டாக்டர்,எம்,எஸ்,உதயமூர்த்தி அணிந்துரை

அமெரிக்காவிலிருந்து மாலன் ! பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய மாலன், மேலும் படிப்பும் அனுபவமும் பெற அமெரிக்கா செல்கிறார்.

பத்திரிகை நிருபராக சில கட்டுரைகள் ; பத்திரிகை ஆசிரியராக சில ‘அலசல் கட்டுரைகள் ; சமுதாயக் கண்ணோட்டத்துடன்  ‘தேடல் உள்ளத்துடன் சில கட்டுரைகள்; சாணக்கிய கண்ணோட்டத்துடன், உள் நோக்கங்களை வெளியே கொணரும் சில கட்டுரைகள்.

ழுத்திலே ஓட்டம், சொல்வதிலே சுவை; கணிப்பிலே ஆழம். நாம் தெரிந்து கொள்ள வேண்டிய, நமக்குத் தேவையான பல விஷயங்கள் !

அமெரிக்க வளர்ச்சிக்கு காரணமான சமுதாயப் பண்புகள் ; அவர்களது மனோபாவம் – இவற்றில் உள்ள முக்கிய மூன்று குணங்களை எழுதுகிறார் மாலன்.

      உங்களுக்கு எப்படி நான் உதவ முடியும் என்ற கேள்வியும் புன் சிரிப்பும்.

      தெரியாததைத் தெரியாது என்று சொல்லும் வளர்ந்த மனப்பான்மை.

      பிறரது உரிமைகளைப் பாதிக்கும் சி்ன்ன விஷயங்களில்கூட

     “ மன்னிக்கவும் வருந்துகிறேன் என்று அவர்கள் காட்டும் மரியாதை.

     

இதைவிட அமெரிக்கர்களைப் பற்றி பிற நாட்டில் உருவாகி இருக்கும் ‘ இமேஜைப் பற்றி மாலன் குறிப்பிடுகிறார்.

      “அமெரிக்க மக்கள் துப்பாக்கிப் பிரியர்கள்.

      பெண்கள் காம வெறியர்கள்.

      குடும்பங்கள் என்ற ஒன்றில்லை

என்பனவெல்லாம் மீடியா எனப்படும் பத்திரிக்கைகளும் டெலிவிஷனும் சேர்ந்து அளித்து வந்திருக்கின்ற பொய்கள். உண்மை இதுவல்ல.

அத்துடன் மற்றொரு முக்கிய விஷயத்தையும் மாலன் வெளியே எடுத்து வைக்கிறார்.

அமெரிக்காவி்ல் இருக்கும் மீடியா போன்ற அமைப்புகள் “அமெரிக்கா பலம் பொருந்திய நாடு என்றும். அமெரிக்காவின் அமைப்புமுறை வளம் தரக்கூடியது என்றும் உலகை ஏமாற்றி வருகிறது என்பதையும் எடுத்து வைக்கிறார். இதற்காக, அமெரிக்காவே நன்றி சொல்லும் மாலனுக்கு – இதை அவர்கள் உணர்ந்து கொள்ளும்போது ! ஏனெனில் இதுதான் உண்மை !

மெரிக்கர்களுக்கு இதை உணர நேரமில்லை. அவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இதை உணரப் பிரியமில்லை; அவர்கள் இப்படிப்பட்ட இமேஜில் இதங்காண்கிறார்கள்!

 

மற்றும் மாலன் காட்டும் சில கலாசாரப் பண்புகளைப் பார்க்கலாம்.

ஒரு பொருளை நமக்குப் பிடிக்கவில்லை என்றால் அதில் ஏதும் குறை இல்லாதபோதும் – நாம் அதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். இதை அவர்கள் (Golden Rule) ‘வியாபாரத்தின் தங்கமான பழக்கம் என்கிறார்கள்.

மதத்தை உபயோகித்து யாரும் அங்கே அரசியலில் நுழையமுடியாது. அப்படிப்பட்டவனை கேவலமாகப் பார்ப்பார்கள். அவனைத் தோற்கடிப்பார்கள். அரசியலில் மதம் நுழைவதை அவர்கள் மன்னிப்பதில்லை.

திறந்த மனம், தேடல் (Quest) என்ற இரண்டு குணங்களும் அமெரிக்காவை விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பத்திலும் முன்னேற்றிய இரண்டு முக்கிய குணங்கள். அதை அவர்கள் அன்றாட வாழ்வில் அனுசரிக்கிறார்கள். இதை அழகாக தங்கத் தாம்பாளத்தில் எடுத்து வைக்கிறார் மாலன்.

பள்ளி மாணவிக்கு ஆண் அனுபவம் தேவையான ஒன்று – “கன்னித்தன்மை கழியாவிட்டால் இளப்பம் என்ற நிலமை மாறி “காத்திருப்போம் திருமணத்திற்கு என்ற இன்றைய நிலை; இப்படிப்பட்ட மாறிவரும் சமுதாய நிலைகள்.

ஓணான், பூனை, நாய், ஆமை என்று அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை விவரிக்க வந்தவர் எங்கோ தொடப்பட்டு இப்படி செல்லப் பிராணிகளை வளர்க்கிறார்களே, “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனி உண்டா ? ஏன் இவர்கள் மனிதர்கள்பற்றி கவலைப்படுவதில்லை என்று கேட்கிறார் பாரதியை முன்னிறுத்தி.

இப்படி ராணுவத்திலிருந்து, வாரிசு அரசியல் வரை. “எந்த தேசத்திலும் கதவைத் திறந்தவுடன் சோடாக்கடைக்காரர்கள், பீடா கடைக்காரர்கள்தான் முதலில் காலடி எடுத்து வைக்கிறார்கள்! என்று கோகோ கோலா வருகையைப் பற்றி சன்னமாகக் குறிப்பிடுகிறார்.

பல பண்புகளை நாம் அமெரிக்காவிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் ; உண்மைதான். அத்துடன் அவர்களது பொருளாதார ஆதிக்க நோக்கையும் அதை ஒட்டி அவர்கள் கையாளும் வெளி உறவுக் கொள்கையையும் பற்றி நாம் நன்கு தெரி்ந்து கொள்ள வேண்டும். காரணம் இந்த விஷயத்தில் அவர்கள் கில்லாடிகள்!

மாலனது இந்த அலசல் அவரை ஒரு தேர்ந்த பத்திரிகையாசிரியராக உயர்த்துகிறது என்றால் மிகையல்ல.

தென் அமெரிக்க நாடுகளுக்கு அவர்கள் கொடுத்த கடன் உதவி அந்த நாடுகளை எந்த விதத்திலும் உயர்த்தவில்லை என்பதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறார் மாலன்.

எப்படி அமெரிக்கப் பொருளாதார ஆதிக்கம் நடைமுறையில் செயல் படுகிறது? அமெரிக்கா வழக்கம்போல், பொருளாதார வளத்துடனும், உலகின் போலீஸ்காரனாகவும் வாழ வேண்டுமானால், அவர்களது பொருட்களுக்கான சந்தை பலநாடுகளிலும் இருக்க வேண்டும். இதன் விளைவாக “அந்த நாட்டின் செல்வம் வெளியேறுகிறதா, அந்த நாடு சுரண்டப்படுகிறதா என்பது பற்றி அமெரிக்கப்பொருளை விற்பதன்மூலம், உழைப்பின் ஊதியமும், லாபமும் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இதில் எங்கே உதைப்பு? இந்தியாவில் சுயதேவைப் பூர்த்தி என்கிற தத்துவத்தில் நம்மை நாமே கவனித்துக் கொள்கிறோம். பெரிய பெரிய யந்திரங்கள் தொழில் நுட்பங்களை வாங்குகிறோம். மற்றபடி சோப்பு, சீப்பு, பற்பொடி, கோகோ கோலா என்று நாம் வாங்குவதில்லை. இது அவர்களது விற்பனையை, வருமானத்தை பாதிக்கிறது.

எனவே, “இந்தியாவை வழிக்குக் கொண்டு வர அவர்கள் வைத்த கண்ணி வெடிகள்தான் பாகிஸ்தானும் காஷ்மீரும் என்று எழுதுகிறார் மாலன். அப்பட்டமான உண்மை. இதை தெளிவாக அலசுகிறார் மாலன்.

பாகிஸ்தான் ஒரு சிறிய நாடு. பங்களாதேஷ் போல, மலேசியா போல, நிலப்பரப்பிலும் சரி, மக்கள் தொகையிலும் சரி, வாழ்க்கைத் தரத்திலும் சரி வருமானத்திலும் சரி. இந்தியாவின் வளமும், நிலப்பரப்பும், தொழில்நுட்பம் கொண்ட விஞ்ஞானிகள் தொகையும், ராணுவபலமும், கடற்கரை வளமும் ஏணி வைத்தால்கூட எட்டாது.

எனினும் இந்தியாவை பாகிஸ்தானுக்கு சமமாக வைத்து அமெரிக்கா எடைபோடுகிறது. முக்கியத்துவம் கொடுக்கிறது. இதன் நோக்கம் நம்மைத் தாழ்த்துவதுதான்; மட்டம் தட்டுவதுதான்.

அதேபோல சீனாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடமுண்டு. இந்தியாவுக்கு இல்லை. சீனா இன்னும் ஒரு கம்யூனிஸ்ட் நாடு. எனினும் அதற்கு தொழில் வர்த்தக ரீதியில் செல்லப்பிள்ளை அந்தஸ்து. (Most favoured nation status) இதுவும் நம்மை தாழ்த்தும், நம்மை அவர்கள் சொல்லுகிற பாதையில் செல்ல நெருக்கும் தந்திரம்தான்.

ஜனநாயகம் என்பார்கள் அமெரிக்கர்கள். பார்த்தால் ஈரானில் ஷா என்ற சர்வாதிகாரியை ஆதரிப்பார்கள்; பிலிப்பைன்சில், மார்க்கோஸ் என்ற சர்வாதிகாரியையும், பாகிஸ்தானில் ஜியா என்ற ராணுவத் தலைவனையும் ஆதரிப்பார்கள். நிறைய இப்படி. அவர்களது பொருளாதார ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், உலகின் போலீஸ்காரர் என்கிற தலைமையைத் தக்க வைத்துக் கொள்ளவும் அவர்கள் “எதுவும் செய்வார்கள். வேகத்துடன் பல உண்மைகளைப் பொலபொலவெனக் காட்டுகிறார் மாலன். என் கணிப்பில், இங்கே ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் சிறந்த பண்புகளுடன் வாழும் சமுதாயம் வேறு. வெளிநாட்டு கொள்கையையும், பொருளாதார ஆதிக்கத்தையும் உருவாக்கும் சமுதாயம் வேறு.

வெளிநாட்டுக் கொள்கையை ஒரு சில அரசியல்வாதிகளும், தலைவர்களும், வெளி உறவு இலாகாவும், பொருளாதார ஆதிக்கத்தை அந்நாட்டு பெருந் தொழிலதிபர்கள் அரசியல் தலைமையின் உதவியுடன் மறைமுகமாகவும் உருவாக்குகிறார்கள்.

இந்த நிலை அடுத்த நூற்றாண்டில் எடுபடுமா அரசியல் தந்திரங்கள் பலிக்குமா? பார்க்கலாம்.

Ø       இன்று அமெரிக்கர்களது வீட்டின் அளவில் இருந்து, அவர்களது கார்களின் ‘ சைஸி லிருந்து, வருமானம் வரை கடந்த இருபதாண்டு களுக்கு முன் இருந்த நிலையில் இல்லை, வாழ்க்கைத்தரம் தாழ்ந்து வருகிறது,

Ø       அவர்களது பொருளாதார ஆதிக்கம் ஜப்பானாலும், ஜெர்மனி, பிரான்சினாலும் இன்று போட்டிக்குட்பட்டிருக்கிறது, பல ஆசிய நாடுகளும் போட்டியில் இறங்கி சவால்விடும் நிலை.

Ø       அமெரிக்க பொருளாதாரம் இன்று உற்பத்தி நிலையில் விகிதம் குறைந்து Service Industry எனப்படும் சேவைத் தொழிலில், -  ஓட்டல் தொழில் மளிகை, துணி, வியாபாரம் என்று உற்பத்தியல்லாத துறைகளில், வழக்கறிஞர், ஆசிரியர் என்ற துறைகளில் அதிகமாயிருக் கிறது, உற்பத்தி பெருகாத நிலையில் இருப்பதைப் பங்கிட்டுக் கொள்ளும் நிலை. தேக்க நிலை இது.

 

அதுவுமின்றி இப்போது ஒரு புதிய கருத்து பேசப்படுகிறது, அதாவது

(Participatory Universe) ஒன்றை ஒன்று சார்ந்து, உதவி வாழும் ஒரு பிரபஞ்சம். ஒரு நியாயத்தை நோக்கிச் செல்லும் பரிணாம வளர்ச்சிதான் அடுத்த கட்டம். அதை அமெரிக்கா அறிந்து கொள்ளும் – இன்றில்லாவிட்டால் நாளை. ஏனெனில் உலக நாடுகள் அமெரிக்கர்கள் செய்வதை நன்கு உணர்ந்துவிட்டன.

அடுத்து மாலன் “காந்தி வழி வந்த மார்ட்டின் லூதர்கிங் இங்கில்லை. பாரஃக்கான் (Farakkan) போன்ற வன்முறையாளர்கள் ஹிட்லர் வழி வந்தவர்கள் வளரும்போது அமெரிக்காவின் எதிர்காலம் என்னாகும்? என்ற கேள்வியை எழுப்புகிறார்.

அமெரிக்காவில் என்னைக் கவர்ந்த விஷயம் இதுதான். மனத்தைப்பற்றி மேஜ்ஸ்பெல் மாட்ஸ் குறிப்பிடும்போது மனம் என்பது ஒரு லட்சியத்தை நாடி ஓடும் -  பாதை தவறும்போதெல்லாம் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் சாதனம் என்பார்.

அதேபோல அமெரிக்கா பல காலங்களிலும் பல நெருக்கடிகளிலும். தோல்வியிலும் தன்னைத் தானே சரி செய்து கொள்ளுகிறது என்பதுதான் நான் கண்ட உண்மை.

ஹிப்பிஸ் என்ற மாறுபட்ட இளைஞர் கூட்டம் ; பிறகு கடவுள் செத்து விட்டார் என்ற கொள்கை; பின் வியட்நாம் யுத்தம், பங்கு மார்க்கெட்டின் தலை குப்புற சரிவு, கறுப்பு மக்களின் எழுச்சி, மெக்சிகோ ஏழைகளின் ஊடுருவல் என்று எத்தனையோ சம்பவங்களை சந்தித்தது. சரிந்தாலும் மீண்டும் எழுந்து நிற்கிற குணம் கொண்ட வாழும் ஜீவனாகத்தான் அமெரிக்காவை பார்க்கிறேன்.

நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அமெரிக்காவினுடைய தாக்கம், நேரிடையாகவோ மறைமுகமாகவோ உலகின் எல்லாப் பகுதிகளையும் எல்லா மக்களையும் தொட்டிருக்கிறது.

வெறும் பொருள் பொருள் என்று – பணம் பணம் என்று – ஓடும் நிலையைத் தாண்டி அமெரிக்கா தன்னை அறிந்து கொள்ளும் ஒரு நிதானத்திற்கு வந்து கொண்டிருப்பதாகத்தான்படுகிறது. இதைக் காட்டும் சம்பவங்களை இங்கே குறிப்பிட முடியும்.

 உலகமும் பிரபஞ்சமும் தனித்தும் இயங்குகிறது, இணைந்தும் இயங்குகிறது. அதை நாம் உணர்ந்து இந்தியாவின் தனித்தன்மையில் விழிப்புடனும் இருக்க வேண்டும். இது அமெரிக்காவுடன் மட்டுமல்ல அண்டை நாடான பாகிஸ்தானிடத்திடம் கூட.

மாலன் அழகாகச் சொல்கிறார்: “ யுத்தம் தொடுத்தவர்கள் எல்லாம் முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள்; நடுநிலைமை பேசிய நாம் தனித்து நிற்கிறோம் என்று.

தமிழ்நாட்டில் குல்தீப் நய்யார் இல்லை என்றோ, இந்தியாவில் ஒரு பென்ஜமின் பிராட்லி (வாஷிங்டன் போஸ்ட் பொறுப்பாசிரியர் ; வாட்டர்கேட் ஊழல் புலனாய்வை நெறிப்படுத்தியவர்) இல்லை என்றோ யார் சொன்னது? மாலன் எழுதியிருப்பது சிறிய நூல்தான், பயனுள்ள நூல்.


 

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *