மாண்புமிகு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு

இலக்கியச் சிந்தனையில் ஆர்வம் கொண்டவர் என்பதனால் இந்தக் கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இது ஒரு ரஷ்யக் கதை. பனி கொட்டுகிற ஒரு மாலையில் நாடகம் பார்க்க வருகிறார் ஒரு சீமாட்டி. நாடகம் குளிர் நாட்களில் ஏழைபடும் பாட்டைப் பற்றியது. நாடகக் காட்சிகள் அவர் நெஞ்சை உருக்குகின்றன. காட்சிகளைக் கண்டு குடம் குடமாய்க் கண்ணீர் வடிக்கிறார். அதே சமயம்-

அரங்கிற்கு வெளியே அவருக்கு வண்டியோட்டி வந்தக் குதிரைக்காரர் குளிர் தாங்காமல் விறைத்துக் கொண்டிருக்கிறார்!.

உணமையிலேயே அந்தச் சீமாட்டிக்கு ஏழைகள் மீது இரக்கம் இருந்திருக்குமானால் அவர் அந்த வண்டியோட்டிக்கும் ஒரு சீட்டு வாங்கி அரங்கத்திற்குள் அழைத்து வந்திருக்கலாம். குறைந்த பட்சம் கம்பளி ஒன்றையாவது அவருக்கு அளித்திருக்கலாம். ஆனால் அவர் செய்தது என்னவோ ஜோடிக்கப்பட்ட காட்சிகளைக் கண்டு கண்ணீர் உகுத்ததுதான்.

யதார்த்தங்கள் இதோ உங்களுக்கு மிக அருகில், உங்கள் வீட்டு வாசலில் வந்தமர்ந்திருக்கின்றன. ஆனால் அறிவின் வழியாக மட்டும் வாழ்க்கையைத் தரிசிக்கிறவர்கள் அதை ஒரு போதும் உணர்ந்து கொள்வதில்லை.

அதை உங்களது பெங்களூரு பேச்சு எனக்கு இன்னொருமுறை உறுதி செய்தது.

நாம் 20 ரூபாய் கொடுத்துக் கோன் ஐஸ்க்ரீம் வாங்குகிறோம்; 15ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்குகிறோம். ஆனால் அரிசியோ, கோதுமையோ ஒரு ரூபாய் விலையேறிவிட்டால் குரலெழுப்புகிறோம் அந்தப் பணம் விவசாயிக்குப் போகிற பணம்  என்று மத்தியதர வர்க்கத்தைச் சாடியிருக்கிறீர்கள்.

’நாம்’ என்ற சொல்லைப் பயன்படுத்திக்  ’குரல் எழுப்பும்’ மத்தியதர வர்க்கத்தில் உங்களையும் சேர்த்துக் கொண்டிருக்கும் உங்கள் மதியூகத்தை மெச்சுகிறேன். ஆனால் செட்டி நாட்டரசர் பரம்பரையில் வந்த செல்வச் சீமான்களும், சின்னக் கம்பெனியில் எழுத்தர் வேலை பார்க்கிறவர்களும் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் எனச் சின்னக் குழந்தைகூட ஏற்காது. மத்தியதர வர்க்கத்தின் வலிகளை, அறிக்கைகள் மூலமாகவும் புள்ளிவிவரங்கள் வழியாகவுமே அறிந்து கொள்கிற உங்களால் அதனை ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது. பசி என்ற வார்த்தையை அறிந்தவர்கள் எல்லாம் பசியை அறிந்தவர்களா? சொல்லுங்கள் ப.சி. அவர்களே!

மத்தியதர வர்க்கம் இன்று எதனையும் இலவசமாகப் பெறுவதில்லை. கல்வி, மருத்துவம், வீட்டு வசதி, வேலைவாய்ப்பு போக்குவரத்து, பொழுதுபோக்கில் துவங்கி குடி தண்ணீர் வரை  எல்லாவற்றையும் அவர்கள் காசு கொடுத்தே பெறுகிறார்கள். அவர்கள் நிறைவேற்றிக் கொள்கிற அவர்களது ஒவ்வொரு தேவைக்குப் பின்னாலும் அவர்களது வியர்வை இருக்கிறது. அவர்கள் மின்சாரம்,சட்டம் ஒழுங்கு, விலைவாசி இவற்றைத் தவிர வேறெதையும் அரசாங்கங்களிடம் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால் அரசாங்கமோ வரிகள் வாயிலாகவும், கட்டண உயர்வின் மூலமாகவும் ஒவ்வொருநாளும் அவர்கள் முதுகில் சுமையேற்றிக் கொண்டிருக்கிறது., அதையெதிர்த்து அவர்கள் கூப்பாடு போடுவதில்லை, கூச்சல் எழுப்புவதில்லை, எப்போதாவது மெல்ல முனகுகிறார்கள், அது கூடத் தவறாகத் தோன்றுகிறது உங்களுக்கு.

