யாவரும் கேளிர்-மீரா

அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக

இன்புறு சிந்தை இடுதிரியாய் ஒளிர்ந்த ஞான விளக்கு

பொங்கல் வரும்போதெல்லாம் எனக்கு மீராவின் நினைவும் வரும். காரணம் கல்வெட்டுப் போல் பதிந்துவிட்ட அவரது கவிதை.

தமிழுணர்வினால் உந்தப்பட்டு என் பள்ளி இறுதி  நாள்களில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்ட நான், திராவிட இயக்கப் பத்திரிகைகளைப் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். 1969 ‘காஞ்சி பொங்கல் மலரில் அண்ணா ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதுதான் அண்ணா பத்திரிகைகளில் தம்பிக்கு எழுதிய கடைசிக் கடிதம் என்று நினைவு.

அதில் அவர் ஒரு கவிதையை மேற்கோள் காட்டியிருந்தார்

தைத் திங்கள் வருகின்ற பொங்கல் நாளில்

தங்கதைச் சுமக்கின்ற மகளிர் ஆக்கும்

நெய்ப் பொங்கல் சுவைத்து உண்டு மகிழ்வர்

செல்வர் என்றென்றும் எங்கள்

கைபட்டு வாய்பட்ட்துண்டோ  பொங்கல்?

கண்மட்டும் ஓயாமல் பொங்கும் பொங்கும்

தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கு இல்லை

தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?

என்ற கவிதையை வியந்து பாராட்டி, இந்தக் கவிதையை எழுதிய தம்பி மீ.ராசேந்திரன். என்று  குறிப்பிட்டிருந்தார் அந்த மீராசேந்திரன் மீரா, அப்படித்தான் மீரா. அப்படித்தான் எனக்கு மீரா அறிமுகம்.

சில ஆண்டுகள் கழித்து, கனவுகள் + கற்பனைகள் வெளிவந்தது. அது என் கல்லூரிக் காலம் கல்வியோடு கவிதையும் பயின்ற காலம்  நான் கல்லூரி முதலாண்டில் இருக்கும்போதே என் கவிதை ‘எழுத்து’ வில் வெளிவந்திருந்ததால், மருத்துவக் கல்லூரியில் இலக்கிய வாசம் உள்ள நண்பர்களுக்கு என் பெயர் அறிமுகமாகி இருந்தது.

ஆனால் அந்த இலக்கிய நண்பர்கள் எல்லாம் மரபுக் கவிதையின் மீது மாளாத காதல் கொண்டிருந்தார்கள். அப்போது கல்லூரி வளாகத்தைக் கலக்கிக் கொண்டிருந்த ஐ அருணகீதாயன், தமிழறிஞர் ஐயம் பெருமாள் அவர்களது மகன். ஆதலால் தமிழ்மரபு அவரது குருதியில் கலந்த ஒன்றாக இருந்தது. இன்னொரு நண்பரான கவிஞர் அன்பழகன், (இப்போது அன்பு ஜெயா என்ற பெயரில் ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதுகிறார். சைவ சித்தாந்தத்தின் மீது ஏற்பட்டு அவர் திருவதிகை என்ற தலம் குறித்து எழுதிய நூல் அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்டது) பெருஞ்சித்திரனாரது இலக்கிய இதழ் தென்மொழியின்மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்.  அதனால் தனித்தமிழ் ஆர்வலர். கணையாழி  தீபம் படிக்கும் நண்பர், இராமசுப்ரமணியன் இடதுசாரி.  இடதுசாரிகள் அப்போது புதுக்கவிதையை “மேலை நாட்டுப் பனிக்காற்றால் பிடித்த (ஜல) தோஷம் என்றெல்லாம் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தனர். கல்லூரியில் கண்ணதாசன் மீது காதல் கொண்டவர்களும் உண்டு. ஆனால் அவரும் அப்போது புதுக்கவிதைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. வகுப்பறையில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கள்ளத்தனமாக வெண்பா எழுதிக்களித்த நேரம்போக புதுக்கவிதையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்போம். சமயத்தில் எல்லோருமாகச்சேர்ந்து எனக்கு ‘டின் கட்டு’வார்கள்.

அந்த நேரத்தில்தான் மீராவின் கனவுகள் வந்தது. அது என் தரப்புக்கு வலு சேர்த்தது. நாடறிந்த மரபுக்கவிஞர் ஒருவர் புதுக்கவிதை எழுத வந்தது குறித்து எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. என் மகிழ்ச்சியைத் தெரிவித்து அவருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். இரு தினங்களில் இள நீல இன்லாண்ட் உறையில், கருப்புமசியில் அலை அலையாகப் புரண்ட அழகான கையெழுத்தில் பதில் வந்தது.

பின்னால் எத்தனையோ கடிதங்கள். அவர் சிவகங்கையிலும் நான் மதுரையிலும் இருந்த போதும் அதிகம் சந்தித்துக் கொண்டதில்லை. கடிதங்கள் மூலமே உரையாடிக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் கவிதை பற்றிய உரையாடல்கள்தான். வார்த்தை வளம் வற்றியோ, ஓசை நயம் அறியாமலோ நான் புதுக்கவிதைக்கு வந்துவிடவில்லை என்பதை உரக்க மறுப்பதற்காக நான்  சந்தம் நிறைந்த கவிதைகள் எழுதி நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொண்டிருந்தேன். காளையின் கழுத்தில் கட்டப்பட்ட சலங்கை போன்றோ,காலி டப்பாவில் உருளும் கல்போன்றோ ஓரு சீரான தளகதியில் ஒலிக்கும் கவிதைகள். ஊமைகளோ, உளறுவாயர்களோ படித்தால் கூட அந்த சந்தங்களின் தாளகதி தப்பாமல் விழும் வகையில் ‘உருவாக்கப்பட்டவை’ அவை. கண்ணதாசன் தந்த மீட்டருக்கு நீட்டப்பட்ட கவிதைகள் அவை; உதாரணத்திற்கு ஒன்று;

ஒருகோடி கனவினில் விழிமூடித் துயில்கையில்

உற்சாகம் கொள்ளுகின்றேன்

உறவு பகை இல்லாத பெரும்வெளிப் பரப்பினில்

உல்லாசப் பள்ளி கொண்டேன்

திருகோடி வருவதைத் தெருகூடிக் கொள்கையில்

திண்ணையில் தூங்குகின்றேன்

தினம் கோடிக் கனவுகள் மனமாடி விரிந்திடும்

திருப்தியில் ஓங்கி நின்றேன்

எருக்கூட்டில் வைத்தென்னை எரிக்கின்ற நாள்வரினும்

வெருளாது எந்தன் மனமே

வெருள்தலும் அருள்தலும் விளைந்தயிவ் வாழக்கையும்

விளையாட்டு மிக்க கனவே!

அக உலகில் புகைந்து கொண்டிருந்த கனவுகளும், புற உலகில் கன்ன்று கொண்டிருந்த கையாலாகத கோபமுமே அந்த இளம் பருவத்துக்  கவிதைகளின் கருப் பொருளாக இருந்தன..சிறு பிள்ளைத் தனமாக இருந்தாலும் அதைப் பெருமிதத்தோடு பகிர்ந்து கொண்டிருந்தோம்.

மீராவிற்கும் என் கவிதைகளை அனுப்பி வைத்தேன். அந்தக் கவிதைக் கொத்துக்கு நான் சூட்டியிருந்த பெயர் ‘ஒரு பாமரனின் பா மரம்”. மீராவிடமிருந்து பதிலேதும் வரவில்லை. எனக்குக் கோபம் வந்தது. ஆனாலும் மெளனமாக இருந்தேன்

ஒரு மாதம் கழித்து கறுப்பு மசியில் அலைவீசிப் படரும் அழகிய கையெழுத்தில் மீராவின் கடிதம் வந்தது. 4.5.72 தேதியிட்ட அந்தக் கடிதம் இப்படித் தொடங்கியது : ‘ அன்புள்ள மாலன், தாமதமாக பதில் எழுதுவதாக நான் வருந்தினாலும் ஒரு மாத்த்திற்குள் எழுதியிருக்கிறேனே என நீங்கள் மகிழலாம்.” இதில் இருந்த நயம், மன்னிப்புக் கோராமல், நேரம் இல்லை என சாக்குச் சொல்லாமல், கம்பீரமாக யதார்தத்தை ஒளிவு மறைவில்லாமல் சொன்ன கம்பீரம் என்னை ஈர்த்தது

“தங்கள் பால்மரத்தைப் பார்த்தேன். அது மலேசியக் காடுகளில் காணப்படும் செல்வ வளஞ்சுரக்கும் பால் மரம் போல் உள்ளது. உங்கள் (க)விதைகள் விரைவில் ஓங்கி வளர்ந்து மரமாகி நிழல் பரப்பி நிற்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.  சிறிது நேரத்திற்கு முன்பு கூட்த் திரும்பிப் படித்தேன். சத்தியமணம் கமழ எழுதியிருக்கிறீர்கள்” என்று ஆரம்பித்து ஒவ்வொரு கவிதையாக எடுத்துக் கொண்டு ஆழ்ந்து அனுபவித்து கருத்துக்களைப் பொழிந்திருந்தார். ஓரிட்த்தில் கூட கடுஞ் சொல் இல்லை.

அநேகமாக எல்லாக் கவிதைகளையும் கொண்டாடியிருந்தார்.ஒன்றிரண்டை தனது கவிதைகளோடு ஒப்பிட்டுப் பேசிய பெருந்தன்மை என்னை பேச்சற்றுப் போகச் செய்தது. தாபம் என்ற என்னுடைய கவிதை ஒன்றைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.”தாபம்- ஒரு மெல்லிய பனித்துளி. நான் ‘காகிதங்களை’ எழுதிய போது என்னுள் ததும்பி நின்ற ஜீவரசத்தை- உயிர்த்தேன் – உங்கள் தாபத்தில் மீண்டும் என்னால் காண முடிந்தது”

இப்போது நினைத்தாலும் மனது கசிகிறது. மீரா இந்தக் கடிதங்களை எழுதுகிற காலத்தில் தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட கவிஞர். அவர். கவிஞர்கள் புகழ் வெளிச்சத்தில் சிம்மாசனமிட்டு ஞானச் செருக்கோடு அமர்ந்திருந்த காலம் அது. அன்றைய இளைஞனுடைய கனவெல்லாம், சினிமா நட்சத்திரமாவதோ, இயக்குநராவதோ அல்ல, கவிஞன் ஆவது  அல்லது அரசியல்வாதி ஆவது. எங்களின் இளவேனிற்காலம் கவிதைகளின் பொற்காலமாகப் பூத்திருந்தது. மீராவின்  கவிதைகளுக்கோ அரசியல் அதிகாரத்த்தை கையில் வைத்திருந்தவர்களில் கூட அபிமானிகள் இருந்தார்கள்.  ஆனால் அவர் கர்வத்தை கீரிடமாக அணிந்ததில்லை. அறிவை ஆடையாக அணிந்திருந்தார்.ஆபரணமாகச் சூடி மினுக்கவில்லை.  முகமூடி இல்லாத அந்த மனிதரின் முதுகில் சுமைகள் ஏறியிருந்தன. கல்லூரி ஆசிரியர்களது தொழிற்சங்கத்தில் அவர் முனைப்பாக இருந்த காலம் அது.

அவருக்கும் எனக்கும் 12 வயது வித்தியாசம். நான் அவரது மாணவனும் அல்ல. நான் அனுப்பியவை அச்சிட்ட ஒரு கவிதை நூல் அல்ல. முழுக் கவிதைத் தொகுதியும் அல்ல. காகிதங்களில் எழுதப்பட்ட கவிதைக் கொத்து. அதை அவரது அத்தனை பணிக்கு நடுவில் வாசிக்காமல் கூடப் புறக்கணித்திருக்கலாம். ஆனால் வாசித்து, ஒவ்வொரு கவிதை பற்றியும் பாராட்டி, நான்கு பக்க அளவிற்கு சொந்தக் கையெழுத்தில் கடிதம் எழுதி ஊக்குவிக்கிற மனதைக் கொண்டாட மட்டுமல்ல, வணங்கவும் தோன்றியது எனக்கு..

இத்தனைக்கும் எங்கள் அரசியல் பார்வையில் வேறுபாடுகள் இருந்தன. ஊது சங்கே என்ற என் ஒரு கவிதை குறித்து அவர் “ உங்கள் ஊது சங்கே நியாயமான கோபத்தின் வெளிப்பாடு. ‘வாய் மெய்யை வெல்கின்ற மாய்மால சாலங்கள்’ என்ற வரி உங்கள் கோபம் எந்தத் திசை நோக்கிப் பாய்கிறது என்று காட்டிக் கொடுக்கிறது. பழைய பந்த பாசத்தில் உழன்று கொண்டிருப்போரும் கூட நீங்கள் சொல்வதை உண்மை என்றுதான் ஏற்பார்கள்” என்று எழுதியிருந்தார். நேர்மை என்பது நிழல் போல அவர் கூடவே இருந்தது.

விண்ணில் சூரியன் பொலிகிற திசை நோக்கி விருட்சத்தின் கிளைகள் வளைவதைப் போல நெடும் மரபு கொண்ட தமிழ்க் கவிதையில் புதுக் கவிதைகள் பூக்கத் தொடங்கியிருந்தன. அதனால் கவிதை பற்றியே எங்களுக்குள் அதிகம் உரையாடல்கள் நிகழ்ந்தன. “தீபம் கட்டுரையில் மோனை போதும் என ஞானக்கூத்தன் எழுதியிருப்பதைப் படித்திருப்பீர்கள். எனக்கென்னவோ எதுகை வலது கை போல வலிமை வாய்ந்ததாய்த் தோன்றுகிறது. ஒருமுறை கண்ணதாசன் தலைமையில் பாடினேன். “ஈக்கடியும் கொசுக்கடியும் இருந்தாலும் தெரியாத தேக்கடியும் மூணாறும்……” என்று நான் பாடிய பகுதியைக் கவிஞர் பாராட்டினார். வெறும் சிட்டு பட்டு மொட்டு என்று எதுகைகளை அடுக்குவதில் அழகில்லை என்பதை  ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தக்க விதத்தில் கையாண்டால் எதுகைக்கு எவ்வளவு வலிமை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும் இல்லையா?” என்று ஒரு முறை அவர் எனக்கு எழுதியிருந்தார். இந்த வரிகளும் வாதங்களும் இன்றும் பொருந்தும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

கவிதையில் (ஏன் கதைகளில் கூடத்தான்) ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவது அவருக்கு ஏற்புடையதாக இல்லை.  “அந்நியச் சொற்களைக் கலந்து எழுதுவது அந்த நேரத்தில் கவர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதற்குக் காலத்தின் மரியாதை கிடைக்குமா?” என்று கேட்டு எழுதிய அவர் என் கவிதை ஒன்றை ஆங்கிலம் கலக்காமல் மாற்றி அமைத்துக் காட்டியிருந்தார். இத்தனைக்கும் அதில் நான் பயன்படுத்திய ஆங்கிலச் சொல் இரண்டே இரண்டுதான் க்யூ (வரிசை) பூத் ( சாவடி). என் எழுத்துக்களில் எவர் கை வைப்பதையும் விரும்பாத நான், அவரது திருத்தங்களை ஏற்கவில்லை. வானம்பாடிகளின் யெளன சொப்பனங்களையும், ரத்த புஷ்பங்களையும் எப்படிப் பார்க்கிறீர்கள் என எதிர் வினா எழுப்பியிருந்தேன். “ஆங்கிலச் சொற்களைக் கலக்கும் போது seriousness இல்லாதது போல் படுகிறது என்று என் பாணியிலேயே ஆங்கிலம் கலந்து பதிலளித்து, ‘ ஒரு தமிழாசிரியனாக அல்ல, ஒரு தமிழ் வாசகனாக இப்படி வேண்டுகிறேன்’ என்று கடிதத்தை முடித்திருந்தார்

கவிதைகள் குறித்தே நாங்கள் உரையாடியிருந்தாலும் சிறுகதை ஆசிரியனாக எனக்கு அடையாளம் தந்தவர் அவர். என் சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர விருப்பம் தெரிவித்து அவர் கடிதம் எழுதிய போது திகைப்பும் மகிழ்ச்சியுமாகத் திளைத்தேன். அதுதான் என் முதல் தொகுப்பு. அதற்கு தி.ஜானகிராமன் எழுதிய முன்னுரைதான் எனக்கு இலக்கிய உலகில் விழுந்த முதல் பொன்னாடை  கடிதம்

அவரே விரும்பிக் கொண்டுவந்த தொகுப்பு என்பதாலோ என்னவோ மிகத்தரமாக, மிகஅழகாக அந்தத் தொகுப்பைக் கொண்டு வந்தார். அதற்காக வெளிநாட்டிலிருந்து காகிதம் தருவித்து அச்சிட்டார். மகன் பெற்ற குழந்தைக்கு, தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழட்டிமாட்டும் பாட்டனின் வாஞ்சை அந்தத் தொகுப்பிற்கு வாய்த்தது.

அன்னம் விடு தூது என்ற இடை நிலை இதழைத் துவக்கியபோது கவிஞர் இந்திரனுடன் வீட்டிற்கு வந்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். பேருந்தில் ஏற்றிவிடப்போய் அங்கு நின்றும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பேச்சில் அதிகம் வம்பு இருக்காது. யாரையும் அவர் இகழ்ச்சியாகப் பேசி நான் கேட்டதில்லை. அது அவர் கருத்து, விடுங்க” என்கிற மாதிரியான ஒரு ஜனநாயக அணுகுமுறை அவரிடம் எப்போதும் இருந்தது.

அவரைக் கடைசி முறையாகப் பார்த்தது ஒரு குதூகலமான சூழ்நிலையில். ஒரு விநாயக சதுர்த்தி நாளன்று கவிக்கோவுடன் வீட்டிற்கு வந்திருந்தார். கொழுக்கட்டைகள் தந்து உபசரித்தார் என் மனைவி “உங்க வீட்டிற்கு வரும்போது கொழுக்கட்டை கிடைக்கலாம் என்று நினைத்துக் கொண்டுதான் வந்தேன்” என்றார் கவிக்கோ. “அவருக்கு டயாபடீஸ், கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லத்தான் நானும் கூட வந்தேன்” என்றார் மீரா

அறை முழுக்க சிரிப்பு. அதை நினைத்தால் இப்போது மனம் கனத்துப் போகிறது.

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *