சுதந்திரம் என்பது யாதெனில் . . .

இன்றைய உலகில் துணிச்சலான செயல்களில் ஒன்று சிந்தித்தல். அதுவும் உரத்துச் சிந்தித்தல். அதிலும் நம்மைப் பற்றி நாமே பகிரங்கமாக உரத்துச் சிந்தித்தல். அதைத்தான் செய்ய முற்படுகிறேன்

சுதந்திரம் என்பது என்ன?

சுதந்திரத்திற்குப் பல முகங்கள். பல அர்த்தங்கள். சிறைக்குள் இருக்கும் ஒருவருக்கு (அரசியல்வாதிகளைச் சொல்லவில்லை) வெளியில் வருவது விடுதலை. வணிகர்களைக் கேட்டால் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்தால் அது சுதந்திரம். குடும்பத் தலைவிகளுக்கும், அலுவலகத்தின் இடைநிலை ஊழியர்களுக்கும் அவர்களது அன்றாட வேலைகளிலிருந்து விலக்குக் கிடைக்கும் நாள்கள் சுதந்திர தினம். உளவியல் வல்லூநர்களும், கார்போரேட் குருக்களும், குறிப்பிட்ட மனநிலையிலிருந்து விடுபடுதல் –உதாரணமாக அச்சம், ஆசை- விடுதலை என்கிறார்கள். பெரும்பாலானோருக்கு சுதந்திரம் என்பது அவர்கள் விரும்பியதைச் செய்வதை அனுமதிக்கும் சூழல்

எனக்கோ சுதந்திரம் என்பது நான் செய்ய விரும்புவதை அனுமதிப்பது மட்டுமல்ல, செய்ய விரும்பாததை என்மேல் திணிக்காமல் இருப்பதும்தான் சுதந்திரம். என்னை ஆங்கிலத்திலோ (தமிழிலோ) பேச அனுமதிப்பது மட்டுமல்ல, என்னை இந்தியில் பேசுமாறு வற்புறுத்தாமல் இருப்பது சுதந்திரம். நான் எழுத விரும்பியதை எழுத அனுமதிப்பது மட்டுமல்ல, நான் எழுத/வெளியிட விரும்பாததை எழுதுமாறு/ வெளியிடுமாறு வற்புறுத்தாமல் இருப்பதும்தான் சுதந்திரம். ஒரு பெண் அல்லது ஆண் தான் விரும்பிய ஒருவரை மணக்க அனுமதிப்பது மட்டுமல்ல, அந்தப் பெண்ணோ, ஆணோ தனித்து வாழ விரும்பினால் அதை அனுமதிப்பதும்தான் சுதந்திரம். நான் விரும்பும் இடத்தில் வாழ வகை செய்வது மட்டுமல்ல, பன்முகத் தன்மையை மறுதலிக்கிற சூழலில் வாழுமாறு என்னை வற்புறுத்தாமலிருப்பதும்தான் சுதந்திரம்.

”சுதந்திரம் என்பது,,,”
துவங்கிய சகியை
மறித்தான் கவி

”விடுதலை என்பது

விரும்பியதைச் செய்தல்”
எளிமையாய் ஓர்
இலக்கணம் வகுத்தான்

இல்லை இல்லை

என்றெழுந்தாள் சகி
யோசித்து உலவினாள்

“விடுதலை என்பது 

விரும்பாதவற்றைத்
திணிக்காதிருப்பது”
என்றாள்
உறுதியாய்

மூன்றாண்டுகளுக்கு முன் நான் எழுதிய கவிதை இது.

சுதந்திரம் என்பது மேலாதிக்கத்திற்கு நேர் எதிரானது.

பன்முகத்தன்மை என்பதுதான் சுதந்திரத்தின் பொன் முத்திரை. தனித்த அடையாளம். ஏனெனில் அது என்னைக் கூட்டத்திலிருந்து தனித்து நிற்க அனுமதிக்கிறது. நான் நானாக இருக்க இடமளிக்கிறது. ஆலமரங்கள் அடர்ந்த வனத்தில் ஒரு புல்லின் இதழாக  இருக்கத்தான் எனக்கு விருப்பம் என்றால் அதைப் புலம்பாமல், முகச்சுளிப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் நாடே சுதந்திர நாடு

பன்முகத் தன்மை என்பது இயற்கையானது. இது ஏதோ பெரும் தத்துவம் அல்ல, கண் எதிரே காணும் காட்சி எந்த மலரின் எல்லா இதழ்களும் ஒரே அளவில் இருப்பதில்லை. எந்தச் செடியிலும் எல்லா மலரும் ஒன்றே போல் இருப்பதில்லை. ஒரே மரத்தின் விதைகளிலிருந்து வெளிப்படும் விருட்சங்கள் கூட வேறு வேறான அளவில் விரிகின்றன. மலை இருக்கும் இடத்தில் கடல் இல்லை. கடல் இருக்கும் இடத்தில் வயல் இல்லை. வயல் இருக்கும் இடத்தில் வனம் இல்லை. வனத்தில் உள்ளவை எல்லாம் ஒன்றாக இல்லை. எல்லோருக்கும் மழை இல்லை.அசாமில் வெள்ளம் பெருக்கெடுத்து வீதிகளில் விரைந்தோடுகையில் தில்லியில் என் நா வறள்கிறது. அமெரிக்கர்களின் கோடை ஆஸ்திரேலியர்களின் குளிர்காலம்.

சுதந்திரம் இயல்பானது, இயற்கையானது என நம்புபவர்கள் எவரும் அது பன்முகத் தன்மை கொண்டது என்பதை ஏற்பார்கள்.

இயற்கை உயிர்ப்புள்ளது. உயிர்ப்புள்ள எதுவும் இயற்கையானது. உயிர்ப்புள்ள எதுவும் கட்டற்று இயங்கவே விரும்பும். சிட்டுக் குருவியிலிருந்து பேராறுவரை இதுதான் இயல்பு. நாம் கட்டுக்களை அறுத்துக் கொண்டுதான் பிறந்தோம். இறந்த சில நிமிடங்களிலேயே கட்டப்படுகிறோம்.

சுதந்திரம் உயிர்ப்புள்ளது. அதனால்தான் மேலாதிக்கத்தால் நாம் தளைப்படும் போது இறந்ததாக உணர்கிறோம். அல்லது இறக்க மறுத்து திமிறி எழுத் துடிக்கிறோம்

நம்மைப் பாதுகாப்பதும் சுதந்திரம்தான் என்று எண்ணுபவர்களும் சுதந்திரம் பன்முகத் தன்மை கொண்டது என்பதை ஏற்கத்தான் வேண்டும். தொற்று நோயினால் தோப்புக்கள் அழிந்ததுண்டு. காடுகள் அழிந்ததுண்டா? காடுகளைக் காப்பாற்றியது அதன் பல் உயிர்ப் பெருக்கம். அதன் பன்முகத் தன்மை.

இந்தியன் என்பதில் என்றும் பெருமிதம் கொள்பவன் நான். அதற்கு அதன் தொன்மை மட்டும் காரணமல்ல. அதன் பன்முகைத்தன்மையும் காரணம். பெருமைக்குரிய பல மதங்களின் தாயகம் என் தேசம் என்பது மட்டுமல்ல என் பெருமிதத்திற்குக் காரணம். அது சகிப்புத் தன்மையின் உறைவிடம் என்பதும்தான். கருத்து மாறுபாடு என்பது எனக்கு இங்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை. அது இரக்கத்தில் போடப்பட்ட பிச்சை அல்ல.

ஓர் எழுத்தாளன் என்பதிலும் நான் பெருமை கொள்கிறேன்.ஏனெனில் இலக்கியம் என்பது எழுத்தாளனுக்கும் வாசகருக்குமிடையே, வாசகருக்கும்  மற்றொரு வாசகருக்குமிடையே சுதந்திரத்தைப் பரிமாற, பராமரிக்க, அங்கீகரிக்க உதவும் உண்மையான ஓர் ஊடகம் என்பதால். அது. மற்ற கலை வடிவங்களைப் போல,ஒலியையோ, வண்ணங்களையோ, அசைவுகளையோ. படங்களையோ சார்ந்து நிற்பதல்ல. வார்த்தைகளை மட்டுமே சார்ந்து சுதந்திரமாக நிற்கும் கலை.

அதே நேரம், இலக்கியம் என்னை என் வாசகரோடு பிணைக்கிறது. ஆனால் அது என்னுடைய சுதந்திரத்திலோ, அவருடைய சுதந்திரத்திலோ குறுக்கிடுவதில்லை.

வார்த்தைகளை மட்டுமே சார்ந்திருந்த போதிலும் அது வாசகரின்  சுதந்திரத்தை எந்த விதத்திலும் கட்டுப்படுத்துவதில்லை. எழுதுபவனைப் போலவே வாசிப்பவருக்கும் அது சுதந்திரமாக சிந்திக்க இடமளிக்கிறது. உதாரணமாக ‘காலைச் சூரியன் எழுந்தது’ என்று எழுத்தாளன் எழுதும் ஒரு  வாக்கியத்தை, அல்லது தண்நிலவு பொழிகிறது என்ற வாக்கியத்தை வாசகர் அவர் அறிந்த சூர்யோதத்தை அல்லது அவர் கண்ட நிலவைக் கற்பனை செய்து விளங்கிக் கொள்ள முடியும். அது எழுத்தாளன் கண்ட அதே சூர்யோதயமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் சூர்யோதயம் திரையில் காட்சிப்படுத்தப்படும் போது அது பலவாறாக இருக்க முடியாது. கேமிராவின் கண் எந்த சூரியோதத்தைப் பார்த்ததோ அந்த ஒரே காட்சிதான் எல்லோருக்கும். வாசகர்கள் ஒவ்வொரு படைப்பையும் தங்களது அனுபவத்தின் வழியேதான் புரிந்து கொள்கிறார்கள்..தங்கள் அனுபவங்களைப் பொருத்திப் பார்த்துதான் கவிஞனின்  வரிகளோடு அல்லது கதாசிரியனின் பாத்திரங்களோடு ஒன்றிப் போகிறார்கள். வார்த்தைகளையும் மீறிய ஒரு சுதந்திரத்தை இலக்கியம் வாசகருக்கு அளிக்கிறது. அதனால்தான் ஒரே படைப்பைப் பலரும் பலவிதமாகப் புரிந்து கொள்கிறோம், கொண்டாடுகிறோம் அல்லது நிராகரிக்கிறோம்.

வாசகருக்கு உள்ள இந்த சுதந்திரம், சில நேரங்களில் எழுத்தாளனுடைய கருத்துரிமையை நசுக்கவும் காரணமாகிறது என்பது ஒர் விசித்திரமான முரண். வாசகர் வெட்கமோ, குற்ற உணர்வோ கொண்ட ஓர் அனுபவத்தை எழுத்தாளன் சித்தரிக்க முற்படும் போது, அதன் உள்ளார்ந்த பொருளை விளங்கிக் கொள்ளாமல், அல்லது விளங்கிக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், அந்தப் படைப்பைத் தடை செய்யக் கோரி கொந்தளிக்கிறான் வாசகன். தலைமுறை தலைமுறைகளாக நிலைநிறுத்தப்பட்ட ஒரு கருத்தை, சிந்தனையை, எழுத்தாளன் கேள்விக்குள்ளாக்கும் போது, அந்தக் கருத்தால், சிந்தனையால் பாதுகாப்பையோ, இதத்தையோ பெற்ற வாசகன் சங்கடத்திற்குள்ளாகிறான். அந்தப் படைப்பைக் கண்ணில் படாமல் ஒளித்து வைத்து விடமுடியுமா என்ற தவிப்பிற்குள்ளாகிறான். அந்தரங்கம் பகிரங்கப்பட்டுவிட்டதைப் போன்று பதறுகிறான். அந்தரங்கத்திற்குள்ள உரிமைக்கும் கருத்துரிமைக்குமான மோதல் நேர்கிறது

முரண்பாடுகள் ஓர் ஆசிர்வாதம். ஒரு நல்வாய்ப்பு. ஏனென்றால் அவை கருத்து மாறுபாடுகள் குறித்து சிந்திக்க சந்தர்ப்பமளிக்கின்றன. மாற்றுக் கருத்துக்களைக் காணும் சாளரங்களைத் திறக்கின்றன. நம் மனதின் விருப்பங்களிலிருத்து விடுவித்துக் யதார்த்தங்களைத் தரிசிக்கும் வாய்ப்பை அளிக்கின்றன. நம்மை நம்முடைய அனுமானங்களிலிருந்தும் மனச்சாய்வுகளிலிருந்தும் விடுதலை செய்கின்றன. எனவே மோதல் நல்லது

சரி, அந்தரங்கத்திற்கான உரிமை, கருத்துரிமை என்ற முரண்களுக்கிடையே சுதந்திரம் சிக்கிக் கொள்ளும் போது எதன் கை மேலோங்க வேண்டும்? உரத்த குரலில் வெகுண்டெழுந்து கூவும் பெரும்பான்மையா? அல்லது தனித்து விடப்பட்ட எழுத்தாளனா?

இருப்பதை- அது அதிகாரமோ, அமைப்போ, செல்வமோ, புகழோ- காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுபவர்கள் பெரும்பான்மைக்குச் செவிசாய்க்க சம்மதிப்பார்கள். ஏனெனில் அதுவே அவர்களுக்கு பாதுகாப்பானது. மரபை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எண்ணிக்கையை விட எண்ணம் பெரிது. குழந்தைத் திருமண ஒழிப்பிலிருந்து கும்பிடுகிற சாமியைக் கேள்வி கேட்பது வரை எண்ணிக்கையில் சிறியவர்களாயிருந்த குரலில்தான் தொடங்கியது

இந்திய அரசமைப்புச் சட்டம், கருத்துரிமை என்பது “நியாயமான கட்டுப்பாடுகளுக்கு’ உட்பட்டது என்று வரையறுக்கிறது. “நியாயமான” என்பது நபருக்கு நபர் மாறுபடக்கூடியது. இந்த நியாயத்தைப் “பொது நன்மை” என்று கூட விளக்கிவிட முடியாது. ஏனெனில் “நன்மை” “தீமை” என்பவை நபருக்கு நபருக்கு வேறுபடக் கூடியவை. உங்களுடைய தித்திப்பான அமிர்தம் எனக்கு  ஒவ்வாத விஷமாக இருக்கலாம்

“நியாமான கட்டுப்பாடுகளுக்குட்பட்ட கருத்துரிமை”  என்ற அரசமைப்புச் சட்டத்தின் வாசகம், “சமூகப் பொறுப்புணர்வோடு கூடிய கருத்துரிமை” என்று மாற்றப்படுமானால் அது அர்த்தமுள்ளதாக மாறும். ஏனெனில் சமூகத்தின் அமைதி, சமூகத்தின் நல்லிணக்கம், சமூகத்தின் வளர்ச்சி என்பவை பெரிதும் சமூகத்தின் கையில் இருக்கிறது. இவற்றுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் சுதந்திரம் சுதந்திரமே அல்ல. பொறுப்புணர்வு என்பது சுதந்திரத்தின் மறுபக்கம். இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஒன்றிலிருந்து ஒன்றை விலக்கி வைக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் பொறுப்புணர்வு இல்லாதவர்கள் சுதந்திரத்திற்குத் தகுதியற்றவர்கள்

நியாயமான கட்டுப்பாடுகள், அல்லது பொறுப்புணர்வு என்ற ஏதோ ஒரு வளையத்திற்குள் அடைக்கப்படும் சுதந்திரம் பூரண சுதந்திரம்தானா?

பூரண சுதந்திரம் என்பதே ஒரு மாயை. புத்தகங்களில் மட்டுமே வாழும் கற்பனை. நம் உள் மனதை இதமாக்கிக் கொள்ள நாம் கண்டறிந்த ஒரு சொல். சுதந்திரம் என்பது “ நசுக்கப்பட்டவர்களின் ஏக்கம், இதயமற்ற உலகின் இதயம், ஆன்மா அழிந்து போன சூழலில் ஆன்மா. அது மக்களுடைய அபின்” ( மார்கஸ் மன்னிப்பாராக, அவர் மதம் என்பதைக் குறிக்க இந்தச் சொற்களைப் பயன்படுத்தியிருந்தார்)

ஆனாலும் அந்த மாயைக்கு, அந்த இதம் தரும் கற்பனைக்கு, அந்த போதை தரும் அபினுக்கு என் மனம் ஏங்குகிறது.

(இவ்வாண்டு சுதந்திர தினத்தன்று தில்லி சாகித்ய அகாதெமி உரையரங்கில் நிகழ்த்திய உரையின் தமிழ்ப் பதிவு)

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *