பயத்தை வெல்வது எப்படி?

அன்புள்ள தமிழன்,

ஒரு புதிய வேலை கிடைத்திருக்கிறது, இப்போதிருப்பதை விடப் பெரிய பதவி, இப்போது வாங்குவதை விடக் கூடச் சம்பளம், ஆனால் பொறுப்பும் ரிஸ்க்கும் அதிகம். என் திறமையைக் காட்ட ஏற்ற வேலை.அந்த வேலையை  எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. மனைவியைக் கேட்டேன், வேண்டாம். இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்கிற முயற்சி வேண்டாம் என்கிறாள். நீ என்ன சொல்கிறாய் எனக் கேட்டிருந்தாய்.

“என் வாழ்க்கையில் நான் மிகவும் பதற்றமாக இருந்த தருணம் எது தெரியுமா? பராக் (ஒபாமா)  அமெரிக்காவின் ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறேன் என்று முதன் முதலில் என்னிடம் சொன்ன தருணம்தான். 2006 பிற்பகுதியில் அவ்வப்போது அதைக் குறித்துப் பேசியிருக்கிறோம். அந்த உரையாடல்களின் முடிவில் அவர் என்னிடம் ஒன்று சொல்வார். “முடிவு உன்னுடையது. நீ சம்மதித்தால் நான் போட்டியிடுகிறேன்”

அவர் என்னை நேசித்தார். நாங்கள் வெறும் தம்பதிகள் அல்ல, நண்பர்கள். இந்த முடிவில் ரிஸ்க் மிகவும்  அதிகம் என்றோ, அல்லது இதனால் குடும்பத்திற்குப் பல பிரசினைகள் வரும் என்று நினைத்தாலோ நான் வேண்டாம் என்று சொன்னால் தன் விருப்பத்தைக் கை விட்டுவிடுகிறேன் என்று அவர் சொன்னார்

நான் வேண்டாம் என்று சொல்லலாம் என்றுதான் நினைத்தேன்.அவரைச் சுற்றியிருந்த பல தரப்பட்ட நண்பர்கள் அவரைப் போட்டியிடுங்கள் என முடுக்கிக் கொண்டிருந்தனர். ஆனால் நான் வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.ஆனால் அதைச் சொல்வதற்கு முன் நான் என் அச்சங்கள் என்ன என்பதை அலசிப் பார்க்க வேண்டும். நான் வேலைக்குப் போகும் வழியெல்லாம் இந்த எண்ணம் என் கூடவே வந்தது. ஜிம்மிற்குப் போய் உடற்பயிற்சி செய்யும் போது கூடவே இருந்தது. என் இரு மகள்களையும் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு அவர்களைப் பிடித்தபடி இரவில் படுக்கையில் கிடந்த போதும் கூடவே படுத்திருந்தது.

பராக் ஜனாதிபதியாக விரும்புகிறார் என்று எனக்குத் தெரியும், ஜனாதிபதியானால் சிறப்பாகச் செயல்படுவார் என்றும் தெரியும். அதே நேரம் எனக்கு அரசியல் வாழ்க்கை பிடிக்கவில்லை. நான் இப்போது செய்து கொண்டிருக்கிற வேலை எனக்குப் பிடித்திருந்தது. குழந்தைகளுக்கு அமைதியான நிலையான வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.எதிர்காலம் என்னவென்று ஊகிக்க முடியாத வேலை, நிச்சயமற்ற சாகசங்கள் இவற்றின் ரசிகை அல்ல நான். தேர்தல், பிரசாரம் என்று இறங்கிவிட்டால் இவற்றையெல்லாம் நிறைய சந்திக்க வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல, மற்றவர்கள் எங்களை எடை போட ஒரு வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். எடை போட வாய்ப்பு என்றால் கொஞ்ச நஞ்ச வாய்ப்பு அல்ல. மொத்த அமெரிக்காவே எங்களை எடை போடும். ஒவ்வொரு அமெரிக்கனும் எடை போடுவான். எல்லோருடைய எண்ணமும் ஒன்று போல் இருக்காது இந்த எண்ணமே என்னை பயமுறுத்தியது

வேண்டாம் என்று சொல்லிவிட்டால் நிம்மதியாக இருக்கும் என்று எனக்குள் நான் சொல்லிக் கொண்டேன். வேண்டாம் என்று சொல்லிவிட்டால் எல்லாம் இப்போது இருக்கிற மாதிரியே இருந்து விடும். நாங்கள் செளகரியமாக எங்கள் ஊரில், எங்கள் வீட்டில் இருந்து கொள்ளலாம். எங்களுக்குப் பழக்கமான, நாங்கள் செய்து கொண்டிருக்கிற, வேலையையே செய்து கொண்டிருக்கலாம். நமக்குப் பழக்கமான நண்பர்கள், உறவினர்கள், மனிதர்கள் நம்மைச் சுற்றி இருப்பார்கள். குழந்தைகளின் பள்ளிக்கூடத்தை மாற்ற வேண்டாம். சொல்லப் போனால் எந்த மாற்றமும் இருக்காது

இந்த எண்ணம் வந்த போது என் பயம் எனக்கு வெட்ட வெளிச்சமாயிற்று. என் பயத்திற்கான காரணம் என்ன? நான் மாற்றத்திற்குப் பயப்படுகிறேன். எனக்குப் பழக்கமான சூழல் என் கையை விட்டுப் போய்விடுமோ என்று பயப்படுகிறேன். என் பயங்கள் நியாயமாகத் தோன்றலாம். ஆனால் மறுபுறத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே நான் பயப்படுகிறேன். புதிதாக இருக்கிறது என்பதால் பயப்படுகிறேன்”

என்று விரிவாக எழுதிக் கொண்டு போகிறார் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா.

நாம் எல்லோரும் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி பயந்திருக்கிறோம். முதல் நாள் நீ எல் கே ஜி வகுப்பிற்குப் போகும் போது அழுது கொண்டு போனாயே ஞாபகம் இருக்கிறதா? அங்கு போனால் எல்லாக் குழந்தைகளும் அழுது கொண்டு நிற்கின்றன. அவர்களது அம்மாக்கள் குழந்தைகளைத் தேற்றிக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களுக்குக் கல்யாணமாகி புருஷன் வீட்டிற்குப் போன முதல் நாள் பயம். எத்தனை சினிமாவில் முதலிரவுக் காட்சிகள் பார்த்திருந்தால் என்ன, முதலிரவு அன்று ஆண் பெண் இருவருக்குமே சிறிது அச்சமும் பதற்றமும் இருக்கும். இந்த பயத்திற்கெல்லாம் காரணம் என்ன? அவை புதிது என்பதுதான்

புதிதாக ஒன்று வந்தால் அது என்ன என்று தெரியாமலே  ஊரே பயப்பட்டதெல்லாம் உண்டு.  அது தீப்பெட்டிகள் அறிமுகமாகாத காலம். தீப்பெட்டிகள் அப்போது கல்கத்தாவில் மட்டும் தயாராகிக் கொண்டிருந்தன.தீப்பெட்டி என ஒன்றிருக்கிறது எனக் கேள்விப்பட்டுக்   கோவில்பட்டியில் இருந்து ஒருவர் கல்கத்தாவிற்குப் போய் தீப்பெட்டி செய்வது எப்படி என்று அந்தத் தொழிலைக் கற்றுக் கொண்டு கோவில்பட்டிக்கு வந்து அதைச் செய்யத் தொடங்கினார். ஆனால் நம் மக்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “என்னைய்யா, முட்டாள்தனமா இருக்கு. நெருப்பை எவனாவது சட்டைப்பையில் வைச்சுக்கிட்டுப் போவானா? ஆளையே பொசுக்கிடாது அது?”

இன்று இதைச் சொன்னால் குழந்தைகள் கூடச் சிரிக்கும். இது போல பல சிரிப்பூட்டும் விஷயங்கள் உண்டு. போட்டோ எடுத்தால் ஆயுசு குறைந்து விடும் என்று வாழ்க்கை முழுக்க படமே எடுத்துக் கொள்ளாமல் இருந்து பின் இறந்த பிறகு அநத உடலை மடக்கிக் கிடக்கி நாற்காலியில் அமர்த்திப் படம் எடுத்த காலங்கள் உண்டு. இன்று கைபேசியைப் பேசுவதற்குப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, போட்டோ எடுப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். ஏன் செல்போன் வந்த போதும் இப்படி ஒரு பயம் இருந்ததே? செல்போனில் பேசினால் அதன் அலைகள் மூளையைத் தாக்கி பைத்தியம் பிடித்து விடும் என்று சொன்னவர்கள் உண்டா இல்லையா? இன்று செல்போன் வேலை செய்யாவிட்டால்தான் பலருக்குப் பைத்தியம் பிடித்து விடும்.

அவ்வளவு ஏன்? ஒரு காலத்தில் சினிமா என்பதே ஆவிகளின் வேலை என்று அமெரிக்காவில் இருப்பவர்கள் நினைத்தார்கள். அவர்கள் அப்படி நினைத்தது பேய்ப் படங்களைப் பற்றியல்ல. திரையில் நாம் காண்பதெல்லாம் மனிதர்கள் அல்ல, ஆவிகள் என்றெண்ணிப் பயந்தார்கள். அதனால் தனியாக சினிமாவிற்குப் போகக் கூடாது என்ற எண்ணமெல்லாம் ஒருகாலத்தில் இருந்தது.

புதிதாக ஒன்று வரும்போது அதைக் கண்டு பயப்படுவது, அது என்ன என்று தெரியாமல் நிராகரிப்பது எல்லாம் மனிதர்களின் இயல்பு. உன் மனைவி  மனுஷியாக இருக்கிறாள், பிசாசாக அல்ல என்றெண்ணி சந்தோஷப்படு!

சரி ஒபாமா பின் எப்படி ஜனாதிபதியானார்? மனைவி சொல்லைத் தட்டிவிட்டுக் தேர்தலில் குதித்து விட்டாரா? நீ  என்ன வேணா நினைச்சுக்க, ஐ டோண்ட் கேர்! என்று கத்திவிட்டுக் களம் இறங்கி விட்டாரா?   

மிஷேல் தன் பயம் எப்படித் தெளிந்தது என்பதைப் பற்றியும் எழுதுகிறார். அதைச் சொல்லாவிட்டால் இந்தக் கடிதம் கால் இல்லாத ஆவிபோல் இருக்கும்.

மிஷேலின் பயம் தெளிய ஆவிகள்தான் காரணம்.

இளம் வயதில் மிஷேலும் அவருடைய அண்ணன் கிரேக்கும்  வீட்டு சோபாவில் காலை நீட்டிச் சாய்ந்து கொண்டு, கனமான கம்பளியைப் போர்த்துக் கொண்டு, டிவி பார்ப்பார்கள். அவரது அண்ணனுக்கு பேய்ப் படங்கள் என்றால் உயிர். கல்லறையைப் படீரென்று வெடித்துப் பிளந்து கொண்டு ஆவிகள் எழுந்து வரும் படங்கள், கழுத்தைக் கடித்து ரத்தம் குடிக்கும் டிரகுலா படங்கள் இவற்றை ஒன்று விடாமல் பார்ப்பார். மிஷேல் பயந்து கொண்டு அவ்வப்போது வீறிடுவார். அவர் வீறிட்டால் கிரேக்கிற்கு குஷி. அவர் பயந்து அலற வேண்டும் என்பதற்காகவே திகில் ஒலி வரும் இடங்களில் சத்தத்தை அதிகரிப்பார்.  

நமக்கு இவ்வளவு பயம் ஏற்படுகிறதே அண்ணனுக்கு ஏன் கொஞ்சம் கூட பயமே இல்லை என்று சிறுமி மிஷேல் யோசிப்பதுண்டு. சிறிது வளர்ந்த பின் அவருக்கு அது ஏன் என்று புரிந்தது. அது ஏன்? பேய், பிசாசு, ஆவி எல்லாம் இருக்கிறது என்று நம்பி நாம் பயப்படுகிறோம். ஆனால் கிரேக்கிற்கு அவை டிவி திரையில் தெரியும் வெறும் காட்சிகள், அதில் பிசாசாக வருபவர்கள் நடிகர்கள், இந்தப் ‘பிசாசுகள்’ எதுவும் திரையை விட்டு வெளியே வராது, வெளிய வர முடியாது, அப்படி வர முடியாததால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரியும். கிரேக்கிற்குத் தெரியும் என்பதால் அவருக்கு பயம் இல்லை. எனக்குத் தெரியாதால் எனக்கு பயம் என்பது புரிந்தது என்கிறார் மிஷேல். இதை நினைவு கூர்ந்து மிஷேல் எழுதுகிறார். ஜனாதிபதி பதவி என்றால் என்ன, அதற்கான போட்டி என்றால் என்ன என்பது பராக்கிற்குத் தெரியும் .அதனால் அவர் கவலைப்படவில்லை. அவை எனக்குத் தெரியாது அதனால் நான் பயப்பட்டேன் என்கிறார்.

மிஷேலின் The light we carry என்ற இந்தப் புதிய புத்தகம் வந்த சில நாள்களில் இங்குள்ள நூலகத்திற்கு வந்து விட்டது. ஞாயிற்றுக் கிழமை நியூயார்க் டைம்சில் புதிய புத்தகங்கள் பகுதியில் மதிப்புரை வந்திருந்தது. நம்மூர் போல உள்பக்கத்தில் ஒரு குட்டியூண்டு மதிப்புரைதான். அதைப் படித்துவிட்டு நான் செவ்வாய் கிழமை நூலகத்திற்குப் போய்க் கேட்டேன். நம்மையும் விடக் கெட்டிக்காரர்கள் எங்கேயும் இருப்பார்களே? இங்கேயும் இருந்தார்கள். அவர்கள் திங்கள் கிழமையே வந்து புத்தகத்தை இரவல் வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். என் முகத்தில் ஏமாற்றத்தைப் பார்த்த நூலகர், “நீங்கள் வருந்த வேண்டாம், புத்தகம் உங்களுக்குத் தேவை என்று ரிசர்வ் செய்து விட்டுப் போங்கள், புத்தகம் இரண்டு மூன்று பிரதிகள் இருக்கின்றன, ஆனால் அவை எல்லாமே வெளியே போயிருக்கின்றன. ஒன்றிரண்டு சில நாள்களில் திரும்பி விடும். வந்ததும் தகவல் தெரிவிக்கிறேன்” என்றார். மனுஷன் சொன்னபடியே புத்தகம் வந்ததும் மின்னஞ்சல் போட்டுவிட்டார்.

இங்குள்ள நூலகங்கள் இப்படி இருக்கின்றன! இந்த நூலகங்கள் பற்றி வேறு ஒரு சமயம் விரிவாக எழுதுகிறேன்

உனக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு தகவல். இங்குள்ள நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்களும் இருக்கின்றன. என்னுடைய 15 புத்தகங்கள் வாஷிங்டனில் உள்ள நூலகங்களின் தலைமையகமான லைப்ரரி ஆஃப் காங்கிரசில் இருக்கின்றன. அவற்றின் தலைப்புகளை நீ கூட https://catalog.loc.gov/vwebv/search?searchArg=Malan+Tamil&searchCode=GKEY%5E*&searchType=0&recCount=25 என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்

அன்புடன்

மாலன்

பி.கு: இந்தக் கடிதத்தை உன் மனைவியிடமும் கொடுத்து வாசிக்கச் சொல்.    

ராணி

About the Author

One thought on “பயத்தை வெல்வது எப்படி?

  1. பயம் ஏன் உண்டாகிறது? பயமே இல்லாமல் புதிய ஒன்றை எவ்வாறு எதிர்கொண்டு அதனை வென்று முன்னேறுவது எப்படி, என்று உணர்வு ரீதியாக சொல்லிச் செல்லும் கட்டுரை. பயம் மிகுதியைப் போக்க பயன் மிகுந்த கட்டரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these