தப்பியது பொன் வாத்து

கத்திக்குத் தப்பி விட்டது பொன் முட்டையிடும் வாத்து.

லாபம் ஈட்டித் தரும் பொதுத் துறை நிறுவன்ங்களில் ஒன்றான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்கப்படவிருந்த முயற்சி தமிழக அரசின் தலையீட்டால் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது.

பங்குகள் தனியாருக்குக் கை மாறவில்லையே தவிர விற்பனை கைவிடப்பட்டுவில்லை. தனியாருக்கு பதிலாக தமிழக அரசு பங்குகளை வாங்கிக் கொள்ளவிருக்கிறது.தமிழ்நாடு அரசின் பொதுத்துறைநிறுவனங்களான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழில்கள்முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடுநகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும்தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவைநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை சுமார் 500 கோடி ரூபாய்விலை கொடுத்து வாங்கும்என முதல்வர் அறிவித்துள்ளார். அவரது இந்த யோசனைக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.

இது தமிழக முதல்வரின் முயற்சிகளுக்கு மட்டுமல்ல, தமிழக அரசிற்கு மட்டுமல்ல, தொழிலாளர்களின்ஒற்றுமைக்கும், போராட்டத்திற்கும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் கிடைத்த வெற்றி.
தமிழக மக்களின் உணர்வோடு ஒன்றிவிட்ட நிறுவன்ங்களில் நெய்வேலி பழுப்பு நிறுவனமும் ஒன்று. அதற்குக் காரணங்கள் உண்டு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கான நிலம் தமிழகமக்களால் வழங்கப்பட்டது. அங்கு பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர்தமிழர்கள்தான்.ந்த நிறுவனம் இந்தியாவின் பெருமைக்குரிய நவரத்தின நிறுவனமாகத் திகழ்வதில் தமிழர்களின் உழைப்புக்கு முக்கிய இடம் உண்டு, 57 ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டுவரும் அந்த நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் 1,460 கோடி ரூபாய் அளவிற்குநிகர லாபம் ஈட்டியிருக்கிறது. எனவே தமிழர்கள் இதனைக் குறித்துப் பெருமிதம் கொள்வதென்பது இயல்பானதே.

என்றாலும் இது ஒரு தற்காலிகத் தீர்வு என்பதை நாம் மறந்து விடலாகாது. .ஏனெனில்  தனியார் நிறுவனங்களின் பங்குகளில் 25 சதவீதமும், பொதுத்துறைநிறுவனங்களின்பங்குகளில்10 சதவீதமும் பொது முதலீட்டாளர்கள் வசம் இருக்கவேண்டும் என்று 2010-ம் ஆண்டு செபியின் விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்ததிருத்தம்எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. இதற்கு செபி சொல்லும் காரணங்களிலும் மாற்றம் இல்லை.

பொதுமக்களிடம்போதிய அளவு பங்கு இருந்தால் தான் பங்குச் சந்தையில் நீர்மைஇருக்கும்; பங்குச் சந்தையில்பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பொது முதலீட்டாளர்கள் பங்குகளுக்குரியநியாயமான விலையை பெற இயலும்; பங்குகளின் விலையில்செயற்கை மாற்றத்தை எவராலும் உருவாக்க இயலாது என்பவை செபி சொல்லும் காரணங்கள். இந்தக் காரணங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டவையே தவிர பொதுமக்களின் நலனைக் கருதியவை அல்ல.

தனது சளைக்காத முயற்சியால் இப்போது ஒரு தற்காலிக வெற்றியை அடைந்துள்ள தமிழக அரசும், தொழிலாளர்களும், செபியின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.  

அப்போதுதான் இந்த வெற்றியை நிரந்திரமானதாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும்

புதிய தலைமுறை  25 ஜூலை 2013

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *