என் இனிய இயந்திரா, என்னை வாழ விடு!

என் இனிய இயந்திரா, என்னை வாழ விடு!

அன்புள்ள தமிழன்,

பன்னிரண்டு  மணிநேர வேலை குறித்த விவாதங்கள், விளக்கங்கள் எல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன். நீயும் உடல் நலம் கெடும், மனநலம் கெடும், குடும்ப உறவுகள் பாழாகும், குழந்தைகள் கவனிப்பாரின்றித் திசை கெட்டுப் போகக்கூடும் என்று உன் கவலைகளையெல்லாம் எழுதி என் கருத்தென்ன என்று கேட்டிருந்தாய். என் கருத்தும் கவலையும் அதேதான்.

இந்த விவாதங்களை வாசித்துக் கொண்டிருந்த போது  கமல்ஹாசன் விடுத்திருந்த கண்டன அறிக்கை கண்ணில்பட்டது. தொழில்நுட்பம் வளர வளர மனிதர்களின் வேலை எளிதாக வேண்டும் ஆனால் அதற்கு மாறாக வேலை நேரம் அதிகரிக்கிறதே என்பது போல அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அந்த வரி என் எண்ணங்களைக் கிளறியது. தொழில் நுட்பம் மனிதனுக்கு உதவுகிறதா அல்லது அவனது அடிமடியில் கை வைக்கிறதா?

அப்படி எண்ணக் காரணம் நான் இங்கு அமெரிக்காவில் காணும், கேள்விப்படும் மாற்றங்கள். இங்கு தொழில்நுட்பம் வளர வளர, பார்த்துக் கொண்டிருக்கும் வேலை பறிபோகிறது!

இணையத்தில் நாம் பொருள்களை ஆர்டர் செய்தால் ஒன்றிரண்டு நாளில் அதை வீட்டில் கொண்டு வந்து ஒருவர் டெலிவரி செய்கிறார் இல்லையா? நம்மூரில் அது மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. ஆனால் இங்கே  அனேகமாகப் பலரும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறிவிட்டார்கள். அண்மையில் என் நண்பர்  இணையத்தில் ஒரு பொருளுக்கு ஆர்டர் கொடுத்தார். என்ன பொருள் தெரியுமா? கைபேசிக்கு போடும் கவர். நானும் கூட இந்தியாவில் இருந்த போது அதை இணையத்தில் வாங்கியிருக்கிறேன். ஆனால் அதற்குச் சில நாள்களுக்குப் பின் அவர் இன்னொரு பொருளுக்கு ஆர்டர் செய்தார். அதைப் பார்த்து பிரமித்து விட்டேன். அவர் ஆர்டர் செய்த அந்தப் பொருள் குளிர்சாதனப் பெட்டி! ஃபிரிட்ஜ்!

இது போல இணையத்தில் வரும் ஆர்டர்களை உடனுக்குடன் டெலிவரி செய்ய இந்த இணைய வர்த்தக நிறுவனங்கள் ஆங்காங்கே பெரிய பெரிய கிட்டங்கிகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். நம்மூரில் இந்திய உணவுக் கழகத்தின் கோடவுன்களைப் போல இரண்டு மடங்கு பெரியவை இந்தக் கிட்டங்கிகள். அடுத்தடுத்துப் பல கிட்டங்கிகள் ஒரே வளாகத்தில்.

ஒரு பக்கம் கிட்டங்கிகள் எழுந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இருந்த மால்கள் சுருங்கிக் கொண்டிருகின்றன. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று கொரானா. அப்போது மூடிய கடைகள் பல இன்னமும் திறக்கப்படவில்லை. திறக்கவே முடியாமல் நொடித்துப் போய்விட்டன. சிறு கடைகள் போயே போய் விட்டன. செயின் ஸ்டோர் என்று சொல்லும் பல ஊர்களில் கடை நடத்தும் பெரியவர்கள் தள்ளாடித் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு காரணம் இந்த இணைய வழி அங்காடிகள்.

இந்த இணைய நிறுவனங்கள் தங்கள் கிட்டங்கியிலிருந்து பொருள்களை டெலிவரி செய்ய,  இப்போது  இங்கு சிறு லாரிகளைப் பயன்படுத்துகிறார்கள். வண்டி ஓட்டுபவரே வாசலில் அதை நிறுத்தி விட்டு பொருளைக் கொண்டு வந்து கொடுப்பார். இதற்கு பதில் ஆளில்லா விமானங்களைப்- அதுதான் டிரோனை-பயன்படுத்தலாம் என்று இணைய வர்த்தக நிறுவனங்கள் முயன்று பார்த்தன.  அதாவது டிரோனில் பொருளை ஏற்றிவிட்டால், அது நம் வீட்டு முகவரியைச் சரிபார்த்து, வாசலில் கொண்டு வந்து பொருளை தொப்பென்று போட்டுவிட்டுப் போய்விடும். ஆனால் டிரோன் வேலைக்கு ஆகவில்லை. நிறுவனம் முயற்சியை ஒத்தி வைத்திருக்கிறது. ஆனால் ஆராய்ச்சியைக் கைவிடவில்லை.

ஆனால் அதே நிறுவனம் இன்னொரு முயற்சியில் முனைந்திருக்கிறது. அதன் கிட்டங்கிகளில் பொருட்களை எடுத்து அடுக்க, கையிருப்புக் கணக்கை சரிபார்க்க, ரோபோட்களைப் பயன்படுத்தவிருக்கிறது. அதற்கான தொழில் நுடபப் பணிகள் தொடங்கி விட்டன.

அண்மையில் இங்கு ஊடகங்கள் ஓரு கணிப்பை வெளியிட்டன. செயற்கை நுண்ணறிவு –Artificial intelligence- என்று சொல்கிறார்கள் அல்லவா, அது குறித்த ஆய்வுகள் வேகம் பிடித்திருக்கின்றன. பரிசோதனை நிலையில் இருக்கும் போதே சாட் ஜிபிடி போன்றவை பிரமிக்க வைக்கின்றன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான நண்பர் து.ரவிக்குமார் கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். அது எழுத்தாளர் எவரும் எழுதாத நூல். முழுக்க முழுக்க இயந்திரம் எழுதிய நூல். எழுத்தாளர் இல்லாமலேயே எதிர்காலத்தில் இலக்கியம் பிறக்கும் வாய்ப்புக்கள் உறுதிப்பட்டுவிட்டன.

இங்கே அமெரிக்காவில் ஒரு கணிப்பு வெளியிட்டார்கள் என்று சொன்னேன் இல்லையா, அது என்ன கணிப்புத் தெரியுமா? செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பரவலாகச் செயல்பாட்டிற்கு வந்தால் யாருக்கெல்ல்லாம் வேலை போகும் என்ற கணிப்பு.

முதல் அடி வாங்கப்போவது  மொழிபெயர்ப்பாளர்கள். சினிமாவிற்கு சப் டைட்டில் எழுதுகிறவர்கள், பாடலாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், கதாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பத்திரிகை அலுவலகங்களில் அமர்ந்து வேலை பார்க்கும் உதவி ஆசிரியர்கள். ஊடகங்களுக்குத் தகவல்களை ஆராய்ந்து தொகுத்துக் கொடுக்கும் ஆய்வாளர்கள். பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் இப்படிப் பலபேருக்கு அடி விழ இருக்கிறது.

இதை நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இந்தியாவிலே கூட பல ஆங்கில நாளிதழ் அலுவலகங்களில் மெய்ப்புப் பார்ப்பவர்- அதான் புரூப் ரீடர்- என்ற வேலை கணினியில் தட்டச்சு செய்ய ஆரம்பித்து, சொற்பிழை திருத்தி போன்ற மென்பொருட்கள்  வந்த பின் காணாமல் போய்விட்டது என்பதை நினைத்துப் பார்த்தால் இதுவும் சாத்தியம்தான் என்று தோன்றுகிறது.  

ஒன்றை நீ கவனித்திருக்கிறாயா? நம்மைச் சுற்றிப் பெரும் மாறுதல்கள் நிகழும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தால் உனக்குப் புரியும். கொரானா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை என்று ஆரம்பித்தது இங்கே பல இடங்களில் இன்னமும் தொடர்கிறது.  கொரானாவினால் அல்ல. அது வேலை கொடுப்பவர், வேலை செய்பவர் இருவருக்குமே அது செளகரியமாக இருக்கிறது என்பதால்.

ஆனால் அதனால் எதை எல்லாம் இழந்திருக்கிறோம்!. அலுவலகம் என்ற ஒன்றிருந்த போது அங்கே சக ஊழியர்களை நண்பர்களாகப் பெற்றோம். கை மாற்று வாங்குவதிலிருந்து கல்யாணத்திற்கு வரன் பார்ப்பது வரை அவர்கள் உதவினார்கள். பணி ஓய்வு பெற்றதற்குப் பிறகும் ஆயுள் முடியும் வரை நண்பர்களாகச் சிலர் தொடர்ந்தார்கள். உணவு இடைவேளையில் சாப்பாட்டைப் பகிர்ந்து கொண்டோம். பகிர்ந்து கொள்வதற்காகவே கூடுதலாக சமைத்து எடுத்து வந்தோம். தேநீர் இடைவேளையில் அரசியல், சினிமா, பாஸைப் பற்றிய கிசுகிசுக்களைப் பகிர்ந்து கொண்டோம். வீட்டிலிருந்து வேலை என்பதில் இதெல்லாம் போயிற்று. கைபேசியில் ஹலோ ஹலோ சுகமா என்பதாகச் சுருங்கிற்று.

முன்பெல்லாம் டிபன் சாப்பிட வேண்டுமானால் ஓட்டலுக்குப் போவோம். சாப்பிடுவது ஒரு சாக்கு. நண்பர்களை, காதலியை சந்திக்க ஒரு வாய்ப்பு ஒரு இடம் ஹோட்டல் என்பது. இப்போது கை பேசியை எடுத்து ஒத்தினால் வீட்டு வாசலுக்கு வருகிறது உணவு

இப்போது ஏராளமான புத்தகங்கள் வருகின்றன.  தமிழிலும்தான். காரணம் கணினி. ‘பிரிண்ட் ஆன் டிமாண்ட்’ என்று ஒரு முறை இருக்கிறதாம்.புத்தகத்தின் உள்ளடக்கத்தை வடிவமைத்து கணினியில் சேமித்துக் கொண்டால் எத்தனை பிரதி வேண்டுமோ அதை மட்டும் அச்சிட்டுக் கொள்ளலாம். முன்பு போல ஆயிரம் பிரதி, ஐநூறு பிரதி, என்று அச்சுப் போட்டு அடுக்கி வைத்து அவை எப்போது விற்குமோ, எனக் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இருக்க வேண்டாம். போட்ட முதலை எடுப்போமோ அல்லது மூழ்கி விடுவோமா என்று திகில் படம் பார்ப்பதைப் போல பதறிக் கொண்டிருக்க வேண்டாம்.

அதனால் எல்லோரும் புத்தகம் போடுகிறார்கள். நீங்களே உங்கள் புத்தகத்தைப் பதிப்பித்துக் கொள்ள ஓர் இணைய வர்த்தக நிறுவனம் உதவுகிறது. எல்லோரும் புத்தகம் போடுவதில் பிரசினை ஒன்றும் இல்லை,ஆனால் அதைச் சந்தைப் படுத்த அவர்கள் சமூக ஊடகங்களில் செய்கிற அலப்பறைகள் இருக்கிறதே, கொசுக்கடி தாங்கமுடியவில்லையடா தமிழா!

கணினி மூலம் வேலை, கணினி மூலம் கல்வி, கணினி மூலம் மருத்துவம், கணினி  மூலம் புத்தகம், கை பேசி மூலம் செய்தி, கைபேசி மூலம் சினிமா, கைபேசி மூலம் இசை, கைபேசி மூலம் உணவு, கைபேசி மூலம் வம்பு.

நாம் உண்பது, உடுப்பது, பருகுவது, படிப்பது, பயணிப்பது, பழகுவது, பணப் பரிவர்த்தனை செய்வது,  உரையாடுவது, உறவு கொள்வது, பொழுது போக்குவது,எல்லாம் மாறிவருகின்றன. மாறுவதை அறியாமலே மாறுதலுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். 

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுடைய தந்தைக்கும் தாய்க்கும்  இந்த அனுபவம் இருந்திராது. அவர்கள் பவுண்டன் பேனா கொண்டு போஸ்ட் கார்டில் நலம் நலமறிய ஆவல் எழுதிய பெருமக்கள். இருபது வயது தலைமுறைக்கும் இது புதிதாக இராது. ஏனெனில் அவர்கள் கைபேசியிலேயே ஏ ஃபார் ஆப்பிளைத் தொடங்கியவர்கள்.  அரை செஞ்சுரி போட்டவர்கள்தான் அங்கும் இல்லாத இங்கும் இல்லாத இந்தத் திரிசங்கு சொர்க்கத்தில் அகப்பட்டுக் கொண்டவர்கள்.

அன்றாடப் பணிகளைச் செய்ய  இயந்திரங்கள் உதவிய போது அது செளகரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஆனால் சம்பளம் கொடுக்கும் வேலை என்னும் அடிமடியில் கை வைக்கும் போது பகீரென்கிறது!

கண்களை விற்றுச் சித்திரம் வாங்குகிறோமா நாம்?

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these