யோசனை

யுவன்  கையிலிருந்த அதை மித்ராதான் அதை முதன் முதலில் பார்த்தாள். “ என்னது ? ” என்றாள்.  அந்த  விநோதத்தைப்  பார்த்துச்  சற்றே  ஆர்வமாக.

       “ புத்தகம் . ”

       “ புத்தகம்? . ”  கையில் வாங்கிப் பார்த்தாள். வழு வழுவென்ற அதன் முகப்பில் போர்த்தப்பட்டிருந்த  பாலித்தீன்  பிலிம்,  மஞ்சளாக  மாறியிருந்ததில் சரித்திரம் தெரிந்தது. முதல் பக்கத்தைத் திருப்பினாள். ‘ அச்சம் தவிர் ’ என்று ஆரம்பித்தது. மடக்கியபோது  மளுக்கென்று  அது  உடைந்தது.

       “ ஏன்   இப்படி  இருக்கிறது ?    என்றாள்.

       “ நிஜமான  புத்தகங்கள்  இப்படித்தான்  இருக்கும் .

                மறுபடியும் புரட்டினாள். ஆச்சரியம், வார்த்தைகள், அசையாத, வார்த்தைகள். மறுபடியும்  முன்  பார்த்த  வார்த்தைகள், ‘ அச்சம் தவிர் .  அசையாமல்,  இடம்  மாறாமல்,  வரி  மாறாமல்,  அதே  அமைப்பில்.

       “ வார்த்தைகள்  நகராதா ?

                நிஜமான புத்தகத்தில் எழுத்துக்கள் ஓடாது  என்றான்  யுவன்.

       ஓடும் ! அவளுடைய டெலி புத்தகத்தில், பச்சை நிற எழுத்துக்களில் அமைந்த வார்த்தைகள்,  ஒரு  திரையில்  ஓடும்.

       “ எங்கே  கிடைத்தது ?

                தாத்தா  அனுப்பி  வைத்தார்,  நினைவுப்  பரிசு !

                சே ! என்ன வேஸ்ட் !  என்றாள் சட்டென்று.

       “ என்ன ?

                ஒவ்வொரு நிஜப் புத்தகத்தையும் இதைப்போன்ற அசையாத எழுத்துக்களிலா அமைத்தார்கள். ஒவ்வொரு புத்தகத்திலும் எத்தனை ஆயிரம் வார்த்தைகள். அவற்றை அமைக்க எத்தனை நேரம் ! எத்தனை காகிதங்கள் ! இப்படி எத்தனை புத்தகங்கள் ! இவற்றைப் படித்து முடித்த பின் என்ன செய்வார்கள் ! தூக்கி எறிந்து விடுவார்களா ? வீட்டில் அடுக்கி வைப்பார்களா ? அப்படியானால் எத்தனை இடம் அது அடைத்துக் கொள்ளும் ! கடவுளே !

                யுவன் பதில் சொல்லவில்லை. அவன் மனத்தில் தாத்தா புத்தகத்துடன் அனுப்பிய குறிப்பு,  டெலி  புத்தகங்களின்  வரி  போல  ஓடிற்று.

       “ யுவன் …  அலமாரியின் வரிசையில் நின்று நமக்கு முதுகைக் காட்டின புத்தகங்கள் ஜன்னல் விளிம்பில் சிந்தியிருந்த புத்தகங்கள். கட்டின பெண்டாட்டி மாதிரி நம்முடன் படுக்கையில் கூடப் படுத்துறங்கிய புத்தகங்கள். பெற்ற பிள்ளை மாதிரி மாரி மீது கவிழ்ந்து  தவழ்ந்த  புத்தகங்கள் …

       படித்தவை. படித்து  மறந்தவை.  பிடித்தவை, பிடித்து மறக்க முடியாதவை.பிடித்த  புத்தகம் பிடித்த பெண்ணைப்போல மறுபடி மறுபடி அழைக்கும். விடுமுறைப்  பிற்பகலில்,  நள்ளிரவில்  புரட்டக்  கூப்பிடும்.

       அதைத் தேடிப் புறப்பட்டவன் கையில் கவிதை சிக்கும். தத்துவம் பிடிபடும். வாழ்க்கைப்  பந்தைப்  பிரித்து  வீசிய  கேள்விகள்  இடறும் ! பதிலும், திகிலும் எதிர்ப்படும்.

       அந்தப் புத்தகங்களை எரித்து விட்டார்கள். நேற்று கண்ணெதிரே, என்னை விட்டுவிட்டு  என்  புத்தகங்களை  மட்டும்  கொளுத்தினார்கள் …

                ஏன்  இப்படி  இருந்தார்கள் நம் முன்னோர்கள் ?  அசையாத வார்த்தைகளை அடுக்கி,  பத்திரப்படுத்தி  இடத்தை அடைத்து …  என்  டெலிவிஷன்  திரையில்தான்  ஓடும் வரிகள் எத்தனை படிக்கலாம்!  லட்சம் ?  மில்லியன் ?  கோடி ?   மித்ரா அடுக்கிக் கொண்டே போனாள்.

       “ ஸ் …  இரையாதே,  புத்தகம் அவர்களுக்கு சுவாசம். மூளையில் படிந்த கசடு, மனம்  ஏந்திய  சுமை.  தவிர்க்க  முடியாத  சென்டிமெண்ட் .

                யுவன்  தாத்தாவின்  குறிப்பை  எடுத்து  நீட்டினான்.

       மித்ராவின்  பார்வை  கிடுகிடுவென்று  ஓடியது.

       “ ஏன் ?

                என்னது  ஏன் ?

                ஏன்  எரித்தார்கள் ?

                தெரியவில்லை.  தாத்தாவைத்தான்  கேட்க  வேண்டும் .  முகம் சற்றே தீவிரமடைய  புத்தகத்தைப்  புரட்டினான்.

       ‘ அச்சம்  தவிர் ,

                அச்சம்  என்றால்  என்ன ?

                தெரியவில்லை.  தாத்தாவைத்தான்  கேட்க  வேண்டும் .

                தாத்தாவின் அறையில் ஒவ்வொரு செ.மீ. யிலும் தனிமை இருந்தது. முதுமை இருந்தது. கொஞ்சம் சரித்திரம் இருந்தது. குண்டாந்தடியைக் கீழே வைத்துவிட்டுக் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு யோசிக்கிற கற்கால மனிதன் சித்திரமும், கீழே பர்சனல்  கம்ப்யூட்டரும்  இருந்தது.

       தினம் தினம் பார்த்துப் பழகிய மரத்தைத் திடுமென வெட்டியது போல் வெறிச்சென்று இருந்தது. கரும்புப்  போல் பொலபொலவென்று வெளுத்த தலையைக் கோதிக் கொண்டு தாத்தா பேசினார்.

       “ என்ன  நடந்தது ?  என்றான்  யுவன்.

       “ உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா ?  என்றார்  தாத்தா.  அவர்  மனத்தில்  காலை அவர்  மீது  வீசிப்  போட்டுக்  கிருதாவை  நிமிண்டிச்  சேட்டை  செய்து  தன் மகன்  கதை  கேட்ட  ஆதி  நாட்கள்  நிழலாடின. அவை கதகதப்பான பத்திரமான நாட்கள். ஒரு  கூரையின்  கீழ்  மூன்று  தலைமுறைகள்  வசித்த  நாட்கள். ‘ இரண்டாவது சுதந்திரம் வந்திராத நாட்கள். சமூகம் கட்டுத் தளர்ந்து தனித்தனி குடும்பங்களாக நெகிழ்ந்திருந்த  நாட்கள்.  அன்று  தனிமனிதர்கள்  இல்லை. ‘ இரண்டாவது சுதந்திரத்திற்குப் பின்தான் தனி மனிதர்கள். தங்களுக்குள் இரண்டாக, மூன்றாகப் பிளவுபட்ட  மனிதர்கள்.

       தாத்தா  தலையைக்  கோதிக்  கொண்டு  சொல்ல  ஆரம்பித்தார்.

       “ முன்னொரு காலத்தில் இந்த தேசத்தில் இரண்டு குழந்தைகள் இருந்தனர். அரசியல்,  கலாசாரம்  இரண்டும்  ஒன்றையொன்று  போஷித்தன. அரசியல் போக்குகளைக் கலாசாரம் தீர்மானித்தது. கலாசாரத்தில்  நிலவிய ‘ வேல்யூஸை அரசியல் தீர்மானித்தது.

       விபத்தைப் போல, என் அரைடிரவுசர் நாட்களில் வியாபாரிகள், கலாசாரத்தின் பொறுக்கிகள் அரசியலை அபகரித்துக்கொண்டனர். உங்களுக்கு ‘ சோறு நிச்சயம் ? சுதந்திரம் பற்றி பரிசீலிக்கிறோம்  என்று சொல்லினர். விபத்து வெடித்தது. ஒரு போராட்டமாக, ‘ சுதந்திரம்  மறுத்த பெண்மணி வீட்டிற்குத் திரும்பிப் போனாள் .

                இரண்டாவது  சுதந்திரப்  போராட்டம் ?

                சுதந்தரம் !  அது  அரசியல்  வார்த்தை. நான் அவற்றில் வெகு காலத்துக்கு முன்பே  நம்பிக்கை  இழந்துவிட்டேன்.

       தாத்தா  கரும்புப்  பூவைக்  கோதியபடி  யோசித்தார். சற்று நேரம் நெட்டுக்குத்தலாக சூன்யத்தில் கடந்த காலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். எழுந்து உலவியபடிப்  பேச  ஆரம்பித்தார்.

       “ நேரடியாக நெஞ்சில் வைக்கப்பட்ட வாள்களுக்கு உறைகள் தைக்கப்பட்டன.  வெல்வெட்  உறைகள். அரசாங்கம் சட்டத்தை மூடிவைத்துவிட்டு விஞ்ஞானத்தைக் கையில்  எடுத்துக்  கொண்டது.

       வாள்களை விட இந்த லேசர் கருவிகள் நுட்பமானவை. வலிக்காமல் அறுக்கக்கூடியவை. வீட்டிற்குப் போனதற்குக்  காரணம்  சிந்தனை  என்று புரிந்து கொண்ட அரசியல்வாதிகள், சிந்தனையின் வேர்களை லேசர் கொண்டு அறுக்கத் துவங்கினார்கள்.  சிந்தனைகளுக்குப்  பதில்  கற்பனைகள்  பரிமாறப்பட்டன.

       நமது  ஸ்தாபனங்களின் மீது ஏவப்பட்ட அடக்கு முறைகளை அறியாத எனது மக்கள் பக்கத்து நாட்டில் சிவப்புச் சதுக்கத்தில், மாணவர்கள் சிந்திய ரத்தத்துக்காக கண்ணீர்  விட்டார்கள். வாரிசு அரசியலை வர்ணிக்கும் மகாபாரதத்தைப் பார்த்து கர்ஜித்துக் கொண்டே  அரசியல்  வாரிசுகளுக்கு வாக்களித்தார்கள். ஏவுகணை வானம் ஏறி சீறிப் பாய்வதை கலர் டி.வி. யில் பார்த்துக் கோவணம் கட்டிய சிறுவர்கள் குதூகலித்துக் கைதட்டினார்கள். எண்ணெய்க்கு, படிப்புக்கு, வேலைக்கு க்யூவில் நின்ற குறைந்த நேரத்தில் டி.வி. பார்த்து ‘ மேரா பாரத் மகான்கள் என்று பெருமிதம் கொண்டார்கள் .

                 தாத்தா ,  இது  கதையா ?

                 இல்லை ,  வரலாறு .  தாத்தா  திரும்பி  நடந்து  நாற்காலியில்  உட்கார்ந்தார்.

       “ உனக்குக்  கதை  வேண்டுமானால்  இதைக் கேள். இந்த வரலாறு கண்டு கொதித்த இளைஞர்கள் யோசித்தார்கள். உடனடியாக அதை மட்டுமே அவர்களுக்குச் செய்ய முடிந்தது.  யோசித்து யோசித்து ஒரு வெடிகுண்டைச் செய்தார்கள். முப்பது வருடம் கழித்து  வெடிக்கும்.  பட்டாசின்  திரிமுனையில்  பொறிவைத்துக்  காத்திருந்தார்கள் !

                வெடித்ததா ?

                இல்லை !  திரி  எங்கோ  அறுந்தது.  வெல்வெட்  உறைகளைச் செய்த விஞ்ஞானம் வீட்டுக்குள் சுபிட்சத்தைக் கொண்டு வந்தது. அதை அணைத்துக்கொண்ட அரசியல் வாதிகள்  விரும்பாதபோது கலாசாரத்தின் மடியில் கைவைத்தது. சுபிட்சம் வந்ததும்  மக்கள்  சுதந்தரம்  மறந்தார்கள்.  கனவுகளையே  அறிந்த தலைமுறை சிந்தனை மறந்தது. மனிதர்கள் தீவானார்கள். உள்ளுக்குள் ஒன்றாக இரண்டாக உடைந்தார்கள். எல்லாம் வலியின்றி நடந்தது. தன்னை, தன் கால் சட்டையை, கழுத்துப்பட்டியை நனைக்காத வரையில் வெள்ளத்தை வேடிக்கை பார்த்தார்கள். வேதனையில்லாமல் வேடிக்க பார்த்தார்கள்.  அதற்கு  வேண்டிய  சலவை,  மூளைச்  சலவை  நடந்திருந்தது .

                 எங்களுக்கா ?

                 எவருக்கென்று   நீ யோசி.  என்  எழுபது  வயதில்  நான்  யோசித்தேன்.  நாங்கள் யோசித்தோம். வெடிகுண்டு செய்யத் தெம்பில்லை. வேண்டிய விஞ்ஞானமில்லை. வீட்டுக்கொரு  குறுவாள்  கொடுக்கலாமா  என்று  முடிவு.

                 தாத்தா எதிர்ச்சுவற்றில் கை காட்டினார். அங்கே முகத்தில் கீறல் விழுந்த நூற்றாண்டுப் பழமையுடன் முண்டாசுத் தலையும், முறுக்கு மீசையும் குங்குமப் பொட்டுமாக ஒரு சித்திரம் இருந்தது. “ அவனை உங்களுக்குத் தெரிந்திருக்காது. என்னுடைய  பாட்டன்.  அவன்  எனக்குக் கொடுத்துச் சென்ற குறுவாள் இந்த  ‘ அச்சம் தவிர் .  அதைத்தான்  நகலெடுத்து  வீட்டுக்கு  வீடு  கொடுக்க  நினைத்தோம்.  வீட்டுக்கு ஒரு  புத்தகம். பொழுதும் போக்கலாம். காற்றில் பறக்காத எடையாகப் பாவிக்கலாம். இடம் பிடிக்க  கைகுட்டையாகலாம்.  வேர்க்கும்  போது விசிறிக் கொள்ளலாம். என்றாலும்,  என்றேனும்,  ஒரு விபத்தில்  நீ  திறந்து பார்க்கலாம் …  புத்தக வாசனை பிடித்து நேற்று அவர்கள் வந்தார்கள். என்னுடைய இரண்டாவது வெடிகுண்டு வெடிக்காமலேயே  எரிந்து  போயிற்று .  திடும்  என்று  தாத்தா  உடைந்து  குலுங்க குரல்  தழுதழுத்தது.

       யுவன்  எழுந்து  சென்று  அவர்  தோளைப்பற்றி அணைத்துக் கொண்டான். கரிசனம்  நிறைந்த  குரலில்  “ என்ன செய்ய வேண்டும் ?  என்றான்.

       “ யோசி  என்றார்  தாத்தா.  கற்கால  மனிதனைக்  காண்பித்து.

       கல்லூரி  வாசற்  சுவரில்  சித்திரங்கள்  முளைத்தன. கம்ப்யூட்டர் அருகில் தடியைக் கீழே   வைத்துவிட்டு   கன்னத்தில்   கை   சேர்த்த  கற்கால மனிதன்.  ‘ யோசி  என்று  ஒரு  வார்த்தை  கீழே.  இரண்டு நாள் கழித்து யுவனின் அறைக்கதவு தட்டப்பட்டது. சாதாரண உடையில்  அரசாங்கம்  தெரிகிற  இரும்பு  மனிதர்கள்  நின்றிருந்தார்கள்.

       “ புத்தகம்  இருக்கிறதா ?

                புத்தகம் ?    யுவன்  தனது  டி.வி,  திரையை  நோக்கிக்  கைகாட்டினான்.

       “ இல்லை.  நிஜமான  புத்தகம்.

 

( குங்குமம் )

      

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *