ஹாய் சச்சின்

 

நீங்களுமா?

புருட்டஸைப் பார்த்து சீசர் கேட்ட கேள்வியை இன்று ஒரு சீசரைப் பார்த்து இந்த இளந்தமிழன் கேட்க நேர்ந்துவிட்ட வேதனையை வெறும் வார்தைகள் சொல்லிவிட முடியாது.

சினிமா, வர்த்தகம், கல்வி, இலக்கியம், இதழியல் என்று வெவ்வேறு துறைகளில் சம்பாதித்த புகழை அரசியலில் முதலீடு செய்து ஆதாயம் பார்த்த எத்தனையோ பேரை இந்த தேசம் பார்த்து விட்டது. அந்தப் பட்டியலில் இப்போது நீங்களுமா?

உலக அரங்கில் எத்தனையோ முறை இந்தியாவிற்குக் கெளரவம் தேடித் தந்திருக்கிறீர்கள். அதற்குக் கைமாறாக இந்தியா உங்களைப் பலமுறை கெளரவித்திருக்கிறது. இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருதளித்து மகிழந்திருக்கிறது. விமானங்கள் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியதென்ற போதிலும், விமானப்படையின் உயர்ந்த பதவியான குரூப் கேப்டன் என்ற பதவியை அளித்தது. பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்த உங்களுக்கு இரண்டு இந்தியப் பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் அளித்து கெளரவித்தன. இந்தத் தருணங்களில் எல்லாம் என்னைப் போன்ற இந்தியர்களின் உள்ளம் வாழ்த்துக்கள் சச்சின், என்ற வார்த்தைகளைத்தான் உதிர்த்தன. ஆனால் இப்போது அதே இதயம் ஐயோ பாவம் என்று அனுதாபம் கொள்கின்றன.

எதற்கு இந்த அனுதாபம்?உடைத்தே சொல்லிவிடுகிறேன். ஒளிவு மறைவில்லாமலேயே பேசுவோம், உங்களைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறார்கள் சச்சின். உங்களுக்கு இருக்கும் நற்பெயரை (புற்றுநோய்க்கு எதிரான இயக்கத்திற்கு நன்கொடை கேட்டு நீங்கள் டிவிட்டரில் விடுத்த வேண்டுகோளுக்குச் சில மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் குவிந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது) ஓட்டுக்களாக மாற்றுகிற உள்நோக்கம் உங்களுக்கு எம்.பி.பதவி அளிப்பதில் ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குப் புரியவில்லையா, சச்சின்?

அவர்கள் அரசியல்வாதிகள்.எப்படியாவது வெற்றியை எட்டிவிட வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். பணத்தை வாரி இறைக்க வேண்டுமா? பதவியை வீசி வலை விரிக்க வேண்டுமா? அதிகாரத்தைக் கொண்டு மிரட்ட வேண்டுமா? கொள்கைகளைத் தூக்கி வீச வேண்டுமா? மதுவைத் திறந்து விட்டு மயக்க வேண்டுமா? அரசுப் பணத்தில் இலவசங்களை இறைத்து மக்களை ஏமாற்ற வேண்டுமா? ஆளுக்குத் தக்கபடி அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை தேசம் கண்டிருக்கிறது,

அப்படித்தான் உங்களையும், உங்கள் வழியே உங்களைக் கடவுளாகக் கருதும் இளைஞர்களையும் ஈர்க்கப் பார்க்கிறார்கள், அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் நீங்கள் எப்படி அதற்கு சம்மதிக்கலாம்? எனக்கு வேண்டாம் இது என்று ஏன் உங்களால் மறுக்க முடியவில்லை? நான் வரவில்லை இந்த விளையாட்டிற்கு என்று ஒதுங்க முடியவில்லை?

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் சாதனை நூறு சதம் அடித்ததோ, ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்ததோ, ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததோ மட்டும் அல்ல. இருபது வருடமாக உலக அளவில் ஆடி வருகிறீர்கள், ஆனால் யாரையும் கடிந்து பேசியதில்லை. விமர்சனமாக வார்த்தைகளைக் கொட்டியதில்லை வசைபாடியதில்லை. வெற்றிக் களிப்பில் மைதானத்தில் சட்டையைக் கழற்றி வீசிவிட்டு ஓடியதில்லை. ஏமாற்றமளித்த நேரங்களில் எதிரியைக் கெட்டவார்த்தை சொல்லித் திட்டியதில்லை பதற்றமும் பொறாமையும் நிறைந்த விளையாட்டு உலகில் இந்தப் பக்குவம் ஒரு சாதனை.

ஆனால் சச்சின் அரசியல் விளையாட்டின் விதிகள் வேறு. அங்கு துதிபாடலும் வசைபாடலும் வாடிக்கை. அந்த விளையாட்டில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானல் நீங்கள் உங்களை இழக்க வேண்டும். அதற்கு நீங்கள் தயாராக இருந்தாலும் நாங்கள் தயாரில்லை.

துணிந்து நோ சொல்லுங்கள். தூக்கி எறியுங்கள் இந்த எம்.பி பதவியை. உங்கள் சாதனை மகுடத்தில் அது இன்னொரு மணியாக ஒளிரும்

இன்னும் நம்பிக்கையிழக்காத

இளந்தமிழன்

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *