மழையில் மாட்டிக் கொண்டார் பாரதிதாசன்!

வாக்குப் பலித்து விட்டது. அதாவது வாக்கியப் பஞ்சாங்கம் மழை பெய்யும் எனச் சொன்ன கணக்குத் தப்பவில்லை. இனி கொசுக்கடி ஆரம்பித்து விடும். அதாவது வாட்ஸ் அப்பில் வாதங்களும் வதந்திகளும் வந்து ‘கொட்டும்’  .

இடுக்கண் வரும் போதெல்லாம் எனக்கு இலக்கியம்தான் துணை. பாரதியின் புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், (30.11.1916) புதுச்சேரியில் வீசிய புயல் குறித்து பாரதி சுதேசமித்திரனுக்கு அனுப்பியிருந்த ‘ரிபோர்ட்’ அகப்பட்டது. “யுகப் பிரளயத்தைப் போலிருந்தது” என்று துவங்குகிற அந்த அறிக்கையின் சுவையான பகுதி “ ஆலங்குப்பத்து வாத்தியார் புயற்காற்றை அனுபவித்த கதை”. இந்த ஆலங்குப்பத்து வாத்தியார் உங்களுக்கும் அறிமுகமானவர்தான்.

அவர், பாரதிதாசன் !

“ புதுச்சேரிக்கு வடமேற்கே சுமார் 4 மைல் தூரத்தில் ஆலங்குப்பம் என்ற கிராமம். அந்த ஊர் சர்க்கார் பள்ளிக்கூடத்திலே சுப்புரத்ந முதலியார் என்றொரு வாத்தியார். இந்த முதலியாரும், மூன்று இளைஞர்களும் ஒரு கிழவனுமாக ஐந்து பேர் புயலடித்த புதன் கிழமை இரவில் பள்ளிக் கூடத்து மெத்தையில் படுத்துக் கொண்டிருந்தார்கள்.

காற்று வந்தது. மெத்தை ஜன்னல் கதவுகள் எட்டிரண்டு பதினாறும் ஏககாலத்தில் வெடித்து விழுந்தன. மேற்கூரை விழத் தொடங்கிற்று. கட்டிடம் கொஞ்சம் அசைந்தது.

இவர்கள் பயந்து  மேற்படி கட்டிடத்தை விட்டு வெளியேறி ரஸ்தாவிற்கு வந்தார்கள்.காற்று தூக்கிக் கொண்டு போய் விட்டது. வாத்தியார் சுப்புரத்ந முதலியாரைக் கழனியிடையே கைப்பிடிச்சுவர்  இல்லாத மட்டக் கிணறொன்றிலே தள்ளி விட்டது. முதலியார் நல்ல தீரன். அப்படி இப்படித் துழாவிப் பக்க்கத்திலிருந்த ஒரு காட்டாமணக்கஞ் செடியைப் பிடித்துக் கொண்டார்.

ஆலமரங்களை அழித்த காற்று சில ஆமணக்கஞ் செடிகளை விட்டிருந்தது. ஒடிந்து விழுந்த தென்னை மரத்தடியிலே எறும்புகள் சாகாமலிருப்பதையும் கண்டேன்

காட்டாமணக்கஞ் செடி  முதலியாரைக் காப்பாற்றி வைத்தது. காலும் உடலும் கீழே போகிறது. முதலியாருக்கு ’இது கிணறு’ என்ற ஸ்மரணை ஏற்பட்டது. உயிரை வேண்டி ஒரு பாய்ச்சல் பாய்ந்து பிறகு நாலைந்து குட்டிக் கரணங்கள் காற்றினிடம் பழகிக் கொண்ட பிறகு ஒரு வரப்பைப் போய்ப் பிடித்துக் கொண்டார். சிறிது நேரம் அதைப் பற்றியிருந்த பின்பு ஒரு மின்னலுண்டாயிற்று. எதிரே பெருமாள் கோயில் கல்லுக்கட்டிடம் தெரிந்தது. அதிலே போய்ச் சேர்ந்து கொண்டார். மற்ற மூன்று இளைஞரும் பலவிதங்களிலே உயிர் தப்பி விட்டார்கள்” என்று எழுதுகிறார் பாரதி

பிரம்மாண்டமான ஆலமரங்களை பிடுங்கி எறிந்த காற்று, நெடிதுயர்ந்த தென்னைகளை நெட்டித் தள்ளிய காற்று ஆமணக்குச் செடிகளையும் அற்ப ஜீவிகளான எறும்புகளையும் விட்டுவைத்த ஆச்சரியத்தை ஒரு கவிஞன்தான் ரிபோர்ட் செய்ய முடியும்.

போகட்டும், மழை நல்லதா கெட்டதா?

6 டிசம்பர் 2015 இதழ்

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *