இந்தியாவில் ஏன் வலிமையான எதிர்கட்சி இல்லை?

பிரார்த்தனை செய்வதற்காகப் பலர் கூடியிருந்தனர். அவர்களில் ஒருவர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். அங்கிருந்த பெரியவர், “தம்பி, பிரார்த்தனை செய்யும் போது புகைபிடிக்கக் கூடாது” என்று கண்டித்தார். அந்த இளைஞன் “சரி அய்யா ஒரு சந்தேகம்” என்றான். “என்ன?” என்றார் பெரியவர். புகை பிடிக்கும் போது பிரார்த்தனை செய்யலாமா என்று கேட்டார். பெரியவர் மிகவும் மகிழ்ச்சியாக, “ஓ! எஸ்! செய்யலாமே” என்றார். எப்போதோ,எங்கோ படித்த கதை

முன்பெல்லாம் அரசியல் கூட்டங்களில் இலக்கியம் பேசுவார்கள். இப்போதெல்லாம் இலக்கியக் கூட்டங்களில் அரசியல் பேசப்படுகிறது. சமீபத்திய இரண்டு உதாரணங்கள், அபீஜீத் பானர்ஜி, ராமச்சந்திர குஹா.

அண்மையில், ஜெய்ப்பூரில் நடந்த இலக்கியத் திருவிழாவிற்கு வந்திருந்தார் அபிஜீத் பானர்ஜி. கடந்த ஆண்டு இந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றவர். மாசேசூசேட்ஸ் தொழில் நுட்பக் கழகத்தின் பேராசிரியர்..ஹார்வேர்டில் முனைவர் பட்டம் பெற்றவர்

விழா மேடையை விட்டு இறங்கியதும் செய்தியாளர்கள் அவர் முன் மைக்கை நீட்டினார்கள்.” இந்தியாவிற்கு வலுவான எதிர்க்கட்சி தேவைப்படுகிறது” என்றார் அபிஜீத்

உண்மைதான். ஜனநாயகம் சிறப்பாகச் செயல்படுவதில் ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சிக்கும் முக்கியப் பங்குண்டு. ஜனநாயகத்தைக் காருக்கும், ஆளும் கட்சியை அதன் ஆக்சிலேரேட்டராகவும், எதிர்க்கட்சியை பிரேக்காகவும் உவமிக்கும் பழைய கூற்று ஒன்று உண்டு.

அது பிழையான உவமை. ஏனெனில் எதிர்க்கட்சி என்பது.ஆளும் கட்சியின் செயல்களை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தும் சக்தி அல்ல. அது ஆளும் கட்சிக்கு மாற்றான சக்தி. அதாவது ஆளும் கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் இவற்றை மேலும் மேம்படுத்தும் மாற்று யோசனைகளையும் கருத்துக்களையும் முன் வைக்கும் சக்தி.

அதனால் இந்தியாவிற்குத் தேவை வலுவான எதிர்கட்சி அல்ல, சிறந்த எதிர்கட்சி. Strong அல்ல, better..

.துரதிருஷ்டவசமாக இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன.  அப்படி இருக்கையில் சிறந்த என்ற பேச்சுக்கே இடமில்லை., அவை பலவீனமாக இருப்பதற்குக் காரணம் அவற்றுக்கு வெளியே இல்லை, உள்ளேயே இருக்கின்றன.

காங்கிரஸை எடுத்துக் கொள்வோம். கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அவர் காங்கிரஸை வழிநடத்தினார். கட்சி பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. உடனே கட்சியின் தலைமைப் பொறுப்பைத் துறந்தார். கட்சியின் மூத்த தலைவர்கள், காரியக் கமிட்டி, பொதுக்குழு, எல்லாம் அவரது முடிவை மாற்றிக் கொள்ளுமாறு திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டன. மன்னிக்கவும், மன்றாடின. ஆனால் மனுஷன் அசையவில்லை.

அரசியலில் தேர்தல் தோல்வி என்பது இயற்கையானது. மிகப் பெரும் தலைவர்கள் என்று கருதப்பட்டவர்கள் தேர்தலில் தோல்வி கண்டிருக்கிறார்கள். இந்திரா காந்தி தோற்றிருக்கிறார், வாஜ்பாய் தோற்றிருக்கிறார். ஜெயலலிதா தோற்றிருக்கிறார்..ஆனால் யாரும் அதற்காகக் கட்சிப் பொறுப்பை உதறிவிட்டுப் போனதில்லை.மாறாக தோற்ற கட்சியை எப்படி வெற்றிப்பாதைக்குத் திருப்புவது என்று யோசித்தார்கள், அதற்காக உழைத்தார்கள், அதில் வெற்றியும் அடைந்தார்கள்.

எது நல்ல தலைமை என்பதைக் கண்டு கொள்ள ஒரு வழி பிரச்சினை ஏற்படும் நேரங்களில் (crisis) அது எப்படி நடந்து கொள்கிறது என்பதைக் கவனிப்பதுதான். பொறுப்புள்ள தலைமை பிரசினையை எதிர்கொள்ளும். அதை ஜெயிக்கப் பார்க்கும். ஏனெனில் பிரசினையைத் தவிர்ப்பதால் அது தீர்ந்துவிடாது.

ராகுல்காந்தி கட்சிப் பொறுப்பை உதறியது, பின் பலரது வேண்டுகோளுக்குப் பின்னரும் அதை ஏற்க மறுத்தது இவை இரண்டு விஷயங்களை வாக்காளருக்கு உணர்த்தின. ஒன்று அவர் தனது நலனைக் கடசியின் நலனுக்கு மேலாகப் பார்க்கிறார் இரண்டு. நேரடியாகப் பொறுப்புக்களை ஏற்காமல் அதிகாரம் மட்டும் செலுத்த விரும்புகிறார். இது ஒரு பண்ணையார் வீட்டுப் பையனின் மனப்பான்மை.

இதைத்தான் கேரளத்தில் ஜனவரி மூன்றாம் வாரம் நடைபெற்ற கேரள இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்ட ராமச்சந்திர குஹா அவரது வார்த்தைகளில் சுட்டிக்காட்டுகிறார். ஒரு காலத்தில்,மகத்தான கட்சியாக இருந்த காங்கிரஸ், இன்று பரிதாபகரமான குடும்ப நிறுவனமாகிவிட்டது என்றார் அவர்.   குஹா, மோடியின் ஆதரவாளர் அல்ல. அவரது நடவடிக்கைகளை விமர்ச்சிப்பவர். அண்மையில் சிஏஏக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர். அவர் சொல்கிறார்:

“ கேரளமே, நீ இந்தியாவிற்கு எத்தனையோ அற்புதமான விஷயங்களைத் தந்திருக்கிறாய். ஆனால் இந்தியாவிற்கு நீ செய்த மிகப் பெரும் நாசம் ராகுல் காந்தியைப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்தது” என்று தொடங்கிய அவர் ராகுலை மோதியோடு ஒப்பிட்டுப் பேசினார்: “ நரேந்திர மோதியின் பலமே அவர் ராகுல் காந்தி அல்ல என்பதுதான். அவர் சுயமாக உழைத்து முன்னேறியவர். ஒரு மாநிலத்தைப் பதினைந்து ஆண்டுகள் ஆட்சி செய்ததன் மூலம் நிர்வாக அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்.நம்ப முடியாத அளவு கடுமையாக உழைக்கிறார். அவர் ஒரு போதும் விடுமுறை எடுத்துக் கொள்ள ஐரோப்பாவிற்குப் போனதில்லை. நான் இதையெல்லாம் சீரியசாகத்தான் சொல்கிரேன். ஒரு வேளை ராகுல் காந்தி மிக புத்திசாலியாக இருந்திருந்தாலும், மிகவும் கடுமையாக உழைப்பவராக இருந்தாலும் விடுமுறைக்கு ஐரோப்ப்பாவிற்குப் போகாதவராக இருந்திருந்தாலும், ஐந்தாம் தலைமுறை அரசியல் வாரிசு, சுயமாக உழைத்து முன்னேறிய ஒருவருடன் போட்டியிடுவது அந்த வாரிசுக்கு சாதகமாக இருக்காது”

குஹாவைப் போல் நீட்டி முழக்கமால் சுருக்கமாகச் சொன்னால், காங்கிரசின் பிரச்சினை வேறு யாரும் அல்ல, ராகுல்தான்.

ஆனால் அவரைக் கைகழுவுவதற்குக் காங்கிரஸ்காரகளுக்குத் துணிச்சல் இல்லை. காரணம் அவர்களும், தலைமையைப் போல,  தங்கள் சொந்த நலனைக் கட்சியின் நலனைவிடப் பெரிதாகக் கருதுகிறார்கள். அவர்கள் தலைமை குறித்துத் துணிந்து முடிவெடுக்கத் தயங்குவதன் மூலம், அவர்களும், தலைமையைப் போல, பிரசினையை எதிர்கொள்ள அல்ல அதிலிருந்து தப்பி ஓடவே முயற்சிக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

தலைமையிலிருந்து இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் வரை ஒரே மாதிரியான கலாசாரம் பின்பற்றப்படுகிறது. இதுதான் காங்கிரஸ். யதார்த்தம் இப்படி இருக்க இந்தியாவில் வலிமையான எதிர்க்கட்சி எப்படி உருவாகும்?

சரி, ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக காங்கிரஸ் மாற்று யோசனைகளையாவது முன் வைக்கிறதா? உதாரணமாக இப்போது அதிகம் பேசப்படுகிற தேசிய மக்கள் தொகைப் பதிவேடை (NPR) எடுத்துக் கொள்வோம். NPRக்கான தகவல்கள் முதன் முதலில் எப்போது திரட்டப்பட்டன? 2010ல். அதாவது காங்கிரஸ் ஆட்சியில். அதற்கான அதிகாரம் எந்தச் சட்டத்திலிருந்து பெறப்படுகிறது? குடியுரிமைச் சட்டம் 1955, குடியுரிமை (குடிமக்கள் பதிவு, தேசிய அடையாள அட்டை வழங்குதல்) விதிகள் 2003.. இவை எப்போது நிறைவேற்றப்பட்டன? காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது. தான் ஆளும் கட்சியாக இருந்த போது கொண்டுவரப்பட்ட திட்டம் ஒன்றைத் தனக்குப் பின் வந்த இன்னொரு கட்சியின் அரசு நடைமுறைப்படுத்தும் போது காங்கிரஸ் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்?

ஆனால் அது பொய்களைப் பரப்பி, கிளர்ச்சிகளைத் தூண்டுகிறது. என்ன பொய்கள்? NPRக்கு எந்த ஆவணமும் கொடுக்க வேண்டியதில்லை, NPRஆல் யாரும் குடியுரிமையை இழக்கமாட்டார்கள் என்று அரசும் அமித்ஷாவும் பல முறை விளக்கிவிட்டார்கள். ஆனால் குடியுரிமையை இழந்துவிடுவீர்கள், வெளியேற்றப்படுவீர்கள் என்ற கட்டுக் கதைகளைப் பரப்பி அது சிறுபான்மையினரிடம் அச்சத்தை விதைத்து வருகிறது.

“நல்லது செய்தல் ஆற்றிராயினும், அல்லது செய்தல் ஒம்புமின்; அதுதான் எல்லோரும் உவப்பது; அன்றியும் நல்லாற்றுப் படுஉம் நெறியும் அதுவே” என்பது புறநானுறு.

இதைப் புரிந்து கொள்ளாதவரை காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக ஆக முடியாது

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these