அரசியல் லாவணியால் யாருக்கு லாபம்?

பக்கத்து வீட்டு நண்பர் பார்க்க வந்திருந்தார்.வீதியில் தேங்கியிருந்த தண்ணீரில் அவரும் எங்கேதான் போவார்? எனக்கும் டிவி போரடிக்க ஆரம்பித்திருந்தது. கைபேசியை எடுத்து வருடி வானிலையை ஆராய்ந்து கொண்டிருந்தேன்.

”என்னையா சின்னப் பசங்க மாதிரி எப்பப் பார்த்தாலும் செல்போன்?” என்றார் சிநேகிதர்.

சிரித்தேன்.“ உமக்கு சின்னப் பசங்களைப் பற்றி என்ன தெரியும்?”

“உமக்கு என்ன தெரியும்?”

”தெளிவானவர்கள். தைரியமானவர்கள்.நினைத்ததைப் பேசும் நேர்மையானவர்கள்”

“இது எப்போ இருந்து?”

நான் என் கைபேசியை நீட்டினேன். வாடஸப்பில் வந்த செய்தி ஒன்று அதில் கிடந்தது. ”டியர் மிஸ்டர் ராகுல் காந்தி” என்று துவங்கியது அந்தக் கடிதம்

“இன்று எங்கள் கல்லூரியில் நீங்கள் நிகழ்த்திய உரையை நேரில் கேட்டவர்களில் நானும் ஒருத்தி. நான் உங்கள் கட்சிக்காரி அல்ல. சுதந்திரமாக சிந்திக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருத்தி.”

“ஓகோ!” என்று புருவத்தை உயர்த்தி உதட்டைச் சுழித்தார் நண்பர்

“என்னைப் பற்றி இவ்வளவு போதும். உங்கள் உரைக்கு வருகிறேன்” என்று தொடர்ந்தது கடிதம் “ சில நல்ல கருத்துக்களைச் சொன்னீர்கள். கை தட்டினோம். சிலவற்றை ஏற்றுக் கொள்ள முடியாத போது, கையைக் கட்டிக் கொண்டு கம்மென்று உட்கார்ந்திருந்தோம். உங்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். என்ன செய்ய, நாங்கள் ஆமாம் சாமிகள் அல்ல.

தூய்மை இந்தியா திட்டம் தோல்வி என்றீர்கள். தோல்விதான். ஆனால் அது தேசத்தின் தோல்வி. பிரதமருடையது மட்டுமல்ல. அந்தத் தோல்வியில் நமக்கும் பங்குண்டு.

இந்த தேசத்தின் குப்பைகளை ஓராண்டில் அகற்றிவிடமுடியும் என்று நினைக்கிறீர்களா? போலியோ சொட்டு மருந்தைப் போல அதற்கு நீண்டதொரு இயக்கம் வேண்டும்.நீடித்த முனைப்பு வேண்டும். போலியோ இல்லாத இந்தியா ஒரு நாளில் உருவாகிவிடவில்லை. அதற்கு 19 ஆண்டுகள் ஆகின. முதல் தேவை நம்பிக்கை. நம்பிக்கையோடு உழைத்தால் நாடும் எதிர்காலத்தில் என்றோ ஒரு நாள் தூய்மையாகும். அதற்கு ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல், – -உண்மையில் இதில் கிள்ளிப்போட்ட துரும்பை எடுத்துப் போட வேண்டும் – வெறுமனே குறை சொல்லிக் கொண்டிருப்பதால் எதை சாதிக்கப் போகிறோம், நம்பிக்கைகளையும் கனவுகளையும் தகர்ப்பதைத் தவிர? எதிர்கட்சி என்றால் எப்போதும் எல்லாவற்றையும் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா? ஆட்சி அவர்களுடையதாக இருக்கலாம். ஆனால் தேசம் நம்முடையது”

”அடேங்கப்பா!” என்றார் நண்பர். “என்ன சொல்ல வருகிறீர்?” என்றார் கூடவே

“தூய்மை இந்தியாவிற்குச் சொன்னது மழைக்கும் பொருந்துமில்லையா?”

புரியாதது போல் பார்த்தவரைப் பொருட்படுத்தமல் சொன்னேன். ”தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கின்றன. ஆனால் இப்போதே எல்லாவற்றையும் அரசியல் ஆக்கும் அவசரம் எங்கும் தெரிகிறது. குறிப்பாக ஊடகங்களிடம். இத்தனை இடர்களுக்கு இடையேயும் முகம் தெரியாதவர்களுக்கு உதவ தன்னார்வத் தொண்டர்கள் ஓடி வந்தனர்.அரசு ஊழியர்களும் மாநகராட்சி ஊழியர்களும் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தனர். அவர்களை ஊக்குவிப்பதைப்போல் ஊடகங்கள் அதிகம் பேசவில்லை. ஒப்பாரிகளே ஒலிபரப்பாகின. நம்பிக்கையை விதைக்க வேண்டிய நேரம் இது. ஆனால் நாம் என்ன செய்தோம்?

நண்பர் புரிந்து கொண்டார்.நான் மெளனமானேன்.

20 டிசம்பர் 2015 இதழ்

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *