எத்தனை துயரமான வீழ்ச்சி!

“பாரத் மாதா கீ ஜெய்!”

இந்தியத் தாய்க்கு வெற்றி என்ற இந்த உரத்த முழக்கம் இடி போன்று  நான் கூட்டங்களில் பேச நுழையும் போது என்னை வரவேற்கும் அந்தக்  கூட்டங்களில் கிராமத்தில் உள்ள குடியானவர்களிடம் நமது இந்தியா  பற்றிப் பேச்சுக் கொடுப்பேன். கைபர் கணவாயிலிருந்து கன்னியாகுமரி வரை நான் மேற்கொண்ட பயண அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்வேன்.

அவர்களிடம் “பாரத் மாதா என்று முழக்கமிட்டீர்களே யார் அந்த பாரத மாதா?” என்று கேட்பேன். என்னிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பாராத அவர்கள் திகைத்துப் போவார்கள்.என்ன சொல்வது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள். நான் விட மாட்டேன். தொடர்ந்து கேட்பேன். ஒருமுறை ஒரு ஜாட் குடியானவர் எழுந்து “இந்த மண்தான் பாரத மாதா!” என்றார். நான் விடாமல், “இந்த மண் என்றால் எந்த மண்? இந்த கிராமத்து மண்ணா? இந்த மாவட்டத்து மண்ணா? அல்லது இந்தியா முழுவதும் உள்ள மண்ணா?” என்று கேட்பேன். பேச்சு வளர்ந்து கொண்டு போகும். அவர்கள் “நீங்கள்தான் சொல்லுங்களேன்!” என்பார்கள். “இந்த மண், மலை, நதிகள், வனங்கள் நமக்குச் சோறிடும் வயல்கள் எல்லாம் நம்முடையவைதான். நமக்கு அருமையானவைதான்.ஆனால் எல்லாவற்றையும் விட மக்கள், உங்களையும் என்னையும் போன்ற மக்கள், நாடெங்கும் பரந்து கிடக்கும் கோடிக்கணக்கான மக்கள், அவர்கள்தான் பாரதமாதா. நாம் ஒவ்வொருவரும் பாரதமாதவின் அங்கம். பாரதமாதாவின் அம்சம்.. இதைச் சொன்னதும் அவர்கள் கண்கள் ஒன்றைக் கண்டுணர்ந்ததால் ஒளிரத் தொடங்கும்”

நான் கண்களை மூடிக் கொண்டேன். என்னால் மேலே படிக்க முடியவில்லை. கண்களில் நீர் தளும்பியதால் கணினித் திரையில் வார்த்தைகள் அசங்கித் தெரிந்தன.

நான் படித்துக் கொண்டிருந்தது மோதியின் உரை அல்ல. நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா. தமிழில் சொல்வதானால் கண்டுணர்ந்த இந்தியா. என்ன பொருத்தமான தலைப்பு!. இருக்கும் ஒன்றைத்தான் கண்டு உணர முடியும்.அதுதான் டிஸ்கவரி. இல்லாத ஒன்றை கண்டுபிடிப்பது இன்வென்ஷன். கணினி ஒரு கண்டுபிடிப்பு. இந்தியா என்பது கண்டுணர வேண்டியது.

நேருவின் அந்தப் புத்தகமே ஒர் ஜன்னல்தான். “நான் பெரும்பாலும் காரில் பயணித்தேன். சில நேரம் விமானத்தில், ரயிலில். எப்போதாவது யானை. ஒட்டகம், குதிரை இவற்றின் முதுகில். சில இடங்களில் நீராவிப் படகில், துடுப்புப்  போடும் ஓடத்தில். சில நேரம் சைக்கிள். சில சமயங்களில் நடந்தே” இப்படி இந்தியா முழுக்க இரவிலும் பகலிலும் மழையிலும் வெயிலிலும் பனியிலும் அவர் பயணித்தது தேர்தல் பிரச்சாரத்திற்காக. ஆனால் கண்டுணர்ந்தது என்ன? “அரசியலும் தேர்தலும் அன்றாட விஷயங்கள். அவற்றின் வெற்றியில் நாம் பரவசம் கொள்கிறோம். ஆனால் எதிர்காலத்திற்கான வலுவான, அழகான, பாதுகாப்பான, இந்தியாவை நாம் உருவாக்க வேண்டுமானல் அதன் அடித்தளத்தைக் கண்டு கொள்ள வேண்டும்” எது அந்த அடித்தளம்?

“பட்டாணியர்கள் ஒரு எல்லை. தமிழர்கள் ஒரு எல்லை. இந்த இரு எல்லைகளுக்கு இடையே வங்காளிகள், மராத்தியர்கள், குஜராத்திகள், ஆந்திரர்கள், ஒடியர்கள் அசாமிகள், கன்னடர்கள்,, கஷ்மீரிகள், மலையாளிகள், சிந்திகள், பஞ்சாபிகள், ராஜபுத்திரர்கள், இவர்களுடன் மத்திய இந்தியாவில் இந்தி பேசும் மக்கள். இவர்கள் ஒவ்வொருக்கும் தனித்த அடையாளங்கள். ஆனால் ஒரே விழுமியங்கள், வழக்கங்கள், வழுக்கல்கள், மரபுகள், தத்துவங்கள்  அவற்றிற்கெல்லாம் அடிப்படையான ஒரே கலாசாரம் என ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரே நாடாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஒற்றுமை வெளியிருந்து திணிக்கப்பட்டதல்ல. புறத்தே இருந்த அளவுகோல்களால் தரப்படுத்தப்பட்டதல்ல. ஆழமாக உள்ளிருந்து எழுந்தது”

நேரு எழுதிக் கொண்டே போகிறார். அவரது செறிவான அனுபவத்தை நான் செரித்துக் கொள்ள வேண்டுமானால், வெறும் வாசகனாகக் கடந்து போகாமல், நானே அவராக மாறி அவர் கூடவே பயணிக்க வேண்டுமானால், அவரைப் போலக் ‘கண்டுணர’ வேண்டுமானால், காபி ஒன்று குடித்து என்னைச் சார்ஜ் செய்து கொள்ள வேண்டுமென்று எழுந்தேன். நாற்காலிக்கருகே நான் காலையில் படித்துவிட்டு மடித்துப் போட்ட நாளிதழ் கிடந்தது.

“இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது, ஒரு நாடு என்று அல்ல” என்று ராகுல்காந்தி பேசிய உரையை அந்தத் தினசரி முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

எத்தகைய பெரும் வீழ்ச்சி! கைபர் கணவாயிலிருந்து கன்யாகுமரி வரை பயணித்து, அனுபவங்களாலும், வரலாற்றை வாசித்ததாலும், உலக நாடுகளை ஒப்பிட்டு அறிந்து கொண்டதாலும், இந்தியா என்பது தனித்துவம் கொண்ட நாடு என்று சொன்ன நேரு எங்கே! சட்டப் புத்தகத்தைக் கூடச் சரியாகப் படிக்காத அவரது கொள்ளுப் பேரன் எங்கே! இது ஒரு தலைமுறையின் வீழ்ச்சியா? அல்லது ஒரு பரம்பரையின் வீழ்ச்சியா?

அரசமைப்புச் சட்டம் நாடு என்று சொல்லவில்லையா?  ‘இந்திய மக்களாகிய நாம்’ என்று தொடங்கும் அதன் முகவுரையில் (Preamble) நம் குடியரசு எதையெல்லாம் உறுதி செய்கிறது எனப் பட்டியலிடுகிறது. அதில் ஒன்று சகோதரத்துவம். ‘தனி நபர்களுடைய கண்ணியத்தையும் நாட்டினுடைய ஒற்றுமையையும் உறுதியளிப்பதாக அந்த வரி சொல்கிறது (assuring the dignity of the individual and unity of the Nation) அதிலும் நேஷன் என்ற சொல்லை வேறு எதையோ குறிக்கும் பொதுப் பெயராக இல்லாமல் இந்த நாட்டைத்தான் குறிக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்தும் வண்ணம் அந்தச் சொல்லில் உள்ள ‘என்’ என்ற எழுத்தை N என்று பெரிய எழுத்தாக- காபிடல் லெட்டராக- நம் முன்னோர்கள் பொறித்து வைத்திருக்கிறார்கள் (it is not a common noun but a proper noun) ஒற்றுமை என்ற சொல் மாத்திரம் போதாது எனக் கருதி அதை ‘ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும்’ (unity and integrity) என்று மாற்றியவர் ராகுல் காந்தியின் பாட்டியான சாட்சாத் இந்திரா காந்திதான்!

மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்கிறார் ராகுல்.ஆமாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒன்றுதல் என்ற சொல்லிலிருந்து உருவானதுதான் ஒன்றியம். ஒன்றுதல் என்றால் என்ன? இரண்டறக் கலத்தல் என்பதுதான் பொருள். பொன் நகை செய்யும் போது தங்கத்தையும் செம்பையும் ஒரு உலைக்களத்தில் இட்டு உருக்குவார்கள். இரண்டும் இணைந்து அழகான நகை உருவாகும். அதன் பின் அங்கு தங்கம் முற்றிலும் தங்கமல்ல. செம்பு முற்றிலும் செம்பும் அல்ல. ஒன்றோடு ஒன்று கலந்து ஒன்றுக்கொன்று வலிவும் பொலிவும் ஏற்றிக் கொண்டதில் உருவானதுதான் அந்த நகை.

Union என்பதும் united என்பதும் ஒன்றல்ல. United என்றால் ஒன்றுபட்டு நின்றல். இரண்டும் வேறு வேறானவை. ஒன்றுபட்டு நிற்றல் என்னும் போது தனித்தனி அடையாளங்களுடன் ஒரு பொது நோக்கிற்காக இணைந்து செயல்படல். இதற்குப் பொருள் தேட அகராதிகளை நாட வேண்டியதில்லை. UPA என்று அழைக்கப்படும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள் United எதைக் குறிக்கிறது என்று யோசித்தால் போதும். பல்வேறு அடையாளங்களும் கொள்கைகளும் (?) கொண்ட கட்சிகள் ஆட்சி என்ற பொது நோக்கத்திற்காக இணைந்து நிற்பதானால்தான் அது ‘யுனைட்டட்’ என்று குறிக்கப்படுகிறது. அது யூனியன் அல்ல

இன்னொரு உதாரணம் : அமெரிக்கா. அமெரிக்காவில் உள்ளது கூட்டாட்சிக் குடியரசு. (பெடரல் ரிப்பப்ளிக்) அதாவது மாநிலங்கள் தனித்த இறையாண்மையோடு ஒன்றுபட்டு நிற்பது. அதனால் அது யுனைட்டட் ஸ்டேட்ஸ். அங்கு மாநிலங்களின் எல்லைகளை அங்குள்ள கூட்டாட்சி அரசு (federal government) அரசு மாற்ற முடியாது. அங்கு கூட்டாட்சி அரசு தனக்குரிய அதிகாரங்களை வகுத்துக் கொண்டு மற்றவற்றை மாநிலங்களின் பொறுப்பில் விட்டுவிட்டது

இந்தியா கூட்டாட்சிக் குடியரசல்ல. இங்கு மாநிலங்களை உருவாக்கவும், அவற்றின் எல்லைகளை மாற்றியமைக்கவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு (அண்மைக்கால உதாரணம் கஷ்மீர், தெலுங்கானா). இங்கு அதிகாரங்கள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன  

யூனியன், யுனைட்டட் என்பவற்றிற்குள்ள நுட்பங்களை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் யுனைட்டட் ஸ்டேட்ஸ் என்று குறிப்பிடாமல் யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்துடன் முகவுரையில் இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசு என்று குறிப்பிட்டிருக்கிறார்களே அன்றி கூட்டாட்சிக் குடியரசு எனக் குறிப்பிடவில்லை.

அவர்கள் இந்தியாவை ஒரு நாடாகப் பார்த்தார்கள். இந்த உணர்வுகளும் நுட்பங்களும் ராகுல் காந்திக்குத் தெரிந்திருக்கும் என நான் கருதவில்லை. அவர் நேரு அல்ல. காலிஸ்தான் பிரிவினையை எதிர்த்து அதன் காரணமாகத் தன் உயிரை இழந்த இந்திரா காந்தியும் அல்ல.

 அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டாதிருப்பது அவருக்கு நல்லது.       

. .

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these