இலங்கை முடிவுகள் இந்தியாவிற்கு உதவுமா?

ஆசையைத் தூண்டுவதாக இருந்தன அந்த மாம்பழங்கள். பொன்னை உருக்கிச் செய்தது போல அதன் தோல்கள் பொலிந்தன. கையில் எடுத்துப் பார்க்கும் போதே அதன் வாசம் மெலிதாக நாசியை வருடியது. வாங்கிக் கொண்டு வந்து விட்டான். வீட்டுக்குச் சென்று கழுவி, தோல் சீவி துண்டம் போட்டுச் சாப்பிடும் அளவிற்குப் பொறுமை இல்லை. வழியிலேயே அவற்றைத் தோலோடு கடித்துத் தின்னத் தொடங்கினான். தின்று முடியும்  போது அதிலிருந்து சிந்திய சாற்றின் ஒரு துளியை அவசரமாகக் கையை நீட்டி ஏந்திப் பருகியவன் “ உனக்கு ஒண்ணும் கிடையாது” என்றான் மண்ணைப் பார்த்து. மண் சொன்னது, மகனே நான் பழத்திற்காக அல்ல, விதைக்காகக் காத்திருக்கிறேன்”

மக்களும் மண் போலத்தான். அதிகாரம் என்ற கனிக்கு ஆசைப்படுவதில்லை. ஆனால் வளர்ச்சி என்ற விதை விழக் காத்திருக்கிறார்கள்.

அண்மையில் இந்தப் பாடத்தை இலங்கைத் தேர்தல் முடிவுகள் இன்னொருமுறை நினைவூட்டுகின்றன. இலங்கையில் ராஜபக்க்ஷே பெரும் வெற்றி பெறுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் இத்தனை பெரிய வெற்றி என்பது எதிர்பாராதது. இலங்கையின் பெரும் கட்சிகளில் ஒன்றான, சில காலம் ஆட்சி செய்த, ரணில் விக்ரமசிங்கேயின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. (என்றாலும் அந்தக் கட்சி பெற்ற விகிதாச்சார வாக்குகளின் அடிப்படையில் அதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு இடம் ஒதுக்கப்படும்)

ஆனால் அதைவிட வியப்பளிப்பது தமிழ் மக்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் மாற்றம். அது வரவேற்கத் தக்க மாற்றம்.

அதைப் புரிந்து கொள்வதற்கு இலங்கைத் தமிழ்க் கட்சிகளையும் அவற்றின் அரசியல் நிலைப்பாடுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளிடையே மூன்று வித நிலைகள் காணபடுகின்றன. தமிழர் அரசியல் அமைப்புக்களிலேயே பெரியது இரா. சம்பந்தன் தலைமையில் இயங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.(TNA) இலங்கைத் தமிழரசு கட்சி, டெலோ என்றழைக்கப்படும் (தமிழ் ஈழ விடுதலை அமைப்பு) பிளாட் என்றழைக்கப்படும் தமிழ் ஈழ விடுதலைக்கான மக்கள் அமைப்பு) என்ற கட்சிகள் கொண்ட கூட்டணி. தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாகப் பாராளுமன்றத்தில் இடம் பெற்று அந்த வலிமையைக் கொண்டு தமிழர்களுக்கு அதிக அதிகாரங்களைப் பெற வேண்டும் என்பது அதன் லட்சியம்.

ஆனால் அது அடையாள அரசியல் நடத்துகிறது, அதைக் கொண்டு அதன் தலைவர்கள்தான் பலனடைகிறார்கள் என்பது மற்ற தமிழ்க் கட்சிகள் அவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு.அப்படிக் குற்றச்சாட்டு வைப்பவர்கள் இரண்டு வகை. ஒன்று ‘தீவிரத் தமிழ் தேசியம்’ பேசுபவர்கள். அவர்களது கூட்டணியின் பெயர் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி. இந்தக் கூட்டணியில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மற்றும் வடக்கு மாகணத்தின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தலமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேசியம், தாயகம், சுயநிர்ணயம் ஆகிய லட்சியங்களை TNA கைவிட்டுவிட்டது என்பது இவர்களது குற்றச்சாட்டு. சுயநிர்ணயம் என்பது பிரிந்து செல்லும் உரிமை.

மற்றொரு பிரிவு, வளர்ச்சி, முன்னேற்றம் இவையே இன்றைய தேவை, போதும் போராட்ட அரசியல் என்று சொல்லும் ஈபிடிபி என்றழைக்கப்படும்  ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், அகில இலங்கை தமிழ் மகா சபா, என்று சொல்லும் கட்சிகள். இதில் ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா என்பவரின் தலைமையில் இயங்குகிறது. அவர் பிரபாகரனின் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் வலுவாக இருந்த காலத்திலேயே அதற்கு எதிரான நிலை எடுத்தவர். சந்திரிகா, ராஜபக்க்ஷே ஆகியோரது அமைச்சரவைகளில் அமைச்சராக இருந்தவர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையன் என்று அழைக்கப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தன். இவர் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் தாங்கிப் போரிட்டவர். பின் அந்த அமைப்பிலிருந்து விலகித் தேர்தல் அரசியலுக்கு வந்தார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர். இப்போது ஒரு கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தடுப்புக்காவலில் இருக்கிறார். சிறையிலிருந்தே ஜெயித்திருக்கிறார்.அகில இலங்கை தமிழ் மகா சபாவின் தலைவர் கருணா. விடுதலைப் புலிகளின்  கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்து பின்னர் அதிலிருந்து பிரிந்து வந்தவர். இவர்கள் மூவரும் இப்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலும், கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாகவும் வாழ்கிறார்கள்.

வட மாகணத்தின் தலைநகர் யாழ்ப்பாணம். வடமாகாணம் நிர்வாகக் காரணங்களுக்காக ஐந்து மாவட்டங்களைக் கொண்டது (யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு,மன்னார்). ஆனால் தேர்தலுக்காக அது இரண்டு தேர்தல் மாவட்டங்களாக (யாழ்ப்பாணம் + கிளிநொச்சி, வன்னி+முல்லைத்தீவு+மன்னார்) பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தேர்தல் மாவட்டங்களிலிருந்தும், அதாவது வட மாகாணத்திலிருந்து மொத்தம் 13(7+6) நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கிழக்கு மாகாணத்தில் மூன்று தேர்தல் மாவட்டங்கள் திருகோணமலை, மட்டக் கிளப்பு, அம்பாறை. கிழக்கு மாகாணம் 16 (4+5+7) பேரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறது.

தமிழர்கள் வெல்ல வாய்ப்புக் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 29 தொகுதிகளில் தீவிரத் தமிழ்த் தேசியம் பேசும் தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி இரண்டே இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த இரண்டு இடங்களும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திலிருந்து கிடைத்தவை. மற்ற பகுதிகளில் அது ஒரு இடம் கூடப் பெறவில்லை.

கடந்த நாடாளுமன்றத்தில் 16 இடங்களைப் பெற்றிருந்த சம்பந்தனின் தமிழ் தேசிய கூட்டணி (TNA)  இம்முறை  9 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. அதில் ஒரு தேர்தல் முடிவு பெரும் சர்ச்சைக்குள்ளானது (சிவகங்கையில் ப.சிதம்பரத்தின் முடிவு குறித்த அதே பாணியிலான சர்ச்சை) திருகோணமலை தேர்தல் மாவட்டத்திலிருந்து சம்பந்தன் ஒருவர் மாத்திரமே வெற்றி பெற்றிருக்கிறார். (‘தப்பிப் பிழைத்திருக்கிறார்’ என்கிறது இலங்கைத் தமிழ் இதழ் வீரகேசரி) TNAயின் வாக்குகளின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. TNAயின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடந்த முறை பெற்ற அவர்கள் பெற வாக்குகளில் பாதியளவே பெற்றிருக்கிறார்கள்

‘தீவிர தமிழ்த் தேசியம்’ பேசிய விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வடக்கில் முதலிடத்தைப் பிடிக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது கிழக்கில் அது கூட இல்லை

இந்த முடிவுகளில் கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால் சிங்களக் கட்சிகள் எனக் கருதப்படும் ராஜபக்க்ஷேயின் இலங்கை மக்கள் கட்சியும், பிரமதாசாவின் மகன் சஜித் பிரமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தியும், இலங்கை சுதந்திரக் கட்சியும் மொத்தமுள்ள 29 இடங்களில் 13 இடங்களைப் பெற்றுள்ளன. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல ஆயுதம் தாங்கிய போராளிகளின் ஊராகப், புகழடைந்த வடமராட்சியில் சிங்களக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். அம்பாறையில் தமிழ்க் கட்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை

இவையெல்லாம் இலங்கைத் தமிழ் மக்கள் வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு, மறுவாழ்வு போன்ற வளர்ச்சிக்கான வழிகளைத் தேடுகிறார்கள், அடையாள அரசியலை அல்ல என்பதைக் காட்டுகிறது.

சீனம் தெற்காசியப் பகுதிகளில் தன் வலிமையை நிலை நிறுத்திக் கொள்ள முயன்று வருகிறது என்பதும் அண்மைக்காலமாக இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள முரண்களையடுத்து அந்த முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது என்பது ஊரறிந்த உண்மை. இலங்கையில் மக்கள் வளர்ச்சிக்குத் தாகம் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்குப் பெருமளவு உதவ இந்தியா முன்வர வரவேண்டும். பொருளாதர உதவிகள் மட்டுமன்றி, வர்த்தக வாய்ப்புக்களையும் ஏற்படுத்தித் தர வேண்டும். உயர் கல்வி, பயிற்சி, திறன் மேம்பாடு இவற்றிற்கான உதவிகளை அளிக்க வேண்டும்.

1949 ஆம் ஆண்டு இந்தியா ஏழு காமன்வெல்த் நாடுகளின் துணையுடன் கொழும்பு திட்டம் என்ற பொருளாதாரக் கூட்டுத் திட்டம் ஒன்றை முன்னெடுத்தது. தெற்காசியாவில் கம்யூனிசப் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி அது. அதே போன்ற, அதைவிடவும் மேம்பட்ட, ஒன்றை உருவாக்க உகந்த தருணம் இது. அது இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் உதவும்

26.8.2010                        

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these