இடைத்தேர்தல் எழுப்பும் கேள்விகள்

இடைத்தேர்தல் எழுப்பும் கேள்விகள்

என் வழி தனீ ஈஈஈஈ வழி என்ற திரைப்பட வசனம் பெற்ற பெரும் வரவேற்பிற்குப்  பின்னிருக்கக் கூடிய தமிழர்களது உளவியலை யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஆனால் இந்தியத் தமிழர்களின் வழி எப்போதும் தனி வழியாகவே இருந்திருக்கிறது. கல்வியிலும் உள்கட்டமைப்பு வசதிகளிலும், வறுமையைக் குறைப்பதிலும், வேறுபல விஷயங்களிலும் தமிழகம் மற்ற இந்திய மாநிலங்களை விட வேறுபட்டு விளங்குகிறது.

வாக்களிப்பதிலும் கூட.

அண்மையில் ஆந்திரம், கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாயின. ஆந்திரத்தில் ஆளும் கட்சியான காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் தோற்றுப் போனது. குஜராத்திலும், கர்நாடகத்திலும் ஆளும் கட்சியான பா.ஜ.க தோற்றது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான அதிமுக மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதற்கு எதிராகப் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் வைப்புத் தொகையை இழந்துள்ளன.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. 1991லிருந்து இன்றுவரை அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறது.ஜெயலலிதாவே தோற்றுப் போன 1996 தேர்தலில் கூட அங்கு அதிமுகதான் வெற்றி பெற்றது.

ஆனால் புருவங்களை உயரச் செய்யும் விஷயம் வாக்குகளின் எண்ணிக்கை. 2011 மே மாதம் நடந்த சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுக பெற்ற வாக்குகள் 61902. இந்தத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் 26212 அதாவது 9 மாதங்களுக்கு முன் பெற்ற வாக்குகளில் அது பாதியளவு வாக்குகளைக் கூடப் பெறவில்லை.

ஏன் இந்தச் சரிவு என்ற ஆராயப் புகுந்தால் இது சரிவுதானா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. கடந்த தேர்தலைப் புறக்கணித்த மதிமுக இந்த முறை களம் இறங்கியதால் திமுகவிற்கு ஆதரவான வாக்குகளில் கணிசமானவை மதிமுகவிற்குச் சென்றுள்ளதா என்பதை ஆராய வேண்டியது திமுகவின் வேலை.

மற்ற கட்சிகளுக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் சில செய்திகளை முன் வைத்துள்ளன.முக்கியமாக நான்குமுனைப் போட்டியில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ள தேமுதிகவிற்கு. அதிமுக-தேமுதிக உறவில் யாரால் யார் பலன் அடைந்தார்கள் என்ற புதிர் உள்ளாட்சித் தேர்தலின் போதே ஓரளவு விலகத் துவங்கியது. அது இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிவிட்டது. இனி வரும் தேர்தல்களில் அதன் போட்டி திமுகவுடன்தான், அதிமுகவுடன் மோதுவதாக இருக்கக் கூடாது என்பதை அது உணர்ந்து கொள்வதில்தான் அதன் எதிர்காலம் இருக்கிறது. ஏனெனில் இரண்டாவ்து இடத்தைத் தக்க வைத்துக் கொண்டால்தான் முதல் இடத்தைப் பிடிப்பதைப் பற்றி கனவு காணலாம்.

அதிமுகவிற்கும் செய்தி இருக்கிறது தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட வேண்டிய நேரத்தில் கூட, அரசு வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு, 32 அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு தேர்தல் பணியாற்றினர். பணம் ஏராளமாகப் புழங்கியதாக ஊடகங்கள் எழுதின.அதாவது கடினமான உழைப்பிற்குப் பின், அரசு பலத்தோடுதான் இந்த இமாலய வெற்றி அதிமுகவிற்குக் கிடைத்துள்ளது.

இடைத் தேர்தல் மக்கள் முன்னும் சில கேள்விகளை முன் வைக்கின்றன. தமிழக இடைத் தேர்தல்களில் கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியைத் தவிர மற்றவர்கள் வெற்றி பெற்றதில்லை. அதே போல இடைத் தேர்தல் முடிவுகள் பொதுத் தேர்தலில் பிரதிபலிப்பதும் இல்லை

சுருக்கமாகச் சொன்னால் மக்கள் பொதுத் தேர்தல்களில் அரசுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள்.இடைத் தேர்தல்களில் ஆதரவாக வாக்களிக்கிறார்கள்.

தமிழர்கள் புத்திசாலிகள் என்பதில் சந்தேகமில்லை

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *