சுப்ரமண்ய ராஜு

subramania Raju

 

அன்பு அர்த்தம் பெறுவதே அது அங்கீகரிக்கப்படும் போதுதான்

 அலம்பி விட்ட  ஈரம் இன்னும் காயவில்லை. கலைந்து போகாத மேகங்களைப் போல திட்டுத்திட்டாய் பரவிக் கிடக்கிறது. தரை குளிர்ந்து கிடக்கிறது. ஆனால் மனம் வெதும்புகிறது. அம்மாவைக் கொண்டு எரித்து விட்டு வந்தேன். அதிகாலையில் இறந்து போனாள். அகால வேளையில் வந்தாலும் விழித்திருந்து சோறு போடுவாளே அவளுக்கு என்னால் கொடுக்க முடிந்தது நெருப்புத்தான்.

ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்ளாமல், சாக்குப் பையில் நிரப்பிய கருணைக் கிழங்கு போல் முண்டும் முடிச்சுமாக இல்லாமல், ஒரே சீரான அள்வில் இடைவெளியில் அச்சுக் கோர்த்தது போல கறுப்பு மசியில் எழுதும் ராஜு அவனது அம்மா இறந்து போன அன்று தணல்களால்  எனக்கு எழுதிய கடிதம் இது

இது ராஜுவை  சரியாக அறிமுகப்படுத்துமா என்ற சந்தேகம் எழுதிய பின் எழுகிறது. அவன் மிகை உணர்ச்சிகள்- சென்டிமெண்ட்ஸ்- ததும்புகிற மனிதன் இல்லைதான். ஆனால் அவனுள் குடும்பம் எப்போதும் நிரம்பியிருந்தது. ஆனால் அதை விட அதிகமாய் அவன் நண்பர்கள் மனதில் தங்கியிருந்தார்கள், திருவல்லிக்கேணி மேன்ஷன்களில் தங்கியிருப்பதைப் போல நெருக்கியடித்துக் கொண்டு.

டிடிகே நிறுவனத்தில் தலையைத் தின்னுகிற ஒரு வேலையில் அவன் இருந்தான். ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து படித்துக் கொண்டும் இருந்தான்.இதற்கு நடுவில் புத்தகம், எழுத்து, நல்ல திரைப்படம், பத்திரிகை (இலக்கியம் வணிகம் இரண்டும்) குடும்பம் இவற்றோடு நண்பர்கள், நண்பர்கள், நண்பர்கள்!

எல்லோரிடமும் அவனுக்குப் பேசவும் விவாதிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் ஏதோ இருந்தது. அவன் இறந்து (1987) இத்தனை வருடங்கள்  ஆன பின்னும் அவனைப் பற்றிப் பேச அவனது நண்பர்களுக்கு ஏதோ இருக்கிறது.

அதிகம் எழுதியதில்லை. ஆனால் அசாத்தியமான எழுத்தாளன். கணையாழியில் கடைசிப் பக்கம் எழுதி வந்த சுஜாதா, “காலத்தைக் கடந்தும் படிக்கிற மாதிரியாக இருக்கக்கூடிய ஒரு இருபத்தைந்து சிறுகதைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பத்துதான் தேறி இருக்கின்றன. அதில் சுப்ரமண்ய ராஜூவின் கதை ஒன்றுஎன்று எழுதியிருந்ததும் இலக்கியபுரம் எரிந்து அடங்கியது. அதற்கு அந்தப் பட்டியலில் ‘சற்று தயக்கத்திற்குப் பின்’ புதுமைப்பித்தனை விட்டுவிட்டதாகச் சொன்னது காரணமாகச் சொல்லப்பட்டாலும் சுப்ரமண்யராஜுவைச் சேர்த்துக் கொண்டதுதான் உண்மையான காரணமாக இருந்தது. புதுமைப்பித்தனை விடவா சுப்ரமண்ய ராஜூ அமர கதைகளை எழுதிவிட்டான்? என்ற அகப் புகைச்சல் அன்று அனலாக வீசியது.

அதைக் குறித்து ராயப்பேட்டை ஒயெம்சிஏ முன் உள்ள மைதானத்தில் மோட்டர் சைக்கிளை சாய்த்து நிறுத்தி விட்டு உட்கார்ந்து பேசினோம். கதைகள் அமரத் தன்மை கொண்டவையாக இருக்க வேண்டியதில்லை என்பது என் கட்சி. வாசகனுக்கு ஒரு கதை தன் வாழ்க்கையை அல்ல, தான் வாழும் காலத்தை நினைவூட்ட வேண்டும். ஏனெனில் காலம்தான் அவன் வாழ்க்கையை உருவாக்குகிறது என்பது என் வாதம் (இப்போதும் என் நம்பிக்கை அதுதான். என் கதைகள் அதனடிப்படையிலேயே எழுதப்படுகின்றன) ஆனால் வாழ்வின் சில உண்மைகள் மாறுவதே இல்லை என்பது அவனது தரப்பு . சுஜாதா கூட, எழுத்துத் திறமையின் அடிப்படையில் அல்ல, இந்த மாறாத உண்மையின் அடிப்படையில்தான் கதைகளைத் தீர்மானித்திருக்க வேண்டும் என்று அவன் நம்பினான். புதுமைப்பித்தனின் செய்நேர்த்தி யில் 10 சதவீதம் கூடத் தனக்கு வாய்க்கவில்லை என்று சொன்னான்.

அது போலியான தன்னடக்கம் அல்ல. உண்மையில் தனது எழுத்துக்களைப் பற்றிய மிகையான மதிப்பு அவனிடம் இருந்ததில்லை. அவனது சிறுகதைத் தொகுதி வெளியான போது அதைப் படித்துவிட்டு மதுரைக் கவிஞர் ந.ஜெயபாஸ்கரன் அவரது நண்பரான தேவகோட்டை வா. மூர்த்திக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘வாழ்க்கையில் சதா சலிக்கும் கேள்விகளை இவ்வளவு அடக்கமான தொனியில் சித்தரித்த சமகால எழுத்தாளார் யாரும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது” என்று ராஜுவின் கதைகளைப் பற்றி எழுதியிருந்தார். மூர்த்தி ராஜுவிற்கும் நண்பர். அவர் ஜெயபாஸ்கரனின் கடிதத்தை ராஜுவிடம் காண்பித்தார். அதைப் படித்துவிட்டு ராஜு சொன்னது, “ சமகால எழுத்தாளர் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர் வண்ணதாசனை மறந்து விட்டாரா?”

இன்றிருப்பதைப் போல அன்று பிரசுர சாத்தியங்கள் எளிதாக இல்லை. ஆரம்ப நிலை எழுத்தாளர்களின் முதல் புத்தகம் என்பது பலருக்கு சொந்தப் பணத்தில் சொந்த முயற்சியில் கொண்டுவரப்படுகிற காலம் அது. இன்றோடு ஒப்பிடுகையில் அன்று அதற்கான செலவு குறைவுதான். ஆனால் அன்று அதுவே பெரும்பணமாக இருந்தது. மிரளச் செய்யும் பணமாக இருந்தது. அவர்களில் பலர் அதற்கான உதவி கேட்டு ராஜுவிடம் வருவதுண்டு. இடது கை அறியாமல் ராஜு பலருக்கு உதவியிருக்கிறான்.

அன்றைய இளம் எழுத்தாளர் ஒருவர், புத்தகம் போடப் போகிறேன் என்று ராஜுவிடம் சொன்னபோது, “உனக்கு இவ்வளவு சீக்கிரம் புத்தகம் வேண்டாம். ஆனால் போடுவது என்று முடிவு செய்துவிட்டால், பணம் தேவைப்பட்டால் கேள்.” என்று சொன்னான். ராஜுவின் உதவி தேவைப்படாமலேயே அவரது நூல் வெளியாயிற்று. ஆனால் ராஜு  பலருக்கு உதவி செய்திருப்பதை நினைவு கூர்ந்து அவர் தனது முதல் புத்தகத்தில் ராஜுவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

ஒரு துரதிருஷ்டமான மாலைப் பொழுதில், பணியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த முன்னிரவில் ஒரு சாலை விபத்தில் ராஜூ தனது 39ஆம் வயதில் இறந்து போனான். அவனது நினைவைப் போற்றும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தபோது புத்தகம்தான் நினைவுக்கு வந்தது. பாலகுமாரனிடம் பேசினேன். அவர் என் யோசனையை அங்கீகரித்தார். ராஜுவின் நினைவாக ஒரு புத்தகம் கொண்டு வருவது என்று தீர்மானித்தோம். அவன் அதிகம் சிறுகதைகளே எழுதியவன் என்பதால் சிறுகதைத் தொகுதியாக, சிறந்த சிறுகதைத் தொகுதியாக இருக்கட்டும் என முடிவு செய்தேன். அப்போது நான் இந்தியாடுடே ஆசிரியராக இருந்தேன். இந்தியா டுடேயில் அப்போது சிறுகதைகள் வெளியிட்டு வந்தோம். அதில் இருபது கதைகளைத் தேர்ந்து  அதன் ஆசிரியர்களுக்குக் கடிதம் எழுதினேன். ஒருவர் கூட மறுப்புச் சொல்லவில்லை. பதிப்புரிமை, பணம் என எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆம் என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர ஏதும் எதிர்வினை இல்லை. அம்பை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, சா.கந்தசாமி, கார்த்திகா ராஜ்குமார், சு.சமுத்திரம், சுந்தர ராமசாமி, சுஜாதா, நீல.பத்மநாபன், பாலகுமாரன், பாவண்ணன். பிரபஞ்சன், மாலன், செ.யோகநாதன், ராஜம் கிருஷ்ணன், லா.ச.ராமாமிர்தம், வண்ணதாசன், வண்ணநிலவன், வாஸந்தி, ஜெயந்தன் எனத் தமிழின் சிறந்த எழுத்தாளார்களின் கதைகள் கொண்ட அந்தத் தொகுப்பின் தரத்திற்கு நிகரான இன்னொரு தொகுப்பு இல்லை என்றே சொல்வேன். ஒரு எழுத்தாளன் அவனது மறைவுக்குப் பின் அவனது காலத்தில் வாழந்த மற்ற எழுத்தாளர்களின் படைப்புக்கள் மூலம் சிறப்பிக்கப்பட்டது அதன் பின் இன்னொரு முறை நடக்கவில்லை.

இதற்கெல்லாம் அடிநாதமாக இருந்தது அவனது அன்பு. அந்தத் தொகுதிக்கே அன்புடன் என்றுதான் பெயர்.

அன்பு அர்த்தம் பெறுவதே அது அங்கீகரிக்கப்படும் போதுதான்

             

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *