இன்னொரு உலக யுத்தம் வருமா?

ஒரு புறம் ஆறு தலை கொண்ட ராக்ஷசன். அதன் எதிரே பயங்கரமான நீர்ச் சுழல். இரண்டிற்கும் இடையே ஒரு அம்பு செல்லும் தூரம்தான். கப்பல் இரண்டிற்கும் இடையில் பத்திரமாகச் சென்றாக வேண்டும். ராக்ஷசன் பக்கம் போனால் அவன் மாலுமிகளை விழுங்கி விடுவான். நீர்சுழலின் பக்கம் போனால் அது கப்பலையே இழுத்து முழுங்கிவிடும். இதற்கிடையில் ஒடீசியஸ் கப்பலை எப்படிச் செலுத்திக் கொண்டுபோனான் என்பதை ஹோமர் தனது ஒடிசி என்ற காப்பியத்தில் விவரித்து இருப்பார்.

இப்போது ஒடீசியஸின் நிலையில் இருக்கிறது இந்தியா. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. இன்னொரு உலக யுத்தம் வருமாஎன்று உலக ஊடகங்கள் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.அப்படியெல்லாம் ஏதும் ஆகி விடாது என்று அடிமனதில் ஒரு நம்பிக்கை. ஆனாலும் ஓர் அச்சம். காரணம் ஆனால் ஜனவரி மூன்றாம் தேதி ஈரான் தளபதி காசிம் சுலைமானியை ஏவுகணையை ஏவி அமெரிக்கா தீர்த்துக் கட்டியதற்கு பதிலடியாக 12,15 ஏவுகணைகளை ஈரானிலும் ஈராக்கிலும் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவி பழி தீர்த்துக் கொண்டிருக்கிறது. அதில் ஏராளமான அமெரிக்கர்கள் இறந்து போயிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்ற வெறி எங்கு போய் முடியுமோ?

அமெரிக்காவிற்கு உதவும் நாடுகளும் எங்கள் எதிரிகளே, அவசியம் ஏற்பட்டால் அவர்களையும் தாக்குவோம் என்று ஈரான் அறிவித்திருக்கிறது.

இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன. 1. காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்திற்குத் திரண்ட கூட்டம் (கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தார்கள்) 2. இந்தாண்டு இறுதியில் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல்.

அமெரிக்காவும் ஈரானுக்கும் அடிப்பதும் பிடிப்பதுமான உறவு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. 70களில் ஈரான் மன்னராக இருந்த ஷா ஈரானிலிருந்து வெளியேறியதிலிருந்து அமெரிக்காவுடன் அந்த நாட்டிற்கு உரசல் இருந்து வருகிறது. அமெரிக்கா ஈராக்கின் சதாம் உசேனுக்கு எதிராக யுத்தம் நடத்திய காலத்தில் மட்டும் அதன் அண்டை நாடான ஈரானிடம் நேசம் காட்டியது. மற்ற காலங்களில் எல்லாம், இரு தரப்பிலும் சின்னதும் பெரிதுமாக எத்தனையோ மோதல்கள்

சென்ற ஆண்டின் தொடக்கிலேயே இரு நாடுகளுக்கான உறவு மிகவும் சீர் கெட்டுக் கிடந்தது. அது அந்த ஆண்டின் மத்தியில், மே மாதம் வாக்கில், ஒரு வித பதட்ட நிலையை எட்டியது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்கப் படைகள் மீது ஈரானின் ஆசிர்வாதம் பெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேல் உளவுத்துறையின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா பாரசீக வளைகுடாவில் தன் படைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. தனது கடற்படை தாக்கப்படும் என்று அமெரிக்கா அஞ்சியது.

அந்த உளவுத் தகவல் முற்றிலும் பொய்யல்ல.மே12ஆம் தேதி ஓமான் அருகே கப்பல்கள் தாக்கப்பட்டன. ஆனால் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் அல்ல.  சவுதி அரேபியா-அமெரிக்க வணிக நிறுவனங்களுடைய கச்சா எண்ணெய்க் கப்பல்கள். மே 15ஆம் தேதி, ‘அவசரத்திற்குத் தேவைப்படும் பணியாளர்கள்’ தவிர மற்றவர்கள் பாக்தாத்திலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க அரசு தனது அலுவலர்களுக்கு உத்தரவிட்டது. 19ஆம் தேதி, ‘இத்தோடு அழிந்தது ஈரான்’ என்று எச்சரிக்கை விடுத்தார். இரு தரப்பிலும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரு அரசுகளும் பல ஆண்டுகளுக்கு முன்பே தூதரக உறவுகளை முறித்துக் கொண்டுவிட்டன. அதனால் ஈரான் சார்பாக வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகமும், அமெரிக்கா சார்பாக பாக்தாத்தில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகமும் ராஜரீக விஷயங்களைக் கையாண்டு வந்தன. நவம்பரில் தனது எண்ணைக் கப்பலை நெருங்கி வந்த ஈரானின் ஆளில்லா விமானம் ஒன்றை, அமெரிக்கா செயலிழக்கச் செய்து வீழ்த்தியது. கடுப்பான ஈரான், நேருக்கு நேர் வா, ஒரு கை பார்க்கலாம் (“ready for a full-fledged war”) என்று சவால் விடுத்தது.

நவம்பர் மாதம் ஈரானில் வேறு ஒரு பிரச்சினை வெடித்தது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் தடுமாறிக் கொண்டிருந்த ஈரான், உள்நாட்டுப் பெட்ரோல் விலையைப் பல மடங்கு உயர்த்தியது. அத்துடன் ரேஷன் முறையையும் அறிமுகப்படுத்தியது (பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாட்டிலேயே இந்த நிலை!) மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட ஆரம்பித்தார்கள். போராட்டக்காரர்களை அமெரிக்கா ஆதரித்தது. ஈரானிய அரசு அடக்குமுறைகளை ஏவி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தது . நவம்பர் மதம் லண்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது டிரம்ப் “ நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்நேரம் ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னார்.

புகைந்து கொண்டே இருந்த விஷயம், டிசம்பரில் வெடித்தே விட்டது. டிசம்பர் 27ஆம் தேதி ஈராக்கிலிருந்த அமெரிக்க ராணுவத் தளம் மீது ஒரு ஈரான் ஓர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதில் அமெரிக்க சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டார். 29ஆம் தேதி அமெரிக்கா திருப்பித் தாக்கியது.25 பேர் கொல்லப்பட்டார்கள். பதிலுக்கு டிசம்பர் 31ஆம் தேதி ஈராக்கில்  உள்ள அமெரிக்க தூதரகத்திற்குள் ஈரான் தீவீரவாதிகள் புகுந்து அதைத் தீ வைத்து எரித்தார்கள்.அதன் பின் ஜனவரி 3ஆம் தேதி அமெரிக்கா ஏவுகணையை ஏவி காசிம் சுலைமானியைக் கொன்றது. ஈரான் பதிலடி கொடுத்தது      

இதில் நம் நிலைமைதான் சிக்கலாகிறது. ஏதோ முட்டாளும் முரடனும் அடித்துக் கொள்கிறார்கள் என்று நாம் இருந்து விட முடியாது. ஏனெனில் நாம் நமது கச்சா எண்ணைத் தேவையில் 80 சதவீதமும், இயற்கை எரிவாயுத் தேவையில் 40 சதவீதமும் அயல்நாடுகளிலிருந்து  பெறுகிறோம். நாம் எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகளில், ஈராக் சவுதி அரேபியாவிற்கு அடுத்த இடத்தில் ஈரான் இருக்கிறது. மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது, ஈரான் நமக்கு கச்சா எண்ணையை ஒரு பீப்பாய்க்கு 24 டாலர் வரை குறைத்துக் கொடுத்து வருகிறது. அது தவிர போக்குவரத்து செலவு இன்ஷூரன்ஸ் இவற்றிலும் சலுகை கொடுக்கிறது.

இதனால் நாம் இரு நாடுகளுக்குமிடையிலான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க முடிந்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையே உள்ள இடைவெளி. நாம் 100 ரூபாய்க்கு இறக்குமதி செய்கிறோம். 110 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறோம் என்றால் நடப்புக் கணக்கு உபரி 10 ரூபாய். 90ரூபாய்க்கு ஏற்றுமதி என்றால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 10 ரூபாய். இது நீங்கள் புரிந்து கொள்ள ஓர் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கம் . நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தில் –GDPயில் சதவீதமாகக் கணக்கிடப்படுவது வழக்கம்

நாம் பெரும்பாடுபட்டு இந்த நிதி ஆண்டில் நடப்புக்கணக்குப் பற்றாக்குறையைக் குறைத்திருக்கிறோம். 2018-19 நிதியாண்டில். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை 2.9 சதவீதம். 2019-20 நிதியாண்டில் அதே காலகட்டத்தில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 0.9 சதவீதம்.

இது இப்போது பாதிக்கப்படும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்தால் ரூபாயின் மதிப்பு குறையும். இதை சமாளிக்க இறக்குமதியைக் குறைக்க வேண்டும். ஆனால் அதுதான் முடியாது. ஏனெனில் வாகனங்கள் விற்பனை மந்தம் என்று ஒரு பக்கம் ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்தாலும், ஆண்டுக்கு ஆண்டு நம் நாடு  பயன்டுத்தும் பெட்ரோலின் அளவு அதிகரித்து வருகிறது. மின்சாரம் போல, பெட்ரோல், அத்தியாவசியத் தேவையாகி விட்டது. அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல,

ஒரு பக்கம் பயன்படுத்தும் அளவு குறையவில்லை. மறுபக்கம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் சர்வதேசச் சந்ததையில் கச்சா எண்ணை விலை ஏறிவருகிறது. இதனாலும் நடப்புக்கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும்

அரசியல் ரீதியாகவும் நாம் யாரையும் ஆதரிக்கும் நிலை எடுக்க முடியாது. அநேகமாக அமெரிக்காவில், தென்னிந்திய நடுத்தரக் குடும்பங்களிலிருந்து, வீட்டிற்கு ஒருவர் இருக்கிறார்கள். அதுவும் தவிர மத்தியக் கிழக்கு அரசியல் ஒரு புதை சேறு. அதில் மாட்டிக் கொள்வது அத்தனை நல்லது அல்ல.

இந்தியப் பொருளாதார மேலாண்மைக்கு இன்று எழுந்திருக்கும் மிகப் பெரிய சவால் இரு நாடுகளுக்குமிடையேயான யுத்தம். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?கவலையாகத்தான் இருக்கிறது.

 22.1.2010       

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these