ஜன்னலுக்கு வெளியே சத்தமின்றி அடங்கிக் கிடந்தது ஊர். இலை கூட அசங்காதப் புழுக்கம். தைமாதம்தான் இது என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு வெக்கை.
நேரத்தை வேறெப்படிக் கொல்வது எனத் தெரியாமல் விரலகள் வாட்ஸப்பை நெருடிக் கொண்டிருந்ததன. தொற்று நோயைப் போலத் துரிதமாகப் பரவிக் கொண்டிருந்த “செய்தி” ஒன்று கண்ணை நிறுத்தியது. நிச்சயம் நீங்களும் அதைப் படித்திருப்பீர்கள்
கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை என்ற தலைப்பிடப்பட்டிருந்த தகவல் நெஞ்சை நெகிழச் செய்யும் வலிமையான எழுத்து. கேரளத்தில் மலப்புற மாவடத்தில் உள்ள பள்ளியில் உரையாற்ற வந்த கலெக்டரிடம் ஒரு மாணவி கேட்கிறார்: “நீங்கள் ஏன் மேக்கப் போடுவதில்லை?””
அதற்கு பதிலாக விரிகிறது அவரது வாழ்க்கை/. ஏழ்மை வறுமை இவற்றிடையே வளர்ந்த குழந்தை அவர். அவர்கள் குடும்பம் மொத்தமும், பின்னால் வாழ்வில் கலெக்டராக உயரும் அந்தப் பெண் உடபட மைக்கா வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் வேலை செய்கிறது. அப்போது அவர் குழந்தைத் தொழிலாளி. அங்கு அதை விட்டால் வாழ்வாதாரத்திற்கு வேறு வாய்ப்பில்லை. அந்தப் பெண்ணிற்கு ஆறு வயது இருக்கும் போது சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் அவரது அப்பா அம்மா சகோதரிகள் எல்லோரும் சிக்கி இறந்து போகிறார்க்ள்.
பின் அந்தக் குழந்தை ஒரு சமூக நிறுவனத்தின் விடுதியில் சேர்க்கப்படுகிறது. அங்கு எழுதப் படிக்கக் கற்று கல்வியில் முன்னேறி கலெக்டராக பணியில் சேர்கிறது
அந்தக் கலெக்டர் மேக்கப் போடாததற்குக் காரணம் ஒப்பனைப் பொருட்களில் மைகா பயன்படுத்தப்படுவதுதான். முகப் பொலிர்ந்து ஒளிர அது ஒப்பனைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. என்னுடைய பெற்றோரின் உழைப்பை, இழப்பை நினைவூட்டும், கடந்து வந்த கடுமையான நாட்களை ஞாபகப் படுத்தும் மைகாச் சுரங்கங்களிலிருந்து சுரண்டப்படும் குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவான ஒன்றை நான் எப்படிப் பயன்படுத்துவேன் என்கிறார் அந்தக் கலெக்டர் பெண்மணி.
ஒவ்வொரு முறையும் ஒப்பனைப் பெட்டியைத் திறக்கும் போது உங்கள் உள்ளத்தை உறுத்தும் வண்ணம் இந்த முகநூல் பதிவு எழுதப்பட்டிருந்தது. உடன் ஒரு பெண்ணின் படம்.
இதை வாசித்த போது எனக்குள் நிறையக் கேள்விகள் எழுந்தன. கலெக்டர்கள் என்றால் ஒப்பனை செய்து கொள்வார்கள் என்ற எண்ணத்தைக் குழந்தைகள் மனதில் விதைத்து யார்? பெண்கள் என்றால் ஒப்பனை செய்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனை அவர்களிடத்தில் எப்படிக் கிளைத்தது? சந்தேகமென்ன, ஊடகங்களில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் இருந்துதான் இந்தப் பார்வை விளைந்திருக்க வேண்டும். ஏழுநாட்களில் கறுப்பை வெள்ளையாக்கும் க்ரீம், மூக்கும் கன்னமும்’ மேட்ச் ஆகவில்லையே என ஏங்கும் இளம் பெண்கள் இப்படி எத்தனை விளம்பரங்கள் ஓர் நாளில்! ஒய்வாக இருக்கும் நாளில் உடகார்ந்து எண்ணிப் பாருங்கள் அடிக்கடி ஒளிபரப்பாகும் விளம்பரங்கள், அதிக நேரம் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் எவை என்று கணக்கெடுத்தால் அவை ஒப்பனைப் பொருட்கள், சலவை சாதனங்கள், ஊட்டச் சத்தை உறுதியளிக்கும் தயாரிப்புகள், கழிவறையை சுத்தம் செய்யும் திரவங்கள், சமையல் பொடிகள் என்று கண்டு கொள்வீர்கள். இவை அனைத்தும் பெண்களின் சிந்தனையைக் குறி வைத்தவை.
ஒப்பனைப் பொருட்களை உபயோகிப்ப்பவர்களாகப் பெண்கள் வருவார்கள். ஆனால் கட்டுமானப் பொருட்களை வாங்குவது குறித்து முடிவெடுப்பவர்கள் ஆண்கள். கழிவறையைச் சுத்தம் செய்வது பெண்கள். கார் வாங்குவது ஆண்கள்.
உண்மையில் கலெக்டர்கள் ஒப்பனை செய்து கொள்கிறார்களா? நான் சிலரை நேரில் சந்தித்திருக்கிறேன். சிலரைத் தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறேன். ஒழுங்காக உடுத்தியிருப்பார்கள்.சீராகத் தலை சீவியிருப்பார்கள். கண்ணியமான தோற்றத்தில் – அலுவலகம் செல்லும் எல்லாப் பெண்களைப் போலவும்- காட்சி தருபவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிவிலக்குகள் உண்டு. அவை விதிகள் ஆகா.
இந்தக் முகநூல் பதிவில் விரிவாகப் பேசப்படாத விஷயம், ஆறு வயதில் ஆதரவற்றுப் போன பெண்ணை ஆட்சித் தலைவராக ஆக்கத் துணை நின்றதே அந்த அமைப்பு. அவர்களது அக்கறை, உறுதிப்பாடு, உழைப்பு, கரிசனம் எல்லாம் போகிற போக்கில் ஒருவரிச் செய்தியாகச் சொல்லப்படுவதுடன் முடிந்து போகிறது. அதை விளம்பச் சொல்லியிருக்கலாமே. வாசிப்பவர்களுக்கு நம் அமைப்பின் மீது நம்பிக்கை பிறக்குமே என்று எனக்குத் தோன்றியது
இரண்டொரு நாளில் இன்னொரு பதிவு வந்தது. மலப்புரம் கலெக்டர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளவரின் பெயர் அதுவல்ல என்றும், அந்தப் படத்தில் இருப்பவர் அவரல்ல என்றும் சொன்ன அந்தப் பதிவு இன்னொரு அதிர்ச்சிகரமான தகவலையும் சொன்னது. அந்தப் பதிவில் உள்ள அத்தனையும் புனைவு! ஹக்கீம் மொரயூர் என்ற மலையாள எழுத்தாளரின் சிறுகதையைத் தழுவியது என்றது அது. ‘மூன்று பெண்கள்’ என்ற அவருடைய சிறுகதைத் தொகுதியில் அந்தக் கதை உள்ளது என்றும் அந்த இரண்டாவது பதிவு குறிப்பிட்டது. திரு ஹக்கீமும் அதைத் தன் பதிவில் உறுதி செய்திருந்தார்.
இப்போது எனக்குள் மீண்டும் கேள்விகள் எழுந்தன. ஒரு நிமிடத்தில் நம்மை எப்படி முட்டாளாக்கி விட்டார்கள் எனச் சின்னதாக சினமொன்றும் மூண்டது.முதல் பதிவைப் போட்டவருடைய நோக்கம்தான் என்ன? ஒப்பனைப் பொருட்களை உபயோகப்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வை ஊட்டுவதா? அல்லது கண்ணீர்க் கதை ஒன்றைக் கசியக் கசியச் சொல்லிக் கவனம் பெறுவதா? முதலாவதுதான் அவரது நோக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை இது ஒரு சிறுகதை, இன்னார் எழுதியது, இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது என்ற தகவலோடு அந்தக் கதையைப் பகிர்ந்திருக்கலாமே? புனைகதை என்று சொன்னால் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அவர் கருதியிருக்கலாம்.
அப்படி அவர் நினைத்திருந்த்தால் அதில் சிறிது உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. மனித மனம் ஒரு புனைவை விட உண்மை போல் இருக்கும் கதையை நாடுகிறது.
இது போல எத்தனையோ ‘உண்மை” போன்ற புனைவுகள் நமக்குக் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அட! என்ற ஆச்சரியத்தோடோ, அச்சச்சோ என்ற அனுதாபத்தோடோ நாம் அவற்றைக் கடந்து வந்திருக்கிறோம்
நேருவின் உடைகள் வாரா வாரம் பாரீசில் சலவை செய்யப்பட்டு அனுப்பப்பட்டன என்றொரு ‘உண்மையை’ நான் இளம் பிராயத்தில் கேட்டிருக்கிறேன். இன்னொரு செல்வந்தத் தலைவர் கல்லூரியில் படிக்கும் போது அவர் வகுப்புக்கள் முடிந்து எந்த வாசல் வழியே வருவார் எனத் தெரியாததால் கல்லூரியின் நான்கு வாசல்களிலும் கார்கள் காத்திருந்தன என்று இன்னொரு உண்மை உலா வந்தது. காமராஜர் பற்றி, பாரதியார் பற்றிப் பல ‘உண்மைகள்’ ஊர்வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
யாரோ ஒருவர் எங்கேயோ கேட்டதை சிறிது ஜோடனைகள் செய்து அடுத்தவருக்குச் சொல்ல, அதை அவர் வேறு ஒருவருக்குக் கண் மூக்கு வைத்துச் சொல்ல, அவர் மற்றொருவருக்கு, பின் அந்த மற்றொருவர் பிறிதொருவருக்கு என இவை பரவுகின்றன. இவற்றின் ஒரே நோக்கம். நம்மை வியக்கவோ விதிர்க்கவோ செய்வதுதான். படிப்பவர்களில் பாதிப் பேருக்கு இது உண்மைதானா எனக் கண்டறிந்து உறுதி செய்து கொள்ளும் முனைப்போ, முயற்சியோ இல்லை என்பது அவர்களது பலம். அவர்கள் வாசித்தவுடன் எழுகிற உணர்ச்சி நிலையில், உடனே ‘உனக்குத் தெரியுமா?” என்று உற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த புனைவு போன்ற உண்மைகளால் பெரிதாக ஏதும் தாக்கம் நேர்ந்து விடுவதில்லை.அது எவரையும் எந்தச் செயலுக்கும் உந்துவதில்லை. வாசிப்பவர்கள் அடுத்தவருக்கு அனுப்பிய பின் அதை மறந்து விடுகிறார்கள்.
அது ஏன் என்று ஆராய அதிகம் மெனக்கிட வேண்டியதில்லை. காரணம்
வாய்மையே வெல்லும்.