ரெளத்திரம் பழகு!

என் ஜன்னலுக்கு வெளியே ஏதோ இரைச்சல். எட்டிப் பார்த்தேன். கணவன் மனைவியா, அண்ணன் தங்கையா எனக் கணிக்க முடியவில்லை. அதிகம்  அறிமுகமில்லாத இருவர் சச்சரவிட்டுக் கொண்டு என் வீட்டைக் கடந்து கொண்டிருந்தார்கள்.அவன் அடிப்பது போலக் கையை உயர்த்துவதும் அவள் அழுவது போலக் கண்ணைப் பொத்திக் கொள்வதுமாக ஒரு காட்சி அங்கே விரிந்திருந்தது. நாடகம் என்ற சொல்லை நான் காரணமாகத்தான் பயன்படுத்தவில்லை. காலை நடையில் நான் காண்கிற ஆரஞ்சுச் சூரியனின் செம்மை அந்த மாலை வேளையில் அவர்கள் முகத்தில் படர்ந்திருந்தது. சினத்தின் கனல் அவர்கள் விழிகளில் பொலிந்தது.

சினங் கொள்ளக் கூடாது, கோபப்படக் கூடாது என நம் மூதாதையர்கள், தமிழ்ச் சான்றோர்கள் பன்னெடுங்காலமாகச் சொல்லி வருகிறார்கள். எப்போதும் உள்ளதையும் நல்லதையும் நமக்கு சொல்லுகிற வள்ளுவர் நீ உன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் கோபத்தை விட்டுவிடு  என்று சொல்கிறார். ‘தன்னைத்தான் காக்கின் சினங்காக்க’ என்கிறார். நமக்கு ஒரு பழக்கம். யாராவது எதையாவது செய்யாதே என்று சொன்னால், ‘சரி செய்தால் என்னாகும்? என்று எதிர்க் கேள்வி போடுவது நம் வழக்கம்.அது வள்ளுவருக்கும் தெரியும். அதனால் அடுத்த வரியை இப்படி எழுதுகிறார். ‘காவக்கால் தன்னையே கொல்லும் சினம்’. கோபத்தை நீ அடக்கலைனா செத்துருவடா! அது உன்னையே கொன்னுடும்!’ என்று பயமுறுத்தி வைக்கிறார்.

இதற்கெல்லாம் அசர்கிற ஆட்களா நம் ஆட்கள்? நம்மில் சிலர் இருக்கிறார்கள். கோபம் வரும் போது, “நான் செத்தாலும் பரவாயில்லை, அவனை வெட்டாமல் விட மாட்டேன்!” என்று உறுமுவார்கள் “எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை, அவனுக்கு இரண்டு கண்ணும் போகணும்!”னு குதிப்பார்கள். அதுவும் வள்ளுவருக்குத் தெரியும். 305வது குறளில் தன்னைத் தான் காக்கின் சினம் காக்க’ என்று சொன்னவர், ’நம்ம பயல்க இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டனுங்க’ என்று நினைத்தாரோ என்னவோ அடுத்த 306வது குறளில் ‘பயங்காட்டுவது’ என்ற டெக்னிக்கைப் பயன்படுத்துகிறார். ‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்று ஆரம்பித்து, ‘ஏலே மக்குப் பயலே, கோபம் உன்னை மட்டுமல்லடா, உன் கூட இருக்கிறவர்களையும் அழித்து விடும்’ என்று சொல்லி வைக்கிறார். தாய் தகப்பன், பொண்டாட்டி புள்ளை குட்டி அக்கா தங்கைக்கு பிரச்சினை வரும்னா அதைச் செய்ய நமக்கு ஒரு தயக்கம் வரத்தானே செய்யும்?

ஆனால் மனுஷனாகப் பிறந்து விட்டால் கோபம் வராமல் இருக்குமா? முட்டாள்களும் மூர்க்கர்களும்தான் கோபப்படுகிறார்களா? முனிவர்கள் கோபப்பட்டிருக்கிறார்களே? விஸ்வாமித்திரர் கோபம் பிரசித்தி பெற்றது. இத்தனைக்கும் அவர் விஸ்வத்திற்கே-அதாவது உலகிற்கே- மித்திரர், அதாவது நண்பர். அவ்வளவு ஏன், கடவுளுக்கே கோபம் வந்ததே? உண்மையாகவே உலகத்தைச் சுத்தி வந்தும் மாம்பழம் கிடைக்கவில்லைனு முருகன் கோபித்துக் கொண்டுதானே பழனிக்குப் போனார்?

யோசித்துப் பார்த்தால் நாம் யார்மீது கோபத்தைக் கொட்டுகிறோம்? நம்மை விட பலவீனமானவர்கள் மீதுதான். நம்மை விட உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, அதிகார ரீதியாக பலம் வாய்ந்தவர்கள் மீது நமக்கு கோபம் வரலாம். ஆனால் அதை வெளியே காட்ட மாட்டோம். மாணவன் மீது எரிந்து விழும் ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் கோபப்படுவாரா? ப்யூனிடத்தில் பொரியும் மானேஜர் எம்.டி.க்கு முன்னால் வாயைத் திறப்பாரா? ஏழைகளை உதைக்கும் காவல் அதிகாரி எம்.எல்.ஏ மீது கம்பை ஓங்குவாரா?  ஒரு குவளைக் காபி ஆறிவிட்டதென்று மனைவி மீது பாய்கிறவர்கள் வேலைக்குப் போன இடத்தில் மேலதிகாரிகள் மீது பாய்வார்களா? நம் பெண்களை ஆபாசமாகப் படமெடுக்கும் சினிமாக்காரர்களைக் கோபிப்பார்களா? அறம் பிறழ்ந்த ஊடகக்காரர்கள் மீது சினம் கொள்வார்களா? வாக்குறுதிகளை அள்ளிவிட்டுப் பின் ஏமாற்றும் அரசியல்வாதிகள் மீது அவர்களுக்கு ஆத்திரம் வருமா?

சினங்கள் பல வகை. அவற்றில் கையாலாகாத கோபம் ஒன்று நாட்டில், ஊரில், அக்கிரமம் நடக்கிற போது ஒன்றும் செய்யமுடியாமல் இருக்க நேர்கிற போது நம்மீதே நமக்கு ஏற்படுகிற கோபம். இன்னொன்று ஆற்றாமையினால் வரும் கோபம். மெத்தப் படித்தவர்கள், தங்கள் படிப்பை, சட்ட அறிவை அநியாயத்திற்கு ஆதரவாக பயன்படுத்தும் போது வருகிற கோபம். பாரதியின் புதிய கோணங்கி, “ படித்தவன் சூதும் பாவமும் செய்தால் போவான், போவான், ஐய்யோவென்று போவான்” என்று பொங்கினானே அந்தக் கோபம். அறிவின் மீது ஏற்படுகிற கோபத்தைப் போல அறியாமையின் மீதும் கோபம் வருவதுண்டு. ஏழையாக பிறப்பது தவறில்லை. ஆனால் ஏன் ஏழையாக இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாத, அது குறித்து யோசிக்காத அறியாமையைக் கோபித்துக் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்? “கஞ்சி குடிப்பதற்கு இலார். அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமில்லார்” என்று சீறுகிறார் பாரதி. இல்லாமையைப் பார்த்து சீற்றம் எழுதுவதைப் போல இருப்பதைப் பார்த்தும் சீற்றம் எழும். அன்பில்லாதவர்கள் மீது கோபம் வரும். அன்பு இருப்பதாலும் கோபம் வரும். அத்தனை வகைக் கோபத்தையும் நமக்குப் பல்வேறு இடங்களில் அடையாளப்படுத்தியிருக்கிறார் பாரதி  

கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள், அது உன்னை அழித்துவிடும், உன்னைச் சேர்ந்தவர்களை அழித்துவிடும், ஆறுவது சினம் என்றெல்லாம் காலம் காலமாகச் சொல்லப்பட்ட மரபில் வளர்ந்தவர்களிடம்தான் பாரதி சொல்கிறார்: ரெளத்திரம் பழகு!

இதற்குப் பலர் பலவிதமாகப் விளக்கம் சொல்கிறார்கள். ரெளத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பழகு என்று அர்த்தம் என்று கூடச் சிலர் சொல்லி வருகிறார்கள். ஆனால் அது சரியல்ல.

இரண்டு விஷயங்களைப் பார்த்தால் அது ஏன் சரியல்ல என்று தெரிந்து விடும்.

பழகு என்றால் கற்றுக் கொள் என்றுதான் அர்த்தம். ரெளத்திரம் கொள்ளக் கற்றுக் கொள் என்றுதான் பாரதி சொல்கிறார். எங்கு சொல்கிறார்? ஆத்திசூடியில்.

ஆத்திசூடி தமிழ் எழுத்துக்களையும் அதன் வரிசையையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள எழுதப்பட்ட இலக்கியம்.ஒரு குழந்தை முதலில் படிக்கும் இலக்கியம் அதுதான். ரெளத்திரம் பழகு என்று ஆத்திசூடியில், குழந்தைக்கு அது கற்க ஆரம்பிக்கும் போதே, சொல்லிக் கொடுக்கிறார் பாரதி.

குழந்தைக்குக் கோபப்படச் சொல்லிக் கொடுக்கலாமா? கொடுக்கலாம். ஏனென்றால் ரெளத்திரம் என்பது வெறும் சினம் அல்ல. சினம் கொள் என்று பாரதி சொல்லவில்லை. சி என்ற எழுத்துக்கு அவர் ஆத்திசூடியில் எழுதுவது ‘சிதையா நெஞ்சு கொள்!’

ரெளத்திரம் என்ற சொல்லின் வேர்ச் சொல் ருத்திரம். சிவனுடைய ஒரு பெயர் ருத்திரன். ருத்திரனின் அட்சம்தான் (கண்) ருத்தாராட்சம். சிவன் ருத்திரன் ஆனது எப்போது?

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் மூன்று நகரங்களை உருவாக்கினார்கள். அந்த மூன்று நகரங்களும் மேகங்களைப் போல நகரக் கூடியவை. இடம் விட்டு இடம் பெயரும் வசதி இருந்ததால் அதைப் பயன்படுத்திக் கொண்டு அறம் பிறழ்ந்த செயல்களைச் செய்தார்கள். சினம் கொண்ட சிவன், தேவர்கள் எல்லோரும் படைகளாகவும் சூரிய, சந்திரர்கள் சக்கரமாகவும், உலகம் தேராகவும் அமைய விஷ்ணுவை அம்பாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் கொண்டு சிவன் அவர்களை அழித்தார் என்பது தொன்மம். பரிபாடல் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் என்று சிவனைப் பாடுகிறது. சிலப்பதிகாரத்திலும் கலித்தொகையிலும் திரிபுரம் எரித்த வரலாறு பேசப்படுகிறது.  சுருக்கமாகச் சொன்னால் ரெளத்திரம் என்பது அறச்சீற்றம். பலரையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு அநியாயத்திற்கு எதிராக எழுவதுதான் அறச்சீற்றம்.

அறச்சீற்றம் கொள்ளப்பழகு என்று பாரதி கல்வி கற்க ஆரம்பிக்கும் குழந்தையிடம் சொல்கிறார். இதை இன்னும் எளிமையாக பாப்பா பாட்டில் “பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா. அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா” விரிவாகச் சொல்கிறார்.

பாப்பா பாடல் பெண் குழந்தைகளுக்கானது. ஆண் குழந்தைகளைப் பாப்பா என்று சொல்லும் வழக்கமில்லை. ஆனால் பெண் குழந்தைகள் திருமணமாகி புருஷன் வீடு போய் அவர்களுக்கு பாப்பா பிறந்தாலும் அவர்களுடைய தந்தைகளுக்கு அவர்கள் பாப்பாதான். அதுவும் தவிர ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று டி போட்டு பாப்பா பாட்டில் எழுதுகிறார் பாரதி

நம் பெண் குழந்தைகளுக்கு அவர்கள் கற்கத் தொடங்குகிற வயதிலேயே ரெளத்திரம் பழகக் கற்றுக் கொடுத்திருந்தால் அவர்கள் ஆசிரியர்கள் கழிவிடத்தைக் கழுவச் சொல்லியோ அல்லது தங்கள் நம்பிக்கைகளை விட்டு விடச் சொல்லியோ கட்டாயப்படுத்திய போது  அறச்சீற்றம் கொண்டிருந்திருப்பார்கள். தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.            .  

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these