அறிஞர்தம் இதய ஓடை

“எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப் பத்திரிகை. அது பழுத்த சுதேசீயக் கக்ஷியைச் சேர்ந்தது. ஆனால் தக்க பயிற்சியில்லாதவர்களால் நடத்தப்படுவது. சில தினங்களின் முன்பு அந்தப் பத்திரிகையில் யுத்த சம்பந்தமான தலையங்கம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் ருஷியாவில் “போல்ஷெவிக்” என்ற ஒரு மனுஷ்யன் இருப்பதாகவும், அவன் ஒரு கக்ஷி ஏற்படுத்தி நமது நேசக் கக்ஷிக்கு விரோதம் செய்வதாகவும் சொல்லியிருந்தது! அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய ‘மகிஸிமிஸ்த்’  கக்ஷிக்கு மற்றொரு பெயரென்றும் ஒரு மனுஷ்யனுடைய பெயர் அல்லவென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ளவில்லை”

இதை பாரதி எழுதி நூறாண்டுகளுக்கு மேலாகிறது. ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் கருத்து உதிர்க்கிற வழக்கம் இப்போது தமிழ்ப் பத்திரிகைகளிலிருந்து முற்றும் ஒழிந்து விட்டதென்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் இந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் தமிழ்ப் பத்திரிகைகள் தங்கள் பயணத்தில் நெடுந்தொலைவு வந்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

அதற்குக் காரணம் அவற்றின் அடித்தளம். பத்திரிகைகளின் அடித்தளம் வாசகர்கள் என்பது பாலபாடம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்லூரிப் படிப்பும் ஆங்கிலக் கல்வியும் பெறும் வாய்ப்புப் பெற்ற இளைஞர்களிடையே வாசிப்பின் மீது ஒரு தாகம் ஏற்பட்டிருந்தது. அதை நிறைவு செய்ய ஆங்கிலப் பத்திரிகைகளை இறக்குமதி செய்வதில் தொடங்கி தமிழிலேயே பத்திரிகைகள் நடத்துவது வரை பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

“அறிவை அன்னிய பாஷையின் மூலமாகவே கற்க வேண்டிய அவசியமில்லை. சுயபாஷை மூலமாகவே கற்கலாம்” என்று அறிவித்துக் கொண்டு 1892ல் ‘அறிவைப் பரவச் செய்வதற்கான ஏற்பாடாக’ வெளிவந்த விவேக சிந்தாமணியில்தான் தமிழின் தொடக்ககால நாவல்களான கமலாம்பாள் சரித்திரம், முத்து மீனாட்சி ஆகியவை வெளிவந்தன. 1905 வாக்கில் அது நின்று போன போது அதன் அடிச் சுவட்டில் தோன்றிய  விவேகபோதினியும் கதைகள் மட்டுமன்றி (வ,வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் அதில்தான் வெளிவந்தது) அறிவார்ந்த விஷயங்களையும் வெளியிட்டு வந்தது.

‘விவேக’த்திலிருந்து ‘ஆனந்த’த்திற்கு – அதாவது அறிவார்ந்த விஷயங்களிலிருந்து பொழுது போக்கிற்கு- மாறும் தடத்தைப் போட்டது ஆனந்த விகடன். பூதூர் வைத்தியநாதய்யர் தொடங்கிய காலத்திலிருந்து கணக்குப் போட்டால் 2026ல் விகடனுக்கு நூறு வயது. அது சுப்பிரமணியன் சீனிவாசன் (அதாங்க எஸ்.எஸ். வாசன்) கைக்கு மாறியது 1928ல். ஆனால் அப்போதும் அது  வாசன் விற்பனை செய்து வந்த பொருட்களுக்கான கேட்லாக்தான். கேட்லாக் ஒரு பத்திரிகையாக உருவமும் உள்ளடக்கமும் மாறியது கல்கி அதன் முழுநேர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட 1931க்குப் பிறகுதான்.

ஆனந்த விகடன் தமிழுக்குத் தந்த பங்களிப்புகள் அனேகம். விகடனின் (கல்கியின்) கூர்மையான அரசியல் விமர்சனம், சினிமா விமர்சனம், பயணக்கட்டுரைகள் (கல்கி, சாவி) ஆகியவை குறித்து இன்று அதிகம் பேசப்படுவதில்லை என்றாலும் அவை வெளியான காலத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. சிறுகதைப் போட்டிகள், முத்திரைக் கதைகள் இவற்றின் வழியே அவை காத்திரமான கதைகளை அளித்து வந்திருக்கின்றன. நீடித்த விற்பனைக்கான ஓர் உபாயமாகத் தொடர்கதைகளை வெற்றிகரமாகத் தன் சொந்தப் பத்திரிகையான கல்கியில் கையாண்டவர் கல்கி என்றாலும் விகடனும் அதைப் பற்றிக் கொண்டு அசாதரணமான தொடர்கதைகளை வெகுகாலம் அளித்து வந்தது.

குமுதத்துடன் போட்டி என்ற சந்தை நிர்பந்தத்தை தொடர்கதைகள் மூலம்தான் எதிர்கொண்டது விகடன். குமுதத்தில் எஸ்.ஏ.பி. எழுதிவந்த ‘காதலெனும் தீவினிலே’ அப்போது அரும்பி வந்து கொண்டிருந்த முதல் தலைமுறை படிப்பாளிகளை ஈர்க்கத் தொடங்கியிருந்த நேரம். ‘அது போன்ற கதைகளை விகடனில் போடக் கூடாதா?” என்று வாசனிடம் கேட்டார் அவரது மகன் பால சுப்ரமணியம். வாசன் தனது வேறு வணிகங்கள் பற்றிய சிந்தனையில் இருந்தாரோ, அல்லது மகன் தன் நிர்வாகத்தைக் குறை சொல்கிறார் என்று கருதினாரோ தெரியவில்லை. “அப்படியானால் நீ வந்து விகடனைப் பார்ப்பதுதானே!” என்றார் வெடுக்கென்று.

பாலன் விகடனில் பொறுப்பேற்று அதை ஆராயத் தலைப்பட்ட போது ஒரு விஷயம் அவர் கருத்தை ஈர்த்தது. அது: அப்போதைய விகடன் ஒரு ‘பிராமணப் பத்திரிகை’யாக இருக்கிறது; ஆனால் குமுதம் அதைத் தவிர்த்து ஒருவித நடுநிலைப் பத்திரிகையாக இருக்கிறது. இந்தத் தோற்றத்தை மாற்ற நினைத்தார் பாலன். அதன் நீட்சியாகப் பிறந்ததுதான் ‘தில்லானா மோகனாம்பாள்’. அதில் ஒரு பாத்திரம் தவிர மற்ற அனைத்துப் பாத்திரங்களும் பிராமணர் அல்லாதவர். அந்த ஒரு பாத்திரமும் பெண் புரோக்கர்.(Pimp) அதை எழுதியவர் பெயரோ கலைமணி (அதை எழுதியது கொத்தமங்கலம் சுப்பு. ஆனால் அவர் அந்தப் பெயரைப் பயன்படுத்தவில்லை)

விகடன் தொடங்கிய சில ஆண்டுகளில் கிட்டத்தட்ட அதன் எதிர் நிலையாகத் (antithesis) தோன்றியதுதான் கலைமகள். வெகுஜனங்களை வசீகரிப்பதை இலக்காகக் கொண்டு பொழுது போக்குத் தளத்தில் விகடன் இயங்கியது என்றால் பின்னர் வந்த சிற்றிதழ்கள் போல அறிவுத் தளத்தில் இயங்கியது கலைமகள். 1932ல் தொடங்கப்பட்ட அது இப்போது 90ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறது. ஜனரஞ்சகத்தை மாத்திரம் முதன்மை நோக்கமாகக் கொள்ளாத அந்த இதழ் தொடர்ந்து 90 ஆண்டுகள் வெளிவருவதே ஒரு சாதனை.

கலைமகளை,  நின்று போயிருந்த விவேக சூடாமணி, விவேக போதினி ஆகியவற்றின் தொடர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். மைலாப்பூர் சித்திரக் குளத் தெருவில் வசித்து வந்த, அறிவியல் செய்திகளைத் தமிழில் எழுதுவதில் ஆர்வம் கொண்ட தமிழறிஞர் பெ.நா. அப்புசாமி இல்லத்தில் ஒரு மாலையில் சில தமிழறிஞர்கள் கூடினார்கள். தமிழ்ப் பத்திரிகைகளைப் பற்றிப் பேச்சு வந்தது. அறிவியல், வரலாறு, செவ்வியல் இலக்கியம் இவற்றோடு கதைகளுக்கும் இடமளிக்கும் தமிழ் இதழ் ஒன்று தேவை என்ற கருத்து எழுந்தது. அதை வெளியிடும் பொறுப்பை மெட்ராஸ் லா ஜர்னல் என்ற சட்டத்துறை சார்ந்த ஆங்கில இதழை வெளியிட்டு வந்த நாராயணசாமி அய்யர் ஏற்றுக் கொண்டார். அவரிடம் ஓர் அச்சகம் இருந்தது.முதல் ஆசிரியர் உ.வே.சா. தமிழ் அறிவுலகில் தங்கள் பங்களிப்புகள் காரணமாக அழியாத் தடம் பதித்த நீலகண்ட சாஸ்திரி, இராகவையங்கார், வையாபுரிப் பிள்ளை, சிதம்பரநாத முதலியார், பெ.நா.அப்புசாமி போன்றோர் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

“வெறும் பொழுதுபோக்குப் பத்திரிகை என்றில்லாமல் உயர்ந்த இலக்கியத்திற்கும் அறிவியல் கருத்துக்களுக்குமாக அமைக்கப்பட்ட இந்தப் பத்திரிகையில் விரைவிலேயே சிறப்பான சிறுகதைகளுக்கும் இடமளிக்கப்பட்டதால் அதன் செல்வாக்கு எழுத்தாளர்களைக் கவர்ந்தது” என்று சிட்டியும் சிவபாத சுந்தரமும் குறிப்பிடுகிறார்கள். பின்னால் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று அறியப்பட்ட சிட்டி, ந.பிச்சமூர்த்தி போன்றோர் மணிக்கொடியில் எழுதும் முன்னரே கலைமகளில் எழுதியவர்கள்.கலைமகளின் முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று  பெண்களின் எழுத்துக்களுக்கு ஊக்கமளித்தது. 

“ஆனந்த விகடன் நுனிப்புல் மேயும் மனப்பான்மை கொண்டது.ஆழ்ந்து எதையும் ஆராய அதற்கு விருப்பம் இல்லை. வாழ்க்கையின் கஷ்டங்களைக் கண்டு சகிக்க அதற்கு வெறுப்பு எனவே வாழ்க்கையில் மேலெழுந்தவாரியாகத் தென்படும் சுக செளகரியங்களை மட்டும்தான் அது வாழ்க்கையில் கண்டறிய வேண்டியவை என்று கொள்கிறது. ஹாஸ்யம். கிண்டல். அதிலும் ஆழம் கிடையாது

கலைமகள் முக்கியமாகப் பெருவாழ்வின் மிதப்பைப் போற்றும் மனப்பான்மை கொண்டது.கற்பனையிலும் வாழ்க்கையிலும் பெருமையையும் பேரையும் அந்தஸ்தையும் கெளரவத்தையும் போற்றுவது இதன் இயற்கை.வாழ்க்கைப் போர் அலட்சியம் செய்ய வேண்டிய விஷயம். அது நிரந்தரமல்ல.முக்கியமல்ல.சீரும் செல்வமும்தான் வாழ்க்கை லட்சியம்.”

என்று இரண்டு பத்திரிகைகளையும் ஒப்பிட்டு கு.ப.ராஜகோபலன் எழுதுகிறார் (எழுத்து மே-1959). ஆனால் கு.ப.ராவை தனது வழிகாட்டி என்று குறிப்பிடும் தி.ஜானகிராமன் வாழ்வின் யதார்த்தங்கள் கொண்ட சிறுகதைகளை அதிக எண்ணிக்கையில் எழுதிய இதழ் கலைமகள்!

தி.ஜா பின்னாளில் கல்கியிலும் எழுதினார். அவரது சிறந்த சிறுகதைகளில் சில கல்கியில்தான் வெளியாகின. வித்தியாசமான கதைக் கருக்களை, நடையைக் கொண்ட கதைகளை எழுத தி.ஜா கல்கி இதழைத் தேர்ந்தெடுத்து கொண்டார். அண்மையில் கல்கி மீள் பிரசுரம் செய்த, அண்மைக்காலம் வரை அவரது சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெறாத, ஸீடிஎன்/√ 5ஆர்xக =ரபெ என்ற கதை ஓர் உதாரணம்.

அண்மையில் கல்கி தனது 80ஆம் ஆண்டைக் கொண்டாடியது. கல்கி இதழ் ஒரு நெருக்கடியான சூழலில் தொடங்கப்பட்டது. ஆசிரியர் கல்கியின் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகள் மட்டுமல்ல, தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகிற்கே நெருக்கடி. ஆம். அது இரண்டாம் உலக யுத்தம் உச்சத்தில் இருந்த நேரம். நாட்டில் பொருளாதார நெருக்கடி.அரசின் பணம் அயல் நாட்டில் சண்டையிட்டுக் கொண்டிருந்த படைகளைப் பராமரிக்கப் போய்க் கொண்டிருந்தது. உள்நாட்டில் எந்த நேரமும் குண்டு வீசப்படலாம் என்ற அச்சத்தில் சென்னையில் நிலத்திற்கு அடியில் ஒளிந்து கொள்ள ‘பங்கர்’கள் அமைக்கப்பட்டன. மக்கள் சென்னையிலிருந்து வெளியேறி சொந்த ஊர்களுக்கு மூட்டை முடிச்சு குழந்தை குட்டிகளோடு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.காசு கொடுத்து பத்திரிகைகள் வாங்கும் மனநிலையிலோ, பொருளாதாரச் சூழலிலோ அவர்கள் இல்லை. பத்திரிகை அச்சிடத் தேவையான காகிதத்தின் விலை கன்னா பின்னா என்று எகிறிக் கிடந்தது. அச்சு இயந்திரங்கள் கிடைப்பது சிரமமான சூழல். மின்சாரம் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் என்ற நிலை.

இந்தச் சூழலில்தான் கல்கி தொடங்கப்படது. அந்தச் சூழல் பற்றி கல்கி முதல் இதழில் எழுதியிருக்கிறார். கல்கியின் முன் கணபதி காட்சி தருகிறார். அவருக்கும் கல்கிக்குமான உரையாடல் இது:

“மேற்குத் திசையில் ஒரு பயங்கரமான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது கிட்டக் கிட்ட நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறாயோ, இல்லையோ?”எனக் கேட்கிறார் கணபதி.

“ஆகா!” என்கிறார் கல்கி.

“அதன் பயனாக காகிதத்திற்கு அசாத்தியக் கிராக்கி. நமக்கு வரும் கற்பூரத்தை மடிப்பதற்குக் கூடக் காகிதம் அகப்படுவதில்லை என்று தெரியுமோ இல்லையோ?”

“தெரிந்துதான் இருக்கிறது. காகிதத்தின் விலை ஒன்றுக்கு நாலுமடங்குதான்.இன்னும் அச்சு இயந்திரங்கள் விலை கிராக்கி. மை விலை கிராக்கி. மரச்சாமன்கள் விலை கிராக்கி”

“இவ்வளவெல்லாம் தெரிந்திருந்தும் இப்போது போய் என்னத்துக்காகப் பத்திரிகை ஆரம்பிக்கிறாய்?”

“எல்லாம் தங்களுடைய மாமா, மாயக் கண்ணன் இருக்கிறாரே, அவருடைய கீதையின் உபதேசத்தைப் பின்பற்ற வேண்டும் என்றுதான்,ஸ்வாமி! ஒவ்வொருவரும் அவரவர்களுடைய ஸ்வதர்மத்தையே கடைப்பிடிக்க வேண்டும் என்று கண்ணபிரான் சொல்லியிருக்கிறார் அல்லவா? நல்ல காரியங்களுக்கு வருகிற விக்கினங்களை நிவர்த்திப்பது எப்படித் தங்களுடைய ஸ்வதர்மமோ, அப்படியே வெள்ளைத்தாள்களைக் கறுப்புத்தாள்களாக்குவது அடியேனுடைய ஸ்வதர்மம்.தங்களால் அடியார்களுடைய கஷ்டங்களை நிவர்த்திப்பதற்குப் போகாமல் இருக்க முடியாது; எங்களால் பத்திரிகையில் ஏதாவது எழுதாமல் இருக்க முடியாது”

கல்கி எழுதிய இந்தப் பத்தியின் (“உபயகுசலோபரி”) கீழ் ஓவியர் சாமா கார்ட்டூன் ஒன்றை வரைந்திருந்தார். அதில் கல்கி இதழைக் கையில் ஏந்தியபடி விநாயகர் சந்தடி மிகுந்த வீதிகளில் வழியே வாசித்துக் கொண்டு போகிறார். கல்கிக்கு அந்தக் கார்ட்டூன் மிகவும் பிடித்து விட்டது. அதையே முத்திரைச் சின்னமாக அமைத்து விட்டார்.

இன்று சொன்னால் நம்ப முடியாது. ஆனால் சொந்தமாகப் பத்திரிகை ஆரம்பிப்பது, அதுவும் யுத்த காலத்தில், என்ற கல்கியின் முடிவு அவரது நண்பர்களுக்கு கவலை தந்தது. கல்கி தனது வழிகாட்டியாக ஏற்றிருந்த, அறிவுக் கூர்மையும், அனுபவ முதிர்ச்சியும் கல்கி மீது அளவற்ற அன்பும் அக்கறையும் கொண்ட ராஜாஜிக்கே கூட அது நல்ல யோசனையாகத் தோன்றவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற ராஜாஜி அப்போது சிறையில் இருந்தார். “கல்கி புதுப் பத்திரிகை போடும் அபிப்பிராயம் எனக்கு நல்ல யோசனையாகத் தோன்றவில்லை. பணம் வீணாகிவிடும் என்று தோன்றுகிறது. நல்ல பெரிய விஷயங்கள் எழுதும் பிரயத்தனம் செய்வது நல்லது. சிறிது காலம் கழித்து வேறு யோசனை செய்யலாம் என்று சொல்லவும்” என்று சிறையிலிருந்து தன் குடும்பத்திற்கு 3.5.1941ல் தன் குடும்பத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார் ராஜாஜி.

இன்னொரு நெருங்கிய நண்பரான டி.கே. சிதம்பரநாத முதலியாருக்கும். கல்கி ஏதாவது ஒரு பத்திரிகையில் சம்பளத்திற்கு ஆசிரியராகப் போகலாம் என்ற அபிப்பிராயம் இருந்தது. ஆனால் பத்திரிகை தொடங்கப்பட்ட பின் தோளோடு தோள் நின்று அதன் வளர்ச்சிக்கு உதவியர்களும் அவர்கள்தான்.

இத்தனை சூறாவளிக்கு இடையில்தான் கல்கி பிறந்தது. இதழ் வெளிவந்ததும் எல்லா அச்சங்களும் இடிந்து விழுந்தன. காகிதம் கிடைக்காததால் முதல் இதழ் பனிரெண்டாயிரம் பிரதிகள் அச்சாயின. பரபரப்பாக விற்பனையானதால் ஐந்தாவது இதழின் சர்க்குலேஷன் மூன்று மடங்கு உயர்ந்து 35ஆயிரம் பிரதிகளை எட்டியது. பொன்னியின் செல்வன் வெளியானபோது சராசரி வாராந்திர விற்பனை 71 ஆயிரத்து 366. (அப்படியிருந்தும் கடைகளில் பிரதிகள் கிடைக்காமல் போய் வாங்கியவர்கள் சிலர் கறுப்பு சந்தையில் விற்று காசு பார்த்தார்கள்!)    

இந்தப் பத்திரிகைகளுக்கெல்லாம் முன்னால் நூறாண்டைக் கடந்த ஒரு பத்திரிகை உண்டு. அது ஸ்ரீராமகிருஷ்ண விஜயம். விவேகானந்தரின் நேரடிச் சீடர் ஸ்வாமி சர்வானந்தர் 1921ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் அன்று சென்னையில் அதைத் தொடங்கினார். “இருள் நீங்கி இன்பம் பயக்கும் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சியவர்க்கு” என்ற திருக்குறளைத் தனது கொள்கை விளக்க வரிகளாக அறிவித்து விஜயம் தன் பயணத்தைத் தொடங்கிற்று. நமது பத்திரிகை என்ற அதன் கொள்கை விளக்கக் குறிப்பு “‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்’ என்ற கம்பனின் வரிகளோடு ஆரம்பித்தது

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், ஆனந்த விகடன், கலைமகள், கல்கி இவை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் வந்து கொண்டிருக்கின்றன. (கல்கி சென்ற ஆண்டு அச்சு வடிவத்திலிருந்து டிஜிட்டலுக்கு மாறியது) அச்சுப் பத்திரிகைகளின் தலைக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழலாம் என்று அச்சுறுத்தும் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்திலும் கூட இவை 80, 90, ஆண்டுகளாக வந்து கொண்டிருப்பது அச்சுப் பத்திரிகைக்காரனுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆறுதல். அதற்கான காரணங்கள் அப்படி ஒன்றும் அறிந்து கொள்ளச் சிக்கலான ராக்கெட் அறிவியல் அல்ல. இருள் நீக்குவது எனக் கிளம்பியது ஸ்ரீவிஜயம். அறிவைப் பரப்புவது என்று தொடங்கியது கலைமகள். வாசகப் பரப்பை விரிவுபடுத்துவது என்பதை இலக்காகக் கொண்டிருந்தது விகடன். எத்தனை இடர்கள் வந்தாலும் என்னால் எழுதாமல் இருக்க முடியாது என்று உறுதி கொண்டிருந்தது கல்கி.

இந்த நான்கு அம்சங்களும் ஒருங்கே அமைந்த எந்தப் பத்திரிகையையும் கால வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போக முடியாது.       

              .

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these