பட்டு பாதை : வாய்ப்புகளும் சவால்களும்

சீனத்தில் உள்ள போஒவில் ஆசிய ஊடகத் தலைவர்கள் வட்ட மேசை மாநாட்டில் மார்ச் 26 2015 அன்று ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்

மாலன்

1600 ஆண்டுகளுக்கு முன்பு தனது  65 – ஆவது வயதில் சீனத் துறவி       பா ஹியான் புத்த மத நூல்களைத் தேடி இந்தியாவிற்குத் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். அவர் பயணம் செய்த வழி பட்டுப் பாதை என்று பின்னர் அழைக்கப்பட்டது. அவர் இந்தியாவிலிருந்து இந்தியப் பெருங்கடல் வழியாகச் சீனம் திரும்பினார். அந்த வழி, ’கடல் வழியான பட்டுப்பாதை’ என்றழைக்கப்படுகிறது. அமைதி, ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை, சேர்ந்து முன்னேறுதல், ஒருவரிடமிருந்து இன்னொருவர் பரஸ்பரம் கற்றுக் கொள்ளுதல், கடின உழைப்பு இவற்றின் அடையாளமாக பட்டுப்பாதை திகழ்கிறது.

பொருளாதாரக் கூட்டு முயற்சிகள் மூலம் இந்தப் பழைய பட்டுப்பாதையில் உள்ள பகுதிகளை முன்னேற்றம் அடையச் செய்யவததற்காக சீன அதிபர்      ஜி- ஜின்பிங்க் சில முயற்சிகளை முன்மொழிந்துள்ளார். அண்டை நாடுகளுடன் இணைந்து ஆசியாவின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது, ஆசியாவில் எல்லா பகுதிகளுக்கும் தொடர்புகளை ஏற்படுத்துவது என்பன இந்த முயற்சிகளின் பின்னுள்ள நோக்கங்கள்.

உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஊக்கம் அளிப்பது, குறைந்த செலவில் கட்டுமானத்திற்கான புதிய முறைகளைக் கண்டறிவது, வர்த்தகம் முதலீடு இவற்றுக்கான தடைகளை அகற்றுவது ஆகியவற்றிற்கு இந்தப் பட்டுப்பாதை வழி சமைக்கும். இந்தியா – சீனம் கூட்டுறவில் ஏற்கனவே உருவாக்கப்பட்டு வரும், வங்கதேசம் – சீனம் – இந்தியா – மியான்மர் பொருளாதார முற்றம், இந்தியாவில் நிறுவப்படும் சீனத்தொழில் பூங்காக்கள் ஆகியன இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

இந்தியாவின் நோக்கில் இந்த சங்கிலியில் ஐந்து கண்ணிகள் இணைக்கப்பட வேண்டும்

கொள்கை வகுத்தல் முதன்மையானது :

இந்தியா – சீனம் இடையே பொருளாதார ஒத்துழைப்புக் குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாவது சாலைகள் :

இந்தியா – சீனா எல்லைகளில் உள்ள போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்த வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும்.

மூன்றாவது முதலீடு :

இந்தியாவில் சீனா முதலீடு செய்ய முன்வருமேயானால் அதை இந்தியா மகிழ்வோடு வரவேற்கும்.

நான்காவது கண்ணி கரன்ஸி :

இந்திய ரூபாய்க்கும் சீன யுவானுக்கும் இடையேயான செலாவணி மாற்றாங்கள் குறித்த உடன்பாடு உருவாக்கப்பட வேண்டும்.

ஐந்தாவது மக்கள் :

இரண்டு நாடுகளுக்குமிடையே இப்போதுள்ள பரிமாற்றத் திட்டங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட வேண்டும். குறிப்பாக இரண்டு நாடுகளிடையே உள்ள அடித்தள மக்களிடையே பரிமாற்றங்கள் நடைபெற வேண்டும். இரு நாடுகளிலுள்ள நகரங்களிடையே தோழமை நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இந்திய பெருங்கடலில் சீனாவின் பொருளாதார ஆர்வங்கள் அண்மைகாலமாக வேகமாக அதிகரித்து வருகிறது. இது இந்தியாவிற்கு சில கவலைகளை ஏற்படுத்தியுள்ளது  இலங்கையிலும், மியான்மரிலும், பாகிஸ்தானிலும் துறைமுகங்கள் கட்டிக் கொடுக்க சீனா முன்வந்துள்ளது. அவை கடல் வாணிபத்திற்கான சிவில் துறைமுகங்கள்தான் என்ற போதிலும் இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை அது வலுப்படுத்தும் என்று இந்தியா கருதுகிறது.

தனது நாட்டில் உள்கட்டமைப்பை மேம்படுத்த சீனாவோடு கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும்போது சீனாவோடு நெருக்கம் கொள்ளக் கூடாது என்று தனது அண்டை நாடுகளைத் தன்னால் கட்டாயபடுத்த இயலாது என்பதும் இந்தியாவிற்குப் புரிகிறது.

சீனாவின் பட்டு பாதை முயற்சிகளை மறித்து நிற்பதற்கு பதிலாக, இந்தியா அதனுடன் ஒத்துழைப்பதன் மூலம் தனது நாட்டின் நலன் சார்ந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றே நான் கருதுகின்றேன்.

வெவ்வேறு நாடுகள், மதங்கள், பிரிவுகள் ஆகியவற்றை சேர்ந்த மக்களிடையே செய்து கொள்ளப்படும் பரிமாற்றங்கள் ஆசியாவின் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதால், அரசியல் அமைப்புகளையோ, அரசையோ சாராத தனி மனிதனாகிய என்னை பட்டுப் பாதை கவர்கிறது.

இரு நாடுகளையும் வளப்படுத்தும் நோக்கில் பட்டுப்பாதை வழியே நம் முன்னோர்களின் அடிச்சுவட்டில் நடப்போம்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these