நினைவுப் பரிசுகள்

என் ஜன்னலுக்கு வெளியே, எதிர் மரக் கிளையில் தொங்கிக் கொண்டிருக்கிறது ஒரு நட்சத்திரம். புத்தாண்டை வரவேற்பதற்காக வானத்திலிருந்து வந்ததைப் போல இருளில் பொலிந்து கொண்டிருக்கிறது அந்தக் காகிதத் தாரகை. ஊர் உறங்கிய நடுநிசியிலும் அது ஒளிர்ந்து கொண்டிருக்கிறது, உள்ளத்து நினைவுகளைப் போல.

உண்மையில் புத்தாண்டு என்று ஒன்று உண்டா? ஒரு நதியைப் போலப் பூவையும் பிணத்தையும் ஒரு சேர ஏந்திக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது காலம். நல்லதும் கெட்டதும் அதனிடம் இல்லை. கற்பூர ஆரத்தி எடுப்பதோ கழிவைக் கொட்டுவதோ நாம்தான். நாம் எதைத் தருகிறோமோ அதை நதி ஏற்கிறது. கால நதியின் கதியும் இதுவே. நம் மனம் பூத்தால் அது மகிழ்வு தரும் “நல்ல” காலம். அது வதங்கிப் போனால் வருத்தம் தரும் “கெட்ட” காலம்.

எனவே நாம் புதிதாகப் பிறக்காதவரை புதிய ஆண்டு பிறப்பதில்லை. இதைப் புரிந்து கொணடவர்களுக்கு “இன்று புதிதாய்ப் பிறந்தோம்” என்ற மகாகவியின் சொற்களுக்குள் மறைந்து நிற்கும் உண்மை மந்திரம் போட்டது போல் உள்ளத்தை திறக்கும். உள்ளம் திறந்தால் உலகம் விரியும்; உலகம் விரிந்தால் மனது செழிக்கும்; மனது செழிப்பதைப் போலொரு மகிழ்ச்சி மற்றொன்று உண்டோ?

ஓடும் ஆற்றை உள்ளங்கை கொண்டு அள்ளலாம். குடம் குடமாய்க் கோரி ஊற்றலாம். அணை கட்டிக் கூட ஆழத்தை அளக்கலாம். விரைந்தோடும் வெள்ளத்தை வினாடிக்கு இத்தனை கன அடி என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். அவரவர் சக்திக்கும் தேவைக்கும் தகுந்தாற்போல் அளவுகள் மாறும்.ஆனால் அந்த அளவுகள் எல்லாம் ஆற்றின் அழகையும். அதன் சுழிகளையும் சொல்லுமோ?

காலம் என்னும் பேராற்றையும் கடிகாரம் கொண்டு அளக்கிறோம். காலண்டர் கொண்டும் அளக்கிறோம். வருடங்களாலும் பருவங்களாலும் அளக்கிறோம். ஆனாலும் அந்தக் கணிதங்கள் காலம் பொதிந்து வைத்திருக்கும் ரகசியங்களையும் புதையுண்ட சரித்திரங்களையும் நமக்குச் சொல்லுமோ?

ஓடுகிற ஆற்றின் ஓரமாய் ஒரு பாறை. ஆண்டாண்டு காலமாய் அசைக்க முடியாமல் உறுதியாய் உட்கார்ந்திருக்கிறது அசைக்க முடியாத அதைக் கரைத்துப் பார்க்க முயற்சித்தது ஆறு. கல்லை உடைக்கலாம். கரைக்க முடியுமா? அதிக பட்சமாக ஆற்றால் முடிந்தது அதன் ரேகைகளை கல்லின் மீது எழுதிச் செல்வது மட்டுமே. அந்த ரேகைகள் சில நேரங்களில் கவிதையைப் போல் அழகாக இருந்தன. சில நேரங்களில் குழந்தையின் கிறுக்கலைப் போல கவிதையாக இருந்தன. அந்தக் கவிதைகளைக் காற்று மட்டும் வந்து வாசித்துவிட்டுப் போகும். வாசித்ததைச் சில நேரம் சூரியனுக்கும் சொல்லும். இயந்திர கதியில் ஓடிக் கொண்டிருக்கும் சூரியனுக்கு இலக்கியத்தில் இளைப்பாற அவகாசம் இல்லை. தனது பரிசுகள் எல்லாம் பயனற்றுப் போயினவே என்று எண்ணும் போது ஏதோ ஒரு சுய இரக்கம் காற்றைச் சூழும்

நமக்குள்ளும் பாறைகள் இருக்கின்றன. காலம் என்னும் பேராறு கரைத்து விட முடியாத பாறைகள். புரட்டிப் போட்டுவிட முடியாமல் புதையுண்டு நிற்கும் பாறைகள். அசைத்துப் பார்க்க முடியாமல் அமர்ந்திருக்கும் பாறைகள். அவற்றிற்ற்கு நினைவுகள் என்று பெயர். காலம் என்னும் ஆறு அதன் ரேகைகளை அவ்வப்போது அதில் எழுதிச் செல்கிறது என்றாலும் அதை அடித்துக் கொண்டு போக அதனால் முடிவதில்லை. நினைவுகளின் நெற்றியில் காலம் எழுதிய கவிதைகளை மனம் என்னும் காற்று வாசித்து ரசிக்கிறது. அவ்வப்போது அறிவு என்னும் ஆதவனுக்கும் அது அனுப்பி வைக்கிறது. ஆனால் எந்திரம் போல் இயங்கிக் கொண்டிருக்கும் அறிவு  எனக்கெதற்கு இது என்று அந்தப் பரிசுகளைப் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கிறது

இளம் பருவத்தின் நிகழ்வுகளை நினைவுகளாகச் சேமியுங்கள். காற்றைப் போல அவை கடந்து போய்விடாமல் கல்வெட்டுக்களைப் போல செதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.ஏனெனில் சேமித்து வைத்த நினைவுகள் எதிர்காலத்திற்குத் தேவைப்படும். எந்த நாளும் நாம் குழந்தைகளின் வெள்ளை மனத்தோடு இருந்து விட முடியாமல் இந்த வாழ்வின் ரசாயனங்கள் உங்களுக்குள் மீள முடியா வேதியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது ஓர் யதார்த்தம். அநீதியைக் கண்டு அறச்சீற்றம் கொள்கிற இளைஞனின் அனல் மனதைக் காலம் என்னும் மழை அவித்துவிடும். நேர்மை பிறழ்கிற அதிகாரத்திற்கு எதிராக நெஞ்சை நிமிர்த்திப் போரிடுகிற தீரத்தை காலத்தின் கணைகள் துளைத்துத் துளைத்துத் துவண்டு போகச் செய்யும். காமம் தீண்டாத, காதல் பூத்த மனதைக் கழுதைகள் தின்று போகும். நாற்பது வயதைக் கடந்த இளம் கிழவர்கள் எல்லோரும் கடந்து வந்த ஆபத்துக்கள் இவை. இவற்றில் மீண்டவர்கள் வெகுசிலர். மாண்டவர்கள் மிகப் பலர். இரண்டும் இல்லாமல் இடைநிலையில் குற்றுயிரும் குலை உயிருமாக மயங்கிச் சரிந்தவர்கள் ஏராளம்

மாண்டவர்களை உயிர்ப்பிக்கும், மயங்கியவர்களைத் தெளிவிக்கும் மாமருந்து இந்த இளமைக்கால நினைவுகள்தான். இவை நாளை உங்களுக்கும் தேவைப்படும். வெற்றி வெற்றி என விரையும் இயந்திர வேகத்தில் இவற்றை நிராகரித்து விடாதீர்கள்.

இன்னும் சில நினைவுகள் இருக்கின்றன. அவை அடுத்தவருக்கு நாம் அளித்தவை. அவர்கள் நமக்குக் கொடுத்தவை. அவற்றுள் சில மேனியில் முளைத்த மச்சங்களைப் போல அகற்ற முடியாதவை. சில வாடிப் போன பூச்சரம் போல அன்று மணம் வீசி மகிழ்ச்சி தந்து இன்று வாசம் இழந்தவை. இன்னும் சில கருவாட்டைப் போல. காய்ந்து போனாலும் மணம் இழக்காதவை. வேறு சில பல் இடுக்கில் மாட்டிக் கொண்ட பழ நாரைப் போல நெருடிக் கொண்டே இருப்பவை. இளம் பருவத்தில் ஆடையிலாமல் எடுத்த புகைப்படம் போல சில இன்று நாணமுறச் செய்பவை. இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் சரி செய்து விடலாம் என நம்பிக்கை தருபவையும் உண்டு நெல்லிக்காயைத் தின்று தண்ணீர் குடித்த்தைப் போல அன்று துவர்த்து இன்று இனிப்பவையும் உண்டு. நாம் மணி மகுடம் என நம்பிச் சூடிய கீரிடங்கள் முள் முடியாய் மாறிப் போன ரணங்களும் உண்டு. வாள் வாளாய் நீண்டிருக்கும் கள்ளிக்கு நடுவில் கனிந்திருக்கும் பழத்தைப் போல இவற்றுக்கு இடையில் எண்ண எண்ண இனிக்கும் நினைவுகளும் உண்டு

நீங்கள் உங்களைச் சூழ்ந்திருக்கும் நண்பர்களுக்கு இந்தக் கனிகளைக் கொடுங்கள். உங்களைப் பற்றிய நினைவு அவர்களுக்கு என்றும் இனிப்பதாக இருக்கட்டும்.

இந்தப் புத்தாண்டுக்கு எப்போதும் போல சில பரிசுகள் வந்தன. தினந்தோறும் தேதி கிழிக்கும் காலண்டர்கள், அழகிய படங்கள் அச்சிடப்பட்ட நாள் காட்டிகள், டைரிகள், தொலைபேசி எண்களைப் பதிந்து கொள்ளும் குறிப்பேடுகள் எனச் சில. இவை எதுவும் எனக்கு இன்று உதவாது. ஏனெனில் இவையாவும் என் நெஞ்சருகில் நான் சுமக்கும் கைபேசிக்குள் வந்துவிட்டன

இந்தப் புத்தாண்டுக்கு நீங்க்ள் கொடுக்கும் பரிசு உதவாத ஒன்றாக இருப்பதைவிட நெஞ்சருகே சுமக்கும் இனிய நினைவுகளாக இருக்கட்டும். காலத்தால் அழிக்க முடியாத கோலங்களாய் அவை மன வாசலில் மலர்ந்து கிடக்கட்டும்

.

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *