கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல்
முன்னெப்போதையும் விட, இன்று தமிழ் எழுத்துலகம், ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. பெரும் சாதனைகளும் சவால்களும் அதன் முன் விரிந்து கிடக்கின்றன. இன்று அவற்றை அது எப்படி எதிர்கொள்வது என்பதைப் பொறுத்தே அதன் நாளைய வரலாறு இருக்கும்.

இன்று தமிழிலக்கியம் என்பது தமிழ்நாட்டில் எழுதப்படும் இலக்கியம் மட்டுமல்ல. ‘வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ என்று பனம்பரனார் வகுத்த எல்லைகளை என்றோ தமிழ் தாண்டிவிட்டது. இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமே தெளிவாக ஐநூறு ஆண்டுகால வரலாறு இருக்கிறது. பாரம்பரியமாகத் தமிழ் பேசப்படும் ஆசிய நாடுகளான இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் மட்டுமல்ல, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் கனடா, அமெரிக்கா ஆகிய வட அமெரிக்க நாடுகளிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்தும் இன்று தமிழ்ப் படைப்புகள் வெளியாகின்றன. ஆங்கில இலக்கியம், அமெரிக்க இலக்கியம், லத்தீன் அமெரிக்க இலக்கியம், ஆஸ்திரேலிய இலக்கியம், இந்திய இலக்கியம், மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியங்கள், கறுப்பின இலக்கியம் எனப் பலவாய் ஆங்கில இலக்கியம் கிளைத்து நிற்பதைப்போலே இன்று தமிழ் இலக்கியம் உலகின் பல திசைகளிலிருந்தும் செழுமைப்படுத்தப்படுகிறது. கால தேச எல்லையைக் கடந்த மின்வெளியிலிருந்தும் அது கொடைகள் பெறுகிறது. தேச எல்லையைக் கடந்ததைப் போலவே அது இன்று பால் பேதத்தையும் கடந்து நிற்கிறது.

காலனி ஆதிக்கத்தின் காரணமாகக் கிடைத்த அரசியல் அதிகாரத்தையும், பின் அது சார்ந்த பொருளியல் வளர்ச்சியால் கிடைத்த மேலாண்மையையும் கொண்டு ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. ஆங்கில மொழியின் பரவலுக்கு ஆங்கிலேயர்களின் அரசியலும், அமெரிக்கர்களின் பொருளாதாரமும் காரணிகளாக அமைந்தன. ஆனால் தமிழர்கள் அரசியல் அதிகாரம் பெறாத நிலையிலும், பொருளாதார வெற்றிகளைப் பெரிதாக ஈட்டாத நிலையிலும் தமிழ் உலகெங்கும் பரவிக் கிடக்கிறது.

தனது மனைவி கேட்கும் திறனை இழந்தபோது அவருக்கு உதவுவதற்காக காது கேட்கும் கருவி ஒன்றை செய்ய முற்பட்டார் கிரஹாம் பெல் என்ற ஆராய்ச்சியாளர். அவரால் அந்த முயற்சியில் வெற்றி காண முடியவில்லை. ஆனால் அவரது ஆராய்ச்சியின் பயனாகத் தொலைபேசி பிறந்தது. ஒரு துக்கம் ஒரு சாதனை நிகழக் காரணமாயிற்று. அதுபோல இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தமிழருக்கு ஏற்பட்ட துயரம், தமிழ் கூறும் நல்லுலகம் பரந்து விரியக் காரணமாயிற்று.

தமிழர்கள் தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் தங்கள் மொழியையும் இலக்கியத்தையும் எடுத்துச் சென்றார்கள். அதற்குக் காரணம் மொழி தமிழர்களுக்கு வெறும் தகவல் தொடர்புக் கருவி மட்டுமல்ல, அது அவர்களது கலாசார அடையாளம்.

மொழி சார்ந்த அடையாளமும், உலகு தழுவிய பார்வையும், ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதற்கு சங்கத் தமிழ் இலக்கியங்கள் சான்று. சங்கத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பல சிந்தனைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில், உலகில் ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசி வாழ்ந்த சமூகத்திற்கு மாத்திரம் பொருத்தமுடையனவாக நின்றுவிடவில்லை. எல்லாக் காலத்திற்கும், எல்லா சமூகத்திற்கும், எல்லா மொழியினருக்கும் பொருந்துவனவாக இருப்பது தமிழ் மொழி தரும் ஆச்சரியங்களில் ஒன்று, ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று சொன்ன கணியன் பூங்குன்றன், ‘செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பம் எனினே தப்புந பலவே’ என்று எச்சரித்த மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரன், ‘கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே’ என்று சுட்டிக் காட்டிய ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், ‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான் எல்லோரும் உவப்பது’ என்று புத்தி சொன்ன நரிவெரூ உத்தலையார், ‘யானை வேட்டுவன் யானையும் பெறுமே, குறும் பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே’ என்று யதார்த்தம் பேசிய கோப்பெருஞ் சோழன், ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்று வியந்து அதற்குக் காரணமான மனிதர்களை அடையாளம் காட்டிய கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி என்று பலர் என்றும் பொருந்தும் வாழ்வியல் உண்மைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதை சங்க இலக்கியத்தில் படிக்கிறோம்..

திருக்குறளில் காணப்படும் அறம் பற்றிய கருத்துக்கள், அரசியல் நிர்வாகம் பற்றிய யோசனைகள், மனிதர்களின் பண்புகள் குறித்த சிந்தனைகள் இன்றும் உலகு முழுக்கப் பொருந்தத்தக்க பொதுத் தன்மை கொண்டிருப்பது (universality) மற்றுமொரு சான்று.

ஆனால் இன்று தமிழர்கள் எழுதும் படைப்புகள் உலகு தழுவிய பொதுத் தன்மை கொண்டிருக்கின்றனவா? என்பது ஒரு கேள்வி.
தமிழ் மாத்திரம் தனியொரு மொழியாக வழங்கிய சமூகத்தில் கணியன்கள் தோன்ற முடியும், பல மொழிகள் வழங்கும் சமூகத்தில், இலக்கியத்தை ஒரு கலாசார அடையாளமாகக் காணும் சமூகத்தில், இலக்கியம் பொதுப் பண்புகள் கொண்டிருக்க வேண்டுமா? கொண்டிருக்க முடியுமா? என்பன துணைக் கேள்விகள்.

உலகு தழுவிய பொதுப் பார்வை என்பது இல்லாது போயினும், பல்வேறு நாடுகளிலிருந்து வெளியாகும் தமிழ் இலக்கியம் தன்னுள்ளேனும் பொதுப் பண்புகளைக் கொண்டிருக்கிறதா என்பது இன்னொரு கேள்வி.

உலகின் பல்வேறு மொழிகளில் இன்று எழுதப்படும் இலக்கியங்களோடு தமிழ் இலக்கியம் ஏதேனும் பொதுத் தன்மைகள் கொண்டிருக்கிறதா என்பது மற்றொரு கேள்வி.

உலகப் பயணம் செல்லும் பயணிபோல் ஆவலும் உற்சாகமும், குறுகுறுப்பும் ததும்ப இந்தக் கேள்விகளுக்கு விடை காணப் புறப்படுகிறேன். கடற்கரையில் சிப்பி பொறுக்கும் குழந்தை போல அகப்படுவதையெல்லாம் அள்ளிச் சேகரிக்கிறேன். என் கையில் வைரத்தில் பிழை பார்க்கும் ‘பூத’க் கண்ணாடி இல்லை. குங்குமப் பூவை எடை போடும் நுட்பம்கொண்ட தராசு இல்லை. ஆனால் மனதில் மனிதர்கள் மீது பிரியமும், மொழியின் மீது நம்பிக்கையும் நிறைந்து கிடக்கிறது. அந்த வெளிச்சத்தில் எனக்குக் கிடைத்ததை ஆராய முற்படுகிறேன்.

ன்றையத் தமிழ் இலக்கியம் உலகு தழுவிய பார்வை கொண்டிருக்கிறதா, குறைந்தபட்சம், உலகெங்கும் வாழ்கிற தமிழ் சமூகத்தின் பொதுப் பிரச்சினைகளைக் கருக் கொண்டிருக்கிறதா என்று தேடப் புகுந்தபோது நினைவிற்கு வந்தது ‘தேடல்’என்ற அந்தக் கதை. அது எழுதப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதை எழுதிய நா. கோவிந்தசாமியும் நெடுநல் உளனொருவன் என்னும் வாக்கிற்கேற்ப இன்றில்லை, ஆனால் அந்தக் கதை பேசும் பிரச்சினைகள் இன்றும் உயிர்த்திருக்கின்றன. அப்படி என்ன சொல்கிறது அந்தக் கதை?

‘தனி மனித வழிபாடு மந்தைக் கூட்டத்தை உருவாக்குமே தவிர சிந்தனைவாதிகளை உருவாக்காது’

தமிழ்நாடு, இலங்கை இவற்றின் அரசியலை அணுகிப் பார்த்தால், அவை இந்தக் கருத்தை ஆமோதித்துத் தலை அசைக்கும். துன்பங்கள் எல்லாம் நொடிப் பொழுதில் ஒரு தனி மனிதனால் தீர்ந்து போவதாகக் காலங் காலமாகத் தமிழ் சினிமா காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அறிவுலகம் என்று நம்பப்படும் எழுத்துலகிலும் வீர வணக்கத்திற்குக் குறைவில்லை. நவீன எழுத்துலகம் ஏற்படுத்தித் தந்திருக்கும் மடங்களுக்கும், பீடாதிபதிகளும் ஏராளம்.

‘தனிமனித வழிபாட்டுச் சிந்தனையிலிருந்து விடுபட்டு ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு பக்குவத்தை’தமிழ் சமூகம் அடையவில்லை என்பது ஆசிரியரின் ஆதங்கம். சிங்கப்பூர் சூழல் என்பதை மறந்துவிட்டுப் படித்தால், அந்தக் கதை உலகெங்கும் வாழுகிற தமிழர்களுக்கு ஏதோ ஒருவகையில் பொருந்துகிற விஷயத்தை முன்வைக்கிறது.

சிந்தனையின்றி தனிமனித வழிபாட்டில் தமிழ் சமூகம் இறங்கிவிடுவது குறித்த கோவிந்தசாமியின் கவலை, வேறு ஒரு கோணத்தில், லதாவின் மேய்ப்பன் கவிதையில் வெளிப்படுகிறது. ‘ஒரு தலைவன், அவனைச் சுற்றி ஒரு கூட்டம், அவன் செல்லும் வழியில் கண் மூடித்தனமாக நடப்பது, அவன் கூறுவதை வேதவாக்காக ஏற்பது, அவன் மறைவிற்குப்பின் அவன் படத்திற்கோ, சிலைக்கோ, மாலை போட்டு சூடம் சாம்பிராணி காட்டித் தெய்வமாக்கிவிடுவது’ என்று தொண்டரடிப் பொடிகளின் மனோபாவத்தைப் பட்டியலிட்டுக் கொண்டு போகிறார் கோவிந்தசாமி. அந்தத் தொண்டர்களது நிர்பந்தத்தால் தலைவனும் மந்தையில் ஒருவனாகி விடுகிற விபரீதத்தை நினைவூட்டுகிறார், லதா.

அவர் பின்னே எல்லோரும் நடந்தோம்.
அவர் மேய்ப்பவராக
நாமெல்லாம் ஆட்டு மந்தைகளாகத் தொடர்ந்தோம்

ஒருநாள் ஒருவர்
ஏன் நடக்க வேண்டும் என்று சிந்தித்தார்
எல்லோரும் சத்தம் போட்டார்கள்
அவர் சிந்தனையைக் கலைத்துவிட்டு
கூட்டத்தோடு இணைந்தார்

நீண்ட நாள் கழித்து அவர் மகன் கேட்டான்
‘ஏன் நாங்கள் நடந்துகொண்டே இருக்கிறோம்?’

‘இதுவரை எந்தக் கஷ்டமும் இல்லை’
‘நடந்து நடந்து உங்களுக்குக் கால்களே இற்றுப் போய்விட்டன.
உங்களுக்கு வலியில்லை
கால்களை நான் இழக்க மாட்டேன்’

தன் கால்களின் உறுதி பார்க்க அவன் நின்றான்
பெருநடை தடைபட்டது
எல்லோரும் சத்தம் போட்டார்கள்
அவன் சிலையாக நின்றான்.
ஒருவர் கல்லெடுத்து அடித்தார்

நடப்பதை நிறுத்திவிட்டு அவன் மேல்
கல்லெறியத் தொடங்கினர்

தன் கையிலும் கல்லிருப்பதைக் கண்டு மேய்ப்பன் திகைத்தார்

கல்லடி பட்டவன் சிரித்துக்கொண்டே சொன்னான்
‘என்றைக்குமே இது நல்ல வாத்துக் கூட்டம்’

ஒரு நல்ல இலக்கியம் அந்த எழுத்துக்கு அப்பாலும் இட்டுச் செல்வதை வாசகன் என்ற நிலையில் அனுபவபூர்வமாகவே உணர்ந்திருப்போம். சிறந்த இலக்கியங்களாகப் போற்றப்படுகிற எல்லாப் படைப்புக்களும், அது ராமாயணமானாலும் சரி, டால்ஸ்டாயின் குற்றமும் தண்டனையுமானாலும் சரி, ஷேக்ஸ்பியரின் நாடகங்களானாலும் சரி, duality என்ற இருமுகப் பண்பைத் தன்னிடம் கொண்டிருக்கும். கதை நிகழும் ஒரு குறிப்பிட்ட காலத்தை, களத்தை, பாத்திரங்களைத் திறம்பட சித்தரிக்கும் அதே சமயம், அவற்றைத் தாண்டி, மனித குலம் முழுமைக்கும் பொருந்துவதான ஒரு இருமுகம் அந்தப் படைப்புக்குள் இருக்கும். அதனால்தான் அந்தப் படைப்புக்களை எப்போது படித்தாலும் அவை அர்த்தமுடையதாகத் தோன்றும்.

கோவிந்தசாமியின் கதையிலும், லதாவின் கவிதையிலும் அந்த இரு முகத் தன்மை காணப்படுகிறது. அதேபோன்று இந்த இரு முகத் தன்மை கொண்ட இன்னொரு படைப்பு, இளங்கோவனின் ‘தலாக்’. ஒரு இஸ்லாமியப் பெண்ணின் பிரச்சினைகளைப் பேசுவது போன்ற கதையம்சத்தை அது கொண்டிருந்தாலும், அது ஆண் முதன்மைப்படுத்தப்படும் ஓர் அமைப்பில், அது சமூகமானாலும் சரி, குடும்பம் ஆனாலும் சரி, அறங்களில் உள்ள பிறழ்வுகளைப் பேசுகிறது. வேறு ஒரு தளத்தில் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, பெரும் போராட்டத்திற்குப் பின்னரே நமது உரிமைகளைப் பெற நேர்கிறது என்பதையும், அவற்றைப் பெறுவதற்காக அந்தப் போராட்டத்தில் நாம் இழப்பவை நாம் பெறுவதை அர்த்தமற்றதாக்கி விடுகிறது என்பதையும் கசப்புடன் உணர்த்துகிறது.

அண்மைக் காலத்தில் வெளியான இந்த மூன்று படைப்புக்களும் உலகின் மற்றப் பகுதிகளில் எழுதப்படும் காத்திரமான தமிழிலக்கியத்திற்கு நிகராக சிங்கப்பூர் தமிழிலக்கியம் இனிவரும் நாட்களில் எழுதப்படும் என்பதன் ஆரம்ப சூசகங்களாகவே தோன்றுகின்றன.

புதிய துவக்கங்களை முயற்சிப்பதற்கு சிங்கப்பூர் எப்போதும் தயங்கியதில்லை. ‘ஒரு சம்பாஷணை’ ஓர் உதாரணம்.

விக்டோரியா பேரரசி முடி சூட்டிக் கொண்டதின் வெள்ளி விழா நினைவாக 1887ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி சிங்கப்பூரில் துவக்கப்பட்ட ‘சிங்கை நேசன்’ வார இதழின் ஆசிரியர் ‘சிகு’ மகதும் சாயபுவால் எழுதப்பட்ட ‘ஒரு சம்பாஷணை’தமிழின் ஆதி சிறுகதைகளில் ஒன்று. உரைநடையில் எழுதுவது அவ்வளவு கௌரவமான காரியமாக இலக்கிய உலகில் கருதப்படாத காலம் இது. சாயபு தன் கதையை எழுதுவதற்கு 9 ஆண்டுகளுக்கு முன் மாயூரம் வேதநாயகம் தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியிருந்தார். எனினும் அது உரைநடையில் எழுதப்பட்டிருந்ததால் தமிழறிஞர்கள் அதற்கு முன்னுரை எழுத சம்மதிக்கவில்லை. இறுதியில் வேதநாயகமே அதற்கு ஆங்கிலத்தில் முன்னுரை எழுதி வெளியிட்டார். அந்த முன்னுரையின் முதல் வரியே, தமிழுக்கு மிகுதியும் தேவைப்படும் உரைநடையை தரும் பொருட்டு இந்நாவலை எழுதுகிறேன் (My object in writing this work of fiction is to supply the want of prose in tamil, a want which is admitted and lamented by all) என்று தனது செயலை நியாயப்படுத்தித் துவங்கும்.

அந்தச் சூழலில்தான் சாயபு தன் சம்பாஷணையை உரைநடையில் சிறுகதையாக எழுதுகிறார். சிங்கப்பூரில் வாழ்ந்த சிறு வணிகர்களின் வாழ்க்கையைக் கதை விவரிக்கிறது. வாழ்க்கையிலிருந்தே இலக்கியம் விளைகிறது. வெறும் மொழியறிவினால் மட்டுமல்ல என்பதின் சாட்சி அந்தக் கதை.

சிங்கப்பூரின் இலக்கிய வரலாற்றின் நெடுகிலும் வாழ்க்கை நிகழ்ச்சிளைக் கதைகளாக வடித்தெடுக்க நடந்த முயற்சிகள் நிறையவே காணக் கிடக்கின்றன. சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் பொற்காலமாகிய ஐம்பதுகளில் துவங்கி இன்றுவரை வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கதையாகப் பதிவு செய்யும் கதைகள் அநேகம். அந்த சம்பவங்களை வெறும் சம்பவங்களாகப் பார்ப்பதோடு நின்றுவிடாமல் அதன்பின் உள்ள சமூக ஓட்டங்களையும் சிந்தித்து, அந்த சிந்தனைகளை இலக்கியப் புனைவில் ஊற்றித் தந்த இராம.கண்ணப்பன், நா.கோவிந்தசாமி, மா.இளங்கண்ணன், புதுமைதாசன் போன்ற நல்ல படைப்பாளிகளை சிங்கப்பூர் எழுத்துலகம் தமிழுக்குத் தந்திருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பிரச்சினைகளை, வாழ்க்கை அனுபவங்களை எழுதினார்கள். இராம. கண்ணப்பனின் பீடம் தொகுதியில் இடம் பெற்றுள்ள ‘வாழ்வு’ என்ற கதை சிங்கப்பூரில் தமிழ் பயிற்றுவிப்பதில் உள்ள சிரமங்களைச் சொல்லி அதற்கான தீர்வுகளை சிந்திக்கிறது. கோவிந்தசாமியின் வேள்வி, கோவில்களுக்கு ஏராளமான பணம் செலவழிக்கத் தயாராக இருக்கும் சிங்கப்பூர் தமிழர்கள் ஏன் கல்விக்கு செலவழிக்க முன் வர மாட்டேன் என்கிறார்கள் என்ற கேள்வியை ஆராய்கிறது. இவை சிங்கப்பூர் மண்ணிற்கே உரிய பிரச்சினைகள். இவை நிச்சயம் எழுதப்பட வேண்டிய, விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள். அவற்றைப் பதிவு செய்ய வந்த எழுத்தாளர்கள் நன்றியுடன் நினைக்கப்படத்தக்கவர்கள்.

ஆனால் அடுத்த தலைமுறை அதைத் தாண்டி செல்ல முற்படுகிறது. இது ஓர் இயல்பான பரிணாம வளர்ச்சி. மகதும் சாயபு வாழ்க்கையைப் பதிவு செய்தார். 1930களில் எழுதிய ந.பழனிவேலு, சிங்கப்பூர் தமிழர்களிடையே சமூக சீர்திருத்தம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு தந்தைப் பெரியாரின் கருத்துக்களை அடியொற்றி எழுதினார். பின் வந்தவர்கள் வாழ்வு தந்த சிந்தனைகளை பதிவு செய்தார்கள். இன்றுள்ள தலைமுறை அதை ஒரு குறிப்பிட்ட சூழலிலிருந்து விடுவித்து உலகப் பொதுமை (universality) நோக்கி எடுத்துச் செல்கிறது. அதற்கான சான்றுதான், லதாவின் கவிதையும், இளங்கோவனின் நாடமும்.

வந்திருந்த போது
இருமுறை கேட்டான்
தோட்டத்தில் இருப்பது
வாழை மரமா என்று

இருமுறையும் இல்லை என்பதே என் பதில்
மூன்றாவது முறை அவன் வினவவில்லை.

ஒரு வேளை நான் ஏதாவது குறிப்பால் உணர்த்தியிருக்கலாம்
அது என்னவென்று
அப்போதாவது நாங்கள் விவாதித்திருக்கக் கூடும்
வாழை மரம் பற்றி மட்டுமல்ல,
அவன், நான், நாங்கள் என்று

இது சிங்கப்பூரில் எழுதப்பட்ட ஆங்கிலக் கவிதை. ஆனால் தமிழருக்கும், மலாய்க்காரருக்கும், சீனருக்கு நன்கு புரியும். ஏனெனில் வாழ்க்கை ஒன்று. வாழ்க்கை மட்டுமல்ல, பிரச்சினைகளும் ஒன்று.
அந்தக் காலத்தில் தாத்தா போட்ட சட்டம்
தாய் மொழியில் பேசு என்பது
‘ஹோக்கியன் பேசுவோர் ஹோக்கியனாய்ப் பேச வேண்டும்’
ஜாவாவிலிருந்து வந்த பாட்டி மலாய் பேசினாலும்
தாத்தாவின் ஆணைப்படி ஹோக்கியன் பேசியதோடு
நாங்கள் ஹோக்கியன் பேசி வளர்வதில் கவனமாயிருந்தாள்
பிறகு நாங்கள் சைனா டவுனை விட்டு
எமரல்ட் ஹில்லுக்குக் குடியேறினோம்
முத்து, டோலா, போங்சு என்று புது நண்பர்கள் கிடைத்தார்கள்
வேறு வழியில்லாததால் நாங்கள் மலாய் பேசினோம்
பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் ‘ஆங்கிலம் பேசு’ என்றார்
என்ன செய்வது, தப்புந்தவறுமாக ஆங்கிலம் பேசினோம்
தலைகீழாக, கலவையாக, அறுவையாக எல்லாம் பேசினோம்
ஜப்பானியர் வந்ததும் நிப்பான் மொழி பேசினோம்
அவர்களது ஏ பி சி என்பது கத்தாகானா ஆகும். ஆ ஈ ஊ ஹெ ஹோ
பிரச்சினையே இல்லை சும்மா கலந்து விளாசினோம்
இப்போதோ (மரண அழகையாய்) ‘மாண்டரின் பேசுவோம் இயக்கம்’
மாண்டரின்தான் பேச வேண்டும், ஹோக்கியன் கூடாதாம்
மீண்டும் விலாவாரியாய் எழுத்துக் கூட்டிப் படித்துக்கொள்ள வேண்டும்
தொடக்கத்தில் மாண்டரின் பேசுவோம் இயக்கத்தைக் கிண்டலடித்திருக்கலாம்
ஆனால் நாமெல்லாம் கியாசு (தோற்கப் பயந்தவர்கள்) அல்லவா?
அதனால் ஒழுங்காக மாண்டரினில் ‘காலை வணக்கம் ஆசிரியை’சொல்கிறோம்.

இதை எழுதிய சிங்கப்பூர் ஆங்கில எழுத்தாளர் கோ சின் டப்பிற்கு இப்போது வயது 75. ஆனால் இப்போது பள்ளிக்குச் செல்லும் பத்து வயது தமிழ்க் குழந்தையிடம் கேட்டால் ஏறத்தாழ இதே போன்ற அனுபவத்தைச் சொல்லக்கூடும்!

தமிழரோ சீனரோ, சிங்கப்பூரியரது வாழ்க்கை ஒன்று, பிரச்சினைகளும் அநேகமாக ஒன்று. எனவே சிங்கப்பூருக்கான ஒரு பொது தேசிய இலக்கியத்தை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் தர முடியும். உலகெங்கும் வழங்கும் தமிழ் மொழிக்கு அது ஒரு புதுப் பரிமாணம் சேர்ப்பதாகவும் கூட அது அமையும். அது அரும்பும் காலம் இதோ ஆரம்பித்துவிட்டதோ?

லேசிய மண்ணில் எழுதப்படும் தமிழ் இலக்கியம் தனக்கென்று ஒரு போக்கை உருவாக்கிக் கொண்டுவிட்டது. 1930களில் ‘பாரத மித்ரன்’, ‘திராவிட கேசரி’போன்ற மலேசிய (அப்போது மலேயா) பத்திரிகைகள், ‘ஆனந்த விகடன்’, ‘மணிக்கொடி’, ‘கலைமகள்’ போன்ற தமிழகப் பத்திரிகைகளில் பிரசுரமான கதைகளை எடுத்து மறு பிரசுரம் செய்து வந்தன. பின்னர் இரண்டாம் உலகப் போரின்போது, 1942ல் சிங்கப்பூரும் மலேயாவும் ஜப்பானியரின் ஆதிக்கத்தின்கீழ் வந்தபோது, அங்குள்ள தமிழ் பத்திரிகைகள் யாவும் மூடப்பட்டன. சிங்கப்பூரில் நேதாஜி அமைத்த சுதந்திர இந்திய அரசின் ஆதரவில் வெளியான, ‘சுதந்திர இந்தியா’, ‘ஜெயமணி’, ‘சந்திரோதயம்’, ‘யுவ பாரதம்’ஆகிய இதழ்கள் முழுக்க முழுக்க இந்திய விடுதலையை முதன்மைப்படுத்தும் கதைகளையும் கவிதைகளையும், வெளியிட்டு வந்தன. இந்திய விடுதலைக்காக தமிழ் மக்கள் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த போதிலும் அவற்றை தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் எழுத முன்வராத சூழ்நிலையில் மலேயாவில் இருந்த எழுத்தாளர்கள் அந்தப் போராட்டங்கள் குறித்து எழுதியதை நன்றியுடன் நினைத்துப் பார்க்க தமிழ்நாட்டு எழுத்துலகம் கடமைப்பட்டிருக்கிறது (தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் காந்தியின் அறப்போராட்ட அடிப்படையில் கதைகள் எழுதிக் கொண்டிருந்தார்கள்).

ஆனால் இந்தக் கால கட்டத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான எழுத்துக்கள், –ந.பழனிவேலு, திருமதி. ராஜாம்பாள் போன்ற ஓரிருவர் விதி விலக்கு – தமிழ்நாட்டை மனதில் கொண்டு எழுதப்பட்டனவாகவே இருந்தன. அந்தக் கால கட்டத்தில், ‘தமிழ் நேசன்’ ஆசிரியர் திரு. ஆதி.நாகப்பன் எழுதியதைப் போல அங்கு, ‘தமிழ் எழுத்தாளர்களே இல்லை’. அந்தத் தலையங்கத்தைப் படித்துச் சினம் கொண்ட இரண்டு நாராயணன்களால் (சுப.நாராயணன், பைரோஜி நாராயணன்) துவக்கப்பட்ட கதை வகுப்பு காரணமாகவும், ‘தமிழ் நேசன்’ ஆசிரியராகப் பணியாற்றிய கு.அழகிரிசாமியின் இலக்கிய வட்டம் காரணமாகவும் 1950களில் ஒரு பொற்காலத்திற்கு விதையூன்றப்பட்டது. இன்று தமிழ் இலக்கியம் அங்கு தனக்கென ஓர் தனிப்பாணியில் வேர் கொண்டு நிற்கிறது.

இந்திய தமிழர் சமுதாயத்தை மையமாக வைத்து எழுதும் போக்கு முதல் தலைமுறை எழுத்தாளரான மா. இராமையா காலத்திலேயே மாறத் துவங்கி விட்டது. பறிபோட்டு மீன் பிடித்து வாழும் மாலயக்காரர் ஒருவரைப் பற்றிக் கூட அவர் எழுதுகிறார். தோட்டத் துண்டாடல் பிரச்சினையை அடிப்படையாக வைத்து முரசு நெடுமாறன், ‘துண்டாடல் கொடுமை’ என்றொரு கதை எழுதினார். தோட்டப்புறத்தில் ஏழையாகப் பிறந்த குணசேகரன் டத்தோவாகத் திரும்பும் கனவை, ‘வானத்து வேலிகளில்’ எழுதினார் ரெ.கார்த்திகேசு. ஆனால் தோட்டப்புறத் தமிழர்கள் கல்வி பயில துன்பங்களை எதிர்கொள்ளும் யதார்த்தத்தை, ‘கண்ணன் ரிமூவ் வகுப்பில் படிக்கிறான்’ என்ற கதையில் சி.வடிவேலு எழுதுகிறார். இது 1974ல் எழதப்பட்ட கதை. எழுபதுகளுக்கு முன்னதாகவே இந்தியாவை உதறிவிட்டு மலேசிய எழுத்தாளர்கள் தங்கள் பிரச்சினைகளை எழுதத் துவங்கி விட்டார்கள்.

ஆனால் அவர்களால் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் செழுமைப்படுத்திய வடிவங்களை எளிதில் உதற முடியவில்லை. தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வைப் பற்றி எழுதும்போது எம்.ஏ.இளஞ்செல்வன், ஜெயகாந்தனைப் போல அந்த மக்களின் பேச்சு வழக்கை அற்பதமாகக் கையாள்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் மலேசிய நண்பனில், சை. பீர் முகமது எழுதிய சர்ச்சைக்குரிய நாவலான, ‘பெண்குதிரை’யில், நா.பார்த்தசாரதியின் பாணி பளிச்சிடுகிறது. ‘தீபம்’ இதழில் அறிமுகமானவர் பீர் முகமது என்பதால் இது இயல்பானதுதான்.

‘தனி மனித உணர்சிகளையே பெரிதுபடுத்தி எழுதும் ஜெயகாந்தனை விட சமுதாய நடவடிக்கைகளையே தன் கதைகளுக்குக் கருவாகக் கொள்ளும் பார்த்தசாரதிகளே நமக்கு நல்ல வழிகாட்டிகளாக இருக்க முடியும் என எனக்குத் தோன்றுகிறது’ என்று ஓரிடத்தில் எழுதுகிறார் ரெ.கார்த்திகேசு.

ஆனால் இப்போதெல்லாம், அவை வடிவத்தில் கூட இந்தியக் கதைகளைப் பின்பற்றுவதில்லை. வீ. செல்வராஜ் எழுதியுள்ள, ‘பிரதமர் ஆடினால்…’ ஒரு நல்ல உதாரணம். அரசியல் விமர்சனத்தை உள்ளடக்கமாகக் கொண்டு கதைகள் எழுதப்படுவது மலேசியாவில் இருந்துவரும் ஒரு மரபுதான். மலேசிய இந்தியர்கள் தேர்தல் முயற்சிகளில் ஈடுபட்டதை விமர்சித்து மா. இராமையா ‘முடிவு’ என்றவொரு கதை எழுதியதுண்டு. குடியுரிமை கிடைக்காத தமிழர் ஒருவர் அங்குள்ள அரசியல் கட்சியின் அசிரத்தையைக் குறிப்பிட்டு வருந்துவதாக இளஞ்செல்வன் ஒரு கதை எழுதியிருக்கிறார். எனவே கதைகளின் மூலம் அரசியல் விமர்சனம் என்பது மலேசியாவுக்குப் புதிது அல்ல.

ஆனால் செல்வராஜின் கதை இவற்றிலிருந்து வேறுபட்டது. கதையில் கோபக் கனல் கிடையாது. புலம்பல் கிடையாது. சுய பச்சாதாபம் கிடையாது. நுட்பமான அங்கதம் இருக்கிறது. நேரடியான விமர்சனம் எதுவும் கிடையாது. ஆனால் ஆங்கிலத்தில் between the lines என்று சொல்வார்களே, அதைப்போல சொல்லாத சொற்கள் மூலம் கதை சொல்லப்படுகிறது. வாசகன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எழுதப்பட்டுள்ள கதை. இந்தக் கதையைத் தமிழ்நாட்டில் உள்ள ஒருவருடன் விவாதித்தபோது, இப்படியெல்லாம் கூட அங்கு கதைகள் வருகிறதா? என்று வியந்து போனார்.

அவர் வியப்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. அங்குள்ள எழுத்து சுதந்திரம் பற்றி இந்தியப் பத்திரிகையாளர்கள் நன்கறிவார்கள். ஆனால் அது மட்டுமல்ல வியப்பிற்குக் காரணம். ‘மலேசிய தமிழ்ச் சிறுகதைகளின் கதைப் பொருள் பற்றிய பட்டியல் ஒன்றைத் தயாரித்தால், அதில் முதலிடம் பெறுவது தோட்டப்புற சமுதாயமாகவே இருக்கும். அந்த அளவிற்கு தோட்டப்புறத் தமிழ் சமுதாயத்தின் குடும்ப அமைப்பு, எண்ணப் போக்குகள், கல்வி நிலை, குடியுரிமைப் பிரச்சினைகள், முதலாளி, கங்காணி, கிராணிமார்களின் அடக்குமுறை, சாதிப்பிடிப்பு, சீர்திருத்தத்திற்கு இடம் தராத பழமைப்பிடிப்பு, குடிப்பழக்கம் முதலியவை மலேசியத் தமிழ் சிறுகதைகளின் கதைப் பொருட்கள் ஆகியுள்ளன’ என்று டாக்டர். இரா. தண்டாயுதம் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இப்போது மலேசிய சிறுகதைகள் புதிய கதைக்கருக்களை எழுதிப் பார்க்கின்றன. அறிவியல் புனைக்கதை பாணியில் வீ. செல்வதுரை என்பவர், ‘காய கல்பம்’ என்ற கதையை ஆரம்பிக்கிறார். உளவியல் காரணங்களைச் சொல்லி முடிக்கிறார். வரும் நாட்களில் மலேசிய மண்ணிலிருந்து அறிவியற் புனைக்கதைகளை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. திருமணமாகாலேயே, 40 வயதில் மாதவிடாய் முற்றுப் பெறும் மெனோபாஸை அடைந்து விடும் ஒரு முதிர்கன்னியின் கதையை நாட்குறிப்புப் பாணியில் எழுத முற்படுகிறார் ரெ.ஜெயலட்சுமி என்பவர். சர்க்கரை நோய் முற்றிப்போய் காலை எடுக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்ட 75 வயது தந்தைக்கு சிகிச்சையை விட மரணம் மேல் என்று வாதிட்டு கருணைக் கொலையை நியாயப்படுத்தும் மலேசியக் கதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இது இந்தப் புதிய நூற்றாண்டின் துவக்கத்தில் எழுதப்பட்ட கதை. இனிப்பு மஞ்சள் என்ற அந்தத் தொகுதியிலுள்ள கதைகள் யாவும், ஏன் கூடாது (why not?) என்ற நோக்கில் எழுதப்பட்ட கதைகள். ஆண், பெண் உறவில் காமத்தைப் பிரதானப்படுத்தி எழுதப்பட்ட கதைகளையும் அந்தத் தொகுப்பில் பார்க்கிறோம். அவை பத்திரிகை பிரசுரத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. விற்பனை நிர்பந்தத்தால் அதில் காமம் கடை விரிக்கப்படவில்லை. இந்தப் புதிய எழுத்தாளரை வரவேற்று ஆனால் கதைகளை நிராகரித்து முன்னுரை தந்திருக்கும் டாக்டர் ரெ. கார்த்திகேசுவிற்கு பதிலளிக்கும் விதமாக அந்த நூலின் ஆசிரியர் செ. கோபாலன் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து தமிழ் சினிமா, வெகுஜன ஆங்கில இலக்கியம் இவற்றின் பால் உள்ள பரிச்சயம் ஆகியவை அவரது எழுத்துக்களுக்கு உந்துதல் தருவதாக இருந்திருக்கின்றன. இலக்கிய வாசிப்பின் உந்துதல் காரணமாக எழுத ஆசை கொண்ட ஒரு தலைமுறை உண்டு. இனிவரும் நாட்களில் தமிழ் எழுத்துலகு, சினிமாவினால் படைப்பூக்கம் பெறும் ஒரு தலைமுறையை சந்திக்க நேரும் என்பதற்கு இந்தத் தொகுப்பு ஓர் உதாரணம்.

யாப்பிலமைந்த கவிதைகளை தமிழகம் அநேகமாக கைவிட்டுவிட்டது. பொங்கல் கவியரங்கங்ளில் கூட அவற்றைக் கேட்க முடியவில்லை. நல்ல யாப்புக் கவிஞர்களான அப்துல் ரஹ்மான், தமிழன்பன் போன்றவர்கள் கூட, ஹைக்கூ, சென்ரியூ போன்ற இலக்கணம் தளர்ந்த குறும்பா வடிவங்களுக்கு வந்து விட்டார்கள். ஆனால் மலேசியா இன்னும் மரபுகளில் எழுதிப் பார்க்கிறது. களி துள்ளும் சந்தத்தில் சில தமிழ்க் கவலைகளைப் பதிவு செய்யும் முரண் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

காடுவெட்ட ரோடுவெட்டக் கண்ணீர் விடச் செந்நீர் விட
நாடு விட்டு நாடு வந்தார் தமிழர்கள் – இவர்
பாடுபட்டுப் பாடுபட்டுப் பத்து நூறாய் வேறுபட்டுப்
போடுகிறார் கூட்டங்கள்!

கூட்டத்திலே தீர்மானங்கள் போட்டுப் போட்டுப் பெட்டியிலே
பூட்டிவிட்டுப் போய்விடுவார் பாருங்கள் – இதை
ஓரிடத்தில் சொல்லிச் சொல்லி ஓலமிட வேண்டுமென
நானிருந்தேன் வந்தது நல் நாளுங்க!

பத்து லட்சம் தமிழர்க்குள்ளே பத்து லட்சம் பிரிவினைகள்
பத்தாதென சிவப்பு நீலக் கார்டுகள் – இந்தத்
தொத்து நோய்கள் தீர்வதற்கு எத்தனை நாள குமெனச்
செந்தமிழர் தலைவர்களே கூறுங்கள்!

எல்லார்க்கும் ஒரே நிறம், எல்லார்க்கும் ஒரேயுருவம்
எல்லோர்க்கும் எல்லாந்தந்த ஆண்டவன் – இந்த
நல்லான் தமிழனுக்கு நான்குகுண நிறமமைத்து
நாலுமூலை நிற்க வைத்தான் பாருங்கள்!

இது ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் வந்த சங்கு சண்முகம் என்பவரது கவிதை.

னால் வேற்றுமைகளால் சில நன்மைகளும் உண்டு. தென்னை, மா, பலா, வாழைத் தோப்புக்கள் சில நேரங்களில் பூச்சிகளால் தாக்கப்பட்டு முற்றாக அழிந்து போவதுண்டு. ஆனால் பூச்சி பொட்டுகளால் காடுகள் முற்றாக அழிந்ததாக எப்போதேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மனிதர்களது முயற்சியால் அல்லது தீ போன்ற விபத்துக்களால் அழிந்த காடுகள்தான் உண்டு. காடுகள் அழியாதிருப்பதற்குக் காரணம், அங்குள்ள பல் உயிர்ப் பெருக்கம். தோட்டங்களைப் போல ஒரே வகைத் தாவரத்தால் அமைந்தவை அல்ல காடுகள். அங்கு பல வகை மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள், பாசிகள், சிறிதும் பெரிதுமாகப் பல்வகை உயிரினங்கள். இந்த பல் உயிர்ப் பெருக்கமே காடுகள் அழியாதிருக்க முதன்மைக் காரணம்.

வேற்றுமைகளால் செழித்த ஓர் இலக்கியம் இலங்கைத் தமிழ் இலக்கியம். தமிழர்களுக்குள்ளேயே அங்கு சிறுபான்மை, பெரும்பான்மை உண்டு. மதம் சார்ந்து அடையாளம் காணப்படும் தமிழர்கள் உண்டு. இடம் சார்ந்து அடையாளம் காணப்படும் தமிழர்கள் உண்டு. எல்லாத் தமிழ் சமூகத்திலும் இருப்பதைப் போன்று சாதிகள் உண்டு. வர்க்கங்கள் உண்டு.
இன்று இலங்கை தமிழிலக்கியம் சில தனி அடையாளங்களோடு திகழ்வதற்கு, தாய்த் தமிழகத்தின் இலக்கியத்திலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள விரும்பி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளே காரணமாகும். அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக இந்த முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.

மலேயா, சிங்கப்பூர் போல் இல்லாமல், சங்க காலத்திலிருந்தே இலங்கையில் தமிழ் இலக்கியம் எழுதப்பட்டு வந்திருக்கிறது. சங்கப் புலவர் வரிசையில், ஈழத்து பூதன் தேவனார் என்று ஒரு பெயர் காணப்படுகிறது. ஆனால் இலங்கையின் ஆரம்ப கால இலக்கியப் படைப்பாளிகள் தமிழ்நாட்டிலிருந்துதான் படைப்பூக்கம் பெற்றார்கள். தேவார மூவரைப் போல, முப்பதுகளில், இலங்கை சிறுகதை வளர்ச்சிக்குக் காலூன்றியவர்கள், சி.வைத்தியலிங்கம், இலங்கையர் கோன், க.தி.சம்பந்தன் என்ற மூவர். இவர்கள் முப்பதுகளில் தமிழ்நாட்டில் வெளிவந்து கொண்டிருந்த ‘மணிக்கொடி’ இதழையே முன் உதாரணமாகக் கொண்டிருந்தார்கள். ‘மணிக்கொடி’ பத்திரிகையின் புதிய பாணி இலங்கையர் கோனை முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டது’ என்று குறிப்பிடும் சி. வைத்தியலிங்கம், ‘நான் சிறுகதை எழுதுவதற்கு ஆதர்ச புருஷனாக அவரே எனக்கு உத்வேகம் கொடுத்தார்’ என்று கு.ப.ராவைப் பற்றியும் குறிப்பிடுகிறார். மணிக்கொடிக் குழுவினரோடும் அவர்களது இலக்கியக் கொள்கைகளோடும் நேரடித் தொடர்புகொண்டிருந்த சோ.சிவபாத சுந்தரம், 1938ம் ஆண்டு, ‘ஈழ கேசரி’ வார இதழில் பொறுப்பாசிரியராகப் பணி ஏற்றபோது, ‘மணிக்கொடி’யின் தரத்தில் கதைகள் வெளியிட முயற்சித்தார். அதற்கு உதவியாக, வளரும் பருவத்திலிருந்த சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை எழுத்தாளர்களாகப் பயிற்றுவித்தார். முன்னணி எழுத்தாளர்களாக இலங்கை சிறுகதை வரலாற்றில் பேசப்படும் அ.செ.முருகானந்தன், கனக.செந்தில்நாதன், அ.ந.கந்தசாமி, வரதர் ஆகியோர் இந்த ‘ஈழ கேசரிப் பண்ணை’யில் தோன்றியவர்கள்தான். இந்திய செல்வாக்கின் நேரடித் தாக்கமாகவே ஈழத்தில் வடிவப் பிரக்ஞையோடு சிறுகதை எழுதப்பட்டது என்று பேராசிரியர் சிவத்தம்பியும் குறிப்பிடுகிறார்.

ஆனால் 1948ல் கிடைத்த சுதந்திரமும், அங்கு வழங்கப்பட்ட தமிழ் வழிக் கல்வி, இலவசக் கல்வி, அகில இந்திய முற்போக்கு சங்கத்தைப் பின்பற்றி இலங்கையில் 1946ல் தோன்றிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், 1956ல் நிலவிய அரசியல் சூழ்நிலைகள், இவை இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் போக்கில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தன. ஆட்சிக்கு வந்த இருபத்தி நாலு மணி நேரத்திற்குள் சிங்களத்தை அரசு மொழியாக்குவோம் என்ற வாக்குறுதியை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டு ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி 1956ல் ஆட்சிக்கு வந்தது. தெற்கில் தனி சிங்களம் என்றால் வடக்கில் தமிழ் இயக்கம் என்ற சூழ்நிலை யாழ்ப்பாணத்தில் எழுந்தது. இலங்கைத் தமிழர் தங்கள் நாட்டைச் சார்ந்து தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர். 1957ல் இலங்கை நாளிதழ் தினகரனின் ஆசிரியரான பேராசிரியர் கைலாசபதி, இந்த எழுச்சியை மேலும் வளர்த்தெடுக்கலானார்.
பேராசிரியர் கைலாசபதி இடது சாரி சார்புடைய விமர்சகர். ஆனால், ‘நான் விரும்பும் நாவலாசிரியர்’ என்ற தலைப்பில் கைலாசபதி தினகரனில் வெளியிட்ட தொடரில் இலங்கையின் முக்கிய எழுத்தாளர்கள் பலர் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நல்ல படைப்புக்களை அறிமுகப்படுத்தி எழுதினார்கள். அவர்கள் ரஷ்ய எழுத்தாளர்களோ, இடதுசாரி எழுத்தாளர்களாகவோதான் இருக்கவேண்டும் என்று அவர் வற்புறுத்தவில்லை. அப்படி எழுதப்படாத கட்டுரைகள் மீது தன் ஆசிரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றை நிராகரிக்கவில்லை. அவரே கூட ஜேம்ஸ் ஜாய்ஸ் பற்றித்தான் எழுதினார். இது அவரது பரந்த மனத்தையும், இந்தப் பகுதியை விமர்சனத்தைக் கருத்தில் கொண்டல்ல, தன் இலக்கியக் கொள்கைகளை முன் நிறுத்தும் பிரசாரமாக அல்ல, ஒரு இலக்கியக் கல்வியாக நடத்தினார் என்பதையும் நிறுவுகிறது. இலங்கை எழுத்தை ஒரு இயக்கமாக மாற்றியதன் மூலம் கைலாசபதி அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார். எந்த இயக்கத்தையும் வரலாற்றின் வெளிச்சத்தில் பார்க்கும்போது அதில் நல்லதும் கெட்டதும், சாதனைகளும் சரிவுகளும் இருக்கும்தான். கைலாசபதி நடத்திய இயக்கத்திலும் இவை இருந்தன.

தமிழ்நாட்டைப் போல ஆரம்ப காலத்தில் ஆங்கிலக் கல்வி பயின்றவர்களாலேயே இலங்கையிலும் சிறுகதைகள் எழுதப்பட்டன. பின்னர் தமிழ் வழிக் கல்வி காரணமாக சமூகத்தின் கீழ் நிலையில் இருந்த பலர் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றனர். அவர்களில் சிலர் இலக்கியம் படைக்கவும் முற்பட்டனர். அவர்களை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அரவணைத்து வளர்த்தது. மண் வாசனை எழுத்துக்கள், தேசிய இலக்கியம் எனப் பல கருத்தரங்கங்களை முன் வைத்தது என்றாலும், தமிழ்நாட்டு இலக்கியம், பிரசுர சாதனங்கள் சாராமல், இலங்கை எழுத்துக்களுக்கு ஒரு தனித்துவம் ஏற்படுத்திக் கொடுத்ததுதான் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் மார்க்சிய விமர்சகர்களின் பெரியதொரு பங்களிப்பு.
ஐம்பதுகளின் இறுதியிலிருந்து அறுபதுளின் நடுப்பகுதி வரை இலங்கை இலக்கிய உலகின் போக்கை முற்போக்குக் கொள்கைகள் தீர்மானித்தன. இலங்கையின் முக்கிய இலக்கியப் படைப்பாளிகளான, கே.டானியல், டொமினிக் ஜீவா, நீர்வை பொன்னையன், காவலூர் ராசதுரை, எஸ்.பொன்னுத்துரை, மு.தளைய சிங்கம், அ.முத்துலிங்கம், நந்தி, செ.யோகநாதன் போன்றவர்கள், முற்போக்கு இலக்கியக் கொள்கையின் விளைவாகவோ அல்லது அதன் எதிர் விளைவாகத் தோன்றிய இலக்கியக் கொள்கைகளின் காரணமாக எழுதியவர்கள். ஏ.ஜே.கனகரத்னா, கனகசெந்தில்நாதன், க.சிவத்தம்பி போன்ற விமர்சகர்கள் தோன்றவும் அந்த இலக்கியப் போக்கு காரணமாக இருந்தது.

இந்த எழுத்தாளர்களுக்கு நடுவில் வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்த்தவர் மகாகவி (1927 – 1971) நாவல். சிறுகதை போல, தற்காலக் கவிதையும் நிகழ்கால செய்திகளையும் பிரச்சினைகளையும் கையாளவேண்டும் எனக் கருதிய மகாகவி, சிறுகதை என்பதைப் போல சிறுகவிதை என்ற ஒரு வடிவத்தைத் தோற்றுவிக்க முயன்றார். ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் என்ற அவரது காவியம், ‘காலை ஒன்று கிழக்கில் விடிந்தது’ என்று துவங்கி, ‘மேற்கிலே ஒரு மாலை முடிந்தது’ என்று நிறைவுறுவது வரை உத்தி அளவில் பல புதுமைகளுக்கு முயற்சிப்பது. கிண்டல் நிறைந்த லிமெரிக் எனப்படும் குறும்பாக்களையும் யாப்பிலே எழுதிப் பார்த்தார் மகாகவி. இன்றைய புதுக்கவிதையின் வெகுஜன வடிவத்திற்கு அவை முன்னோடி.

உருவப் புதுமைகளுக்காக மகாகவி நினைவிற் கொள்ளத்தக்கவர் என்றால், அவர் மகன் சேரன் சம காலக் கவிஞர்கள் மத்தியில் பாடு பொருள்களுக்காக கவனிக்கத் தக்கவர். சேரன் இன்று புலம்பெயர்ந்து கனடாவிலே வசிக்கிறார்.

இலங்கையின் ஆதித் தமிழ்ச் சிறுகதைகளில், சம்பவங்களைக் காட்டிலும், உணர்வு நிலையே முக்கியமாக சித்தரிக்கப்பட்டன. யாழ்ப்பாண சமூகத்தில் சாதிக் கட்டுப்பாடு ஏற்படுத்தும் பிரச்சினைகளை முன் வைத்து டானியலும், டொமினிக் ஜீவாவும் எழுதி, அவை ‘இழி சன்ர் இலக்கியம்’ என்ற வசைக்குள்ளானபோது அதையும் எதிர் கொண்டனர். உள்ளடக்கத்தில் வித்தியாசமான கதைகளையும், உருவப் பரிசோதனை செய்யும் கதைகளையும் தளைய சிங்கமும், பொன்னுத்துரையும் எழுதினர். அறுபதுகளில் அறிமுகமான செ.யோகநாதன், ‘இருண்ட சக்திகளைத் தோல் உரித்துக் காட்டும்’ கதைகளையும், செங்கை ஆழியான் கிராம மக்களின் வாழ்க்கைப் பின்னணிகளையும், தெளிவத்தை ஜோசப், மாத்தளை சோமு ஆகியோர் மலையக மக்களைப் பற்றியும் எழுதினர். எழுதபதுகளில் அடியெடுத்து வைத்த சாந்தன், இருமொழிப் பண்பாட்டுச் சூழலை எழுதினார்.

ஆனால் தொண்ணூறுகளில் எழுத வந்த தலைமுறைக்கு, இனப் படுகொலைகள், புலம் பெயர்தல் ஆகியவை பாடு பொருளாக அமைந்தன. கவிதையில் சேரன், சிறுகதையில் உமா வரதராசன் ஆகியோர் இந்தத் தலைமுறையைப் பிரநிதித்து நிற்கிறார்கள். இரண்டாயிரத்தில் வந்த தலைமுறையினர், யுத்த எதிர்ப்பு, தனி மனித சுதந்திரம் ஆகியவற்றை முன்னிலைப் படுத்துகிறார்கள்.

இதுபற்றி எண்ணும்போது மனதில் பளிச்சிடும் பெயர் சிவரமணி. அசாதாரணமான மொழி ஆளுமையுடன் கவிதைகள் வார்த்த இந்தப் பெண் இளம் வயதில் தற்கொலை மூலம் தன்னை மாய்த்துக் கொண்டவர். உதாரணத்திற்கு யுத்தம் பற்றிப் பேசும் அவரது ஒரு கவிதை.

இந்தச் சமூகத்தின் தொப்புள்கொடிக்குத்
துப்பாக்கி நீட்டப்படும்போது
ஒரு மெல்லிய பூ நுனியில்
உட்காரக் கூடிய
வண்ணத்துப் பூச்சியின் கனவு
எனக்கு சம்பந்தமற்ற
ஒரு சம்பவிப்பு மட்டுமே
நான் மனிதனாய் வாழும் முயற்சியில்
பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன்

இவரை விட இன்னும் வெளிப்படையாகவே பேசுகிறார் ஔவை:

இதயத்தை இரும்பாக்கி
மூளையைத் துவக்காக்கி
நண்பனைப் பகைவனாக்கி
என்னிடம் திரும்பினான்
இராணுவ வீரனாய் என் முன் நின்றான்
என் மகன்
ஊட்டி வளர்த்த அன்பும் நேசமும்
ஆடிப்புதைய
ஆடித்தான் போனேன்

நண்பனைச் சுட்டுவிட்டு வந்து
வீரம் பேசினான்
தியாகம் பற்றி, ஆயுதம் பற்றி
எல்லைப் புற மக்களைக் கொல்வதைப் பற்றி
நிறையவே பேசினான்

இப்போது நான் மௌனமாக இருந்தேன்
மனிதர்கள் பற்றி விடுதலை பற்றி
மறந்தே போனான்

இப்போது நான்
தாயாக இருத்தல் முடியாது
என்று தோன்றுகிறது

துரோகி என்று
என்னையே புதைப்பானோ
ஒரு நாள்?

போரின் சோகங்களுக்குள்ளும் சில சந்தோஷங்கள் சூல் கொண்டிருக்கின்றன என்பது வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று. போரின் துயரங்களை மட்டுமல்ல, அது தந்த ரகசிய சந்தோஷங்களையும் பதிவு செய்யத் தவறுவதில்லை பெண்கள்:
காசு கொடுத்து
ஆம்பிளை வாங்கி
அதற்குப் பணிவிடை செய்யும் அவலங்கள்
நான் சொல்ல
விழி விரித்துக் கேட்கிறாள் மகள்,
ராஜா ராணிக் கதை கேட்கும் பாவனையில்

போர் தருகிற
சோகங்களுக்குள்ளாலேயும்
ரகசியமாய்
சிலிர்த்துக் கொள்கிறேன்
புலம் பெயர்ந்தமை
தங்கத் தட்டில் தந்திட்ட சுதந்திரம்
என் மகள்களுக்கும்
நம் பெண்களுக்கும்
என்று எழுதுகிறார் கனடாவில் வசிக்கிற வசந்தி ராஜா.

டந்த பதினைந்து இருபது ஆண்டுகளில் பெண்கள் அதிகம் எழுதத் தலைப்பட்டிருக்கிறார்கள் என்பது தமிழ் நாட்டிலக்கியத்தின் ஆரோக்கியமான அடையாளம். அவர்கள், அவர்களுக்கு முந்திய தலைமுறையைப் போல் அல்லாது, பாலினம் சார்ந்த அடையாளங்களைத் தவிர்த்து கருத்து சார்ந்த அடையாளங்களையே சூட விரும்புகிறார்கள் என்பது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் தமிழ்நாட்டுப் பெண்கள் எழுதத் தேர்ந்தெடுக்கும் பொருள்களில் இன்னமும் உறவுகள்தான் முதன்மையாக இருக்கிறது. கணவன் இறந்த பின் நலிவுற்று வாழ்வதை விட உடன்கட்டை ஏறுவது நல்லது என்று எழுதினாள். பூதப் பாண்டியன் தேவி பெருங் கோப் பெண்டு அன்பைவிடப் பணம்தான் பெரிது, என நம்மை விட்டுவிட்டு, அதைத் தேடி வெளிநாடு போகிற ஆண் பிள்ளைக்கு, தான் கெட்டிக்காரன், மனத் திடம் நிறைந்தவன் என்று நினைப்பு, அவனே கெட்டிக்காரனாகவும் திட மனதுடையவனாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். நாம் முட்டாள்களாக, பலவீனமானவர்களாகவே இருந்து தொலைவோம் என்று சினமும் அழுகையும் நிறைந்த சங்ககாலப் பெண்ணைப் பதிவு செய்தான் கோப்பெருஞ்சோழன் தன் குறுந்தொகைப் பாடலில்.

அருளும் அன்பும் நீங்கி, துணை துறந்து
பொருள் வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!

ஆனால் நவீனத் தமிழ்ப்பெண் இப்படி சுய பச்சாதாபம் கொள்வதில்லை. மட மாதராக இருக்க அவளுக்கு சம்மதம் இல்லை. அவர் வைக்கும் கேள்விகள் அனல் போன்று சூடும் சுடரும் நிறைந்தவை. சுபத்ரா என்றொரு தமிழ்நாட்டுக் கவிஞர் எழுதுகிறார்:

ஒரு நிமிடம்
ஓங்கிய கை
என் கன்னத்தில் பதியும் முன் ஒரு நிமிடம்

வேலைக்குப் போகுமிடத்தில்
எட்டு மணி நேரத்திற்கும் மேலாகவே
வேலை வாங்கி உன்னை உறிஞ்சும்
முதலாளிக்கு முன் நீ கை ஓங்கவில்லையே!