உங்கள் பேச்சைப் படித்த முதல்வாசிப்பில், தன் நலனைத் தாண்டி வேறு எது குறித்தும் சிந்திக்காத மத்தியதர வர்கத்தின் சுயநலனை ஒருவர் துணிச்சலாகவேத் தோலுரித்துக் காட்டுகிறார் என்றே நினைத்தேன். மறுநாளே நான் அந்த அர்தத்தில் சொல்லவில்லை என மழுப்பிவிட்டீர்கள்,

ஒருகாலத்தில் இந்தியாவில் மாற்றங்கள் பலவற்றிற்ற்கு விதையூன்றிய மத்தியதர வர்க்கம் ஏன் இன்று தன்நலம் சார்ந்த வட்டத்திற்குள் தன்னை முடக்கிக் கொண்டிருக்கிறது? வாழ்கைப் போராட்டத்தைத் தவிர வேறெதனைக் குறித்தும் அதனைச் சிந்திக்க விடாமல் செய்தது யார்? காசைத் தவிர வேறு எதுவும் குறித்து அவர்கள் கவனம் திரும்பி விடாமல் கட்டிப் போட்டிருப்பது எது? நீங்கள் அறிமுகம் செய்த தனியார்மயக் கொள்கைகளும், அதனை அடியொற்றி நுழைந்த நுகர்வுக் கலாசாரமும்தான் என்பதை நீங்களே அறிவீர்கள்.

விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்தியதரவர்க்கம் இருப்பதைப் போன்று நீங்கள் தீட்டியிருக்கும் சித்திரம் வேதனையளிப்பது மட்டுமல்ல, விஷமத்தனமானதும் கூட. விளைநிலங்களை அரசே ஆர்ஜிதம் செய்து தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது, தண்ணீருக்குக் கூட விலை விதிப்பது, விளைபொருளுக்கு நியாயமான விலை தர மறுப்பது, உரத்திற்கான மானியத்தைக் குறைப்பது என உங்களது கொள்கைகள்தான் அவர்களை வறுமைக்குள் தள்ளியிருக்கிறது. வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறேன். கடந்த பத்தாண்டுகளில் அரசாங்கம் வேளாண்துறையைக் கைகழுவி விட்டதுதான் நாம் இன்று சந்திக்கும் பல பிரச்சினைகளுக்குக் காரணம். இந்தப் பத்தாண்டுகளில் நீங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறீர்கள் என்பதும் உங்களால் மறுக்க முடியாத உண்மை.

உண்மையிலேயே நீங்கள் விவசாயிகளுக்கு உதவ நினைத்தால், உர மானியத்தை அதிகப்படுத்துங்கள், இயற்கை விவசாயத்தை பிரபலபடுத்துங்கள், விதைகளை இலவசமாகத் தாருங்கள், தாரளமாகத் தண்ணீரும், தடையின்றி மின்சாரமும் கிடைக்கச் செய்யுங்கள். பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தருகிற சலுகைகளில் பத்தில் ஒரு பங்கையாவது அவர்களுக்குத் தாருங்கள். அதை மத்திய தர வர்க்கம் மறித்து நிற்காது.

அதைவிட்டு ஒரு தாய் மக்களை ஒருவருக்கெருவர் எதிராக நிறுத்தி அவர்கள் பூசலில் ஆதாயம் தேட நினைப்பது அந்த பிரிட்டீஷ்காரர்கள் பின்பற்றிய உத்தி. விளையாட்டாகவேனும் அதனைக் காங்கிரஸ் கையிலெடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அதன் விளைவுகள் நெடுங்காலத்திற்கு விபரீதங்களை ஏற்படுத்தும்

மத்தியதர வர்க்கத்தின் மனக்குமுறல்களுடன்,

இளந்தமிழன்

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *