கோட்டை

       இப்போதுதான் வந்து கொண்டிருக்கிறார்கள். கும்பலாய், கூடியும், கலைந்தும், கையோடு கொண்டுவரும் பத்திரிகைகளை, டிபன் பாக்ஸ்களை, கைப்பகளை வைத்துவிட்டு இடத்தில் உட்கார்ந்து வேலையை ஆரம்பிக்க இன்னும் பதினைந்து நிமிஷமாவது ஆகலாம். நாமும் கூடக் கொஞ்சம் மெதுவாக வந்திருக்கலாம்.

ஆனால் நேற்றைக்குச் சித்தப்பாவின் கடிதம் வந்ததிலிருந்தே இதுப்புக் கொள்ளவில்லை. தனக்கு இரண்டு வருடமாய் வேலைக் கிடைக்காத சோர்வில் இதை முற்றிலும் மறந்துபோய், அவர் எழுதிக் கேட்கிற வரை இப்படிச் சும்மா இருந்துவிட்டதே நெஞ்சை அறுத்தது. சித்தப்பா எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை. அமைதிதான் அவரது பாஷை. அதை அந்தக் கண்கள் சொலிக் கொண்டிருக்கும் ஆபீஸ்,  அதை விட்டால் வீடு. வீட்டிலும் ஏதோ ஒரு புத்தகம். இப்படி ஒரு நாளை ஒவ்வொரு நாளும் சுலபமாய் உதறி, அமைதியில் கரைந்து விட முடியும் அவரால், அவரே எழுதுவது என்றால்…

யோசித்துப் பார்த்தால்,  இப்படித்தான் எல்லோரும், குளவியைப் போல்  வாயில் ஒரு பிரச்சினையைக் கவ்விக்கொண்டு, இறக்கி வைக்க இடம் தேடி சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அலைச்சலும் இரைச்சலுமாய். ஆனால் சித்தப்பா விஷயம் கொஞ்சம் நுணுக்கமானதுதான். தம் மகனை அரசாங்கம் நடத்தும் சைனிக் ஸ்கூலில் சேர்த்திருந்தார். வேறு என்ன, அவையத்து  முந்தியிருக்கச்  செய்யும்  ஆசைதான்.  நல்ல கல்வி, மிலிட்டரி  டிசிப்ளின், சுமாரான சாப்பாடு. இதற்காகவெல்லாம்  நடுத்தரங்களை மிரள  வைக்கும்  ஒரு  தொகையைக்  கேட்கும்  படிப்பு.

நல்லவேளையாய், ஜாதி அடிப்படையில் இல்லாமல் சம்பள அடிப்படையில் சில அரசாங்க ஸ்காலரிஷிப்கள் இருந்தன.  அதற்குத்  தகுதியும்  அவருக்கு  இருந்தது.  அப்படி நினைத்துக் கொண்டுதான் சித்தப்பா மகனை படிக்க அனுப்பித்தார். ஆனால்  இப்போது, எடுக்காத  லீவிற்குக் கிடைத்த சம்பளம் உபரியாய்ச் சேர்ந்து உதைக்கிறது. சர்க்கார் பார்த்து மனம் வைத்து விட்டுக் கொடுத்தால், நுகத்தடியைத் தளர்த்தின மாதிரி பாரம் குறையும்.

வேடிக்கைதான், கல்வி ஒரு வியாபாரமாய்க் கல்லாவைத் திறந்துகொண்டு உட்கார்ந்திருப்பது.  அதில்  அவரவர் சக்திக்குத் தகுந்த மாதிரி வாங்கிக் கொண்டு வருவது.

இவன்  நிழலிலிருந்து  விலகி  மெல்ல கட்டடத்திற்குள் நுழைந்தான். நீள நீளமாய்க் காரிடார்கள்.  உள்ளே  இடம் போதாமல் இவற்றிலும் வழிந்து கிடந்த மேஜைகள். அவற்றில் பல இன்னமும் காலியாய்க் கிடந்தன. சுவர் ஓரங்களில் கட்டுக்கட்டாய்  தானுமொரு சுவர் மாதிரி ஃபைல்கள். என்னதான், இவ்வளவு எழுதி எழுதிக் கட்டி வைக்கிறார்கள் ?  இவன் விசாரிக்க வேண்டியது இந்த இடம்தானா? தெரியவில்லை. யாரைக்கேட்பது ?  கையில்  சில  ஃபைல் கட்டுக்களுடன்  ஒரு  ப்யூன்-ப்யூன்  மாதிரிதான்  தெரிந்தது – கடந்து  போனார்.  இவன் அருகில் போய்த் தயங்கினான்.

“ இன்னா சார் ? ”

“ ஒண்ணுமில்லே,  எஜுகேஷன்  டிபார்ட்மெண்ட்  எங்கே  இருக்கு ? ”

“ ம் … இன்ன விசயம் … ” இவனுக்கு தன் சித்தப்பாவின் நுணுக்கமான பிரச்சனையை இவனிடம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. எங்கேயிருந்து ஆரம்பிப்பது?

“ இல்ல … பார்க்கணும் … ”

“ நேரே போய்த் திரும்பு சார். ”

அங்கே மூன்று நான்கு பேர்கள் இருந்தார்கள். ஒருவர் நிதானமாய்த் தன் வெற்றிலைப் பெட்டியைத் துடைத்துக் கிழித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே வாய் நிறைய  வெற்றிலை.  சாப்பாடு  பலமாய்  இருந்திருக்கக்கூடும்.

இவனுக்குத் தான் கண்ட பத்து மணி அவசரங்கள் எல்லாம் திடுமென பொய்த்து விட்ட  மாதிரி,  மாயை  மாதிரி  தோன்றியது.

“ யாரு ? ” வெற்றிலைச்சாறு வெளியே தெறித்துவிடாது முகத்தை உயர்த்திக் கொண்ட ஜாக்கிரதை.  இவன்  தயங்கித்  தயங்கி விஷயம் முழுமையும் சொன்னான். அவர் காதிலே வாங்கி கொண்ட மாதிரி தெரியவில்லை. ஒரு பார்முலாவிலே கலப்பது மாதிரி, ரொம்ப அக்கறையுடன் அளவுகளைச் சரிபார்த்து வெற்றிலையையும், புகையிலையையும்,  சீவலையும் மாறி மாறி வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருந்தார்.

இவன் பேசி முடித்ததும்,

“ ஷரி உன் செக்ஷன் பாழ்க்கிறவழ் அந்த மூணாவது டேபிளுக்கு வருவாழ். ஷொல்லு ” என்றார்.

பொழுது போகவே ஆபீஸ் வருகிறாரோ என்னவோ. இல்லை உட்கார்ந்த இடம் மாறாமல்,  உயர்வு  தாழ்வு  ஏதுமில்லாமல் செக்குமாடு மாதிரி ஒரே கதியில் இத்தனை நாள் சுழன்று சுழ்ன்று வந்த சலிப்போ. இவன் நகர்ந்து மூணாவது மேஜைக்கு வந்தான். அந்த ஸீட் காலியாக இருந்தது. ஓரிரு நிமிஷம் காத்திருந்தான். யார் என்றோ, என்ன என்றோ  கேட்பார்  இல்லை.  உட்காரலாமா என்று நினைத்தான். ஒரு வேளை அது அதிகப் பிரசங்கித்தனமாகி விடக்கூடும் ;

“ சார் … ”

ஃபைலில் மூழ்கியிருந்த பக்கத்து மேஜைக்காரர் நிமிர்ந்து பார்த்தார். கண்ணாடிக்காரர்.  இவன்  மூணாவது  மேஜையைக்  காட்டி…

“ சார்  இல்லையா… ? ”  என்றான்.

“ காபி சாப்பிடப் போயிருக்கார்,  வந்து  விடுவார்,  அரைமணி  கழித்து  வாங்க … ”

இவன் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். நீளமான காரிடார்கள். அரை மணி  நேரத்தை  எங்காவது,  எப்படியாவது கழிக்க வேண்டும். இந்தக் காரிடாரில் மேலும், கீழும் போய்வரலாம். அதற்கு அரை மணி நேரம் அதிகம். அல்லது அந்தக் கிளார்க்  மாதிரி  தானும்  காபி  குடிக்கப்  போகலாம்.

காண்டீன்  வழிந்து  கொண்டிருந்தது.  கை  கையாய்  அள்ளித்  தெளித்த  மாதிரி ஒரே தலைகளாய்த் தெரிந்தது. எல்லோருக்கும் பேச ஏதோ விஷயம் இருந்தது. ஒரே இரைச்சல். இவன் ஓரத்தில் கிடந்த ஒரு மேஜையில் போய் உட்கார்ந்தான். இவனைத் தவிர இன்னும் முணு பேர் அதில் உட்கார்ந்திருந்தனர்.

“ என்னப்பா,  டி.ஏ.  கூடியிருக்காமே ? ”

“ சம்பளம்  போட்டாச்சா ? ”

“ இல்ல,  ஜி.ஆர்.வி. சொன்னான். ”

சர்வர்  அவர்களுக்கு  மூணு  காபியைக்  கொண்டு  வந்து  வைத்தான்.

“ ஒரு காபி. ”

அவன் ஒன்றும்  பேசாமல் திரும்பிப் போனான். நான் சொன்னதை காதில் வாங்கிக் கொண்டானா என்று இவனுக்குச் சந்தேகம். போய்க் கொண்டிருந்தவனை “ ஸ் … ஸ்… ” என்று கூப்பிட்டான். அவன் இதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் போய் விட்டான்.

“ அவன் டிரான்ஸ்ஃபர் என்ன ஆச்சாம் ? ”

“ கிடப்பில போட்டாங்கப்பா, இவனும் இரண்டு மாசமா, லீவு போட்டுச் சுத்திக்கிட்டிருக்கான். ”

சர்வர் மீண்டும் வந்து பக்கத்து மேஜையில் காபியை வைத்துவிட்டுப் போனான் இவன்,

“ மீண்டும், ஸ் … ” என்று கூப்பிட்டான்.

“ என்னப்பா ? ”

“ ஒரு காபி கேட்டேனே ? ”

“ டோக்கன் எங்கே ? ”

ஓகோ, அதுவேற வாங்கி வரணுமா ? இவன் எழுந்து கவுண்ட்டருக்குப் போனான். திரும்பி  வந்தபோது  இவன்  உட்கார்ந்திருந்த  மேஜையில் நாலுபேர் உட்கார்ந்து உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களை எப்படி எழுப்புவது ? நான் உட்கார்ந்திருந்த இடம் என்று, உரிமை கொண்டாடி,  இவர்கள்  சிரிப்பிற்கு குறுக்கே எப்படி புகுவது ?  இவன் தயங்கினான். இப்போது  பக்கத்து  மேஜைகளும்  நிறைந்து  கிடந்தன.

காண்டீனை விட்டு வெளியே வந்ததும், வந்த காரியத்தை விட்டுவிட்டு ஒரு காபியின் பொருட்டு, ரொம்ப நேரம் உள்ளே கழித்துவிட்டது நெஞ்சில் குறுகுறுத்தது. இப்போது அந்த மூன்றாவது மேஜைக்காரர் வந்திருக்கலாம். வந்தவர், இப்போது வெற்றிலை போட, சிகரெட்  பிடிக்க என்று  மீண்டும்  வெளியே  போய்  விடாமல்  இருக்க  வேண்டும்.  பரபரப்புடன்  உள்ளே  நுழைந்தான்.

நல்லவேளை, சீட்டில் இருந்தார். இளைஞர் தான். இவன் போய் நின்றதும், ‘ எஸ் ’ என்று  தலை  நிமிர்ந்தார்.  இவன் சித்தப்பாவின் பிரச்சினையை தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்லி முடித்தான்.

“ ம் ”. மீண்டும் தலைநிமிர்ந்தார். “ ஃபைல் நம்பர் தெரியுமா ? ” சித்தப்பா எழுதியிருந்தார். சொன்னான். நீளமாய், ஒரு லெட்ஜர் மாதிரி இருந்த ஒரு நோட்டுக் புத்தகத்தை எடுத்துப் புரட்டினார். இரண்டு பக்கங்களுக்கு ஒரு முறை எச்சில் தொட்டுக் கொண்டு, இடையில் ஒரு முறை தலையை உயர்த்தி, “ நம்பர் என்ன சொன்னீங்க ”  என்று கேட்டுக் கொண்டு தேடினார்.

“ உங்க ஃபைல்ல லீகல் ஒப்பீனியன் கேட்டு லா டிபார்ட்மெண்டிற்கு அனுப்பி – யிருக்கிறோம். வேணும்னா அங்கே போய்ப் பாருங்க … ” இவன் பைல் அனுப்பப்பட்ட தேதியைக் குறித்துக்கொண்டு எழுந்தான். உங்ககிட்ட வந்தா ஏதாவது பார்த்து ஹெல்ப் பண்ணுங்க சார், ப்ளீஸ் … ”

“ எங்க கையில ஒண்ணுமில்ல, பிரதர். அவங்க என்ன ஒப்பீனியன் சொல்றாங்கிறதப் பொறுத்துத்தான் நான் ஆக்ஷன் எடுக்க முடியும். அங்க போய்ப் பாருங்க.”

இனி  லா  டிபார்ட்மெண்டில்  போய்  ஒவ்வொரு  டெஸ்க்காய்த் தேடி இன்னுமொரு முறை பிரச்சினைகளை அவர்களுக்கு உறைக்கிற மாதிரி சொல்லி… லாயசன் என்பது சுலமில்லதான். அது நியூக்ளியர் பிஸிக்ஸ் போல சிக்கலான விஞ்ஞானம், கரன்ஸிகளை, பாரின் விஸ்கிகளை, பட்டுப் புடவைகளை, டிரான்ஸிஸ்டர்களை, சாவி வளையங்களை, பால் பாயிண்ட் பேனாக்களை இடத்திற்கும், அந்தஸ்திற்கும், காரியத்திற்கும் தகுந்த மாதிரி வீசிவிட்டுத் தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டுபோவது புத்திசாலித்தனம் இயக்கும் விஞ்ஞானம்தான். எங்கே, எந்த மாதிரித் தட்டினால் என்ன சத்தம் கேட்கும் என்பதைக் கணக்குப் பிசகாமல் அனுமானிக்கும் விஞ்ஞானம்.

இவனும்தான், தன் காரியம் முடிவதற்கு சில ரூபாய்கள் கொடுப்பதற்கு ஒழுக்கம், விதிமுறைகள், மனச்சாட்சி எல்லாம் கட்டிப் பரணில் வைத்துவிட்டுத் தயாராய்த்தான் இருந்தான். இந்த அலுவலகங்களில் பேசுவதற்கு இதுதான் பாஷை என்றால் பேச வேண்டியதுதான். இந்தப் பார்த்திற்குப்பின் நுகத்தடி நிரந்தரமாய்த் தளருமானால் சித்தப்பாவும் மறுக்கப்போவதில்லை. ஆனால் யாரிடம் ?  எப்படி ? அந்தச் சூட்சுமம்தான் புரியவில்லை.

இங்கேயும் வரிசையாய் மேஜைகள், எல்லோருமே ஏதோ வேலையாய் இருந்தார்கள் ;  ஒருவர்,  பிலிம்பேரோ,  வீக்லியோ  புரட்டிக் கொண்டிருந்தார். இரண்டுபேர் சின்ன ட்ரான்ஸிஸ்டரில் கிரிக்கெட் கமென்ட்ரி கேட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் மேஜைமேல் கவிந்து கொண்டிருந்தார், தூக்கமில்லை. சிலபேர், தடித்தடிப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தனர். தேசிய ஒழுக்கங்களைக் காட்டிக்காக்கும் அரணின் செங்கல்களாய்ச் சட்டம் ; இந்தப் புத்தகங்கள். இதில் ஊறித் திளைத்த சட்டாம் பிள்ளைகளாய் இவர்கள்…

கவிழ்ந்திருந்தவர் தலை நிமிர்ந்தார். “ யாருப்பா வேணும் ?  இவன் அவரிடம் நகர்ந்து போய்ப் பிரச்சினைகளையும் எஜுகேஷன் டிபார்ட்மெண்ட் போய் வந்ததையும் சொன்னான். பாதியில் இடைமறித்தார்.

“ ஃபைல் யார்கிட்ட சார் இருக்கு ?  இவன்  தெரியாமல்  விழித்தான்.

“ இது கூடத் தெரிஞ்சுக்காமே வந்தா என்ன சார் பண்ண முடியும் ?  அப்ப ஒண்ணு பண்ணுங்க. டெஸ்பாட்ச்சிலே போய் ஃபைல் யார்கிட்ட வந்திருக்குனு கேட்டு வாங்க…இவன்  ஹாலின்  முகப்பிற்கு  வந்தான். அங்கேதான் புறாக்கூண்டுகளை அடுக்கிய மேஜை போட்டு ஒருவன் உட்கார்ந்திருந்தான். அதுதான் டெஸ்பாட்ச்சாக இருக்க வேண்டும்.

“ சார், ஒரு  சின்ன ஹெல்ப்… இந்த ஃபைல் யார்கிட்ட இருக்குனு… கொஞ்சம் சொல்ல முடியுமா… சார்  இவன் எண்களைக் குறித்து நீட்டினான்.

அதை வாங்கிக் கொள்ளாமல், சீட்டிலிருந்தவர் கேட்டார். “ எங்கிருந்து சார் வர்றீங்க ?

இதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் ?  தன் பெயரையா, தன் சித்தப்பாவின் பெயரையா ?  ஒரு நிறுவனத்தின் பெயரைச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, இன்னும் வேலை கிடைக்காமல் இருப்பதையா ?  எதற்கு எவ்வளவு மரியாதை கிடைக்கும் ?

“ ஃபைல் நம்பரா சார், இது ?

ஆமாங்க .

இதுக்கு ஒரு டெஸ்பாட்ச் நம்பர் இருக்கும். குறிச்சுட்டுவாங்க.

இவனுக்கு மீண்டும் ஒருமுறை தான் துவங்கிய இடத்திற்கே போய், இந்தத் தகவலைச் சேகரிக்க அசதியும் எரிச்சலுமாய் இருந்தது. எண்கள் எண்களாய் நிரப்பப்பட்ட ஃபைல்கள். ஒரு கேள்விக்குறியைச் சுமந்துகொண்டு இலாகா இலாகாவாய்ச் சுற்றும் ஃபைல்கள் ;  கடைசியில் சோர்ந்துபோய் சுவரோரம் தானும் ஒரு சுவராய் ஒதுங்கிக் கொள்ளும்  ஃபைல்கள்.

இவன் நகராமலேயே நின்றான். “ சரி கொடுத்துப் போங்க. அரை அவரை கழிச்சு வாங்க. தேடி வைக்கிறேன். இருக்கிற வேலை போதாதுன்னு இதுக வேறே ஊடையிலே என்று  முணுமுணுத்துக்  கொண்டான்.

இன்னும் அரைமணி நேரம். அப்போதாவது மணிக்கதவின் தாழ்திறந்தால் சரி. ஆனால் அரைமணியில் முடியவில்லை. திரும்பத் திரும்ப மொய்த்து ஒரு வழியாய்த் தெரிந்தது. யாரோ வி.எஸ்.சாமி. வி.எஸ் ? இவர் தானா ? இன்னமும் பஞ்சகச்சத்தின் மீது கோட்டுப் போடும் நாகரிகம். விடும் மூச்செல்லாம் ஐ.பி.சி. யின் செக்ஷன்களாக இருக்கக் கூடிய அனுபவம். இதென்ன, ப்பூ என்று கண்களில் நிரந்தரமாய் தங்கிவிட்ட அலட்சியம்.

‘‘ என்ன வோணும் ?  இவன் சித்தப்பாவின் பிரச்சினையைச் சொன்னான். இப்போது எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி விவரித்துக் கொண்டுபோவது என்பதெல்லாம் பழக்கமாகிவிட்டது. அவர்  ‘ ம் ’ , ‘ ம் என்று கேட்டுக்கொண்டே வந்தார். சொல்லி முடித்த பின்னும் கேட்டுக்கொண்டு ஃபைல் எடுத்து தூசி தட்டினார். பிரித்துப் பார்வையை ஓட்டினார்.  ப்பா !  என்ன வேகமான வாசிப்பு.

“ இதிலே பாருங்கோ, நாங்க ஒண்ணும் பண்றதுக்கில்லை. ப்ரீசிடெண்ட்ஸ் இருக்கு. ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுவத்திரெண்டாம் வருஷம் அலகாபாத் கோர்ட்ல ஒரு கேஸ் நடந்து கவர்மெண்ட் பக்கம் பேவர் ஆகியிருக்கு. அதிலே இன்கம்னா என்ன சொல்லியிருக்குனா ” – பக்கத்து மேஜைப் பக்கம் திரும்பி அலகாபாத் ஐ.பு.ப்ரெசீடிங் வால்யூம் உன் கிட்ட இருக்கா பாரு, நைன்டீன் சிக்ஸ்டி டூ.

இவனுக்கு  அதிர்ச்சியாய் இருந்தது. இவ்வளவுதானா ?  கழுத்தை இறுக்க, நுரை தள்ள பாரம் இழுக்கும் இந்த நடுத்தர வர்க்கத்து மாடுகளை, மிரளவைத்து விரட்டும் தார்க்குச்சிதானா இந்தச் சட்டங்களும் தீர்ப்புகளும் ?  பிரச்சினையின்  ஆழமும்  கனமும் அவசியமும் புரிந்து நிகழ்வுகளையும் கொண்டு தீர்த்துக்கட்டி விடத்தானா சாமர்த்தியம். இவனை வாயெழ விடாமல், பக்கம் பக்கமாய்த் திருப்பி தன் செயலை நியாயப்படுத்தி அவர் பேசிக் கொண்டிருந்தார்.

பிரிட்டிஷ் விட்டுப் போனது தபால் ஆபீஸுகளும், சில ரயில் பாதையும், மெக்காலேயின் அடிமைக் கல்வியும் மட்டுமில்லை ;  இதோ இப்படி அசைக்க முடியாத கல் கோட்டையாய் ஒரு ப்யூரோக்ரசி சிக்கலும் சுருக்கமுமாய், ஒன்றுமறியாப் பலநூறு பாமரர்கள் கழுத்தைப் படர்ந்து இறுக்கும் சிகப்பு நாடா.

வெளியே வந்தான். தொண்டைக் குழி எரிச்சலாய்க் காந்தியது. காறிக் காறி காம்பவுண்டில் துப்பிவிட்டு நிமிர்ந்தான். தூரத்தில் பஸ் வருவது தெரிந்தது.

( தீபம் )

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these