வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர்

கிடைத்தால் படியுங்கள்

EDITOR’S CHOICE

நான் பார்ப்பதையெல்லாம் படிப்பதில்லை.படிப்பதெல்லாமும் பிடிப்பதுமில்லை. படித்ததில் பிடித்ததை புதிய தலைமுறை வாசகர்களோடு  பகிர்ந்து கொள்கிறேன். இது அறிமுகம்தான், விமர்சனம் அல்ல- மாலன்

வறுமைக் கோடுகளால் வாழ்வின் வரைபடம்

நான் கலந்து கொள்ளும் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கான பயிலரங்குகளிலிருந்து, பன்னாட்டு வல்லுநர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள் வரை என்னிடம் வீசப்படும் கேள்வி ஒன்றுண்டு. பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை எப்படி ஊடகங்களில் எடுத்துச் செல்லப்போகிறீர்கள் என்பதுதான் அது. சவாலான காரியம்தான். ஓசோன் கிழிவு, கரிமப்படிவு, வளிமண்டலம், பசுங்குடில் வாயுக்கள்,புவி வெப்பம், எனப் பல அறிவியல் தகவல்களின் அடுக்குகளின் ஊடே எளிய மனிதனுக்கு விஷயத்தை எடுத்துரைப்பது சவாலான செயல்தான். புனைகதைகளின் ஊடாகச் சொல்ல முயற்சியுங்களேன் என்று கூட ஒரு யோசனை முன் வைக்கப்பட்டது. ஆனால் புவி வெப்பம் குறித்து மிகையான புனைவுகளோடு அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் அல் கோர் தயாரித்த Inconvenient truth படத்தை நார் நாராகக் கிழித்த இங்கிலாந்து நாளிதழ் டெய்லி மெயில் புவி வெப்பம் என்பதே ஓர் புனைவு எனச் சாடியிருந்தது.கையைக் குழித்து குனிந்து கோரிய ஆற்று வெள்ளம் விரல் இடுக்குகளின் வழியே ஒழுகி ஓடிவிடுவதைப் போல புனைகதை வழியே சொல்லப்படும் அறிவியல் உண்மைகள் தோலைத் துளைத்து உட்செல்லாமல் நழுவி விடும் ஆபத்து உண்டு

பல்லிடுக்கில் சிக்கிக் கொண்ட பழ நாரைப் போல இந்தக் கேள்விகள் மனதை படுத்திக் கொண்டிருக்க, என்ன செய்திருக்கிறார் என் நண்பர், பார்ப்போம் என்றுதான் வைரமுத்துவின் புத்தகத்தைப் பிரித்தேன்.

ஊடும் பாவுமாக இரண்டு இழைகளை எடுத்துக் கொண்டு கதையை நெய்திருக்கிறார் கவிஞர். இதயத்தைக் கசிய வைக்கும் ஏழை விவசாயியின் குடும்பக் கதை ஒன்று.அறிவைச் சீண்டும் வல்லுநர்களின் வாதங்களால் வனப்புறும் தளம் ஒன்று. இரண்டையும் இணைக்கும் சரடாக சின்னப் பாண்டி என்று ஓர் இளைஞன். திண்டுக்கல்லுக்கு கிழக்க, தேனிக்கு மேற்கே தெக்கு வடக்குத் தெரியாது அவனுக்கு என்று அவனது தந்தை வாயிலாக ஆசிரியர் சொல்கிறார். ஆனால் அவன் ஓர் உலகக் குடிமகன். பிறந்த மண் மீது நேசமும், விரிந்த உலகை வினவும் தாகமும் கொண்ட தமிழன்.எனக்கென்னவோ அந்த இளைஞன் அசைப்பில் வைரமுத்துவைப் போலிருக்கிறான் எனத் தோன்றுகிறது .

இரு வேறு உலகங்களுக்கு ஏற்ப, இரண்டு வித நடைகளில் கதையை விரித்துச் செல்கிறார்.இரண்டு தமிழுமே இதமாக மனதை வருடுகின்றன. ஆனால் மண்வாசனை வீசும் தேனி மாவட்டத் தமிழ் தித்திக்கிறது. எடுத்துக்காட்டுக்களால் இந்தப் பக்கத்தை நிறைக்கப் போவதில்லை. என்றாலும் இரண்டொன்றாவது சொல்லாமல் எனக்குத் தீராது. “ஐப்பசி கார்த்திகையில் அருகம் புல்லு தழவு கொடுக்கிற மாதிரி படந்து வருதய்யா பய புள்ளைக்கு மீச” “சல்லிக்கட்டு மாடு முட்டின மாதிரி சரிஞ்சு கெடக்கிற கட்டில உட்காந்து சண்டைப்பாம்பு மாதிரி தஸ்ஸு புஸ்ஸுனு மூச்சு விட்டுக்கிட்டிருக்கிறான் முத்துமணி”

வர்ணனைகள் மட்டுமல்ல, சமூக யதார்த்தங்களைச் சுட்டுகிற வார்த்தைகள் சாட்டையடிகளாக விழுகின்றன. “இலவசத்தில் வாழப்பழகியவர்கள் மதுரசத்தில் மூழ்கிப் போனார்கள் உழைக்க முடியாத ஊனமுற்றவர்களுக்கும், கைவிடப்பட்ட முதியவர்களுக்கும் அனாதைக் குழந்தைகளுக்கும், ஆதரவற்ற நோயாளிகளுக்கும்தானே இலவசம் பொருந்தும். ஊற்பத்தி பெருக்காத இலவசம் உற்பாதம்தானே விளைக்கும்?” “இன்னிக்குப் பணக்காரந்தான் தேர்தல நிக்க முடியும்; பசையுள்ளவன்தான் வெவசாயம் பண்ண முடியும்னு ஆகிப்போச்சு”  “பேருனா வெறும் பேரா? அதில ஊரும் மண்ணும் ஒட்டியிருக்கணுமா இல்லியா? வெள்ளைக்காரன் எவனும் விருமாண்டினு பேரு வைக்கிறானா? பெரியக்கானு பேரு வைக்குமா பிரியங்கா? தண்டுச்சாமினு வைச்சுப்பானா டெண்டுல்கரு?”

அதெல்லாம் சரி. ஆரம்பத்தில் சொன்ன அறிவியல் நெருக்கடிகளைப் பற்றிப் பேசுகிறாரா? ம். பருவ நிலை மாற்றம் சுனாமி, எண்ணைக் கசிவு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது எனப் பல செய்திகளை ஆங்காங்கே பேசுகிறார். ஆனால் அவை தக்கையில் செய்த தாஜ்மகால்கள். வாழ்க்கையைப் பற்றிய வரிகளோ கல்வெட்டின் கனத்தோடு கம்பீரமாய் நிற்கின்றன

மூன்றாம் உலகப் போர் –வைரமுத்து- சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட். சென்னை 24 விலை ரூ 300/=

One thought on “வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர்

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *