தேவன் என்று ஒரு மனிதன்

வீழ்வேன் என்று நினைத்தாயோ-11

தேவன் என்று ஒரு மனிதன்

மாலன்

தொழிற்சங்கம் என்பது மோதல் களமாக இருக்க வேண்டியதில்லை, லாபம் ஈட்டும் சமூக வணிக நிறுவனங்களாகச் செயல்படலாம் என்ற கருத்தியலை விதைத்த தேவன் நாயர், அவர் பெயர் சுட்டிக் காட்டுவது போல கேரளத்தைச் சேர்ந்தவர். ஆனால் கேரளத்தில் பிறந்தவர் அல்ல. அவரது தந்தை காலத்திலேயே அவரது குடும்பம் மலாக்காவில் குடியேறிவிட்டது. தேவன் நாயரும் அங்குதான் பிறந்தார் (1923) தலைசேரியைப் பூர்வீகமாகக் கொண்ட அவரது தந்தை ஐ.வி.கே.நாயர், ரப்பர் தோட்டம் ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். தேவன் நாயருக்கு 10 வயதிருக்கும் போது அவரது குடும்பம் மலாக்காவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தது.

தேவன் நாயருக்கு நல்ல குரல்வளம் வாய்த்திருந்தது. இந்தி, பெங்காலி, தமிழ்ப் பாடல்களை இனிய குரலில் பாடி மகிழ்வதும் மகிழ்விப்பதும்தான்  சிறுவனாக இருந்த போது அவரது பொழுதுபோக்கு. அவரது குரல் வளத்திற்காகவே அவர் பள்ளியின் சேர்ந்திசைக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

சிங்கப்பூரில் பிரிட்டீஷ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்.பள்ளிக்கு பிரிட்டீஷ் அரசின் பிரதிநிதி ஒருவர் வருகை தருகிறார். இசைக் குழு அவரைப் பாடி வரவேற்க வேண்டும். “கடலை ஆள்கிறது பிரித்தானியா. பிரித்தானியர்கள் ஒருபோதும், ஒருபோதும் அடிமைகளாக இரார்” என்பது பாடல் வரி (“Britannia rules the waves, Britons shall never, never, never be slaves”) அந்தப் பள்ளிப் பருவத்திலேயே தேவன் நாயருக்கு ஆங்கிலேயக் காலனி ஆட்சி மீது கடும் வெறுப்பு. பாடல் ஒத்திகையின் போது அவர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் விருந்தினர் வந்த போது இரண்டாவது வரியை “பிரிட்டன் ஒருபோதும், ஒருபோதும், (இனி) கடலை ஆளாது” என மாற்றிப் பாடினார். (“And Britain shall never, never, never rule the waves!”) பாட்டின் ராகத்தை மாற்றாமல் வரிகளை மட்டும் மாற்றிப் பாடினார். என்றாலும் கண்டுபிடித்துவிட்டார்கள். பள்ளியின் இசைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.  .

ஆனால் அவரிடமிருந்து காலனி ஆதிக்கத்திற்கெதிரான வெறுப்புணர்வையும், போர்க்குணத்தையும் நீக்க முடியவில்லை. பள்லிப் படிப்பை முடித்துவிட்டு ஆசிரியப் பணிக்குப் போனார். அங்கு தொழிற்சங்கம் தொடங்கினார்.

காலனி அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பிரிட்டீஷ் அரசு அவரை அவரது 28ஆம் வயதில் (1951) இரண்டாண்டு தண்டனை வித்தித்து சிறைக்கு அனுப்பியது. ஆனால் அப்போதும் நாயர் தன்னுடைய கருத்துக்களை சிறையிலிருந்தபடியே சிங்கப்பூர் ஸ்டாண்டர்ட் என்ற ஆங்கில நாளிதழில் எழுதி வந்தார்.

தேவன் நாயர் நல்ல பேச்சாளரும் கூட. அண்ணா, வாஜ்பாய், போலக் கையில் எந்தக் குறிப்பும் வைத்துக் கொள்ளாமல், பல மேற்கோள்களுடன், வசீகரமான நடையில் மணிக்கணக்கில் பேசக் கூடிய திறம் வாய்ந்தவர்.

அவரது தாய்மொழி தமிழ் அல்ல என்ற போதிலும் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியவர். சிங்கப்பூரில், பயிற்று மொழி ஆங்கிலம், ஆனால் தமிழை இரண்டாம்மொழியாய்க் கற்கலாம் என்ற நிலை ஏற்பட்டபோது தமிழ்ப் பெற்றோர்களில் பலர் தமிழைக் கைவிட்டு மலாய் அல்லது சீனத்தைத் தேர்ந்தெடுத்தனர். வீட்டில்தான் தமிழ் பேசுகிறோமே, அதனால் குழந்தைகள் அதிலிருந்து தமிழைக் கற்றுக் கொள்வார்கள். பள்ளியில் சீனமோ, மலாயோ படித்தால் அவர்கள் மூன்று மொழி (ஆங்கிலம், சீனம் அல்லது மலாய், தமிழ்)  தெரிந்தவர்கள் ஆவார்கள் என்று அவர்கள் கணக்குப் போட்டார்கள். அது பலன் அளித்ததா?  தேவன் நாயர் தன்னுடைய சொந்த அனுபவத்தை ஒரு கூட்டத்தில் பேசுகிறார்:

“என் பிள்ளைகளையே எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். என்னுடைய மகள் மடடுமே  தமிழை இரண்டாம் மொழியாகப் பயில்கிறார். அதுவும் குடும்பத்தில் ஒரே பெண் என்பதால் இந்து சமயப் பண்புகளையும் பழக்கவழக்கங்களையும்  கடைப்பிடித்துக் குடும்ப மரபைப் போற்ற தமிழ்ப் படிக்க வேண்டும் என்று என் மகளை வற்புறுத்தியதால்தான். என் மூத்த பிள்ளைகள் மூவரும் தன் தாயாருடன் தமிழ்ப் பேசுவதால் தமிழ்க் கற்றுக் கொள்வது எளிது என்று பள்ளியில் இரண்டாம் மொழியாக  மலாய்ப் படிக்க எண்ணினார்கள். இதனால் இரண்டு மொழி மட்டுமல்ல, மூன்று மொழி தெரிந்தவர்களாகவும் இருக்க முடியும் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் இறுதியில் கண்ட பலன், தம் தாயாருடன் பேசுவதால் மட்டும் தமிழறிவு பெற முடியாது என்பதுதான்.. தாயாருடன் தமிழ் பேசுவது மட்டும்  அவர்களுக்குத் தம்முடைய பண்பாட்டுத் தொடர்பை உருவாக்கிக் கொடுக்கக் கூடியதாக இல்லை.

உண்மையில் அது நகைப்புக்கிடமானதாகவும் ஆகிவிட்டது. ஏனெனில் நான் நாள்தோறும் தாயும் பிள்ளைகளும் உற்சாகத்துடன் இரண்டு மொழிகளில் உரையாடுவதைக் கேடகிறேன். தாய் தமிழில் பேசுவார். பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவர். இவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்கின்றனர். ஆகவே என் பிள்ளைகள் தன் தாயாருடன்  பேசும் போது ஆங்கிலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்னும் தடை விதிக்கப் போகிறேன். தமிழில் பேசட்டும் இல்லை என்றால் பேசாமல் இருக்கட்டும்.”

தேவன் நாயரைப் பொறுத்தவரை மொழி என்பது அறிவோடு அல்ல, பண்பாட்டோடு சம்பந்தப்பட்டது. தாய்மொழியை அல்லது நமது பண்பாட்டு மொழியைக் கற்காவிட்டால் நாம் வேரற்றவர்கள் ஆகி விடுவோம் என்பது அவரது எண்ணம்.

“ஆங்கில மொழியையே அடிப்படையாகக் கொண்ட கல்வி உங்களுக்குப் பல நன்மைகளை வழங்கினாலும் உங்களை ஓர் ஆங்கிலேயராக மாற்றி விடாது.. ஒரு மனிதக் குரங்கு மனிதனைப் போல நடந்து கொண்டாலும் குரங்கு குரங்குதான்.அறியாமையின் காரணமாகத் தம் பண்பாட்டை மறந்து ஆங்கில மொழிப் பண்பாட்டைப் போற்றும் வெள்ளையரல்லாதாருக்கு இந்த உண்மையை ஆங்கில உலகத்தைச் சேர்ந்த இனோக் பவல்கள் தொடர்ந்து நினைப்பூட்டி வருகின்றனர்”

யார் இந்த இனோக் பவல்? இனோக் பவல் ஓர் பிரிட்டீஷ் அரசியல்வாதி. கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர். பல மொழிகள் அறிந்தவர். ஐந்தாம் வயதில் கிரேக்க மொழி கற்க ஆரம்பித்தவர் வாழ்நாள் முழுதும் பல மொழிகளைக் கற்று வந்தார் (கடைசியாக தனது 70ஆம் வயதில் 14வது மொழியாக அவர் கற்றுக் கொண்டிருந்தது ஹீப்ரூ!) பல மொழிகள் கற்றும் அவர் மனிதத் தன்மையோடு நடந்து கொள்ளவில்லை என்பது தேவன் நாயரது எண்ணம். அவர் மட்டும் அல்ல பலரும் அப்படித்தான் நினைத்தார்கள். அதற்குக் காரணம் அவரது “ரத்த ஆறு உரை” என்று வரலாறு குறிப்பிடும் ஓர் உரை. அறுபதுகளின் மத்தியில் காமன்வெல்த் நாடுகளிலிருந்து பலரும் பிரிட்டனில் வந்து குடியேறிக் கொண்டிருந்தார்கள். அதைத் தடுக்க வேண்டும் என்ற கருத்து அங்கு உருவாகிக் கொண்டிருந்தது. பத்திரிகைகள் மனிதாபிமான அடிப்படையில் அதைத் தடுக்கக்கூடாது என்றும், அதை உறுதி செய்யும் வகையில் பாரபட்சத்திற்கெதிரான சட்டம் (anti discriminatory law) இயற்ற வேண்டும் எனவும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. அப்படி அழுத்தம் கொடுத்து வந்தவர்களையும் பத்திரிகைகளையும் சாடி இனோக் பவல் கட்சிக் கூட்டத்தில் பேசினார் (ஏப்ரல் 20,1968). அந்தப் பேச்சில், விர்ஜில் என்ற கவிஞர் எழுதிய பழைய இலக்கியம் ஒன்றிலிருந்து “டைபர் நதியில் ரத்தம் நுரைத்துக் கொண்டு ஓடும்” என்று பேசினார். அது அன்றைய பிரிட்டனில் பெரும் சர்ச்சையாயிற்று.

தேவன் நாயர் ஒரு கம்யூனிஸ்ட்டாகத்தான் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின் அந்த சித்தாந்தத்திலிருந்து மாறுபட்டர். தொழிலாளர்கள் நிறைவான சம்பளம், நிம்மதியான வாழ்க்கை இவற்றைத்தான் விரும்புகிறார்களே தவிர, வேலை நிறுத்தம், பணி நீக்கம் இவற்றை அல்ல.கம்பூனிஸ்ட் கட்சி அரசு அமைய அவர்கள் தங்களை பலி கொடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது அவரது வாதம். அதனால் லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சிக்கு ஆதரவளித்தார். பின்னாட்களில் அதன் தூண்களில் ஒருவரானார். தொழிலாளர்கள் யாருடன் இருக்கிறார்களோ அவர்கள்தான் சிங்கப்பூரில் ஆட்சியைக் கைப்பற்ற் முடியும், தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை நன்கு உணர்ந்திருந்த லீ அவரை நன்கு பயன்படுத்திக் கொண்டார்

ஒரு தொழிலாளர் தலைவராகத் தொடங்கிய அவர் நாட்டின் மிக உயர்ந்த பதவியான அதிபர் பதவிக்கு 1981ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் அவர்தான். 1985 வரை அந்தப் பதவியில் இருந்த அவர் அதிலிருந்து மிகுந்த மனவேதனையோடு வெளியேறினார்.

ஏன்?

 அது அடுத்த வாரம்

 

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *