அறிவுஜீவிகளும் அப்பாவிகளும்

எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சந்திக்கப் போயிருந்தேன்.’மடத்தில்’ சபை கூடியிருந்தது. தன் சஹிருதயர்களோடு ஜேகே உரையாடிக் கொண்டிருந்தார். உரையாடல் அல்ல, உரத்த சிந்தனை.

அங்கிருந்த யாருக்கும் அதிகம் பரிச்யமில்லாத ஒருவர் அறைக்குள் நுழைந்தார்.வாசகர் என்று அறிமுகம் செய்து கொண்டார். வணக்கம் சொன்னார். ஜேகேவிற்கு மட்டுமல்ல, அங்கிருந்த எல்லோருக்கும்.
கையிலிருந்த பையைத் திறந்தார். நாளிதழ் கிழிசல் ஒன்றில் சுருட்டி மடக்கப்பட்டிருந்த காகிதப் பொட்டலத்தைப் பிரித்தார். உள்ளே இருந்தது
திருநீறு. குடும்பத்தோடு கோயிலுக்குப் போய் வந்ததாகவும், அந்தக் கோயில் பிரசாதம் இது என்று சொல்லி கையிரண்டையும் தாம்பாளம் போல விரித்து, சற்றே வளைந்து அந்த விபூதியை ஜேகே முன் நீட்டினார்.

இடதுசாரி என்றும், நாத்திகர் என்றும் ஜேகே அறியப்பட்டிருந்த காலம் அது.தனக்கு முன் நீட்டப்பட்ட விபூதியை ஜேகே என்ன செய்யப் போகிறார் என்பதைக் காண நான் ஆவலோடு இருந்தேன்.

மறுத்து விடுவார் என்று நினைத்தேன். ஆனால் சற்றும் தயக்கமின்றி ஜேகே திருநீறைத் தொட்டுத் தன் நெற்றியில் வைத்துக் கொண்டார். அங்கிருந்த சிலர் முகத்தில் ஆச்சரிய ரேகைகள் படர்ந்தன.

அந்தத் திருநீறு எங்கள் முன்னாலும் நீட்டப்பட்டது. ஒருவர் தனக்கு நம்பிக்கையில்லை என்று மறுத்துவிட்டார். வந்தவர் மறுபடியும் எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு படியிறங்கிப் போய்விட்டார்.

“என்ன ஜேகே, நீங்கள் மறுத்துவிடுவீர்கள் என்றல்லவா நினைத்தேன்” என்றார் சபையில் ஒருவர்.

“அவரது நம்பிக்கைகளை நான் அங்கீகரிக்கவில்லை. ஆனால்…”

அவர் முடிப்பதற்குள் ,” பின் எப்படி?” என்று மறித்தார் நண்பர்.

“தன்னை மதிக்கிற ஒரு மனிதனை ஒருவர் அவமதிப்பது என்பது எந்த விதத்திலும் தகாது. எந்த சமூகத்திலும், எந்தக் காலத்திலும், அது நியாயமாகவோ நாகரீகமாகவோ ஆகாது” என்றார் ஜேகே.

எனக்கு அரசு அளித்த விருதுகளைத் திருப்பித் தரும் எண்ணம் எனக்கு இல்லை என அண்மையில் கமல்ஹாசன் அறிவித்த போது என் நினைவில் ஜேகே மறுபடி வந்து போனார்.

வட இந்திய நட்சத்திரங்களும் எழுத்தாளர்களும் விருதுகளைத் திருப்பி அளிக்கும் ஆவேசம் எனக்குள் சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது.

இவர்கள் இப்போது ஆட்சியில் இருப்பவர்களை எதிர்க்கிறார்களா? அல்லது அரசு எந்த அமைப்பையே (the state) மறுதலிக்கிறார்களா?
இன்றைய ஆட்சியாளர்களை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் இந்த விருதுகளைத் திரும்ப அளிப்பதில் அர்த்தம் இல்லை. ஏனெனில் அவற்றில் பல இந்த ஆட்சியாளார்களால் அளிக்கப்பட்டவை அல்ல. அரசு என்கிற கருத்தியலையே எதிர்க்கிறார்கள் என்றால், அவர்கள் அந்த விருதை ஏற்றும் கொண்டதில் அர்த்தமில்லை.

அப்படியானால் நடந்த நியாயமற்ற சம்பவங்களுக்கு எப்படித்தான் தண்டனை அளிப்பது?

அதைத் தங்கள் வசம் எந்த அதிகாரமும் இல்லாத அந்த எளிய பீகார் மக்களின் தீர்ப்பிலிருந்து இனியேனும் பொருளும் புகழும் கொண்ட அறிவுஜீவிகள் புரிந்து கொள்ளட்டும்!

22 நவம்பர் 2015

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *