எது தூய்மையான பாரதம்?

தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது அந்தமான். வேட்டை நாய்கள் அதை துரத்திக் கொண்டு வந்தன ஓடிக்கொண்டிருந்த மான் சற்று தொலைவில் ஒரு குகையைக் கண்டது.உயிரைப் பிடித்துக்கொண்டு, கற்களையும் முட்களையும் கஷ்டப்பட்டுத் தாண்டி அது அந்த குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டது ‘அப்பாடா! தப்பித்தோம்’ என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு தலையைத் திருப்பிப் பார்த்தது அங்கே உறங்கிக் கொண்டிருந்த ஒரு சிங்கம் விழித்து எழுந்து மானைப் பார்த்து கிர்ர்ர்ர் என்று உறுமியது

இது நாம் சிறுவயதில் படித்த ஈசாப்பு நீதிக் கதைகளில் ஒன்று. அடுப்பிலிருந்து நெருப்புக்கு என்று சொல்லப்படும் நிலைமையை விளக்குவதற்காக கூறப்படும் கதை இது. இந்த சொற்றொடரை விளக்க பலர் பல கதைகளை எழுதி இருக்கிறார்கள். அவற்றில் மிகவும் பிரபலமானது, பொரிப்பதற்காக எண்ணெய் சட்டியில்  உயிரோடு வீசப்பட்ட சில மீன்கள் ஒன்றுகூடி, இதிலிருந்து நாம் தப்பிக்கலாம் என்று வெளியே துள்ளிக் குதித்து அடுப்பில் விழுந்தன என்று சொல்லும் ஆதி காலத்து கிரேக்கக்  கதை.

இவற்றையெல்லாம்  சிரித்து எளிதாக கடந்து வந்திருக்கிறோம் நாம்.   கதைகளை கடக்க முடிந்த நம்மால் செய்திகளை ஜீரணிக்க முடியவில்லை. அப்படி என்ன செய்திகள் அவை? 

ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளிகள் தங்கள் குழந்தைகளையும், சுமைகளையும் தூக்கிக்கொண்டு பல  100 மைல்கள் நடந்து அல்லது சைக்கிளில் மிதித்துக்கொண்டு தங்களது சொந்த ஊர்களை நோக்கிச் சென்றார்கள் என்று பல கட்டுரைகளும் படங்களும் அனேகமாக எல்லா மொழிகளிலும், எல்லாப் பத்திரிகைகளிலும், வெளி வந்தன. அப்படிச் சென்ற அவர்களது அந்தப் பயணம் துயரமானது ஆனால் அதைவிட துயரமானது அவர்கள் சென்ற இடத்தில் அவர்களுக்குக் காத்திருந்த வாழ்க்கை.

மும்பையிலிருந்து 1300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, ஒடிசாவில் இருக்கிறது பிர்பாலி என்ற கிராமம். தன்னுடைய அந்தக் கிராமத்தை நோக்கி சைக்கிளில் புறப்பட்டார் கிஷோர். அவர் மும்பையில் கட்டிடத் தொழிலாளியாக இருந்தார் மும்பையில் கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைக் கண்ட அவர், அதிலிருந்து தப்பிக்க எண்ணி 1300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது சிறிய கிராமம் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி, மும்பையிலிருந்து சைக்கிளிலேயே புறப்பட்டார் ஆனால் அவருடைய கிராமத்திற்கு சென்றபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது

மூவாயிரம் பேர் மட்டுமே வசிக்கும் அந்த கிராமத்தில் 12 பேருக்கு கொரானா தொற்றுப் பற்றியிருந்தது நோய்த் தொற்றுப் பரவி இருந்த மும்பையிலிருந்து அவர் வந்ததால் அவருக்கும் நோய்த் தொற்று இருக்கும் என்று அவருடைய வீட்டுக்கு அருகில் வசித்தவர்கள் அஞ்சினார்கள். அதனால் அவர் அவருடைய வீட்டில் தங்குவதை அவர்கள் விரும்பவில்லை.  அவர்களை மீறிச் சென்று தன்னுடைய வீட்டில் தங்கினால், தன்னுடைய வீட்டிலுள்ள உறவினர்களுக்கு தொல்லை கொடுப்பார்கள் என்பதால், அவர் தன்னுடைய வீட்டில் தங்கவில்லை.