எட்டுத் தேர்தல் திருவிழா நடத்தி
எத்தனையோ கோடி வாக்குறுதி தந்து
அத்தனையும் காற்றாய்ப் பறக்க விட்ட
பெருந்தலைக்கு எதிராய் நீ கை ஓங்கவில்லையே!

நாகரிகம் பெற்ற நன்மையெல்லாம்
காட்டுமிராண்டிகளாக்கிக் காது குத்தும்
சினிமா வியாபாரி முன் நீ கை ஓங்கவில்லையே!

ஒரு குவளை காபி
ஆறிப்போனதற்காய்
கை ஓங்குகிறாய்?

ஆனால் அப்படிக் கொதித்து, கொட்டி விடுகிற வாழ்க்கை எல்லோருக்கும் வாய்த்து விடவில்லை. இயற்கைக் காட்சிகள், வரதட்சணைக் கொடுமை, பால்ய விவாகம், மறுமணம் இவை குறித்து எழுதும்போது பெண்களுக்குப் பெரும்பாலும் பிரச்சினை வருவதில்லை. காதல் பற்றி எழுதும் பெண் அவள் கன்னியோ, மணமானவளோ, சந்தேகத்தோடு பார்க்கப்படுகிறாள். செக்ஸ், மதம் சார்ந்த அடக்குமுறைகள், அரசியல் இவை பற்றிக் கேள்விகள் எழுப்பும்போது பிரச்சினைகள் எழுகின்றன. வன்முறை மூலமோ அல்லது அன்பின் மூலமோ பெண்களின் எழுத்துக்கு குடும்பம் தணிக்கைகள் விதிப்பதாக 2001 ஜூலையில் ஹைதராபாத் நகரில் நடந்த பெண் எழுத்தாளர்களின் தேசிய மாநாட்டில் பல பெண் எழுத்தாளர்கள் தெரிவித்தார்கள்.
‘என் படைப்பிலக்கிய உணர்வு ஒரு மழைக் கோட்டைப் போல் உள்ளது. வீட்டிற்குள் நுழையும் வினாடியில் அதை ஆணியில் மாட்டியே தீர வேண்டியிருக்கறது. அந்த மழைக் கோட் தோலாக மாறிவிட நான் காத்திருக்கிறேன். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை’ அந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு கன்னடப் பெண் கவிஞர் கூறியது தமிழ்ப் படைப்பாளிக்கும் பொருந்தும்.

எதை எழுதுவது என்பது மட்டுமல்ல, எதில் எழுதுவது என்பதும் இன்று தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினை. பாரம்பரியமாக புனைக் கதைகள் வெளியிட்டு வந்த வெகுஜன வார இதழ்கள் கதைகள் வெளியிடுவதை குறைத்துக் கொண்டுவிட்டன. இன்று இலக்கிய சிற்றேடுகள் இலக்கிய மேம்பாட்டைக் கருதி வெளியாவதில்லை. வெகுஜன இதழ்களுக்கு மாற்றாக வெளிவந்த ‘மணிக்கொடி’, ‘எழுத்து’ போன்று அவை வெளியிடப்படுவதில்லை. கசடதபற, படிகள், பிரக்ஞை போல அவை கருத்துக் குழுக்களாக இல்லை. சுய உதவிக் குழுக்களாக, படைப்பாளிகள் கவனம் பெற, அங்கீகாரம் பெறத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளத் துடிக்கும் முயற்சியாக இருக்கின்றன என்பது பரவலான அபிப்பிராயம்.
இதுகுறித்து குமுதம் வெளியிட்டிருக்கும் கிண்டல் இது:

‘எழுதுவதை யாரும் பிரசுரிக்காவிட்டால் தற்கொலை எண்ணம் தேவையில்லை. மகிழி, தொட்டாற் சுருங்கி, நெஞ்சி, படி, மருவி இதுபோன்ற பத்திரிகை ஆரம்பித்து, அதில் பச்சை பச்சையாய் எழுதலாம். செலவு கட்டுப்படி ஆகாதுதான். ஆனாலும் காரசாரமாக எல்லாவற்றையும் வெறுப்பாகத் திட்டி எழுதி பிரபலமாகலாம். பிரபலமானதும் பத்திரிகையை மூடிவிடுவது சிறந்தது. வேறு பத்திரிகைகளில் போட ஆரம்பித்து விடுவார்கள்’
(கின்ஸி – 30 நாட்களில் எழுத்தாளர் ஆவது எப்படி? குமுதம் (25.2.2002)
வெகுஜனப் பத்திரிகைகளின் கிண்டலை ஒதுக்கிவிடலாம். ஆனால், ‘நிறப்பிரிகை’ என்ற சிற்றிதழின் ஆசிரியராக இருந்த ரவிக்குமார் சொல்வதை நிராகரித்து விட முடியாது.
‘இந்தச் சிற்றிதழ்களின் பட்டியலில் ஒன்றைக்கூட ‘எழுத்து’, ‘மணிக்கொடி’ போன்றவற்றோடு ஒப்பிட முடியாது. இந்தச் சிற்றிதழ்கள் இத்தனை எண்ணிக்கையில் வெளிவருவதற்கு தத்துவ விளக்கங்களை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்தான். ஆனால் அது நம் கற்பனையாகவே எஞ்சிப் போகும். ஒவ்வொரு இளம் படைப்பாளியும், தான் கவனம் பெற ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்வது அவசியமென்றாகிவிட, அத்தகையான வட்டங்கள் இப்படியான சஞ்சிகைகளால் உருவேற்றப்படுகின்றன ”

இதுபோன்ற பிறழ்வுகளுக்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. இலக்கிய சிற்றேடுகளின் உலகில் வழி படப்படுகிற புதுமைப்பித்தன் விட்டுச் சென்ற விபரீதப் போக்குகளில் தலையானது, வெகுஜன எழுத்து இலக்கியமாகாது என்ற மனோபாவம். கல்கியின் மீது இருந்த தனிப்பட்ட காழ்ப்புக் காரணமாகப் பிறந்தது இது. அதை அடியொட்டி இலக்கியத்தை ஓர் அதிகாரத்தின் அடையாளமாக நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அவரது மணிக்கொடி சகாக்களுக்கும் பங்கு உண்டு.

கல்வி எல்லோருக்கும் மறுக்கப்பட்டிருந்த இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இலக்கியத்திற்குப் புனிதங்கள் கற்பிக்கப்பட்டு, அது சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மரபுத் தமிழ் வழியில் செய்யுள் எழுதிக் குவித்தவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியினர் அவரைப் பெருந்தொகை கொடுத்து ஆசிரியர் வேலைக்கு அழைத்தபோது, ‘ஏழைகளாக இருக்கும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொண்டும் அவர்களுடன் சல்லாபம் செய்துகொண்டும், காவேரி ஸ்நானமும், சிவ தரிசனமும் செய்து கொண்டுமிருப்பதுவே எனக்குப் பிரியமான காரியமாக இருக்கிறது; சாதாரண ஜனங்களோடு பழகுதல் இன்பத்தை விளைவிக்கும்’ என்று சொல்லி அந்த அழைப்பை மறுத்தவர். அவர் (பக்கம் 258 ‘மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் – உ.வே.ச.’)

அதிகம் மொழியறிவு இல்லாத எளிய மக்களுக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கத்தில பட்டீஸ்வரம் என்ற சிவத்தலத்தைப் பற்றி ஒரு பதிற்றுப் பத்து அந்தாதி எழுதியிருந்தார். பெரிய இலக்கியப் பனுவல் அல்ல. கடவுள் மேல் படப்பட்ட துதி. அந்த நூலைக் கண்ட அவருடைய மாணவரும், இன்னொரு தமிழறிஞருமான தியாகராஜச் செட்டியார், பிள்ளையவர்களிடம் – பெருஞ் சண்டைக்கு வந்து விட்டார் ‘இப்படியும் ஒரு நூல் நீங்கள் பாடியது உண்டா? எதன் பொருட்டு இதனைப் பாடினீர்கள்? சாதாரணமாக ஜனங்களுக்கு இந்த மாதிரி இருந்தால்தானே தெரிய வரும்? கடினமாக இருந்தால் அவர்கள் அறிவார்களா? அவர்கள் மனதிற் படுமா?’ என்று கேட்டதாக உவேசா குறிப்பிடுகிறார்.

எழுதுவதை செய்யுளில்தான் எழுதவேண்டும். அதையும் சாதாரண மக்களுக்குப் புரிவது போல் எழுதுவது குற்றம் என்று கருதப்பட்ட இந்தச் சூழ்நிலைதான் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நிலவியது. அந்தச் சூழ்நிலையில்தான், ‘எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகிறான்’ என்று மொழிக்கும், மக்களுக்குமிடையே ஆன உறவை வலியுறுத்துபவனாக வருகிறான் பாரதி, கவிதையுடைய தொடர்ச்சியாக வசனத்தையும், வசனம் சார்ந்த சிறுகதையையும் கையாள்கிறான். அரசியல், கல்வி, மதம், பால், இவற்றில் சமூகத்தில் உருவாகியிருந்த அதிகார பீடங்களைப் புரட்டிப் போடும் ஒரு கருவியாக சிறுகதைகளை பாரதி கையாண்டான். ஆனால் எழுத்தை இலக்கியத்தை தங்கள் அடையாளமாகக் கொண்டு அதற்குப் புனிதங்கள் கற்பித்து, புதிய பீடங்களை அமைத்துக் கொள்கிற போக்கு மீண்டும் மணிக்கொடி காலத்தில் தலை எடுக்கிறது. சமூக நோக்கம் இல்லாமல், சொந் சந்தோஷத்திற்காக அல்லது துக்கத்திற்காக எழுதியவர்கள் எழுத்தைக் கொண்டு ஓர் சமூக அந்தஸ்தை, வெகுஜன அங்கீகாரம் இல்லாமல் அடைய விரும்பினார்கள். இந்த மரபின் தொடர்ச்சியாகத்தான் இன்றைய சிறு பத்திரிகைகள் இருந்து வருகின்றன.

இலக்கியத்தின் மூலம் சமூக அந்தஸ்தை எய்த விரும்பியவர்கள் கையாண்ட உத்திகள் பழைய பண்டிதர்கள் கையாண்ட அதே உக்திகள்தான். அதாவது வெகு ஜனங்களுக்கு அந்நியமான மொழி நடையில் எழுதுவது தொண்ணூறுகளிலும், இரண்டாயிரத்திலும் பின் நவீனத்துவம் என்பதைச் சாக்கிட்டு, மொழி அமைப்பை சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டு எழுதியவர்கள் சிறு பத்திரிகை உலகில் பலருண்டு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாலியல் ரீதியாக தங்கள் மனோ வக்ரங்களை எழுதிக் களித்தவர்களும் உண்டு. அவற்றை ஒரு மேற்கோளாகக்கூட இந்த கண்ணியமான சபையில் வாசித்துக் காட்ட இயலாது.

இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ் சிறு பத்திரிகை உலகம் தலையில் வைத்துக் கொண்டாடிய பின் நவீனத்துவம், பிரான்சிலேயே அறுபதுகளின் இறுதியில் பலவீனமடைந்துவிட்டது.

இவர்கள் பின் பற்றிய இன்னொரு உத்தி சாதாரணர்கள் அறியாத பெயர்களைச் சொல்லி மிரட்டுவது, இதுவும் பழைய உத்திதான். பாரதியார் தனது, ‘சின்ன சங்கரன்’ கதையில் இந்த வெற்று மிரட்டலை நன்றாகவே நையாண்டி செய்திருப்பார். அந்தக் கதையில் கவுண்டபுரம் ஜமீன்தாரின் (மகாராஜா) அடைப்பக்காரன் முத்திருளன். அவன் ஒரு சமயம் ஜமீந்தாரின் சபையில் புலவர்களைப் பார்த்துப் பேசுவதாக பாரதி எழுதுகிறார்:

‘இந்தக் கதையா? இதெல்லாம் முத்திருளனிடம் வைத்துக் கொள்ளவேண்டாம். சென்னப்பட்டணத்தில் சி.வை.தாமோதரன் பிள்ளை என்று ஒரு மகாவித்துவான் இருந்தாரே கேள்விப்பட்டதுண்டா? அவர் சூளாமணி என்னும் காவியத்தை அச்சிட்டபோது அதெற்கெழுதிய முன்னுரையை யாரைக் கொண்டேனும் படிக்கச் சொல்லியாவது கேட்டதுண்டா? திருவனந்தபுரம் பெரிய கலாசாலையில் தமிழ்ப் பண்டிதராகி, அன்னிய பாஷைகள் ஆயிரங் கற்று, நிகரில் புலவர் சிகரமாக விளங்கிய சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய நூல்களில் ஏதேனுமொன்றை எப்போதாவது தலையணையாக வைத்துப் படுத்திருந்ததுண்டா? அல்லது அவர் புத்தகங்கள் வைத்திருந்த அலமாரியை மோந்து பார்த்ததுண்டா? அப்படி மோந்து பார்த்தவர்களையேனும் மோந்து பார்த்ததுண்டா?’

இந்த அறிவுலக ‘பயங்கரவாத’த்தைக் கண்டு இளைஞர்கள், வழி தப்பிப் போகும் துரதிருஷ்டம் 90களில் தமிழ்நாட்டில் நடந்தது:

‘தமிழில் ஒருவிதமான போலி பாவனை எப்போதுமே உண்டு. தன்னைப் பெரிதாகக் காட்டிக் கொள்ளும் பொருட்டு தமிழின் படைப்புக்களை மட்டுப்படுத்தி பேசுவதும், தங்களுடைய உயரிய ரசனைக்குரிய கனி யாருமறியாத மேற்கு நாட்டு மரமொன்றில் காய்த்துக் தொங்குவதாக பாவனை செய்வதும் இங்கு சகஜம். இந்தப் பாவனையாளர்களைக் கூர்ந்து கவனித்துள்ளேன். இவர்கள் எவருமே நுண்ணிய வாசகர்களல்ல. நுண்ணிய வாசகர்கள் என்றால், தமிழில் வெளிவந்த படைப்புக்கள் பற்றி நுண்மையான விமரிசனத்தை முன் வைத்திருப்பார்கள். போதாமைகளையும் அப்படைப்பை மீறி எழும் தங்கள் தேடலையும் அடையாளப்படுத்தியிருப்பார்கள். சரி, மேலைப்படைப்புகள் குறித்து தமிழில் இன்று வரை எத்தனை நல்ல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன? இந்தப் பாவனையாளர்கள் மேற்கத்திய இதழ்களில் வெளியாகும் Hype விளம்பர ஆர்ப்பாட்டத்தை மட்டும் நம்பி படைப்புக்கள் குறித்த முடிவுகளுக்கு வரும் அப்பாவிகள். இவர்களைக் கண்டு மிரண்டு போய் தமிழ் மட்டும் அறிந்த கூரிய வாசகன் தன் கணிப்புக்களை விழுங்கிவிடுகிறான். தமிழில் ஒன்றுமே இல்லை என்று கூறாதவனுக்கு இலக்கிய நுண்ணுணர்வு இல்லை என்று கூறத் தலைப்படுகிறான். தமிழுக்கு அப்பால் வழியோரங்களில் எல்லாம் பேரிலக்கியங்கள் கிடந்து காலில் இடறுவதாக கற்பனை செய்து கொள்கிறான். இந்தக் கற்பனையை ஓரளவு க.நா.சு. இங்கு தொடங்கி வைத்தார். இதைப் பெருக்கியதில் சுந்தர ராமசாமிக்கு கணிசமான பங்கு உண்டு. சுந்தர ராமசாமி எந்த மேற்கத்திய படைப்புக்குறித்தும் சொல்லும்படி ஏதும் எழுதவில்லை. எழுதியபோது வெறும் தகவல் குறிப்புகளையே தொகுத்துத் தர முடிந்தது. அல்லது உன்னதம், அற்புதம், சிகரம் போன்ற சொற்களை எந்தப் படைப்புக் குறித்தும் அவர் விரிவான விமர்சனம் செய்ததில்லை. புதுமைப் பித்தனைக்கூட… ஆனால் தமிழ் இலக்கியத்தில் ஒன்றுமில்லை என்ற அபிப்பிராயத்தை படிப்படியாக – நான் உட்பட – இலக்கிய வாசகர்களிடம் ஏற்படுத்தியுள்ளார்.

‘இந்த மாயையின் விளைவாகவே தமிழில் புத்திலக்கிய பாவனைகள் பிறந்தன. தன் வாழ்வு குறித்து, தன் தேடல் குறித்து தனக்குரிய மொழியில் எழுதினால் அது உலக இலக்கியம் ஆகாது என்று தமிழ் எழுத்தாளன் அறிவுறுத்தப்பட்டான்’ என்று எழுதுகிறார் ஜெயமோகன் என்றொரு எழுத்தாளர்.

அதிர்ஷ்டவசமாக இந்த மாயை தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டைப் பின்பற்ற முயன்ற வெகு சில புலம் பெயர்ந்த இலங்கையர்களையும் மட்டும்தான் பிடித்தது. சிங்கப்பூரோ, மலேசியாவோ, இலங்கையோ அல்லது உலகெங்கும் விரிந்து கிடக்கிற தமிழ் கூறும் நல்லுலகின் மற்றப் பகுதிகளோ இந்த மாயைக்கு பலியாகவில்லை. ஏனெனில் அங்கு இந்த இலக்கிய சிறு பத்திரிகைகள் செல்வாக்குப் பெறவுமில்லை.

தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து தமிழில் இலக்கியம் படைக்க முன்வருவோர் இன்று தமிழ் நாட்டிலிருந்து கற்றுக்கொள்ள ஏதும் இல்லை. ஆனால் அவர்கள் முன் இரு பெரும் கடமைகள் நிற்கின்றன.

ஒன்று, தங்கள் நாட்டை, வாழ்வை, வாழ்வு சார்ந்த பிரச்சினைகளை, தேடல்களை முன் வைத்து தேசிய இலக்கியங்கள் படைப்பது. இரண்டு, அந்த தேசிய இலக்கியங்கள் மூலம், எந்தச் சமூகத்திற்கும், எக்காலத்திற்கும் பொருந்தத்தக்க வாழ்வியல் உண்மைகளைத் தொட்டுக் காட்டுவது. சங்க இலக்கியம் போல.

இது மிகப் பெரிய சவால்தான். ஆனால் இலக்கியம் என்பது வெறும் அழகியல் சார்ந்தது என்ற பிரமைகளில் இருந்து விடுபடும்போது இது இயல்பானதாகிவிடும். அழகியலை மாத்திரம் சார்ந்து எழுதுவது என்பது ஒற்றைக் கண்ணால் உலகைப் பார்ப்பதைப் போல. அறவியலும் எழுத்திற்குத் தேவை. அழ்கியலும் அறவியலும் சேரும்போது முழுமையான பார்வை வாய்க்கும்.

வாருங்கள். அதை நோக்கி அடி எடுத்து வைக்கலாம். எல்லா நெடிய பயணங்களும் ஒரு சிறிய அடியில்தான் துவங்குகின்றன.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these