மறக்க முடியுமா?

மறக்க முடியுமா?

நீதிக்கட்சியிலிருந்துதான் திராவிட இயக்க வரலாறு தொடங்குகிறதா?

எஸ்ரா பவுண்ட் எழுத்தாளர்களை ஆறு வகைகளாகப் பிரிக்கிறார். 1.‘கண்டுபிடிப்பாளர்கள்’ (The Inventors) புதிய செயல்முறைகளை (process) அறிமுகப்படுத்துபவர்கள். (உ-ம்: பாரதியார்)

2 மேதைகள் ( The Masters) பல்வேறு செயல்முறைகளை அவற்றை அறிமுகப்படுத்தியவர்களை விடச் சிறப்பாக செயல்படுத்தியவர்கள் (உ-ம்: புதுமைப்பித்தன், அசோகமித்ரன்)

3.நீர்த்துப் போகச் செய்பவர்கள் (The diluters). மேதைகள் அளவிற்குச் சிறப்பாகச் செயல் முறைகளைக் கையாள முடியாதவர்கள் ( உ-ம்:கல்கி)

4.நல்ல,ஆனால் தனித்துவமற்ற எழுத்தாளர்கள் (Good writers without salient qualities) இலக்கியம் அதன் உச்சத்தில் இயங்கிக் கொண்டிருந்த போது எழுதத் தொடங்கிய பாக்கியவான்கள் (உ-ம்: ஆதவன், ஆத்மாநாம் சுப்ரமண்ய ராஜு)

5. கிளைக் கலைஞர்கள்; (Writers of belles-lettres) இவர்கள் எதையும் ‘கண்டுபிடித்தவர்கள்’ அல்ல. ஆனால் ஒரு குறிப்பிட்ட துறையில் கெட்டிக்காரர்கள். அவர்கள் தங்கள் காலத்தின் அல்லது வாழ்வின் முழுமையையும் சித்தரிப்பவர்கள் அல்ல. இவர்களைப் பெரிய ஆட்களாகக் கருத இயலாது. (உ-ம்:தமிழவன் வகையறா)

6. ஆர்வத் துளிர்கள் (The starters of crazes) மேலே உள்ள முதலிரண்டு வகைகளை அறிந்து கொள்ளாததால் இலக்கியத்தைத் தெளிவாக இனம் கண்டு கொள்ள இயலாதவர்கள். அவர்கள் அதில் மூக்குவரை முங்கியவர்களாக இருப்பார்கள். புத்தகப் பிரியர்களாக இருப்பார்கள். ஆனால் தாங்கள் வாசித்ததைக் கொண்டு தரம் பிரித்தறிய இயலாதவர்களாக இருப்பார்கள். (இவர்களைப் புத்தகச் சந்தையில் சந்திக்கலாம்)

உதாரணங்கள் என்னுடையவை. பட்டியல் பவுண்டினுடையது. இந்தப் பட்டியலை ஒரே காலத்தில் இயங்கும் வெவ்வேறு படிநிலைகளாகக் கொள்ளலாம் அல்லது சென்று தேய்ந்திறுதலாகவும் காணலாம். வேறு ஒரு கோணத்தில் (கீழிருந்து மேலாக) இது பரிணாம வளர்ச்சி

இதை இலக்கியத்திற்கு மட்டுமல்ல,  கலைகள், இதழியல், தொழில்நுட்பம், நிர்வாகம் எதற்கு வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம். எதற்கு வேண்டுமானாலும். அரசியலுக்கும் கூட.

ஆம். அரசியலுக்கும் கூட. ‘திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவை’ ‘கொண்டாடும் வகையில்’ நாளிதழ் ஒன்று சிறப்பிதழ் வெளியிட உள்ளதாக அறிவித்த விளம்பரக் குறிப்பை வாசித்த போது என் மனதில் பவுண்டின் பட்டியல் ஓடி மறைந்தது. அந்த இதழின் நோக்கம் வரலாற்றைக் கொண்டாடுவது அல்ல, கருணாநிதி என்ற தனிமனிதரைக் கொண்டாடுவது என்ற ரகசியம்  இந்த விளம்பரம் குறித்து முகநூலில் விடாப்பிடியாக விவாதித்த பின் ‘குதிரை வாயில் இருந்து’ வெளியானது.

யாரையாவது வீழத்த யாரையாவது தூக்கிப் பிடிப்பதும், யாரையாவது தூக்கிப் பிடிக்க யாரையாவது ஓரம் கட்டுவதும் திராவிடக் கட்சிகள் உள்ளிட்ட நம் அரசியல் மரபு. அது இதழியலுக்கும் தொற்றிக் கொண்டது போலும்.

உண்மையில் ‘திராவிட இயக்கம்’  தோன்றியது எப்போது? திமுக போன்ற கட்சிகள் சொல்வது போல் அது நீதிக் கட்சியிலிருந்துதான் தொடங்குகிறதா? வரலாறு இல்லை என இடவலமாகத் தலை அசைக்கிறது.

திராவிட இயக்கக் கருத்தியல் என்பது இறை மறுப்பு, ஜாதி மறுப்பு, ஆரியர் (அல்லது வடவர்) எதிர்ப்பு,  இந்தி எதிர்ப்பு, தேசியம் என்பதற்கு மாற்றாகத் தனிநாடு, என்று பலரும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள். இந்தக் கருத்தியல்களைத்தான் நீதிக்கட்சி முன் வைத்ததா? அவற்றைத்தான் பரப்புரை செய்ததா? அவற்றுக்காகத்தான் போராடியதா?

அரசுத் துறைகளில் பணீயாற்றி வந்த பார்ப்பனரல்லாத அதிகாரிகள், 1912ல் துவக்கிய அமைப்பான ‘தி மெட்ராஸ் யுனைட்டட் லீக்’தான் நீதிக்கட்சியின் விதை. வருவாய்த் துறையில் அதிகாரிகளாக இருந்த சரவணப் பிள்ளை, வீராசாமி நாயுடு, நராயணசாமி நாயுடு, பொறியியல் துறையில் இருந்த துரைசாமி முதலியார் ஆகியோர் தொடங்கிய இந்த அமைப்பில் பின்னர் அரசு மருத்துவரான டாக்டர் சி. நடேசனர் செயலாளராகப் பங்கேற்றார். அவர் தலைமை ஏற்றதும் பனகல் அரசர் அதை வரவேற்றார்.

இது திராவிட இயக்கக் கருத்தியல்கள் என இன்று சொல்லப்படும் எதனையும் கொள்கைகளாகவோ திட்டங்களாகவோ கொண்டிருக்கவில்லை. “இவ்வமைப்பின் பணி தொடக்க காலத்தில் ஒரு தொழிற்சங்கம் போலத்தான் இருந்தது. பெரிய திட்டங்கள் எதுவும் இருந்ததாகச் சொல்ல முடியவில்லை” என்று நீதிக்கட்சி வரலாற்றை எழுதிய க. திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார் (நீதிக்கட்சி வரலாறு தொகுதி1 பக் 144)

மிகக் குறுகிய காலத்திலேயே மெட்ராஸ் யுனைட்டட் லீக் தன் பெயரை மாற்றிக் கொண்டு 10.11.1912ல் திராவிடர் சங்கமாக மலர்ந்தது.அப்போதும் கூட அது ஜாதி மறுப்புக் கொள்கையை முன்னெடுக்கவில்லை.1915ஆம் ஆண்டு திராவிடர் சங்கம் இரண்டு நூல்களை வெளியிட்டது. அதில் ஒன்று Non-Brahmin letters (பார்ப்பனர் அல்லாதோரின் கடிதங்கள்)  21 கடிதங்கள் கொண்டது அந்த நூல். “21 கடிதங்களும் அனுப்பப்பட்ட முகவரியில் ரெட்டி, நாயுடு, முதலியார் என்று சாதிப் பெயர்கள் குறிப்பிடப்பட்டு” இருந்தன என்று இர்ஷ்விக்கை மேற்கோள் காட்டி க.திருநாவுக்கரசு எழுதுகிறார் (நீதிக்கட்சி வரலாறு தொகுதி -1 பகம் 153)

நீதிக் கட்சியின் ஆதி மூல அமைப்புக்கள் ஜாதி மறுப்புக் கொள்கையைக் கருத்தில் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, மதத்தை நிராகரிக்கவும் இல்லை. திராவிடர் சங்கம் வெளியிட்ட இரண்டு நூல்களில் ஒன்று மேலே நான் குறிப்பிட்டுள்ள கடிதங்கள். மற்றொன்று Dravidian Worthies சங்கரன் நாயரைப் பற்றி எழுதப்பட்ட நூல் இது. சங்கரன் நாயர், பக்தி நிறைந்தவர், பகவத் கீதை படிப்பவர், இந்து மகா சபை உறுப்பினர் என்றெல்லாம் அவரைப் பற்றி ராண்டார் கை குறிப்பிடுகிறார் (அன்றைய சென்னைப் பிரமுகர்கள் தொகுதி -1)

‘நீதிக்கட்சியைத் தோற்றுவிக்கக் காரணமாய் இருந்தவர்” எனக் குறிப்பிடப்படும் பிட்டி தியாகராயர் எப்படிப்பட்டவர்? “1914 ஆம் ஆண்டு காந்தியடிகள் சென்னைக்கு வந்தபோது சென்னை காஸ்மாபாலிடன் கிளப் சார்பாக வரவேற்பு இதழ் வாசித்து அளித்தவர். மேலும் இவரைப் பற்றிச் சொல்வதானால் ஆழ்ந்த தெய்வ பக்தி உடையவர். வீட்டில் பார்ப்பனரைக் கொண்டு சமைக்கச் செய்தவர். இப்படிப்பட்ட பெருமைகளை உடைய பெருஞ்செல்வந்தரான பிட்டி. தியாகராயர் நீதிக்கட்சியைத் தோற்றுவிக்கக் காரணமாய் இருந்தார்.” என்கிறார் க.திருநாவுக்கரசு ( நீதிக்கட்சி வரலாறு தொகுதி-1 பக்கம் 163 )

இவர்கள் நீதிக்கட்சியைத் தொடங்குவதற்கான உந்துதல் எங்கிருந்து வந்தது? அவர்கள் சொந்த வாழ்வில் சந்தித்த ஏமாற்றங்களாலும், நிராகரிப்புகளிலிருந்தும் ஏற்பட்ட உணர்வுகளிலிருந்து பிறந்தது. சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், கல்வி மறுக்கப்பட்டவர்கள், சாதிய ஒடுக்குமுறைக்குள்ளானவர்களின் நிலை கண்டு எழுந்த உந்துதலால் அல்ல.

“டெல்லி இம்பீரியல் சட்டமன்றத்துக்கு 1915ஆம் ஆண்டு சென்னைச் சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இப்பொறுப்புக்குத் தாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்பினார் டாக்டர் நாயர். இந்த விருப்பத்தைத் தனது நண்பர்களிடம் தெரிவித்தார் டாக்டர் நாயரும் தேர்தலில் ஈடுபட்டு வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.இறுதியில்  டாக்டர் நாயர் தோல்வி அடைந்தார். அவருக்கு நான்கே வாக்குகள் கிடைத்திருந்தன. இந்தத் தோல்விதான் நாயரின் மனமாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.

ஆனால் பிட்டி தியாகராயருக்கு வேறொரு வகையான அனுபவம் கிடைத்தது. . . .  அவரை ஒரு நிகழ்ச்சியில் பார்ப்பன ஒருவர் மேடை மீது ஏற்றாமல் சிறுமைப்படுத்தி கீழே நாற்காலி போட்டு அமர வைத்து விட்டார். இத்தனைக்கும் அந்தப் பார்ப்பனர் அவரது அலுவலகத்தில்  அவருக்குக் கீழே ஊழியம் பார்ப்பவராக இருந்தார்…… பிட்டி, தியாகராயர், மற்றும் டி.எம். நாயரின்  மனப்புண்களை அறிந்த டாக்டர்.சி.நடேசனார் ….அவர்கள் இருவரையும் சந்தித்தார்.  இச்சந்திப்பின் விளைவாக சென்னை வேப்பேரி எதிராஜூலு  முதலியார் இல்லத்தில்  1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பார்ப்பனர் அல்லாதாரின் ஓர் அமைப்புக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டமே நீதிக் கட்சி தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது . இக்கூட்டம் நடைபெற்ற நாளே நீதிக்கட்சி தோன்றிய நாளாகும்” என்று க.திருநாவுக்கரசு நீதிக்கட்சியின் தோற்றுவாயை விவரிக்கிறார்.

அரசு அலுவலர்களின் தொழிற்சங்கமாகவும், பார்ப்பனர்களோடு நேர்ந்த தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஏற்பட்ட மனப் புண்களின் காரணமாகவும் தோன்றிய நீதிக்கட்சியின் ஆரம்ப லட்சியங்கள் இன்று திராவிடக் கருத்தியல் என்று அதன் ஆதரவாளர்கள் முன் வைக்கும் கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை. எனவே திராவிட அரசியல் வரலாற்றின் முதற்புள்ளியாக நீதிக்கட்சியைக் குறிப்பிட்டு 1916ல் முடிந்து போன நூற்றாண்டை 1917ல் கொண்டாடுவது வேடிக்கையானது. 1916ல் நீதிக் கட்சி தோன்றுவதற்க்கான உந்துதல் பார்ப்பன எதிர்ப்பு என்பது மட்டுமே. திராவிடக் கருத்தியல் பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே எனக் கருதுபவர்கள்தான் நீதிக் கட்சியிலிருந்து வரலாறு தொடங்குவதாகக் கருதி நூற்றாண்டு விழா கொண்டாட முடியும்.

அப்படியானல் இறைமறுப்பு, ஜாதி மறுப்பு, இந்தி எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு என்ற கொள்கைகளைத் திராவிட இயக்கம் எங்கிருந்து பெற்றது? யாரிடமிருந்து பெற்றது?

அயோத்திதாஸ். இதற்கான விடை இந்த ஒற்றைச் சொல்தான். உண்மையில் திராவிட இயக்கம் நூறாண்டுகளுக்கு முன் அல்ல, அதற்கும் முன்பாக, நீதிக்கட்சி தொடங்கப்படுவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விடுகிறது.

இன்று பட்டியல் இனத்தவர் என்றழைக்கப்படும் தாழ்த்தபட்டவர் சமூகத்தில் 1845ல் காத்தவராயனாகப் பிறந்து, பின்னர் (அம்பேத்கரைப் போலவே தன் ஆசிரியரின் பெயரைத் தன் பெயராக வரித்துக் கொண்டு) அயோத்திதாஸ் ஆனவர் முன்மொழிந்த கருத்துக்களே திராவிட இயக்கக் கருத்தியல். கருத்து மட்டுமல்ல இயக்கமும் அப்போதுதான் தோன்றியது. 1891லேயே அயோத்திதாசர் ஜாதியற்ற திராவிட மகாஜன சபையை நிறுவிவிட்டார். அதன் சார்பாக டிசமபர் 1, 1891 அன்று ஆலய நுழைவு, இலவசக் கல்வி, நில உடமை உள்ளிட்ட 11 கோரிக்கைகளை காங்கிரசின் முன் வைத்தார். அவை புறக்கணிக்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த ஆண்டு சென்னையில் நடந்த மகாஜனசபைக் கூட்டத்தில் நீலகிரி மாவட்டப் பிரதிநிதியாகப் பங்கேற்று அவற்றை நேரில் வலியுறுத்தி ஆலயங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையும் அனுமதியையும் கோரினார். அது மறுக்கப்பட்டது

1891ல் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை இந்துக்கள் எனப் பதிவு செய்து கொள்ளக் கூடாது, மாறாக ஜாதியற்ற தமிழர்கள் அல்லது ஆதி தமிழர்கள் எனப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று பரப்புரை செய்தார். இந்து மதத்தின் வேத மரபு பற்றிய விவாதங்களும், சீர்திருத்தங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஆர்ய சமாஜ், பிரம்ம சமாஜ் அமைப்புக்கள் வடக்கே தோன்றி தெற்கிலும் வந்து கொண்டிருந்தன. பிராமணீயத்திற்கு எதிராகத் தமிழ்ச் சைவம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஆனால், அது பிராமணியத்தை எதிர்க்கிறதே ஒழிய ஜாதி ஒழிப்புப் பற்றிப் பேசவில்லை என்று கூறி அதை அயோத்திதாசர் நிராகரித்தார். பின்னர் பெளத்தத்தை ஏற்றார். ஆனால் அதை ஒரு மதமாகப் பார்க்காமல் தமிழர்களின் பணடை மரபுகளில் ஒன்றெனக் கருதித் தமிழ் பெளத்தம் என்ற பெயரில் அழைத்தார் (காண்க லட்சுமி நரசுவிற்கு அயோத்திதாசர் அளித்த விளக்கங்கள். லட்சுமி நரசு சென்னைக் கிறித்துவக் கல்லூரி தத்துவ இயல் பேராசிரியர்)

ஆரிய எதிர்ப்பு என்பதைப் பெரியாருக்கும் முன்பே முன்னெடுத்தவர் அயோத்திதாசர். இந்திய என்ற சொல் ‘இந்திரம்’ என்பதன் திரிபு. இந்திரனாகிய புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு ‘இந்திரதேசம்’ என்ற பெயர் வந்தது. ஆரியர் வருகைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது, அந்த தேசியத்தைப் பௌத்தம் உருவாக்கியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம், சமத்துவம், அறக்கருத்தொற்றுமை, மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அன்னியரான வெளியாரின் ஊடுருவலால், படையெடுப்பால் காலப்போக்கில் அது மந்திர அல்லது மாயத்தன்மையென திரிக்கப்பட்டது என்பது அவரது வாதம்.

பெரியார் தனது தோழர்களுடன் 30.3.1942ல் கிரிப்ஸ் தூதுக்குழவைச் சந்திக்கிறார். அந்தக் குழு திராவிட இயக்கத்தின் சார்பில் என்ன  கோரிக்கைகளை வைத்தது என்பதை முற்றாக அறிய முடியவில்ல. 7.3.1947 தேதியிட்ட விடுதலை நாளிதழ் தலையங்கம், “சுமார் 150 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு நீங்கள் இந்த நாட்டுப் புரோகிதர் கூட்டத்திடம் எங்களை ஒப்புவித்துவிட்டுப் போகிறீர்கள் இது நாணயமான செய்கையா?” என்று கேட்டார் பெரியார். அப்போது கிரிப்ஸ் “நீங்கள் சொல்லுவதைப் புரிந்து கொண்டேன் என்று கூறிவிட்டுச் சிரித்தாராம்” குறிப்பிடுகிறது (ஆனால் நிக்கோலஸ் மான்செர்கை ஆதாரமாகக் கொண்டு ஈ.சா.விஸ்வநாதன் எழுதியுள்ளவை இது போலக் குறிப்பிடவில்லை)

ஆனால் 1912லேயே,”  “கருணை தாங்கிய பிரிட்டீஷ் துரையவர்கள், சுதேசிகள் மீது கிருபை பாவித்து சுயராட்சியத்தை அளிப்பதாயினும் இத்தேச பூர்வக்குடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்றுக் குடியேறி வந்தவர்களையும், முன்னாடி குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக் கருதி அவர்கள் வசம் சுயராட்சிய ஆளுகையைக் கொடுத்தால் நாடு பாழாகி சீர்கெட்டுப்போகும்” என்று  அயோத்திதாசர் தனது தமிழன் இதழில் எழுதினார் (தமிழன் அக்டோபர் 30, 1912) தமிழன் 1907ல் அவர் தொடங்கிய இதழ். தனது கடைசிவரை நடத்தினார். (முதலில் ஒரு பைசாத் தமிழன் என்ற பெயரில் தொடங்கி பின் ஓராண்டுக்குப் பின் ‘ஒரு பைசா’வை இழந்தது

இந்தி எதிர்ப்பையும் முன்னெடுத்தவர் அயோத்திதாசர்தான்: “ இந்தி மொழி, இந்துச்சாதி மதத்தோடு தொடர்பு உடையது. ஆகையால் அதற்கு இந்தியாவின் பொதுமொழியாகும் தகுதி கிடையாது, ஆங்கிலமே அதற்கு தகுதியுடையது” என்பது அவர் கருத்து

தாழ்த்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீட்டிற்காகவும் அவர் முயற்சிகள் மேற் கொண்டார்.

இறை மறுப்பு ,ஜாதி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு, இட ஒதுக்கீடு என்ற கொள்கைகளை சமூக அமைப்புக்கள் ஏதும் ஏற்பட்டிராத காலத்தில், ஒரு அமைப்பையும், பத்திரிகையையும் நிறுவி முன்னெடுத்த அயோத்திதாசரே திராவிட இயக்க முன்னோடி.

பெரியார் அயோத்திதாசரை நன்கு அறிந்திருந்தார்., “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன் னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டித மணி அயோத்திதாசரும், தங்க வயல் ஜி.  அப்பாதுரையார் அவர்களும் ஆவார்கள்”  என்று பெரியார் அயோத்திதாசரது பங்களிப்பை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். ( பெரியார் 68வது பிறந்த நாள் விழா பேச்சு, பெங்களுர்)

பெரியரே என்னுடைய முன்னோடி என்று சொன்ன அயோத்திதாசரை ஏன் திராவிட இயக்கங்கள் கொண்டாடுவது இல்லை? பெரியாரைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அயோத்திதாசர் ஓரங்கட்டப்பட்டாரா?

பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் இருக்கிறது. சென்னையில் நடேசனார் பெயரில் பூங்கா இருக்கிறது. தியாகராயர் பெயரில் நகரும் மன்றமும் இருக்கிறது.டி,எம் நாயர் பெயரில் சாலை இருக்கிறது. ஆனால் அயோத்திதாசர் நினைவைப் போற்ற என்ன இருக்கிறது? 2005ஆம் ஆண்டு  அன்புமணி  மத்திய அமைச்சராக இருந்த போது, மத்திய அரசின் ஆதரவில் நடைபெறும், தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. அதுவும் கூட அயோத்திதாசர் ஒரு சித்த மருத்துவர் என்பதை நினைவூட்டுமே அன்றி அவரது சிந்தனைகளை, அவர் திராவிட இயக்க முன்னோடி என்பதை நினைவூட்டவோ, நிறுவவோ செய்யுமா?

இதற்கு எளிதான விடைகள் இல்லை. ஆனால் அதன் பின்னர் நுண்ணரசியல் இருக்கிறது. ஜாதி அடையாளத்தை நிராகரிக்காத நீதிக் கட்சியை தங்களது முன்னோடியாகக் காட்டுவதற்கும், ஜாதியத்தை மறுத்த, பட்டியல் இனத்தில் தோன்றிய ஒருவரை முன்னிறுத்த விரும்பாதற்கும்,  இடைநிலை சாதிகளின் வாக்கைப் பெறுவதற்கான வாக்கரசியல் காரணமாக இருக்கிறதோ?

(அம்ருதா- நவம்பர் 2017)

 

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these