 விதிகளின்படி வெளியூரிலிருந்து வந்தவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குவாரண்டையினில் சென்று தங்கலாம் என்று அவர் அங்கு சென்றார். ஆனால் அந்த கிராமத்தில் உள்ள குவாரண்டைனில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்பதினால் அவர் அங்கு தங்க விரும்பவில்லை.

இந்திரா ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வந்த ஒரு கட்டிடத்தில் சென்று தங்கினார். ஆனால் அங்கு தண்ணீர் இணைப்புக் கொடுக்கப்படாததால் அங்கேயே தொடர்ந்து தங்க அவருக்கு    முடியவில்லை. வேறு திறந்த வெளியிலும் தங்க இயலவில்லை. 45 டிகிரி வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது கடைசியில் அவரும் அவரது ஏழு நண்பர்களும் ஒரு ஓடையின் மீது கட்டப்பட்டிருந்த சிறிய பாலத்தின் கீழே சென்று தங்கியிருக்கின்றனர்

 “மும்பையிலிருந்து சைக்கிளில் வரும்போது  நெடுஞ்சாலைகளில் சென்றுகொண்டிருந்த சில லாரி டிரைவர்கள் தங்களது வண்டிகளில் ஏறிக் கொள்ளுமாறு  சொல்லினர். ஆனால் நான்தான் யாருக்குக் கொரோனா தொற்று இருக்குமோ என்று அஞ்சி அவர்கள் அளிக்க முன்வந்த உதவியை மறுத்துவிட்டேன். இங்கு வந்து பார்த்தால் நிலைமை இப்படி இருக்கிறது” என்கிறார் கிஷோர் 

இந்த ஊருக்கு மிக அருகில் உள்ள இன்னொரு இடத்தில் இருக்கிறார் தபீர் பஹேரா என்ற இன்னொரு புலம் பெயர் தொழிலாளி. அவரும் மும்பையிலிருந்து திரும்பியவர்தான். அவரும் சொந்த வீட்டிலேயோ, கிராமத்திலேயோ தங்க முடியாமல், ஸ்வச் பாரத் திட்டத்தின்  கீழ் கட்டப்பட்டுள்ள ஒரு கழிப்பறையில் தங்கியிருக்கிறார்.இந்த இடம் மிக மிக சிறியதுதான் ஆனால் எனக்குத் தங்க வேறு இடம் கிடைக்கவில்லை என்கிறார் அவர்

 இந்த இருவரையும் போல, ‘வீடு தேடி ஓடி வந்த என்னையே நாடி நிற்குதே அனேக நன்மையே’ என்று சொந்த ஊருக்குத் திரும்பிய பல தொழிலாளிகள் ஏமாற்றத்தையும் துன்பத்தையும் எதிர்கொள்கிறார்கள் ஒடிசாவில் மட்டும் 150க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பாதி கட்டிமுடிக்கப்பட்ட கோயில்கள், கைவிடப்பட்ட பாழடைந்த கட்டிடங்கள், ஆற்றுப் படுகைகள், கிராமங்களை ஒட்டி அமைந்துள்ள காடுகள், வயல்களில் அமைக்கப்பட்டுள்ள பரண்கள், இவற்றில் தங்கி வருகிறார்கள். இவர்கள் வேலை செய்வதற்காக வெளிமாநிலங்களுக்கு சென்ற இடங்களில், குடிசையாக இருந்தாலும் இதைவிட மேலான இடத்தில்தான் வசித்து இருந்திருப்பார்கள். இவர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்றதற்கு காரணமே அங்கு கூடுதலாக கூலி கிடைக்கும் அதைக்கொண்டு தங்களது குடும்பங்களுக்கு உதவ முடியும் என்பதுதான். நோய்த்தொற்று பற்றிய செய்திகள் வந்ததும் இவர்கள்  தங்கள் குடும்பத்தை நோக்கி, சிரமங்களை பொருட்படுத்தாமல் பதற்றத்தோடு, ஓடோடி வந்ததற்கு இந்த இக்கட்டான நேரத்தில் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ என்ற கவலையின் காரணமாகத்தான். ஆனால் அவர்களுக்கு எத்தகைய வரவேற்பு கிடைத்திருக்கிறது! இது கொரானாவை விடப் பெரிய கொடுமை! 

 திகைக்க வைக்கும் இன்னொரு அம்சம் என்னவென்றால், ‘ஒரு சிலருக்காக கிராமம் முழுவதையும்  பணயம் வைக்க முடியுமா,  இவர்களை இப்போது இங்கு யார் வரச்சொன்னார்கள்?’  என்று கிராமத்து ‘பெருசுகள்’ பேசுவதுதான் இதைப் போன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பல கிராமங்கள் இருக்கின்றன என்பதுதான் வேதனை தரும் யதார்த்தம். குரானா ஒருவித புதிய வகைத் தீண்டாமையை உருவாக்கி வருகிறதோ என்ற அச்சம் எனக்குள் எழுகிறது

 இந்தப் பிரச்சனையை இன்னும் சற்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இதற்குள் ஜாதியக் கூறுகள் இருக்கக்கூடும் என்றும் எனக்குத் தோன்றுகிறது. கிராமங்கள் இன்னும் ஜாதிகளின்  பிடியல்தான்  சிக்கி இருக்கின்றன என்பது ஊரறிந்த  ரகசியம். கைப்புண்ணுக்கு கண்ணாடியா தேவை?

கொரோனாவில் இருந்து நாடு மீண்ட பின்பு, ஏன் அதற்கும் முன்பே நிவாரணப் பணிகள் நடந்து கொண்டு இருக்கும்போதே, இந்தத் தீண்டாமை  நோய்க்கும் மருத்துவம் பார்க்க வேண்டியது அவசியம். அதைக் குறித்து ஊடகங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அரசும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்

இதனை வெறும் சட்டம் இயற்றி மட்டும் மாற்றிவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் நல்ல நோக்கத்தோடு, அரசால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் பல நேரங்களில் நீதிமன்றங்களால் கூட காப்பாற்றப்படுவதில்லை என்பதையும் நாம் பார்க்கிறோம்

வன் கொடுமைச் சட்டத்தின் நோக்கம் நீர்த்துப் போவதைப் போல உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த போது, அதை முறியடிக்கும் விதமாக, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோதி அரசு வன்கொடுமை சட்டத்தில் சில திருத்தங்களைச்  செய்து அதை வலிமைப்படுத்தியது.அந்தத் திருத்தங்களில் மூன்று அம்சங்கள் முக்கியமானவை 1: முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்குப் பூர்வாங்க விசாரணைகள் தேவை இல்லை. கைது செய்து, விசாரிப்புகளுக்கு பிறகு, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யலாம்.

2: புகார்களுக்கு உள்ளானவர்களுக்கு முன்ஜாமின் கொடுக்கப்படலாகாது.

3: புகார்களுக்கு  உள்ளவர்களைக் கைது செய்ய எந்த அதிகாரியின் முன் அனுமதியும் தேவை இல்லை 

 ஆனால் அண்மையில் வன் கொடுமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட ஒரு புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. வேறு சில அரசியல்வாதிகளுக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதைக் குறித்து தலித் ஆதரவுக் கட்சிகள் கண்டனமோ, தோழமைச் சுட்டுதலோ கூடச் செய்யவில்லை என்பதைக் கூட்டணி தர்மம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீதிமன்றங்கள் கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவான சட்டங்களைச் செயல்படுத்த முன்வரவில்லை என்பது கவலைக்குரியது

 மகாத்மா காந்தி கனவு கண்ட தூய்மை இந்தியா என்பது குப்பை இல்லாத இந்தியா மட்டும் அல்ல தீண்டாமை இல்லாத இந்தியாவும் ஆகும் 

17.6.2020

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these