மாறுதல் வரும்

  இவர்கள் காத்திருக்கிறார்கள் கனவுகளைச் சுவாசித்தபடி. ஆட்சி மாற்றம் தங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்ற ஆசையைச் சுமந்தபடி. கை சுத்தமில்லாது போனாலும், காலமறிந்து காரியங்கள் செய்வதில் அவன் சமர்த்தன். ஆதலால், தங்கள் துன்பங்கள்  ஒரு  தனிமனிதனாலே  மாற்றப்படும் என நம்பிக்கையைத் தின்றபடி இவர்கள் காத்திருக்கிறார்கள்.  ஆனால் …

                எழுதுவதை  நிறுத்திவிட்டு  அனந்தராமன், இடைவிடாமல் அலறிய டெலிபோனைக்  கையில்  எடுத்தான்.

       “ யெஸ் …  அனந்தராமன் …

                ஒன்  மினிட்  சார்,  கால்  ஃப்ரம்  ராஜ்பவன் !

                ராஜ்பவனா ?  கவர்னர் மாளிகையில் இருந்து  யார்  கூப்பிடுகிறார்கள் ?  ஏதேனும் அதிகாரபூர்வமான  மறுப்பா ?

                அனந்தராமன் ?

                யெஸ் !  ஸ்பீக்கிங் !

                ஹேய் அனந்த் !  நந்து  ஹியர் !

                யாரு ?

                என் அருமை முட்டாள் நண்பா !  தயவு செய்து உன் வாழ்க்கையில் பதினைந்து வருடங்கள் பின்னோக்கிப் போ. உன்னோட சேர்ந்து கல்கத்தாவில் புத்தகங்களையும், பெண்களையும் ரசித்த நந்தலால் பாசு என்ற பெங்காலி இளைஞனை உன் நினைவின் அடுக்குகளில் தேடிப் பார்.

                நந்து !  யூ ராஸ்கல் !  ராஜ்பவனில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் ?

                ராஜ்ய  பரிபாலனம் !

                என்னது ?

                ஆமாம் அனந்த் !  போன வாரம் வரை வெளியுறவு இலாகாவில் நியூஸ் பேப்பர் வாசித்துக்  கொண்டிருந்தவனை,  சென்னை  வெய்யிலுக்குத்  துரத்திவிட்டார்கள்.  இப்போது கவர்னருக்கு  செக்ரெட்டரியாக  கான்ஃபரன்ஸ்களில்  காபி  குடித்துக்  கொண்டிருக்கிறேன் !

                வெல்கம்  டு  மெட்ராஸ் !

                வெல்கம்  டு  ராஜ்பவன் !  அவகாசம்  கிடைக்கும்போது வாயேன் !

                அவசியம்  இருக்கும்போது  வருகிறேன் !

                அனந்த் போனை வைத்துவிட்டுப் பழைய நினைவுகளில் புன்னகைத்தான். நந்தலால் பாசு ! புத்தகப் பிரியன். அவ்வப்போது கவிஞன். எப்போதும் உற்சாகி. சுயமான சிந்தனைக்காரன். பந்தா இல்லாமல் பழகும் எளிமையான நண்பன். கடைசியாக, நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் கல்கத்தாவில் பார்த்தது. தட்சிணேஸ்வரத்தின் காரை உதிர்ந்த கட்டடங்களைத் தாண்டி, ஹுக்ளி கரையில் உட்கார்ந்து பேசிய மாலைப்பொழுது  மறுபடி  மனத்தில் ஓடியது. அது  ‘ தி ஒப்பீனியன்  பத்திரிகைப் பொறுப்பை, அனந்த் ஏற்றுக் கொண்டிருந்த நேரம். ‘ மக்கள் சிவில் உரிமைக் கழக   த்தின் பரிசு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக  கல்கத்தா வந்திருந்தான் அனந்த். பேச்சு, பத்திரிகைச்  சுதந்தரம்  பற்றித்  திரும்பியது.

       ‘ சுதந்தரம் !  எதிர்க்கட்சிகளுக்கு அது கோஷம். ஆளுகிறவர்களுக்கோ அது தாங்கள்  கருணை  கொண்டு  அளித்த  சலுகை.  அறிவு ஜீவிகளுக்கோ அது இன்னுமொரு  குழப்பம்.  படித்தவர்களுக்கு அது அரசியல் வார்த்தை. ஏழைகளுக்கு என்றும்  அது  புரியாத  ஒரு  புதிர் …

                உன்  போன்ற  பத்திரிகைகாரர்களுக்கு  அது  ஒரு  மகத்தான  பிடிவாதம் … !

                பத்திரிகைக்காரன் !  அந்த வார்த்தையில் இருந்த அலாரம் மனத்தை நிகழ் காலத்துக்கு விரட்டியது. அனந்தராமன் தன்னையறியாமல் காலண்டரைப் பார்த்தான். இன்று வெள்ளிக்கிழமை. பத்திரிகையின் எழுத்து வேலைகளை முடித்து அச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டிய கெடு தினம். இனி சிந்தனைகளுக்கு இடமில்லை. அனந்தராமன் எழுந்து  குளிக்கப்  போனான்.

       மாடிப்படி வளைவில் அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். முகத்தில் பயன் எழுதியிருக்க, நேற்றைக்கு அழுத கண்கள் இன்று தணல் போல் சிவந்திருக்க சற்றே தலை  கலைந்து  ஏதோ  ஒரு  நம்பிக்கையுடன்…

       அவனைப்  பார்த்ததும்  எழுந்தார்கள்.  கை நடுங்கக் கும்பிட்டார்கள். ஏதோ சொல்ல  முயற்சித்தார்கள்.  அவர்களிடத்தில் வார்த்தைகள் இல்லை. ஏராளமாகக் கண்ணீர்  இருந்தது.

       அனந்தராமனுக்குப் புரிந்தது. அவர்கள் பறிகொடுத்தவர்கள். தாங்கள் ஆதாரமாக நம்பியிருந்த ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தவர்கள். அந்த ஏதோ ஒன்று அவர்கள் குழந்தையாக  இருக்கலாம் ;  கணவனாக  இருக்கலாம் ;  மூச்சைப் பிடித்துப் பணம் திரட்டி, மூன்று மாதங்களுக்கு முன் கல்யாணம் செய்து கொடுத்த சகோதரியாக இருக்கலாம் ; தலைமுறைகளாகக் காப்பாற்றி  வந்த நிலமாக இருக்கலாம் ; வியர்வையாகச் சேமித்து  வாங்கிய  வைரங்களாக  இருக்கலாம்.

       அவர்களைப்  பார்த்தால்,  நகைகளை அறிந்தவர்களாகத் தோன்றவில்லை. அவர்கள்  உடுப்புகளில்  ஏழ்மை  இருந்தது. துரத்தப்பட்ட அவமானம் இருந்தது. எதிர்காலம் குறித்த சோர்வு இருந்தது. ஒரு நெருப்புப் பொட்டுப் போல இழந்ததை அடைந்துவிட  வேண்டும்  என்ற  தீவிரம்  இருந்தது. தொலைத்தவர்களுக்கு எல்லாம் உதவ  இது  போலீஸ்  ஸ்டேஷன்  அல்ல,  பத்திரிகை  ஆபீஸ்.  வெறும் காகிதச் சாலை !

       ஆனால்,  அவர்களுக்கு  ஒரு  நம்பிக்கை.  வாரம் ஒரு பத்து பேராவது இப்படி வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தனது அறைக்கதவைத் திறந்து கொண்டு வந்து அமர்ந்தான் அனந்த். பியூனை  அனுப்பி  அவர்களை  அழைத்து  வரச்சொன்னான். அவர்கள் – முப்பதைத் தொட்ட ஓர் இளம் பெண். பத்துப் பன்னிரண்டு வயதில் வேட்டி அணிந்த ஒரு பையன் – தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தார்கள். இன்னொரு தரம் கை நடுங்க கும்பிட்டார்கள். “ உட்காருங்கம்மா ! என்றான் அனந்த். மறுத்தார்கள்… வற்புறுத்தலுக்குப்  பின்  நாற்காலி  முனைகளில்  தொற்றிக்  கொண்டார்கள்.

       “ என்ன  விஷயம், சொல்லுங்க !

                இந்தக் கேள்விக்காகவே காத்திருந்தது போல் உடைந்து அழுதாள் அந்தப் பெண். அனந்தராமனுக்குப் பரிதாபமாக இருந்தது. எப்படித் தேறுதல் சொல்லுவது என்று தெரியாமல் தவிப்பாக இருந்தது. ஆண் பிள்ளையாக இருந்தால் கையைப் பற்றிக் கொள்ளலாம்.  தோளைத்  தட்டிக்  கொடுக்கலாம்.  இவள்  பெண் !

       அனந்தராமன் அந்தச் சிறுவனைப் பார்த்தான்.  அவன் திடமாகத்தான் தோன்றினான். ஆனால் அமைதி இல்லாதவனாகத் தெரிந்தான். அறையில் மாட்டியிருந்த காலண்டர், அடுக்கியிருந்த புத்தகம், ஒப்புதலுக்கு வந்த ஓவியம் என்று பார்வை அலைந்தது.

       “ என்ன  தம்பி,  என்ன  விஷயம் ?

                எங்க ஐயாவைக் காணோமுங்க !

                எத்தனை  நாளா ?

                ஒரு வாரமா !

                ஒரு  வாரமா  தேடாமலேயா  இருந்தீங்க ?

                பொறுமையை  இழந்துவிடாமல்  கேள்விமேல் கேள்வியாக அடுக்க, சிறிது சிறிதாக  விஷயம்  சிந்திற்று.

       அருணாசலம் – அதுதான் அந்தப் பெண்ணின் கணவன் – முப்பத்தைந்து வயது இளைஞன். பத்தாவதுவரை படித்தவன். நகருக்கு வெளியே ஒரு சிறிய அச்சாபீஸில் டிரெடில்மேன்  போன வருடம் தன் அக்கம்பக்கத்து வீட்டு மனிதர்கள் விஷச் சாராயத்துக்குப் பலியானபோது, அதன் வேரைப் தேடிப் புறப்பட்டான். இரண்டு மாதங்களுக்கு முன் கள்ளச்சாராய உற்பத்தி ஸ்தாபனத்தைக் கண்டு பிடித்தான். போலீஸுக்குத்  தகவல்  சொல்லப்பட்டது.  அவர்களிடம் இருந்து எந்தவித நடவடிக்கையும் இல்லை. மாறாக, குண்டர்கள் வீடு தேடி வந்து மிரட்டி விட்டுப் போனார்கள். அருணாசலம் புகாரை வாபஸ் வாங்கவில்லை. மாறாக, கவர்னருக்குக் கடிதம் போட்டான். போன வாரம் வழியில் மறித்து அடித்தார்கள் !  இந்த  வாரம்  ஆளைக் காணோம் !

       “ காணோம்னு  போலீஸ்ல  சொன்னீங்களா ?

                புகார் கொடுத்தா வாங்கமாட்டேங்கறாங்க சார் ! ஸ்டேஷனுக்குப் போனாலே விரட்டறாங்க சார் !

                எந்த ஸ்டேஷன் ?

                அனந்தராமன்  போனை  எடுத்தான்.

       “ ஐயா … !

                என்னம்மா ?

                போலீஸ் வேணாம்ங்க. அவங்க ரொம்பப் பொறுப்பானவங்க. அவங்க காணாம போயிருக்கமாட்டாங்க. வேறே ஏதாச்சும் ஆகியிருக்குமோன்னு …

                வேற  ஏதாவதுன்னா …

                கேள்வியைக்  கேட்ட  மறுவிநாடியே அதன் அர்த்தம் புரிந்தது. அந்தப் பெண்  மறுபடி  விசும்பினாள்.  சற்று  யோசித்த  அனந்த்,  ராஜ்பவன்  நம்பரைச்  சுழற்றினான்.

       “ நம்பலாமா அனந்த் ?  இது  ஏதும்  விளம்பர  ஸ்டண்ட்  இல்லையே … ?

                பத்து வருடங்களுக்கு முன்னால், இப்படி பறி கொடுத்தவர்கள் பத்திரிகை ஆபீஸுக்கு வரமாட்டார்கள். அன்று பத்திரிகைகாரர்கள் ஒரு கௌரவமான கிளார்க். ஜன்னல் வழியே வாழ்க்கையை வேடிக்கை பார்க்கிற கதாசிரியன். காற்றாடிக்குக் கீழ் உட்கார்ந்து அனல் பறக்கத் தலையங்கம் எழுதும் பகுதி நேரச் சிந்தனையாளன். இன்று அப்படி அல்ல. அவன் எதையும் விசாரித்துப் பார்க்கிற போலீஸ்காரன். இது நாங்கள் விரும்பித்  தேர்ந்தெடுத்த  மாறுதல்  அல்ல.  வற்புறுத்தி  ஏற்க  நேர்ந்த  மாறுதல் …

                யாருடைய  வற்புறுத்தல் … ?

                ஒரு புதிய தலைமுறையினால், இளைஞர்கள், அந்த நாற்காலிக்காரர்களைத் தூக்கி ஜன்னல்  வழியே வீசினார்கள். தாங்களே ஒரு புதிய அமைப்பை உருவாக்கினார்கள். போலீஸ் என்னும் அமைப்பின் மீது  நம்பிக்கை  இழந்த  மக்கள் இந்தப்  புதிய  ஏற்பாட்டைச்  சுவீகரித்துக்  கொண்டார்கள்.

                மக்கள் நம்பிக்கை இழந்தது போலீஸிடம் மட்டும்தானா ?  நந்து பதில் சொல்ல முயற்சிக்கவில்லை. எழுந்து பக்கத்து அறைக்குப் போனான். யாரிடமோ போனில் பேசினான்.  வேளியே  வந்து  “ இரண்டு நாள் அவகாசம் தரமுடியுமா அனந்த் ?  என்றான்.

       அடுத்த நாள் – நாளில்லை. அநேகமாக நள்ளிரவு – அனந்தின் வீட்டுக்கு வந்தான் நந்து.  ஆச்சரியத்தில்  புருவம்  தூக்கி  வரவேற்றான்  அனந்த்.

       “ அகாலத்தில் வந்திருக்கிறேனோ. ஸாரி !  ஆனால் என்னால் தாங்க முடிய வில்லை  அனந்த்.  அதனால்  வந்தேன்.

                என்ன நந்து ?  ஏதாவது  கெட்ட  விஷயமா … ?

                எனக்குத் தெரியலே … அது நல்லதா கெட்டதா என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் இந்த  எளிய  தமிழ்  மக்கள்,  உன்  போன்ற  பத்திரிகைக்காரர்கள்,  அறிவுஜீவிகள் …

                என்ன விஷயம் நந்து ? ’‘

                அந்த  அச்சகத்  தொழிலாளி.  அவன் பேர் என்ன சொன்னே, யெஸ் … அருணாசலம். அவன் செத்துட்டான் … இல்லே ?  கொலை செய்யப்பட்டிருக்கான் … ஆனால், அது ஒரு பெரும் பனிப்பாறையின் சிறு முனைதான். அவனது கொலை ஒரு திகில் கதையின் ஆரம்ப வரி …  அவனது ஏரியாவில் மாதம் ஒரு கொலை …  அந்த சாராய சாம்ராஜ்யத்தில் தோண்டிய இடத்தில் எல்லாம் எலும்புகள் …  கனவுகளைச் சுமந்த இளம்  பெண்களும் வாலிபர்களும் காலம் காலமாக ஒரு சுரண்டலுக்குப் பலியான சோகம்  இந்த  எலும்புகளில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கொலைகள், இந்தச் சாராய சாம்ராஜ்யம், அதை அரவணைத்த அரசியல், சவக் குழிகளை நோக்கி இளைஞர்களை ஈர்த்த எளிதில் பணம் சம்பாதிக்கும் வெறி, அதற்கு விதையூன்றிய கனவுகள், அந்தக் கனவுகளைத் தங்கள் லாபம் கருதி அவர்களுக்கு விற்ற வியாபாரிகள், அதற்கு அவர்களை அனுமதித்த அமைப்பு – இவையெல்லாம் நல்லதா கெட்டதா என்று தீர்மானிக்க வேண்டியது நீங்கள். நாங்கள் அரசாங்க கூலிகள். நாங்கள் எந்த அமைப்பையும் உருவாக்குவதில்லை. சுவீகரித்துக் கொள்வதில்லை. நீங்கள் உருவாக்கித்  தருகிற  அமைப்பை  நடத்துகிறவர்கள். நாங்கள் எங்கள் கடமையைச் செய்து விட்டோம்.  இத்தனை கொலைகளுக்குப் பின்னாலிருந்த மனிதனைக் கைது செய்து விட்டோம் !

                யார் ?

                நந்து அவன் பெயரைச் சொன்னான். “ ஆனால், இவன்தான் எல்லாமுமா அல்லது இவன் வெறும் பிராக்ஸிதானா என்று எனக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. எங்கள் விசாரணையின் வேர்கள் ஒரு எம்.எல்.சி வரை – நினைவிருக்கட்டும், ஒரு எம்.எல்.சி – அறிவாளிகளின் சபை என்று அறியப்பட்ட மேல் சபையின் ஒரு பிரதிநிதிவரை நீள்கிறது .

                உன் பதில்களில் ஒரு வேதனை அல்லது விரக்தி தொனிக்கிறது நந்து. ஏன் ? களைத்துப் போயிருக்கிறாயா ?

                இல்லை அனந்த், அதிர்ந்து போயிருக்கிறேன். இந்த அனுபவம் எனக்குள் ஏராளமான கேள்விகளை எழுப்பி இருக்கின்றன.

                என்ன ?

                நாங்கள் இன்று கைது செய்த மனிதனின் வீட்டு வாசலில் ஒரு கட்சிக் கொடி பறக்கிறது. அந்தக் கட்சியின் தேர்தல் சின்னம் கதவில். அவன் கடந்த வருடம் நடந்த கட்சித் தேர்தலில் தோற்றுப் போனவன். எனினும், என்றேனும் ஒரு நாள் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆசை இப்போதும் அவன் நெஞ்சில் புகைகிறது. உங்கள் மாநில அரசியல் முற்றிலும் அழுகிப்போய் விட்டது என்பதன் அடையாளங்கள் இவை என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் ?

                ஆனால் ?

                “ இது வெறும் அரசியல் சீரழிவு மாத்திரம்தானா ?  இந்த அரசியல் சீரழிவு ஒரு காலாசார  நசிவின்  தொடர்ச்சி  இல்லையா ?

                எனக்குத்  தெரியவில்லை  நந்து !

                யோசி. யோசித்தால் விடைகள் கிடைக்கும். எனக்குக் கிடைத்த விடைகளை உனக்குச் சொல்கிறேன் கேள்.  இங்கே மாறுதல்கள் வரும். உங்கள் விருப்பத்தினால் அல்ல …

       உங்களுக்குப் பின் வருபவர்களின் நிர்ப்பந்தத்தினால் …  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகைக்காரன் போலீஸ்காரன் ஆனது போல். ஆனால், ஆட்கள் மாறுவதன் மூலம்  ஆட்சி மாறலாம். அரசியல் மாறாது. உங்கள் கலாசாரத்தை நசிவில் இருந்து மீட்டு எடுக்காதவரையில் உங்கள் அரசியல் மாறாது. அதற்கு என்ன செய்யப் போகிறாய்  அனந்த் ?

                பதிலுக்குக் காத்திராமல் நந்து படியிறங்கிப் போனான். தெருமுக்கில் ஒளி திரும்ப அவனது கார் இருளில் மறைந்தது   அவன்  கேள்விகள்  மட்டும்  எதிரில்  நிற்க.

( ஆனந்த விகடன் )

      

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these