாக அங்கீகாரம் அளிக்க முடிவு எடுத்தபோது, தேசமே திரும்பிப் பார்த்தது. ஏன்?

      அமெரிக்காவில் சூதாட்டம் புதிதல்ல. மேற்குக் கரையோரம் அது வெகுகாலமாகக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க சூதாட்டத்திற்கென்றே ஒரு நகரம் – லாஸ்வேக்ஸ் – அங்கே இருக்கிறது (அங்கே குடும்பத்தோடு வந்து சூதாடலாம்.)

ஆனால் சூதாட்டம் தென்மாநிலங்களுக்குப் புதிது. தென்மாநிலத்த வர்கள், ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள். அமெரிக்க அரசியலில், இந்த மாநிலங்களை (மிசிசிபி, லூசியானா, அலபாமா, ஃபுளோரிடா, ஜார்ஜியா, கெண்டக்கி, வட கரோலினா, தென் கரோலினா, வர்ஜீனியா) “பைபிள் பெல்ட்” (Bible Belt) என்று சொல்வது வழக்கம். (இந்தியாவில், உ.பி., ம.பி., ராஜஸ்தானை Cow Belt என்று சொல்வதில்லையா, அதைப் போல). மிசிசிபி ஒரு தென் மாநிலம். அதனால் தென் மாநிலத்திலா சூதாட்டம்? என்று தேசமே திரும்பிப் பார்த்தது (இந்தியாவில் மற்ற மாநிலங்களில் மதுவிலக்கு இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் அதை ரத்து செய்தால் – தவறு – “தளர்த்தினால்கூச்சல் எழுவதைப் போல).

வாஷிங்டனில் இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அக்கம்பக்கத்தில் இருந்த வர்களுக்குக் குறுகுறுப்பு. மிசிசிபியின் நடவடிக்கைகளை அண்டை மாநிலங்கள் கூர்ந்து கவனித்தன. அங்கே பணம் புரள்வதைக் கண்டு, பக்கத்து மாநிலமான லூசியான, சற்றே தயக்கத்துடன், மிதக்கும் சூதாட்ட விடுதிகளை அங்கீகரிக்கத் துவங்கியது.

ஆனால், வேறு எந்தத் தென்மாநிலமும் சூதாட்ட விடுதிகளை அங்கீகரிக்கவில்லை. என்றாலும், ஏன் அனுமதிக்கக்கூடாது என்பது பற்றிய சூடான விவாதங்கள், அலபாமா, ஃபுளோரிடா, கெண்டக்கி, தென் கரோலினா ஆகிய மாநிலங்களில் நடக்கின்றன.

சூதாட்டம் என்றால் விடுதிக்குப் போய் ஆடினால்தானா? சூதாட்டம் மூன்று வகை.

முதலாவது ரேஸ். குதிரைப் பந்தயம். இங்கே குதிரைப் பந்தயம் மாதிரி இன்னொரு பந்தயமும் உண்டு. அது நாய் பந்தயம் ! நம்மூர் ராஜபாளயம் மாதிரி இங்கே கிரே ஹவுண்ட் என்று ஒரு ஜாதி நாய்கள் இருக்கின்றன. வேகமாக ஓடக்கூடிய வேட்டை நாய்கள் அவை.

குதிரைகளுக்கிடையே நடப்பதுபோல், அவைகளுக்கிடையே பந்தயம் நடக்கும். குதிரைகளைத் தேர்ந்தெடுத்துப் பணம் கட்டுவதுபோல், அவைகள் மீது பணம் கட்டலாம். குலம் கோத்திரம் பார்த்து குதிரைகளை வாங்கிச் சீராட்டி வளர்ப்பதைப் போல இந்த நாய்களையும், கவனமாகப் பொறுக்கி எடுத்து வளர்த்து, விற்பார்கள். அது ஒரு பெரிய தொழில். குதிரைப் பந்தய மைதானங்கள் இருப்பதைப் போலவே, நாய்ப் பந்தய மைதானங்கள் உண்டு.

ஃபுளோரிடா, அலபாமா, லூசியானா, கெண்டக்கி, தென்கரோலினா ஆகிய மாநிலங்களில் குதிரை, நாய்ப் பந்தயங்களுக்கு அனுமதி உண்டு. அவற்றிற்கென தனி மைதானங்கள் உண்டு.

இரண்டாவது வகைச் சூதாட்டம் லாட்டரிச் சீட்டு, ஃபுளோரிடா, ஜார்ஜியா, லூசியானா, கெண்டக்கி ஆகிய மாநிலங்கள், கடந்த ஐந்து வருடங்களில், ஒன்றன்பின் ஒன்றாக லாட்டரிச் சீட்டுகளை ஆரம்பித்தன. அலபாமா, டென்னசி, கெண்டக்கி, மிசிசிபி, தென், வட கரோலினா மாநிலங்கள் லாட்டரி நடத்தலாமா, வேண்டாமா என்று அரை மனதுடன் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

கல்விக்குச் செலவழிக்க நிறையப் பணம் வேண்டியிருக்கிறது. லாட்டரியில் வரும் பணத்தை அதற்குப் பயன்படுத்தலாம் என்று சொல்லித்தான் இந்த மாநிலங்கள் பரிசுச் சீட்டைத் துவக்கின. இப்போது, ஐந்து வருடம் கழித்துக் கணக்குப் பார்த்தால், படிப்பிற்குக் கொடுத்த பணத்தை விட, பரிசுக்குக் கொடுத்த பணம் அதிகமாக இருக்கிறது. சீட்டு விற்றுப் போக வேண்டும் என்றால் வருடா வருடம் பரிசுத் தொகையை உயர்த்திக் கொண்டே போக வேண்டியிருக்கிறது. அதனால், கல்விக்கு ஒதுக்கும் தொகையைக் குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சரி, பரிசுச் சீட்டே வேண்டாம் என்று நிறுத்தித் தொலைத்து விடுவோம் என்றால், அதுவும் முடிவதில்லை. பரிசுச் சீட்டிற்குப் பழக்கப்பட்ட மக்கள், பக்கத்து மாநிலச் சீட்டை வாங்க ஆரம்பித்து விடுகிறார்கள். பணம் அங்கே போய்விடுகிறது. வடக்குக் கரோலினாவில் பரிசுச் சீட்டு கிடையாது. அதன் அண்டை மாநிலமான வர்ஜீனியாவில் உண்டு. “வருடத்திற்கு 80 லட்சம் டாலர் அங்கே போய்விடுகிறதுஎன்று குறைப்பட்டுக் கொள்கிறார் வட கரோலினா எம்.பி. டேவிட் ரெட்ஒயின். கருணாநிதியின் வார்த்தைகளைக் கொண்டு வட கரோலினாவை வர்ணிப்பதென்றால் “நெருப்பு வளையத்தினிடையே நிறுத்தி வைக்கப்பட்ட கற்பூரமாகஇருக்கிறது அது (தமிழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்யும்போது கருணாநிதி சொன்ன வார்த்தைகள் இவை).

மூன்றாவது வகைச் சூதாட்டம், விடுதிக்குப் போய் ஆடும் சூதாட்டம். இதைக் குறித்துத்தான் இப்போது பட்டிமன்றம். பட்டிமன்றத்திற்குக் காரணம், ஃபுளோரிடாவில் சுற்றுலா ஒரு முக்கிய வியாபாரம். ஆனால் கடந்த சில வருடங்களாக, குற்றங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போவதால், சுற்றுலாப் பயணிகணின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது, சுற்றுலா வியாபாரத்தை எப்படித் தூக்கி நிறுத்துவது என்பதற்கான ஒரு யோசனைதான் சூதாட்ட விடுதி.

“மேற்குக் கரையோரம் போகிறவர்களை இங்கே இழுக்கலாம். லாஸ்வேகசைவிட, நிச்சயம் மியாமி ஆயிரம் மடங்கு தேவலை. முதலில் சீதோஷ்ணம். அது வெறும் பாலைவனம். இது உலகின் முதலாவது சிறந்த கடற்கரை. சூதாட்ட விடுதிகள் வந்தால் இன்னும் கொஞ்சம் கூட்டம் வரும்என்று வாதிடுகிறார் மியாமியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மார்த்தா ஜோலான்.

“சூதாட்டம் வந்தால் கூடவே துப்பாக்கியும் வரும். ஏற்கனவே குற்றங்கள் அதிகரித்ததனால்தான் சுற்றுலா படுத்தது. எனவே சுற்றுலாவை அதிகரிக்க சூதாட்டம் என்பது அபத்தம்என்கிறார் மால்கம் பெர்கோ. இவர் ஃபுளோரிடா பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. மாணவர். “அதுவும் தவிர சுற்றுலாப் பயணிகள் மட்டுமா சூதாடப் போகிறார்கள். உள்ளூர்க்காரர்கள்தான் முதலில் போய் நிற்பார்கள்.

இன்று நேற்று இல்லை. இரண்டாயிரம் வருஷமாக இருந்து வருகிற பழக்கம் சூதாட்டம். அதைச் சட்டம் போட்டுத் தடுத்துவிட முடியாது. விடுதிகளைத் திறந்தால் நாலு காசு வரும். நூறு பேருக்கு வேலை கிடைக்கும். வறட்டு வேதாந்தம் பேசிக் கொண்டிருந்தால் வயிறு நிரம்பாதுஎன்று மிசிசிபியின் வெற்றியைச் சுட்டிக் காட்டுகிறார் லூசியா ஹெலன்ஸ்கி. இவர் மிசிசிபியில் சிறிதுகாலம் தங்கி இருந்த கெயின்ஸ்வில் பிரஜை. ஒரே வருஷத்தில், புதிதாக சூதாட்ட விடுதிகளில் மாத்திரம் 1500 பேருக்கு வேலை கிடைத்தது. அவற்றைத் தவிர அங்கே புதிதாக வந்த ஓட்டல்கள், வாடகைக் கார் நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், சிற்றுண்டிச் சாலைகள் இவற்றில் உருவான வேலைகள், இவற்றையெல்லாம் பட்டியலிடுகிறார் இவர்.

“நிறையப் பேருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால், நிறைய விடுதிகள் வரவேண்டும். நிறையப்பேர் வந்தால், போட்டியைச் சமாளிக்க விலையைக் குறைப்பது, பரிசுத் தொகையைக் கூட்டுவது என்பதெல்லாம் நடக்கும். ஓட்டல் தொழில் மாதிரிதான் இது. ஒரு ஊரில் இரண்டு. மூன்று இருந்தால் லாபத்தில் நடக்கும். லாபம் வருகிறதே என்று, 20, 25 ஓட்டல்கள் திறந்தால், எல்லோருக்கும் நஷ்டம்என்பது பெக்கி கிளார்க்கின் வாதம். இவர் கொஞ்ச காலம், ஒரு சிற்றுண்டிச் சாலை நடத்தி, கையைச் சுட்டுக் கொண்டு, வேறு ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்பதற்காக டெலிகம்யூனிகேஷன்ஸ் படித்து வருபவர்.

“ ஒரு வருஷம், ஒரே ஒரு வருஷம் மட்டும், அனுமதிக்க வேண்டும். வருகிற வருமானத்தை வாங்கிக் போட்டுக் கொண்டு பின் இழுத்து மூடிவிட வேண்டும்என்பது ஜான் கேயின் வாதம்.

“நடக்கக்கூடிய காரியமா அது? ருசி கண்டுவிட்டால் நிறுத்த முடியுமா? லாட்டரிச் சீட்டில் என்ன நடந்தது என்று நாம் பார்க்கவில்லையா?இது டோனியா ஸ்மித்.

இந்த வாதங்கள், நமக்குப் பழக்கமானவை. இந்தக் குரல்களை நாம் ஏற்கனவே கேட்டிருக்கிறோம். நாம் கேளாத குரல் ஒன்று இருக்கிறது. அது ஃபுளோரிடா மாநில கவர்னர் (முதல்வர்) லாடன் சில்ஸ்னுடையது.

“லாட்டரி, சூதாட்ட விடுதி எல்லாம் தற்காலிகத் தீர்வுகள், நீண்ட காலத்திற்குப் பலன் தராது. சிறு தொழில்கள், அவை உருவாக்கும் வேலைகள் இவைதான் முன்னேற்றத்தைக் கொடுக்கும். முன்னேற்றம் மெதுவாகத்தான் கொடுக்கும் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் நிச்சயமாக முன்னேற்றம் இருக்கும். ஃபுளோரிடா, மெல்ல, மெல்ல, ஆனால் உறுதியாக முன்னேறவே நான் விரும்புவேன்என்கிறார் அவர்.

இப்படி ஒரு குரலை நம் முதலமைச்சர்களிடம் இருந்து நாம் கேட்டிருக்கிறோமா?

இவர் இப்போது இப்படித்தான் பேசுவார். ஏனெனில் அடுத்த வருடம் தேர்தல் வருகிறது. ஆனால் நீண்ட நாளைக்கு இப்படிப் பேசிக் கொண்டிருக்க முடியாது. ஏற்கெனவே 22 மாநிலங்களில் சூதாட்ட விடுதிகள் வந்துவிட்டன. விரைவிலேயே “நெருப்பு வளையத்தின் நடுவே நிறுத்தி வைக்கப்பட்ட கற்பூரமாகஃபுளோரிடா ஆகிவிடும். அப்போது அதனால் தாக்குப் பிடிக்க முடியாது என்று சிலர் சொல்கிறார்கள். எனக்கென்னவோ தாக்குப் பிடிக்கும் என்று தோன்றுகிறது. பிடிக்காது என்கிறாயா ?  சரி, என்ன பந்தயம் ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these