வறுமையில் வாடினாரா பாரதி?

பாரதி நினைவு நூற்றாண்டு/குமுதம்

கும்பலாய்க் காகங்கள் கூடிக் கரைவதுண்டு. குயிலொன்று காலையில் கூவித் துயிலெழுப்புவதுண்டு. இவையன்றி வேறு பறவைகளை என் ஜன்னலுக்கு வெளியே நான் கண்டதில்லை. முன்பு சிட்டுக் குருவிகள் இரண்டு  ஜிவ்வென்று கிளம்பி ஒன்றையொன்று துரத்திக் கொண்டு வீட்டுக்குள் வந்து வட்டமடித்துப் போவதுண்டு. அவை அப்படி வரும் போதெல்லாம் எனக்கு வயிறு கலங்கும். சுழன்று கொண்டிருக்கும் மின் விசிறியில் அவை என்றேனும் அடிபட்டுக் கொள்ளுமோ என மனம் பதறும். அதன் காரணமாக சில மாதங்கள் மின் விசிறியைச் சுழலவிடாமல் நிறுத்தி வைத்திருந்ததும் உண்டு.

கடந்த சில மாதங்களாய்க் காணாமல் போயிருந்த அவை இன்று கீச்சிட்டுக் கொண்டு நுழைந்தன. அதே குருவிகள்தானா? இல்லை இவை அவற்றின் அடுத்த சந்ததியா?

குருவிகள் எவையானாலும் அவை எனக்கு பாரதி வீட்டு முற்றத்தில் விளையாடிய குருவிகளின் குழந்தைகள்தான். அவர் இறைத்த அரிசியைத் தின்றுவிட்டு அவரையே குதூகலிக்கும் குழந்தையாக்கிவிட்டுப் போன குருவிகளின் குழந்தைகள்தான் இவையும்.. அந்தக் குதூகலத்தைப் புரிந்து கொண்டவர் யார்? செல்லம்மா கூட இல்லை.

நம்மவர்கள் வறுமையில் பாரதியார் வாடி இளைத்தார் என்று கதை கட்டுவதற்கு அந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள் கதை கட்டினார்கள்? ஆம். பாரதி உண்ணச் சோறின்றி வறுமையில் வாடினார் என்பது மிகை. உண்மை கலக்காத ஓர் கதை.

பாரதியார்  வயிற்றுக்கில்லாமல் வறுமையில் துன்பப்படவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்? இதே செல்லம்மாள்தான். இதே குருவி சம்பவமும்தான்.. அதைச் செல்லம்மாவின் வார்த்தைகளிலேயே பார்க்கலாம்.

“இன்றைக்கு இவர் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்ப வேண்டிய கட்டுரையை அனுப்பவே இல்லை. அவன் எப்படிப் பணம் அனுப்புவான்? இன்று காலையிலே குளித்து, காபி குடித்து, வெற்றிலை பாக்கு எல்லாம் கிரமமாக ஆன பிறகு எவ்வளவோ சொல்லி மேஜை மேல் காகிதம்,பேனா,  இங்கி, புட்டி எல்லாவற்றையும் கொண்டு போய் வைத்து விட்டு அரிசியைப் பொறுக்கி வைத்தேன். பிறகு மடி உடுத்திக் கொள்ளப் போனேன். இவருக்கு எழுத முடியவில்லை.முறத்தில் இருந்த அரிசியில் ஒரு பங்கை எடுத்து முற்றத்தில் இறைத்து விட்டு அதைத் தின்ன வரும் குருவிகளைக் கண்டு பாடிக் கொண்டிருந்தார்.

அரிசியைக் களைந்து உலையில் போடுவதற்காக வந்து பார்க்கிறேன். அரிசியில் கால் பங்கு இல்லை. எனக்கு அழுகை வந்து விட்டது.. இதைப் பார்த்த அவர், “வா செல்லம்மா, இந்தக் குருவிகளைப் பார்! எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன.நாமும் அதைப் போல் ஏன் இருக்கக் கூடாது? நீயும் சதா தொந்திரவு செய்கிறாய். நானும் எப்போதும் எரிந்து விழுகிறேன். நமக்கு இந்தக் குருவிகள் ஒற்றுமை கற்றுக் கொடுக்கின்றன.நாம் கவனியாமல் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறோம். நம்மைக் காட்டிலும் மூடர்கள் உண்டா?” என்றார்

எனக்குப் பொறுக்கவில்லை.என் கோபத்தை ஏன் கிளப்புகிறீர்கள்? குழந்தைகள் அண்ணியம்மா (பாரதியின் நண்பர் பொன்னு முருகேசம் பிள்ளையின் மனைவி) வீட்டிலிருந்து திரும்புகிற வேளைக்குச் சமைத்து விடலாம் என்று அடுப்பை மூட்டினால் பொறுக்கின அரிசியைக் குருவிக்குப் போட்டு விட்டீர்களே.! திரும்பப் பொறுக்கப் பத்து நிமிஷம் ஆகும். உங்களுக்குப் பணம் வர இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ! நீங்களோ கட்டுரை எழுதியாகவில்லை….என்று சொல்லிக் கொண்டே போய் ஒருவிதமாக சமையலை முடித்தேன்.

வெளியே வந்தால் இவர் சகுந்தலா பாப்பாவிற்கு விட்டு விடுதலையாகி என்ற பாட்டை பாடிக் காட்டிக் கொண்டிருக்கிறார். குழந்தை சந்தோஷத்தில் குதிக்கிறாள்!இவர் பாட்டு ஆனந்தத்தில் மெய்மறந்திருக்கிறார். குருவிகளோ அரிசியைக் கொத்தித் தின்ன வண்ணமாய் இருக்கின்றன. தங்கம்மா பேசாமல் உடகார்ந்திருக்கிறாள்” (பாரதி நினைவுகள்-யதுகிரி அம்மாள்)   

இந்தச் சித்திரத்தை மீண்டும் ஒரு முறை பாருங்கள். வறுமையில் வாடும் குடும்பமா தெரிகிறது? செல்லம்மாவின் வரிகளைக் கூர்ந்து படியுங்கள். சில உண்மைகள் புலனாகும். 1. பாரதி முழு அரிசியையும் எடுத்து இறைத்து விடவில்லை. மனிதர்கள் சாப்பிட இன்னும் முக்கால் பங்கு முறத்தில் இருக்கிறது.2.அப்படி இறைத்த அரிசியையும் ஈடு கட்ட வீட்டில் அரிசி இருக்கிறது. ஆனால் விளையாடப் போன குழந்தைகள் வீடு திரும்பும் முன் சமைக்க வேண்டுமே என்ற பதற்றம் செல்லம்மாவிற்கு. 3.பாரதிக்கு சுதேசமித்திரனிலிருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் எழுதினால்தான் பணம். இவர் எழுதாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று செல்லம்மாவிற்கு கோபம். ஆனால் எழுத்தாளன் சுவிட்ச் போட்டால் எழுத மிஷின் அல்லவே?

பாரதி காலத்தில் ஆண்டு முழுமைக்கும் தேவையான அரிசி பருப்பு இவற்றை மொத்தமாக வாங்கிப் போட்டுவிடும் வழக்கம் இருந்திருக்கிறது. பாரதி வீட்டிலும் வாங்கிப் போட்டிருக்கிறார்கள். ஒருமுறை பாரதியின் கவிதையில் மனதைப் பறி கொடுத்த ஒருவர் அவருக்கு ரூ100 கொடுக்கிறார். பாரதி அந்தப் பணத்தை அப்படியே செல்லம்மாளிடம் கொடுத்து விடுகிறார்..”பணம் வந்ததும் செல்லம்மா சில சவரன்கள் வாங்கி சில நகைகள் செய்து மீதி ரூபாயில் நெல், துவரை, புளி, மிளகாய் வாங்கி நிறைத்தார்” என்று எழுதுகிறார் பாரதி வீட்டிற்கு எதிரில் வசித்த, வளர்ப்பு மகள் போல் பாரதி பாசம் பொழிந்த யதுகிரி.

கவனிக்க: ‘சில சவரன்கள் வாங்கி சில நகைகள் செய்து’. இதை பாரதிதாசனும் ஓரிடத்தில் உறுதி செய்கிறார்: “அவர் (பாரதி) புதுவையிலே பத்து வருஷம் இருந்தார். அவரோடு நானும் கூடவே இருந்தேன். அவர் கஷ்டப்படவே இல்லை. அவருடைய சாப்பாட்டிற்கோ குடும்ப செளகரியத்திற்கோ ஒன்றும் குறைவில்லை. கஷ்டப்பட்டார் என்று சொல்வது வெறும் பொய். பின் எப்படி இந்த வதந்தி பரவிற்று என்று சொல்கிறேன் கேளுங்கள். .. பாண்டியிலே அப்போது இருந்த சீனிவாசாச்சாரியார் வீட்டுப் பெண்கள் எல்லாம் வைர நகைகள் அணிந்து விளங்கினர். ஆனால் பாரதியார் வீட்டிலோ சிகப்புக் கல் தோடுதான். அதுவும் அப்பாஜி காலத்தது.. அவர் வீட்டில் வாழ வழி இருந்தது. ஆனால் வைரத் தோடுதான் இல்லை.. சரியான நகைகள் இல்லை. இது வறுமையா?” என்று கேள்வி எழுப்புகிறார் பாரதிதாசன் (பொன்னி-மறு வெளியீடு இளந்தமிழன் 1998)

இவற்றிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. பாரதிக்கு சாப்பாட்டிற்கு கஷ்டமிருக்கவில்லை. அதே நேரம் கையில் ரொக்கம் புழங்கவில்லை. (இப்போதும் அனேக நடுத்தரக் குடும்பங்களில் இதுதான் நிலை)

ரொக்கம் புழங்காமல் இருந்ததற்கு ஒரு காரணம் உண்டு. சுதேசமித்ரனில் எழுதுவதன் மூலம்தான் பாரதிக்குப் பணம் வந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பின் புதுவை பிரஞ்சு அரசு பாரதி மீது கெடுபிடிகள் காட்ட ஆரம்பித்தது. அவருக்கு வந்த தபால்கள் அஞ்சலகத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. மணியார்டர்கள் எரிக்கப்பட்டன,

“உள்ளன்பு கொண்ட நண்பர்கள், குறிப்பறிந்து நடப்பவர்கள், தேவதா விசுவாசம் கொண்டவர்கள் பாதி ராத்திரியில் கதவைத் தட்டி உள்ளே வந்து தங்களால் இயன்ற அளவு பணம் கொடுத்து விட்டு வணங்கிச் செல்வார்கள். பாரதியும் அந்த நண்பர்கள் செய்த உபகாரத்திற்குப் பிரதியாகத் தாம் இயற்றிய புதிய கவிதைகளைப் பாடிக் காண்பிப்பார். இரவு மூன்று மணி வரையில் அளவளாவியிருந்து ஸி.ஐ.டிக்குப் பயந்து தலையை முக்காடிட்டுக் கொண்டு போவார்கள் நண்பர்கள்” என்று செல்லம்மாள் எழுதுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால்: வறுமை இல்லை. ஆனால் ரொக்கமும் இல்லை. அதற்க்காக வாடி நிற்கவும் இல்லை. உற்சாகமாகவே இருந்திருக்கிறார்

நம் மக்களுக்கு ஒரு குணம் உண்டு. நம்மை விட கெட்டிக்காரன், சிந்தனையாளன், புகழ் பெற்றவன் நம்மை விட ஏழையாக இருந்தால் அவர்களுக்கு ஒரு திருப்தி. ஏழையாக இல்லாவிட்டாலும் ஏழையாக இருக்கிறான் என்று எண்ணிக் கொள்வதில் ஒரு அற்ப சந்தோஷம்.

அதையும்தான் பாரதி அவர்களுக்குத் தருகிறார்! ,      

.

About the Author

2 thoughts on “வறுமையில் வாடினாரா பாரதி?

  1. /நம் மக்களுக்கு ஒரு குணம் உண்டு. நம்மை விட கெட்டிக்காரன், சிந்தனையாளன், புகழ் பெற்றவன் நம்மை விட ஏழையாக இருந்தால் அவர்களுக்கு ஒரு திருப்தி. ஏழையாக இல்லாவிட்டாலும் ஏழையாக இருக்கிறான் என்று எண்ணிக் கொள்வதில் ஒரு அற்ப சந்தோஷம்?.
    இது ரொம்பச் சரி. பாரதியைச் ஏழையாக, சாப்பாட்டுக்கே சிரமபட்டதாக பல இடங்களில் வாசித்திருக்கிறேன். நீங்கள் ஆதாரங்கள் காட்டி மறுப்பதே அவர்களுக்கான பதில்.

  2. புதுவையில் பாரதியுடன் நெருங்கிப் பழகிய திரு. விஜயராகவனின் புதல்வர் திரு,வீரராகவன் கோவையில் வாழ்கிறார். அவர் என்னிடம் சொன்னவை- அப்போது அரிசி மூட்டை இரண்டு ரூபாய்கள் விலையாம். 26 ரூபாய் சம்பளம் வாங்கிய திரு.விஜயராகவன் முதல் வேலையாய் அரிசி மூட்டை ஒன்றை வாங்கிச் சென்று பாரதி வீட்டில் இறக்கிவிடுவாராம். ஆனால் தன் அன்னைக்கு அந்த 2 ரூபாய்க்கு கணக்கு சொல்ல முடியாமல் திணறுவாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these