உங்கள் வீட்டிலிருந்து தொடங்கட்டும்

 

புகழ் பெற்ற விலங்குகள் பூங்கா. பழமையானதும் கூட. கரடி ஒன்று காலமாயிற்று.வேடிக்கை பார்க்கிறவர்களை ஏமாற்ற விரும்பாத விலங்குப் பூங்காத் தலைமை, வேலை தேடிக் கொண்டிருந்த ஒருவரை அழைத்து, அவருக்குக் கரடி வேடம் அணிவித்து, அங்கே உலவ விட்டது. அவரும் அவராலான வித்தைகளைக் காட்டிக் கொண்டிருந்தார்.

அப்படி வித்தை காட்டிக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் அவர் தவறிப் போய்ப் புலியின் கூண்டுக்குள் விழுந்து விட்டார். மிரண்டு போனர் கரடி மனிதர்.பதறினார். முகமூடியைக் கழற்றி வீசி விட்டு வெளியேறி விடலாமா எனத் தவித்தார்.

அப்போது புலி சொல்லிற்று: “பயப்படாதே, நானும் உன் போல் மனிதன்தான். நீ பதறிப் போய் பெரிதாய் சீன் போட்டால், இரண்டு பேருக்கும் வேலை போய்விடும்!”

பலமுறை கேட்ட கதைதான். ஆனால் நம் அரசியல்வாதிகள் அதை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். வெளியே சிங்கம், புலி, கரடி போல் தோன்றுபவர்கள் உள்ளே பதற்றம் நிரம்பிய மனிதர்களாக இருக்கிறார்கள்

கடந்த வாரம், செப்டம்பர் ஆறாம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி, திருநெல்வேலியில் கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், ““நான் உங்களிடம் ஒரு வார்த்தை கேட்க விரும்புகிறேன். நாம் 50 ஆண்டு காலமாக எதிர்க்கட்சியாக இருக்கிறோம். அதற்கு என்ன காரணம்? ஏன் நம்மால் ஆளுங்கட்சி ஆக முடியவில்லை. பிற மாவட்டங்களை விட கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸுக்கு பலம் அதிகமாக உள்ளது. இங்கு தனித்து நின்று பெரும்பாலான இடங்களில் நம்மால் வெற்றி பெற முடியுமா, முடியாதா? இந்தக் கேள்விகளுக்கு பதிலைக் கண்டுபிடித்தால்தான் காங்கிரஸின் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர முடியும். மற்ற கட்சிகளை போலில்லாமல் காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது. கட்டுப்பாடு இல்லாத இயக்கம் வெற்றி பெறாது” என்று கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (இங்குள்ள மேற்கோள், மின்னம்பலம் இணைய இதழிலிருந்து பெறப்பட்டது)  தினமணி நாளிதழ் அவர் பேச்சிலிருந்து மேலும் சில பகுதிகளை வெளியிட்டிருக்கிறது. “குறைந்த பட்சம் தெருவில் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியுமா? என ஆராய வேண்டும். வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற முடியாவிட்டாலும் பாதுகாக்கும் ஆற்றல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறதா? காங்கிரசின் மேடையைக் கூட சரி செய்ய இயலாத நிலையில் கட்சி இருக்கிறது” என்றார் என்கிறது தினமணி.

தமிழகக் காங்கிரசின் இன்றைய யதார்த்த நிலையை ஒளிவு மறைவு இல்லாமல் பேசியிருக்கிற தமிழகக் காங்கிரஸ் தலைவரைப் பாராட்ட வேண்டும். அதே நேரம் அவரது பேச்சு எழுப்பும் சிந்தனைகளையும், கேள்விகளையும் தவிர்க்க முடியவில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, அது நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது என்பது கண்கூடு. 1967 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 51 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக விளங்கியது. ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில், 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களை மட்டுமே வென்றது

இந்தச் சரிவுக்குக் காரணம் காங்கிரஸ் கட்டுப்பாடு இல்லாத கட்சியாக இருக்கிறது, கட்டுப்பாடு இல்லாத கட்சி வெற்றி பெறாது என்கிறார் அழகிரி. அவர் சொல்லும் காரணம் சரிதான்.

ஆனால் அதை மேலும் ஆழமாக ஆராயும் கேள்விகளையும் அவர் கேட்டுக் கொள்ள வேண்டும். அவருக்கு உதவுவதற்காக நாம் சில கேள்விகளை முன்வைப்போம். “மற்ற கட்சிகளைப் போலில்லாமல், காங்கிரஸ் கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக’ மாறியது ஏன்? எப்போதிருந்து இந்த மாற்றம் நேர்ந்தது?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல. மேலிடத்தால் நியமிக்கப்படுபவர். மேலிடம் தான் நினைத்த போதெலாம் தலைவர்களை மாற்றி வந்திருக்கிறது. அப்படி மாற்றும் போது அது, தேர்தல் நடத்த வேண்டாம், குறைந்த பட்சம் தொண்டர்களிடம் கருத்தாவது கேட்க வேண்டாமா? தொண்டர்களின், நம்பிக்கையைப் பெறாத ஒருவர் தலைவரானால் அவர் பேச்சை எப்படித் தொண்டர்கள் ஏற்பார்கள்.

தலைவரை நியமிக்கும் போது சில மூத்த தலைவர்களிடம் கட்சி மேலிடம் கலந்தாலோசிக்கிறது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அவர்களுக்குள்ள கருத்து மாறுபாடுகள், தனிமனித முரண்பாடுகள், ஈகோ போட்டிகள் தேர்வைக் கடினமாக்குகின்றன. எல்லோருக்கும் நல்லவராக ஒருவரை, எல்லோரையும் சமாதானம் செய்யும் நோக்கில், நியமிக்கிறார்கள். எல்லோருக்கும் நல்லவர் பெரும்பாலான நேரங்களில், வலிமையானவராக, உறுதி வாய்ந்தவராக, இருப்பது இல்லை என்பது யதார்த்தம்.

சில நேரங்களில் எல்லோருக்கும் நல்லவரை நியமிப்பது கூட சாத்தியமில்லாது போகிற போது, தமிழ்நாட்டில் யாருக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கட்சி நினைக்கிறதோ அவரது வேட்பாளரைத் தலைவராக நியமிக்கிறது மேலிடம். அது போன்று நேரும் போது கட்சியின் மற்ற தலைவர்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறார்கள்

கட்சியின் தலைவரை மாற்றும் போது ஏன் இப்போதிருப்பவரை மாற்றுகிறோம் என்ற காரணங்கள் கூடச் சொல்லப்படுவதில்லை என்று சில கட்சிக்காரர்கள் தனிப்பட்ட உரையாடல்களில் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். இதுதான் நீங்கள் எய்த வேண்டிய இலக்கு (உறுப்பினர் எண்ணிக்கை, கிளை அமைப்பு, பொதுக்கூட்டங்களின் எண்ணிக்கை இது போன்று சரிபார்க்கக் கூடிய இலக்குகள்) எதையும் மேலிடம் நியமிக்கப்படும் தலைவருக்கு நிர்ணயிப்பதில்லை என்றும், தலைவர் மாற்றம் ஒருவர் செய்த/ செய்யத் தவறிய பணிகளின் அடிப்படையில் நிகழ்வதில்லை என்கிறார்கள்.

மாநிலக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மட்டுமல்ல, தாலுகா காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கூட நியமனப் பதவிதான். அதனால் கட்சிக்காரர்கள் ஏதாவது ஒரு தலைவரின் கோஷ்டியில் இணைந்து கொள்கிறார்கள். அந்தத் தலைவர் மாநிலத் தலைவராகும் போது தங்களுக்கும் ஏதோ ஒரு பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

இந்த adhoc-ism, தற்காலிக ஏற்பாடுதான் காங்கிரசின் பிரச்சினை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இதுதான் திக்விஜய்சிங்-கமல்நாத்- ஜோதிர் ஆதித்ய சிந்தியா இவர்களுக்கிடையேயான அதிகாரப் போட்டியை எப்படி பாலன்ஸ் செய்வது, தில்லியில் ஷீலா தீட்சித்தின் சீடர் அஜய் மக்கானுக்கு பதவி கொடுப்பதா அல்லது அவரை எதிர்ப்பவருக்கா, கேரள காங்கிரசில் சசி தரூருக்கும் மற்றவர்களுக்குமிடையே ஏற்பட்டுள்ள விரிசலை எப்படி சரி செய்வது என்று காங்கிரஸ் தலைமைக்குக் கடும் சோதனைகளை வைக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். சோனியா முன் நிற்கும் சவால் பாஜக அல்ல, காங்கிரஸ்காரர்கள்தான். அழகிரியின் முன் நிற்கும் சவாலும் அதுதான்

‘காங்கிரசின் மேடையைக் கூட சரி செய்ய இயலாத நிலை’யிலிருந்து கட்சி மீள வேண்டுமானால் அது உட்கட்சித் தேர்தல்களை நடத்த முன்வர வேண்டும். அப்படி அது முன்வருமானால் பதவி பெற விரும்புகிறவர்கள், உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டுவார்கள், கட்சியின் வேர்கள் வலுப்பெறும். ஆனால் இப்போது தலைவர்கள் என்று அறியப்படுபவர்கள் பலர் பதவி இழக்க நேரிடலாம். அதை ஜீரணிக்க முடியாத அட்ஹாக் தலைவர்கள் அதற்கான முன் முயற்சிகளை எடுக்க மாட்டார்கள்.

கட்சி அடித்தளத்தில் வலுப்பெறுமானால், தனித்துப் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட அளவில் கூடத் தீர்மானம் போடத் திராணியற்று, அப்படிப் போட்டால் அது திமுகவைக் கோபப்படுத்துமோ என்ற அச்சத்துடன், கிடைத்ததை வாங்கிக் கொண்டு வாயை மூடிக் கொண்டிருப்போம் என்ற நிலையில் காங்கிரஸ் இருக்க வேண்டியிராது. தெருவில் கூடக் கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது என்று தொண்டர்கள் கூசிக் குறுக வேண்டியிராது. சுயமரியாதைக்கான சாவி, உட்கட்சித் தேர்தல்.

ஜனநாயக விரோத அரசு, பாசிச ஆட்சி என்றெல்லாம் பாரதீய ஜனநாயக விரோதக் கட்சி என வர்ணிக்கும் காங்கிரஸ் முதலில் உட்கட்சித் தேர்தல்களை நடத்தித் தன் ஜனநாயகத் தன்மையை நிரூபிக்கட்டும்.

அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கைச் சுட்டும் முன் உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நல்லது.

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these